31 Jan 2025

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எப்படி இருந்த நூலகம் இப்படி இருக்கிறதே என்று ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.

நகரங்களிலும் மாநகரங்களிலும் பெருங்கூட்டம் இல்லாத கட்டடங்களில் ஒன்றாக நூலகங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன.  

வார இதழ்கள், மாத இதழ்கள் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக மேசையில் அப்படியே இருக்கின்றன. கலைத்துப் போட கூட ஆளில்லை. காற்றாடிக் கொண்டிருக்கின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் மின்விசிறிக் காற்றில் சதிராடிக் கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில் இவையெல்லாம் இப்படியா இருந்தன? கலைந்து, சிதறி, அட்டைப் பக்கம் இல்லாமல், ஆங்காங்கே சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு பயங்கரமாக இதழ்கள் பயன்படுத்தப்பட்ட காலம் ஒன்று உண்டு.

சில இதழ்களைப் படிக்க அங்கே அமர்ந்திருப்பவர்களிடையே, போட்டா போட்டியே நடக்கும். அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்குத்தான் ஆனந்த விகடனும் குமுதமும் கிடைக்கும்.

பிடித்த புத்தகங்களை வேறு யாராவது எடுத்துச் சென்று விடுவார்களோ என்று அவற்றைக் கண்டறிந்த மாத்திரத்தில், மற்ற புத்தகங்களிடையே ஒளித்து வைக்கும் பழக்கம் அன்று பலருக்கு உண்டு. அந்தப் புத்தகங்கள் எல்லாம் தன்னை யாரேனும் தொட்டுப் பார்க்க வருவார்களா என்று ஏக்கப் பெருமூச்சுக் கொண்டு, முதிர்கன்னிகளைப் போல இருப்பதைக் கண்டு, மனம் வெதும்புகிறது இன்று.

நூலகத்திற்குப் புதிய புத்தகங்கள் வரும் போது, அவற்றை முதல் ஆளாகப் படித்து விட வேண்டும் என்று வெறி பிடித்த வாசகர்கள் நூலகத்திற்கு இருந்திருக்கிறார்கள்.இன்று  நூலகம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று தெரியாத நபர்கள்தான் நாட்டில் நிறைந்திருக்கிறார்கள். நூலகம் என்ற சொல்லைக் கேள்விப்படாத ஒரு தலைமுறை உருவாகி விடுமோ என்று அஞ்சக் கூட வேண்டியிருக்கிறது.

சுந்தர ராமசாமி, ஜானகிராமன், ஜெயகாந்தனை விடுங்கள். ராஜேஸ்குமார் நாவல்களைப் படிக்கக் கூட ஆளில்லை.

யார் கண் பட்டதோ? எவர் கண் பட்டதோ?

நூலகத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. போட்டித் தேர்வுக்குத் தயாரிப்பவர்களைத் தவிர மற்றவர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. அவர்கள் மட்டும் இல்லையென்றால் நூலகத்தின் நிலை என்னாவது? அதற்காகவேனும் அரசாங்கம் போட்டித் தேர்வுகளை சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் நடத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நீ மட்டுமென்ன ஒழுங்கா என்றால்… அடிக்கடி போய்க் கொண்டிருந்த நானும் ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.

ஏன் இந்த நிலை? எங்கே நடந்தது பிழை?

நமக்கு நூலகத்தை விட போவதற்கு வேறு முக்கியமான இடங்கள் இருக்கின்றன.

குறிப்பாக ஜனநாயகனோ, விடா முயற்சியோ, கூலியோ வரும் போது நாம்தான் என்ன செய்ய முடியும்? நாம் முக்கியமாகச் செல்ல வேண்டிய இடமாக அது ஆகி விடுகிறது.

டீக்கடையில் தினசரிகளை வாசிக்க கூடும் கூட்டம் கூட நூலகத்திற்கு வராமல் இருப்பதற்கு, நூலகத்திற்குள் டீக்கடை இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ!

ஒரு மழைக்காலத்தில் நூலகத்தில் ஒதுங்கினேன் என்று வருங்காலத்தில் யாரும் எழுதாமல் இருக்க வேண்டும். எழுதி என்ன? அதை எழுதி வைத்த அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆள் வர வேண்டுமே அந்த நூலகத்துக்கு?

*****

30 Jan 2025

மூன்றாம் ஆண்டின் சம்பிரதாயக் காட்சிகள்!

மூன்றாம் ஆண்டின் சம்பிரதாயக் காட்சிகள்!

ஒவ்வோர் ஆண்டும் திருவாரூர் புத்தகக் கண்காட்சியில் எனக்கு ஆர்வமூட்டும் பல செய்திகள் கிடைக்கின்றன.

இந்த ஆண்டு (2025) மூன்றாவது ஆண்டாகத் திருவாரூரில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

ஏதாவது மாற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக நுழைவு வாயிலின் திசையை மாற்றியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு வடக்கு நோக்கி இருந்தது. இந்த ஆண்டு கிழக்கு நோக்கி இருக்கிறது.

எனக்கென்னவோ அரங்குகள் குறைவாக இருப்பது போலவும், புதிய புத்தகங்களின் வரவும் குறைவாக இருப்பது போலவும் தோன்றியது.

புத்தக அரங்கங்களை விட உணவு அரங்கங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

காலம் மாறி விட்டது.

வயிற்றுக்கு உணவில்லாத போதுதான் செவிக்கு உணவு என்பதால் எல்லாவற்றையும் முடித்து விட்டு நின்ற அலுப்பு தீர பேச்சரங்கில் அமர்கிறார்கள்.

பள்ளி மாணவர்களின் பேச்சுப் போட்டியினைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

எனக்கு மாணவப் பருவத்தில் இவ்வளவு பெரிய அரங்கம் கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

அறிவினை விரிவு செய் என்ற தலைப்பில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆன்ட்ராய்டும் பென் டிரைவும் நிறைந்து விட்ட இந்தக் காலத்தில் புத்தகத்தை நாடி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

கூகுளில் மட்டும் தேடி அறிவை விரிவு செய்ய முடியாது, புத்தகத்தைத் தேடித்தான் விரிவு செய்ய முடியும் என்று போட்டுப் பிளந்து கொண்டிருந்தார்கள்.

இந்த வலியுறுத்தல்கள் பிளத்தல்கள் எல்லாம் கூகுளில் இவர்கள் தேடியதுதான். அதை விட ஆச்சரியம், பேசிய பிள்ளைகள் அத்தனை பேரும் ஒரே மாதிரியாகப்  பேசினார்கள். மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் விதத்தில்தான் மாற்றம். அதெப்படி எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாக என்றால்...

எல்லா மாணவர்களும் கூகுளில் தேடியதை காப்பி – பேஸ்ட் செய்து பிரிண்ட் எடுத்து அதை மனப்பாடம் செய்துகொண்டு வந்ததால் அப்படி.

புத்தகங்களில் தேடாவிட்டாலும் கூகுகிளில் இதையாவது தேடுகிறார்களே இந்த மாணவர்கள் என்று இதில் சந்தோசப்பட்டுக் கொள்ளத்தான் விசயங்கள் இருக்கின்றன. கூகுளில் மாணவர்கள் வேறென்ன தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

நிற்க.

யார்தான் புத்தகம் வாங்குகிறார்கள்?

அதைக் கண்டுபிடிப்பதுதான் இந்தப் புத்தகக் காட்சியில் சிரமமாக இருக்கிறது.

இந்தப் பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக ஒன்றுமே வாங்காமல் வெறுங்கையுடன் வெளியே வந்து கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து, ஏன் ஒரு புத்தகம் கூட வாங்காமல் வருகிறீர்கள் என்று நான் ஒரு பிடி பிடித்தேன்.

“அதான் எல்லாம் பிடிஎப்பாக இருக்கிறதே சார்! அதுல படிச்சுக்குவேன்.” என்றார்.

“அதற்கு ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வந்தீர்கள்?” என்றேன்.

“என்னவோ அங்கங்க ப்ளக்ஸ் வெச்சுருக்காங்களே. என்னதான் நடக்குதுன்னு வந்து பார்ப்போம்ன்னு வந்தேன்.” என்றார்.

பேசாமல் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பிடிஎப் கண்காட்சியாகப் போட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. அதுவும் காசு என்றால் நம் ஆட்கள் வாங்க யோசிப்பார்களோ என்னவோ!

விலையில்லாப் பொருட்களை மட்டும் வாங்குவதில் ஆர்வம் காட்டும் நம் மக்கள், பானிபூரிக்கும் பேல்பூரிக்கும் மட்டும் வஞ்சனையில்லாமல் செலவு செய்கிறார்கள். இன்னும் எத்தனை காலம்தான் நம் திருவாரூர் மக்கள் புத்தகக் கண்காட்சியையும் பொருட்காட்சி அளவுக்கே பார்த்துக் கொண்டிருப்பார்களோ!

விற்பனையாகிறதோ, இல்லையோ புத்தக அரங்குகளை வியாபித்திருக்கும் பதிப்பகத்தார்களைப் பாராட்ட வேண்டும். கடை விரித்தேன், கொள்வாரில்லை என்றாலும் கடை விரிப்பதை கடமையெனச் செய்யும் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

காவல் துறையினரும், தூய்மைப் பணியார்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மற்றபடி சம்பிரதாயத்துக்குச் செயல்பட வேண்டியவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

*****

29 Jan 2025

செரிமான மண்டலத்திற்குக் கொஞ்சம் செவி கொடுங்கள்!

செரிமான மண்டலத்திற்குக் கொஞ்சம் செவி கொடுங்கள்!

மனம் விட்டு சிரிப்பது மனதுக்கு நல்லது என்றால், உண்ட உணவு செரிப்பது உடலுக்கு நல்லது. நாம் நாவின் சுவைக்கேற்ற உணவுகளையே உண்கிறோம். செரிமானத்திற்கு ஏற்ற உணவுகளை உண்கிறோமா?

மருத்துவரிடம் செல்கையில் அவர் கேட்கும் கேள்விகளுள் முக்கியமானது,

1) பசி எப்படி இருக்கிறது?

2) மல, ஜலம் கழித்தல் எப்படி இருக்கிறது?

3) உறக்கம் எப்படி இருக்கிறது?

ஆகிய மூன்றும் ஆகும்.

பசி – மலம் – ஜலம் மூன்றுமே செரிமானத்தோடு தொடர்புடையது. உறக்கம் கூட செரிமானத்தோடு தொடர்புடையதுதான். செரிக்காத உணவுகள் உறக்கத்தைப் பாதித்து விடும். செரிமானத்துக்கு உகந்த உணவுகள் நல்ல உறக்கத்தைத் தரும்.

செரிமானம் என்பது வயிற்றோடு தொடர்புடையது. வயிறு என்பது வாழ்வோடு தொடர்புடையது. ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகில் ஏது கலாட்டா? என்று திரைப்பாடலில் தொடங்கி, கை – கால் இல்லாத மனிதர்களைப் பார்க்க முடியும், வயிறு இல்லாத மனிதர்களைப் பார்க்க முடியுமா எனப் பொங்கும் புரட்சிக் கவிதைகள் வரை வயிற்றைப் பாடாமல் இருப்பதில்லை.

உழைப்பும் பிழைப்பும் எதற்கு என்றால், எல்லாம் இந்த வயிற்றுப் பாட்டுக்குத்தான் என்று சொல்லாதவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.” (குறள், 1062)

என்றல்லவா திருவள்ளுவர் கொதித்தெழுகிறார்.

“தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் - இந்த

ஜகத்தினை அழித்திடுவோம்” (பாரதியார்)

என்றல்லவா முண்டாசு கவிஞரும் பொங்கி எழுகிறார்.

உணவில்லை என்றால் உலகத்தை நாம் என்ன அழிப்பது? உலகம் தானாகவே அழிந்து விடும்.

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். யோசித்துப் பார்த்தால் வயிறே பிரதானம் என்பதும், வயிற்றுக்கான உணவே உடலுக்கான ஆதாரம் என்பதும் புலப்படும்.

தைத்தீரிய உபநிடதம் உணவைப் பற்றி இப்படிச் சொல்கிறது,

“உணவே கடவுள். உணவிலிருந்தே உயிரினங்கள் உண்டாகின்றன. தோன்றியவை உணவிலேயே வாழ்கின்றன. மரணத்திற்குப் பின் உணவிலேயே ஒடுங்குகின்றன. உணவைப் பழிக்கக் கூடாது. எவ்வளவு தேவையோ அவ்வளவு உண்ண வேண்டும். சுவைக்காகச் சில உணவுகளை விரும்புவதும், சில உணவுகளை வெறுப்பதும் கூடாது. உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள். இது உங்கள் கடமை.”

காலம் முழுவதும் நமக்காக இதயம் மட்டுமா துடித்தபடி உழைத்துக் கொண்டிருக்கிறது? செரிமான மண்டலமும் செரித்தபடி உழைத்துக் கொண்டிருக்கிறது. அதுவே உணவைச் செரித்து இதயம் துடிப்பதற்கான சக்தியை அளிக்கிறது, மூளை சிந்திப்பதற்கான ஆற்றலையும் வழங்குகிறது.

செரிமான மண்டலத்திற்குச் செல்லும் உண்ணும் உணவு குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். துரித உணவுகள் துரித கதியில் பெருகி விட்ட இவ்வுலகில், அலைபேசியில் அழைப்பு விடுத்தால் வீட்டு வாசலுக்கே உணவு தேடி வரும் கால கட்டத்தில் செரிமான மண்டலத்திற்கேற்ற உணவுகள் எவையென அறிந்து உண்ண வேண்டும்.

நாவிற்குச் சுவையாக இருக்கும் பல உணவுகள் செரிமான மண்டலத்திற்கு உவப்பாக இருப்பதில்லை. ஆரோக்கியமான பல உணவுகள் நாவுக்குச் சுவையாக இருப்பதில்லை.

நாவின் சுவையை முதன்மையாகக் கருதாது, செரிமான மண்டலத்தின் நலனை முதன்மையாகக் கருதினால் நாம் சரியான உணவுகளையே உண்ணுவதற்குத் தேர்வு செய்வோம்.

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” (குறள், 127)

என்று வள்ளுவர் சொல்வது நாவடக்கத்திற்கு மட்டுமல்லாது, நாவால் உண்ணும் உணவு அடக்கத்திற்கும் பொருந்தும்.

வள்ளுவரே,

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.” (குறள், 942)

என்று சொல்வதைக் கருத்தில் கொண்டால், செரித்த பின்னே உண்ண வேண்டும். செரிப்பதற்கு ஏற்ற உணவு வகைகளையே உண்ண வேண்டும் என்கிற செரிமான மண்டலம் குறித்த ஆரோக்கிய அறிவுரையைப் புரிந்து கொள்ளலாம்.

“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது.” (நல்வழி, ஔவையார்)

என்று தமிழ் மூதாட்டி கூறுவாரே! வயிற்றோடு வாழ்வது அரிது என்றால், இப்படிப்பட்ட வயிற்றில் செரிமான கோளாறு வந்து விட்டால் அதனுடன் வாழ்வது அரிதிலும் அரிதாகி விடும். ஆகவேதான், வள்ளுவர் சொன்னபடி,

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.” (குறள், 943)

எனும்படி அளவறிந்து எவ்வளவு தேவையோ அவ்வளவு உண்ணுதல் நலமாகிறது. அதுவும் செரிமான மண்டலத்திற்கு ஏற்ற உணவு என்றால் அது உடலுக்குப் பலமாகிறது.

*****

28 Jan 2025

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்!

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்!

இந்த மனிதரை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

யார் அந்த மனிதர் என்கிறீர்களா?

நீங்களும் உள்ளுக்குள் வைத்து வியந்து கொண்டிக்கும் மனிதர்!

நீங்கள், நான் என்றில்லாமல் இந்த உலகமே உள்ளத்தால் வியந்து கொண்டிருக்கும் மனிதர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் அந்த மனிதர்.

அவருடைய வீரம், கல்வி, ஆளுமை – இவற்றைத் தாண்டி நான் வியப்பது ஆணையும் பெண்ணையும் சமமாகப் பார்த்த அவரது பார்வையைத்தான்.

உலகெங்கும் இராணுவம் ஆண்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த போது பெண்களைக் கொண்டு இராணுவத்தை அமைத்தது அவர்தான்.

இது எப்படிப்பட்ட ஒரு பார்வை!

ஆண் – பெண் சமத்துவத்தை நோக்கிய சரியான பார்வை! சரித்திரப் பார்வை!

ஆண்களும் பெண்களும் இணையாமல் முழுமையான வெற்றி என்பது சாத்தியமில்லை என்கிற புரட்சிப் பார்வை இது.

இந்திய ராணுவத்திலேயே 1992இல்தான் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் நேதாஜி 1942 இல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்குகிறார். 1943 இல் கேப்டன் லெட்சுமி சேகல் தலைமையில் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களின் ராணுவத்தை உருவாக்குகிறார்.

தமிழகக் காவல் துறையை எடுத்துக் கொண்டால் 1973இல்தான் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக 1992 வரை ஆகி விட்டது.

போர்களில் வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்ற இந்தியப் பெண்கள் போரிட்டிருந்தாலும், ரஷ்யா சுல்தானா என்கிற பெண்ணரசி இந்தத் தேசத்தை ஆண்டிருந்தாலும், புரட்சிப் பெண்மணி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தாலும் அவர்கள் கூட பெண்களைக் கொண்ட ஒரு படையை உருவாக்கினார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நேதாஜி அதைச் செய்திருக்கிறார்.

அதனாலேயே எவ்வளவோ விசயங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் அந்த மனிதர், இந்த விசயத்தில் நம்மை அளவுக்கு அதிகமாகவே வியக்க வைக்கிறார்.

இறந்தும் இறவாத மனிதர் அவர்!

அவரது மரணம் கூட அசாதாரணம். அது இன்று வரை உலகம் அறிய முடியாத புதிராகத்தான் இருக்கிறது. என்றாலும், வீரர்கள் மரணித்தாலும் அவர்களின் வீரம் மரணிப்பதில்லை.

“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது.” (குறள், 235)

என்கிற வள்ளுவர் வாக்கிற்கு நேதாஜிதான் சரியான உதாரணம்.

இப்படிப்பட்ட ஒரு மனிதரை நினைத்து நினைத்து வியக்காமல் எப்படி இருக்க முடியும் என்று சொல்லுங்கள்!

*****

27 Jan 2025

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனுக்கே விவசாயப் பாடமா என நானும் பேந்த பேந்த விழித்துக் கொண்டு கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர் ஆரம்பித்தார்.

“குறைந்தது ஐந்து ஏக்கரா நிலமாவது இருக்க வேண்டும். நிலம் மட்டும் போதாது, தண்ணீர் வசதியும் இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. சுற்றிலும் வேலி இருக்க வேண்டும்.

வெறுமனே விவசாயம் மட்டும் செய்து சம்பாதிக்க முடியாது.

பத்துக் கோழிகளையாவது வளர்க்க வேண்டும்.

அத்துடன் இரண்டு பசு மாடுகளையும் வளர்க்க வேண்டும்.

அதுவும் போதாது. பத்து ஆடுகளாவது வளர்க்க வேண்டும்.

முடிந்தால் பத்து வாத்துகள் கூட வளர்க்கலாம்.

ஒரு குளத்தை வெட்டி மீனும் வளர்க்க வேண்டும்.

நெல் விவசாயத்தை மட்டும் நம்பிப் பிழைப்பை ஓட்ட முடியாது. ஆகையால் வயலைச் சுற்றி பழ மரங்களையும் வளர்க்க வேண்டும்.

பயிறு, உளுந்து, துவரை, கேழ்வரகு என்றெல்லாம் பயிரிட வேண்டும்.

காய்கறிகளும் போட வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் ஒன்று மாற்றி ஒன்றில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். விவசாயம் செய்வதும் ஆர்வமாக இருக்கும்.

இப்போது சொல்லுங்கள் இப்படிச் செய்தால் விவசாயத்தில் எப்படி நட்டம் வரும்? எப்படி விவசாயத்தை விட்டுப் போக மனம் வரும்?” என்று கேட்டார்.

நான் மௌனமானேன்.

என் மௌனத்தைப் பார்த்து குதூகலமான அவர், “நீங்கள் எல்லாம் இப்படி செய்திருக்க மாட்டீர்கள். இப்படிச் செய்யாமல் விவசாயத்தில் நட்டம் என்றால் எப்படி? விவசாயத்தால் மன அழுத்தம் வருகிறது என்று சொன்னால் எப்படி?” என்றார்.

நான் என்ன சொல்வேன்?

ஆனாலும் நான் சொன்னேன்.

“நான் இப்போது விவசாயத்தை இப்படிச் செய்யவில்லை. ஆனால் என் தாத்தா, அப்பா எல்லாம் இப்படித்தான் செய்தார்கள். அப்படிச் செய்த அவர்களே, நான் விவசாயத்தில் இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றால் நல்லது என்று ஆசைபட்டார்கள்” என்றேன்.

விவசாயத்தைப் பற்றி ஆர்வமாகச் சொன்ன அவர் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. பேயாட ஆரம்பித்து விட்டதோ என்னவோ!

இவர்கள் புதிய புதிய முறைகள் என்று சொல்வதெல்லாம் நம் முன்னோர்கள் பரீட்சித்துப் பார்த்து கடைபிடித்த முறைகள்தான். அதை என்னவோ இவர்கள்தான் புதிதாகக் கண்டுபிடித்தது போலவும், அப்படிச் செய்தால் விவசாயத்தில் நட்டம் வராது என்பது போலவும் சொல்கிறார்கள்.

காதில் பூவைச் சுற்றுவது என்றால் எல்லாருக்கும் ஆசை வரத்தான் செய்கிறது.

விவசாயிகள் எல்லாவற்றையும் செய்து பார்த்து விட்டுதான் வேறு வழியில்லாமல் மாறியிருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?

இன்று விவசாயம் என்பது விவசாயிகளின் கையில் மட்டும் இல்லை. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் அதை வெகுவாகப் பாதிக்கிறது. விதைநெல், எரு, ஏர், உழவு மாடுகள் என்று விவசாயம் சார்ந்த பல இன்று விவசாயிகளிடம் இல்லை. இதனால் விவசாயிகள் சிக்குகிறார்கள். எப்படியெல்லாம்சிக்குகிறார்கள் என்றால்…

விதைநெல்லை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி வாங்கி விவசாயிகள் வியாபாரிகளிடம் சிக்குகிறார்கள்.

உரத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த இடத்தில் உரங்களின் விலையைத் தீர்மானிக்கும் அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களின் கைகளில்சிக்குகிறார்கள்.

ஏர் உழ வங்கிக் கடன் வாங்கி டிராக்டர் வாங்குகிறார்கள். இந்த இடத்தில் வங்கிக் கடன் அல்லது நிதி நிறுவனக் கடன்களின் வலைகளில் மீன்களைச் போலச் சிக்குகிறார்கள். வலைகளில் சிக்கிய மீன்களின் கதி என்னவாகும்?

இந்தச் சிக்குதல்கள் மற்றும் சிக்கல்களைச் சமாளித்து விளைவித்த நெல்லை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கேற்ப அரசு கொள்முதல் நிலையங்களிலோ அல்லது தனியார் வியாபாரிகளிடமோதான் விவசாயிகள் விற்பனை செய்தாக வேண்டும்.

விவசாயிகள் செலவு செய்த தொகைக்கு அரசாங்கம் செய்யும் கொள்முதல் விலையோ, தனியார் வியாபாரிகள் தரும் கொள்முதல் தொகையோ போதவே போதாது. இதற்கு அவர்கள் செலவு செய்த தொகையை வங்கிகளில் நிரந்தர வைப்பில் வைத்திருந்தால் கூட வருடத்துக்கு 7 சதவீத வட்டித் தொகையை எவ்வித உழைப்போ, மெனக்கெடோ இல்லாமல் கையில் லாபமாகப் பார்த்திருப்பார்கள்.

இவ்வளவு விசயங்கள் பின்னிப் பிணைத்து கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கும் விவசாயத்தில் லாபம் பார்ப்பது என்பது உங்கள் தேவைக்கான விளைபொருளை மட்டும் நீங்கள் விளைவித்துக் கொள்வதில் வேண்டுமானால் இருக்காலாமே தவிர, அதைச் சந்தைப்படுத்தி லாபம் பார்ப்பதில் கொஞ்சம் கூட சாத்தியமில்லை. அப்படி லாபம் பார்க்க வேண்டுமானால் அரசின் விவசாயக் கொள்கைகள் தொடங்கி, விவசாய விளைபொருள்களின் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் வரை பலவற்றை மாற்ற வேண்டியிருக்கும்.

அவற்றையெல்லாம் மாற்றினால் ஊழல் செய்வது, கொள்ளை அடிப்பது, கையூட்டு வாங்குவது வரை பலவற்றை மாற்ற வேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் மாற்ற எந்த  ஆட்சியாளர்கள் முன்வருவார்கள் சொல்லுங்கள்!

இதிலென்ன ஊழல், கொள்ளை, கையூட்டு என்கிறீர்களா?

அவற்றையெல்லாம் அறிய வேண்டுமானால்...

கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கப்படுகிறது, விவசாய விளைபொருட்களைப் போக்குவரத்துச் செய்வதற்குள் எவ்வளவு விளைபொருட்கள் ஆங்காங்கே தேன் எடுத்தவர் புறங்கையை நக்குவதைப் போல உருவப்படுகின்றன, விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் போது எவ்வளவு தொகை ஒதுக்கிக் கொள்ளப்படுகிறது என்பதையெல்லாம் நீங்கள் களத்தில் இறங்கி ஆராய வேண்டியிருக்கும்.

அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும் என்பது முதல் பிரச்சனை. நேரம் இருந்தாலும் இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இரண்டாவது பிரச்சனை!

இதில் முதல் பிரச்சனையைக் கையாள்வதை விட, இரண்டாவது பிரச்சனையை எதிர்கொள்வது மிகுந்த அபாயகரமானது.

ஆக, இப்படி, பல சாத்தியப்படுத்துவதற்குக் கடினமான விடயங்கள் இருக்கின்றன விவசாயம் லாபகரமாக அமைவதற்கு என்று சொன்னால் இனியாவது ஒத்துக் கொள்வீர்கள்தானே?

*****

26 Jan 2025

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

காளையரின் வியர்வை சிந்தி

காளைகளின் சாணமும் கோமியமும் விழ

ஏர் உழுத நிலத்தை

டிராக்டர் கார்பன் புகை உமிழ உழுகிறது

பெண்டிர் பாட்டு பாடி நாற்று நட்ட வயல்களில்

இயந்திரங்கள் கர கர சத்தத்தோடு நாற்று நடுகின்றன

களை பறித்து கால்களால் அம்மி விட்டுச் செல்லும்

நிலங்களில் களைக்கொல்லிகளின் வாடை வீசுகிறது

கதிர் அறுத்து கட்டு கட்டி களத்து மேட்டில்

முத்துகளென உதிரும் நெல்மணிகளை

இயந்திரம் அறுத்துக் கொண்டு வந்து

டிரக்கில் உமிழ்ந்து விட்டுப் போகிறது

வீட்டுக்கு வந்து பத்தாயத்தில் நிரம்பி

அவிழ்த்து ஆவாட்டி உணவாகும் நெல்

களத்து மேட்டிலிருந்து வியாபாரியின் கைகளுக்கு மாறி

பளபள அரிசிப் பைகளாகக் கடைகளில் வீற்றிருக்கிறது

அரிசி எல்லா கடைகளிலும் விளைகிறது

*****

25 Jan 2025

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல் ஒலித்து முடித்த பிறகே சம்பந்தப்பட்டவருக்கு அழைப்பு செல்கிறது. அந்த அளவுக்கு அலைபேசி மோசடிகள் நாடு தழுவிய அளவில் நடந்த வண்ணம் உள்ளன.

சட்டைப்பையிலிருந்து பணத்தைத் திருடுதல், பணப்பையைச் சாமர்த்தியமாகத் களவாடுதல், சீட்டுகள் நடத்தி மோசடி செய்தல், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏமாற்றுதல் என்றிருந்த பண மோசடிகள் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டிருக்கின்றன. தற்காலத்தில் மக்கள் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதால், அலைபேசி மூலமாகச் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

திருடர்களும் மோசடி பேர்வழிகளும் தகவல் தொடர்பு வளர்ச்சிக்கேற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். புதுப்புது மோசடிகளைக் கண்டறிந்து அரங்கேற்றி வருகிறார்கள். அவற்றைப் பற்றி அறிந்து கொண்டு எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் இருக்க வேண்டிய அவசியமாகிறது.

அலைபேசி மோசடிகளிலிருந்து எவ்வாறெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைத் தற்போது காண்போமா?

தகவல் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்திலிருந்து (டிராய்) புதிய வகை சட்டம் வந்துள்ளது, அதற்கேற்ப உங்கள் அலைபேசி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதை நம்பாதீர்கள். காரணம், அது போன்ற அழைப்புகளைத் தகவல் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் ஒருபோதும் செய்வதில்லை.

அந்நிய செலவாணி தொடர்பாக அழைப்பதாகச் சொல்லி, மேலும் விவரங்களை அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்றால், அழுத்தவே அழுத்தாதீர்கள். உங்களுக்கும் அந்நிய செலவாணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத போது, நீங்கள் ஏன் எண் ஒன்றை அழுத்த வேண்டும்? அப்படி அழுத்தினால் உங்களைப் பற்றிய விவரங்கள் திருடு போக வாய்ப்புகள் உள்ளன.

ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று காவல் துறையிலிருந்து அழைப்பதாக அழைப்பு வந்தால் அதையும் நம்பாதீர்கள். ஏனென்றால் காவல் துறை அது போன்ற அழைப்புகளைச் செய்வதில்லை. காவல் துறைக்கும் ஆதார் புதுப்பிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இணையவழி வழங்கல் அலுவலகத்திலிருந்து (ஆன்லைன் டெலிவரி ஆபிஸ்) பேசுகிறோம், உங்களது முகவரியை உறுதிய செய்ய எண் ஒன்றை அழுத்துங்கள் என்றால், நீங்கள் தவறியும் எண் ஒன்றை அழுத்தி விடாதீர்கள். ஏனென்றால், இது போன்றெல்லாம் எந்த நிறுவனமும் கேட்பதில்லை.

உங்கள் பெயருக்குப் போதைப் பொருள் பொட்டலம் வந்துள்ளது என்று வரும் அழைப்புகளையும் நம்பாதீர்கள். உடனடியாக அழைப்பைத் துண்டியுங்கள். இல்லையென்றால் உங்களை எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்துள்ளதாகக் கூறி பணம் பிடுங்க ஆரம்பிப்பார்கள். உண்மையில் எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) என்ற ஒன்று இல்லவே இல்லை.

தவறுதலாக உங்களுக்குப் பணம் அனுப்பி விட்டதாக வரும் அழைப்புகளையும் நம்பவே நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் இணையவழி வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிக்கவே நாடகமாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய பழைய வண்டியை வாங்க அழைக்கிறேன், உங்களுடைய பழைய குளிர்சாதனப் பெட்டியை வாங்க அழைக்கிறேன் என்று வரும் அழைப்புகளையும் நம்பாதீர்கள். நீங்கள் உங்களுடைய பழைய வண்டியை விற்பதாக அறிவிப்பு செய்யாத நிலையில், இப்படி வரும் அழைப்புகள் உங்களை மோசடி செய்யவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

காவல் துறை, புலனாய்வுத் துறை போன்றவற்றிலிருந்து அழைப்பதாக வரும் கணினி குரலை நம்பவே நம்பாதீர்கள். அப்படி கணினிக் குரலில் அவர்கள் அழைப்பதே இல்லை.

இவைத்  தவிரவும்,

தெரியாத இணைப்புகளைச் சொடுக்குதல்,

ஒரு முறை கடவு எண்ணை (ஓடிபி) பகிர்தல்,

தெரியாதவர்களிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் அறியாதவர்களின் காணொளி அழைப்புகள் ஆகியவற்றை ஏற்று விவரங்கள் வழங்குதல் போன்றவற்றைச் செய்யவே செய்யாதீர்கள்.

இவ்வளவையும் தாண்டி, ஒரு வேளை நீங்கள் இணையவழி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி விட்டால் பயப்படாதீர்கள். 1930 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவித்து புகார் அளிக்க தயங்காதீர்கள்.

மேற்படி விழிப்புணர்வு செய்திகளைப் படித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பெற்ற விழிப்புணர்வை உங்கள் குடுபத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கும் போதுதான் மோசடிக்காரர்களின் சதிகளை முறியடிக்க முடியும். தேவையற்ற பண இழப்பு மற்றும் அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் தடுக்க முடியும்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.” (குறள், 435)

என்ற வள்ளுவர் வாக்கை எப்போதும் மனதில் வைத்திருங்கள். மோசடிகளுக்கு உட்படாமல் பாதுகாப்பாக இருங்கள்.

*****

24 Jan 2025

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்!

அன்புக்காகத் துயருறுவதும் அன்பே

துயருறுவதைப் பார்க்க ஏலாது

யாருக்குப் பிடிக்கும் துயருற

துயரைச் சகித்தாலும் துயருறுவதைக் காணலும்

எவர்தான் விரும்புவார்

அன்பு கொண்டவர்களுக்கே தெரியும்

அன்புக்காகத் துயருறுவதும் அன்பே

அன்பைப் புரிந்து கொள்வது அசாத்தியம்

*****

சமரசத்திற்கான சிறு குறிப்பு

நீ அடுத்ததற்கு நகர்ந்தால்

அவர்களும் அடுத்ததற்கு நகர்வார்கள்

பயந்தால் அங்கேயே நிற்பாய்

அவர்களும் அங்கேயே நின்று

உனக்கெதிராகக் குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்

அங்கிருந்து ஒரு தாவலைச் செய்

குற்றப்பத்திரிகையை வீசி விட்டு

சமரசத்திற்குக் கொஞ்சம் இறங்கி வருவார்கள்

*****

23 Jan 2025

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும்.

நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நாளை என்பதற்கு இல்லை என்பது பொருள்.

பிற்பாடு என்று ஏங்க விடக் கூடாது. பிற்பாடு என்பது வெறும் கூப்பாடு.

இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக் கூடாது என்பார்களே! அப்படிக் கொடுப்பதென்று முடிவுக்கு வந்து விட்டால், உடனடியாகக் கொடுத்து விட வேண்டும்.

மகாபாரத கர்ணன் பற்றிய கதைகள் பல உண்டு.

கர்ணன் தொடர்பான அத்தனை கதைகளும் ஈகை தொடர்பானவை.

கர்ணன் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருக்கிறார். இடது கையில் எண்ணெய் நிரம்பிய வெள்ளிக் கிண்ணியை வைத்துக் கொண்டு வலது கையால் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் பார்த்து யாசகம் கேட்டு ஒருவர் வருகிறார்.

இடது கையில் இருக்கும் வெள்ளிக் கிண்ணியை வலது கைக்கு மாற்றக் கூட தோன்றாமல் அப்படியே உடனே கொடுத்து விடுகிறார் கர்ணன்.

இப்படியா இடது கையால் பொருளைக் கொடுப்பது என்று கர்ணனிடம் கேட்கப்படும் போது, கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதே கொடுத்து விட வேண்டும், இடது கையிலிருக்கும் கிண்ணியை வலது கைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் எனறு சிறு நொடி தாமதித்தாலும் மனம் மாறி விடும் என்று அதற்குப் பதில் சொல்கிறார் கர்ணன்.

ஆளானப்பட்ட ‘கொடை’க்குப் பேர் போன கர்ணனுக்கே அப்படி என்றால், சாதாரணப்பட்டவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்த விசயத்தில் ஔவை பாடிய தனிப்பாடல் ஒன்று உள்ளது.

‘அறம் செய விரும்பு’ என்று சொன்னவர், அப்பாடலில் என்ன சொல்ல வருகிறார் என்றால்,

“வாதக்கோன் நாளையென்றான் மற்றைக்கோன் பின்னையென்றான்

ஏதக்கோன் யாதேனும் இல்லையென்றான் – ஓதக்கேள்

வாதக்கோன் சொல்லதிலும் மற்றைக்கோன் சொல்லதிலும்

ஏதக்கோன் சொல்லே இனிது.”

என்கிறார். ஈகை பற்றிய செய்தியை மட்டுமல்லாது, ஒரு மருத்துவ செய்தியைக் கூறுகிறது இத் தனிப்பாடல்.

வாதநாடி அடங்கினால் ஒரு நாளில் உயிர் போகும்.

சிலேத்தும நாடி அடங்கினால் ஒரு நாழிகையில் உயிர் போகும்.

பித்த நாடி அடங்கினால் ஒரு நிமிடத்தில் உயிர் போகும்.

வாத நாடியைப் போல நாளை என்பதை விட, சிலேத்தும நாடியைப் போல பிற்பாடு என்பதை விட, பித்த நாடியைப் போல இப்போதே இல்லை என்று சொல்லி விடுவது நல்லது என்கிறார்.

கொடுக்க மனமில்லாமல் இன்று போய் நாளை வா என்பதோ, இப்பொழுது பொழுது சரியில்லை, பிற்பாடு வா என்பதோ ஔவைக்கு உவப்பாகத் தெரியவில்லை.

கொடுக்க மனமில்லை என்றால், இப்போது இல்லை என்று சொல்லி அனுப்பி விடு என்கிறார்.

அப்படிச் சொல்லி விட்டால், யாசகம் வேண்டி வருபவர் வேறு யாரிடமாவது பெற்றுக் கொள்வார். அதற்கான வாய்ப்பை பிற்பாடு என்றோ, நாளை என்றோ வளர்த்த வேண்டாம் என்பது ஔவையின் நிலைப்பாடு.

*****

22 Jan 2025

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கிறேன்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட விவசாயம் ஒரு மார்க்கமாக இருக்கிறது என்கிற செய்தியே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

நான் கிராமத்தில் பார்க்கும் விவசாயிகள் பலரும் விவசாயத்தின் காரணமாகவே மன அழுத்தத்துடன் இருப்பதைப் பார்க்கிறேன்.

அது எப்படி ஒரு துறையினருக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் மார்க்கமாக இருக்கும் விவசாயம், அதே துறையில் இருக்கும் விவசாயிகளுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்க முடியும்?

“கடவுள் எனும் தொழிலாளி

கண்டெடுத்த முதலாளி விவசாயி”

என்று விவசாயி திரைப்படத்தில் மருதகாசியின் பாடலை, டி.எம். சௌந்திரராஜன் பின்னணிக் குரல் கொடுக்க எம்.ஜி.ஆர் பாடுவாரே! நிலைமை உண்மையிலேயே அப்படி ஆகி விட்டதா?

அப்படி ஆகியிருந்தால், டில்லியில் ஏன் விவசாயிகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள்?

விவசாயத் தொழிலை விட்டு விட்டு விவசாயிகள் ஏன் கட்டடத் தொழிலாளிகளாக மாறுகின்றனர்?

விவசாயம் செய்யும் கிராமங்களை விட்டு விட்டு, விவசாயப் பெருங்குடி மக்கள் ஏன் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்?

ஒரே துறையில் நீண்ட காலம் வேலை பார்ப்பவர்களுக்கு வேறொரு துறையில் ஈடுபடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் மார்க்கமாக இருக்கலாமே தவிர, விவசாயத்தில் ஈடுபடுவதால் மன அழுத்தம் குறைந்து விடும் என்பதெல்லாம் பக்கா கப்சா.

உங்களுக்கு ஒரு கட்டத்தில், அதற்கு மேல் வருமானம் ஒரு பெரிய பொருட்டில்லை என்றால், உங்கள் மன மகிழ்வுக்காக நீங்கள் விவசாயத்தில் ஈடுபடலாம். அப்படி ஈடுபடுவர்களுக்கு வேண்டுமானால் விவசாயம் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் மார்க்கமாக இருக்கலாம். மற்றபடி விவசாயம் செய்வதால் மன அழுத்தம் விடுபடுகிறது என்பதெல்லாம், சாமியார்களிடம் போனால் மன அமைதி வந்து விடுகிறது என்று அவிழ்த்து விடப்படும் அக்கப்போர்களே.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பதுதான் சொலவம்.

உங்களால் கணக்கு வழக்குப் பார்க்காமல் செலவு செய்து விவசாயம் பார்க்க முடியுமானால், உங்களுக்கு விவாசயம் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் மார்க்கமாக இருக்கலாம். மற்றபடி விவசாயத்தில் ஈடுபட்டு மன அழுத்தத்தைக் குறைக்க பார்க்கிறேன் என்றால் அது, கரும்புச் சாறு பிழியும் கருவியில் தலையைக் கொடுத்துத் தலைவலியைத் தீர்த்துக் கொள்வது போன்றதுதான்.

கல்யாண மண்டபம் கட்டி வைத்தவர்கள், திரையரங்கம் கட்டி வைத்தவர்கள் வேறு வழியில்லாமல் அதை நடத்திக் கொண்டிருப்பதைப் போலத்தான் பெரும்பாலான விவசாயிகளின் நிலையும் நாட்டில் இருக்கிறது. அவர்கள் வேறு வழியில்லாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கும் வேறு வேலை இல்லை என்றால், நிலங்களை வாங்கிப் போட்டு விட்டு விவசாயம் செய்யலாம்.

உங்களுக்கு எப்படி வசதி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இதையும் தாண்டி,

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” (குறள், 1032)

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” (குறள், 1033)

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” (பாரதியார்)

என்றெல்லாம் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று உழவர்கள் ஆக ஆசைப்பட்டால்,

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.” (குறள், 669)

“அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே

உச்சி மீது வான் இடித்து வீழுகின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” (பாரதியார்)

என்கிற மனத்திட்பமும் வினைத்திட்பமும் உங்களுக்கு வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால், அதைச் சொன்ன புலவர்களே இதையும் சொல்லியிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்!

*****

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

சம்பாதிக்கும் காலத்தில்

ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர்

ஐயா கடன் வேண்டுமா என்று

அலைபேசியில் அழைத்துக் கேட்க லட்சம் பேர்

மூன்று வட்டிக்கா ஐந்து வட்டிக்காக என்று

கடன் கொடுக்க கந்துவட்டிக்காரர்கள் கோடி பேர்

சம்பாத்தியம் போன வயதான காலத்தில்

கைமாற்று பத்து ரூபாய் கொடுக்க

யோசிக்கின்ற பக்கத்து வீட்டுக்காரர்

கணக்கெழுதிக் கொண்டு நூறு ரூபாய்க்கு

மளிகை சாமான்கள் கொடுக்க யோசிக்கும் கடைக்காரர்

அடுத்த வாரம் தந்துவிடுகிறேன் என்று சொன்னாலும்

தேநீர் கொடுக்க தயங்கும் தேநீர்க்காரர்

இருக்கும் வரை எல்லாம் இருக்கும்

இல்லாத போது எதுவும் இருக்காது

*****

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...