27 Jan 2025

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனுக்கே விவசாயப் பாடமா என நானும் பேந்த பேந்த விழித்துக் கொண்டு கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர் ஆரம்பித்தார்.

“குறைந்தது ஐந்து ஏக்கரா நிலமாவது இருக்க வேண்டும். நிலம் மட்டும் போதாது, தண்ணீர் வசதியும் இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. சுற்றிலும் வேலி இருக்க வேண்டும்.

வெறுமனே விவசாயம் மட்டும் செய்து சம்பாதிக்க முடியாது.

பத்துக் கோழிகளையாவது வளர்க்க வேண்டும்.

அத்துடன் இரண்டு பசு மாடுகளையும் வளர்க்க வேண்டும்.

அதுவும் போதாது. பத்து ஆடுகளாவது வளர்க்க வேண்டும்.

முடிந்தால் பத்து வாத்துகள் கூட வளர்க்கலாம்.

ஒரு குளத்தை வெட்டி மீனும் வளர்க்க வேண்டும்.

நெல் விவசாயத்தை மட்டும் நம்பிப் பிழைப்பை ஓட்ட முடியாது. ஆகையால் வயலைச் சுற்றி பழ மரங்களையும் வளர்க்க வேண்டும்.

பயிறு, உளுந்து, துவரை, கேழ்வரகு என்றெல்லாம் பயிரிட வேண்டும்.

காய்கறிகளும் போட வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் ஒன்று மாற்றி ஒன்றில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். விவசாயம் செய்வதும் ஆர்வமாக இருக்கும்.

இப்போது சொல்லுங்கள் இப்படிச் செய்தால் விவசாயத்தில் எப்படி நட்டம் வரும்? எப்படி விவசாயத்தை விட்டுப் போக மனம் வரும்?” என்று கேட்டார்.

நான் மௌனமானேன்.

என் மௌனத்தைப் பார்த்து குதூகலமான அவர், “நீங்கள் எல்லாம் இப்படி செய்திருக்க மாட்டீர்கள். இப்படிச் செய்யாமல் விவசாயத்தில் நட்டம் என்றால் எப்படி? விவசாயத்தால் மன அழுத்தம் வருகிறது என்று சொன்னால் எப்படி?” என்றார்.

நான் என்ன சொல்வேன்?

ஆனாலும் நான் சொன்னேன்.

“நான் இப்போது விவசாயத்தை இப்படிச் செய்யவில்லை. ஆனால் என் தாத்தா, அப்பா எல்லாம் இப்படித்தான் செய்தார்கள். அப்படிச் செய்த அவர்களே, நான் விவசாயத்தில் இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றால் நல்லது என்று ஆசைபட்டார்கள்” என்றேன்.

விவசாயத்தைப் பற்றி ஆர்வமாகச் சொன்ன அவர் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. பேயாட ஆரம்பித்து விட்டதோ என்னவோ!

இவர்கள் புதிய புதிய முறைகள் என்று சொல்வதெல்லாம் நம் முன்னோர்கள் பரீட்சித்துப் பார்த்து கடைபிடித்த முறைகள்தான். அதை என்னவோ இவர்கள்தான் புதிதாகக் கண்டுபிடித்தது போலவும், அப்படிச் செய்தால் விவசாயத்தில் நட்டம் வராது என்பது போலவும் சொல்கிறார்கள்.

காதில் பூவைச் சுற்றுவது என்றால் எல்லாருக்கும் ஆசை வரத்தான் செய்கிறது.

விவசாயிகள் எல்லாவற்றையும் செய்து பார்த்து விட்டுதான் வேறு வழியில்லாமல் மாறியிருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?

இன்று விவசாயம் என்பது விவசாயிகளின் கையில் மட்டும் இல்லை. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் அதை வெகுவாகப் பாதிக்கிறது. விதைநெல், எரு, ஏர், உழவு மாடுகள் என்று விவசாயம் சார்ந்த பல இன்று விவசாயிகளிடம் இல்லை. இதனால் விவசாயிகள் சிக்குகிறார்கள். எப்படியெல்லாம்சிக்குகிறார்கள் என்றால்…

விதைநெல்லை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி வாங்கி விவசாயிகள் வியாபாரிகளிடம் சிக்குகிறார்கள்.

உரத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த இடத்தில் உரங்களின் விலையைத் தீர்மானிக்கும் அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களின் கைகளில்சிக்குகிறார்கள்.

ஏர் உழ வங்கிக் கடன் வாங்கி டிராக்டர் வாங்குகிறார்கள். இந்த இடத்தில் வங்கிக் கடன் அல்லது நிதி நிறுவனக் கடன்களின் வலைகளில் மீன்களைச் போலச் சிக்குகிறார்கள். வலைகளில் சிக்கிய மீன்களின் கதி என்னவாகும்?

இந்தச் சிக்குதல்கள் மற்றும் சிக்கல்களைச் சமாளித்து விளைவித்த நெல்லை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கேற்ப அரசு கொள்முதல் நிலையங்களிலோ அல்லது தனியார் வியாபாரிகளிடமோதான் விவசாயிகள் விற்பனை செய்தாக வேண்டும்.

விவசாயிகள் செலவு செய்த தொகைக்கு அரசாங்கம் செய்யும் கொள்முதல் விலையோ, தனியார் வியாபாரிகள் தரும் கொள்முதல் தொகையோ போதவே போதாது. இதற்கு அவர்கள் செலவு செய்த தொகையை வங்கிகளில் நிரந்தர வைப்பில் வைத்திருந்தால் கூட வருடத்துக்கு 7 சதவீத வட்டித் தொகையை எவ்வித உழைப்போ, மெனக்கெடோ இல்லாமல் கையில் லாபமாகப் பார்த்திருப்பார்கள்.

இவ்வளவு விசயங்கள் பின்னிப் பிணைத்து கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கும் விவசாயத்தில் லாபம் பார்ப்பது என்பது உங்கள் தேவைக்கான விளைபொருளை மட்டும் நீங்கள் விளைவித்துக் கொள்வதில் வேண்டுமானால் இருக்காலாமே தவிர, அதைச் சந்தைப்படுத்தி லாபம் பார்ப்பதில் கொஞ்சம் கூட சாத்தியமில்லை. அப்படி லாபம் பார்க்க வேண்டுமானால் அரசின் விவசாயக் கொள்கைகள் தொடங்கி, விவசாய விளைபொருள்களின் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் வரை பலவற்றை மாற்ற வேண்டியிருக்கும்.

அவற்றையெல்லாம் மாற்றினால் ஊழல் செய்வது, கொள்ளை அடிப்பது, கையூட்டு வாங்குவது வரை பலவற்றை மாற்ற வேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் மாற்ற எந்த  ஆட்சியாளர்கள் முன்வருவார்கள் சொல்லுங்கள்!

இதிலென்ன ஊழல், கொள்ளை, கையூட்டு என்கிறீர்களா?

அவற்றையெல்லாம் அறிய வேண்டுமானால்...

கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கப்படுகிறது, விவசாய விளைபொருட்களைப் போக்குவரத்துச் செய்வதற்குள் எவ்வளவு விளைபொருட்கள் ஆங்காங்கே தேன் எடுத்தவர் புறங்கையை நக்குவதைப் போல உருவப்படுகின்றன, விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் போது எவ்வளவு தொகை ஒதுக்கிக் கொள்ளப்படுகிறது என்பதையெல்லாம் நீங்கள் களத்தில் இறங்கி ஆராய வேண்டியிருக்கும்.

அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும் என்பது முதல் பிரச்சனை. நேரம் இருந்தாலும் இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இரண்டாவது பிரச்சனை!

இதில் முதல் பிரச்சனையைக் கையாள்வதை விட, இரண்டாவது பிரச்சனையை எதிர்கொள்வது மிகுந்த அபாயகரமானது.

ஆக, இப்படி, பல சாத்தியப்படுத்துவதற்குக் கடினமான விடயங்கள் இருக்கின்றன விவசாயம் லாபகரமாக அமைவதற்கு என்று சொன்னால் இனியாவது ஒத்துக் கொள்வீர்கள்தானே?

*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...