அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…
தற்போது
நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல்
ஒலித்து முடித்த பிறகே சம்பந்தப்பட்டவருக்கு அழைப்பு செல்கிறது. அந்த அளவுக்கு அலைபேசி
மோசடிகள் நாடு தழுவிய அளவில் நடந்த வண்ணம் உள்ளன.
சட்டைப்பையிலிருந்து
பணத்தைத் திருடுதல், பணப்பையைச் சாமர்த்தியமாகத் களவாடுதல், சீட்டுகள் நடத்தி மோசடி
செய்தல், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏமாற்றுதல் என்றிருந்த பண மோசடிகள் காலத்திற்கேற்ப
மாறிக் கொண்டிருக்கின்றன. தற்காலத்தில் மக்கள் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதால்,
அலைபேசி மூலமாகச் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
திருடர்களும்
மோசடி பேர்வழிகளும் தகவல் தொடர்பு வளர்ச்சிக்கேற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டே
இருக்கிறார்கள். புதுப்புது மோசடிகளைக் கண்டறிந்து அரங்கேற்றி வருகிறார்கள். அவற்றைப்
பற்றி அறிந்து கொண்டு எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் இருக்க வேண்டிய அவசியமாகிறது.
அலைபேசி
மோசடிகளிலிருந்து எவ்வாறெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைத் தற்போது
காண்போமா?
தகவல்
தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்திலிருந்து (டிராய்) புதிய வகை சட்டம் வந்துள்ளது, அதற்கேற்ப
உங்கள் அலைபேசி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஏதேனும் அழைப்புகள் வந்தால்
அதை நம்பாதீர்கள். காரணம், அது போன்ற அழைப்புகளைத் தகவல் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்
ஒருபோதும் செய்வதில்லை.
அந்நிய
செலவாணி தொடர்பாக அழைப்பதாகச் சொல்லி, மேலும் விவரங்களை அறிய எண் ஒன்றை அழுத்தவும்
என்றால், அழுத்தவே அழுத்தாதீர்கள். உங்களுக்கும் அந்நிய செலவாணிக்கும் எந்தத் தொடர்பும்
இல்லாத போது, நீங்கள் ஏன் எண் ஒன்றை அழுத்த வேண்டும்? அப்படி அழுத்தினால் உங்களைப்
பற்றிய விவரங்கள் திருடு போக வாய்ப்புகள் உள்ளன.
ஆதார்
விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று காவல் துறையிலிருந்து அழைப்பதாக அழைப்பு வந்தால்
அதையும் நம்பாதீர்கள். ஏனென்றால் காவல் துறை அது போன்ற அழைப்புகளைச் செய்வதில்லை. காவல்
துறைக்கும் ஆதார் புதுப்பிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இணையவழி
வழங்கல் அலுவலகத்திலிருந்து (ஆன்லைன் டெலிவரி ஆபிஸ்) பேசுகிறோம், உங்களது முகவரியை
உறுதிய செய்ய எண் ஒன்றை அழுத்துங்கள் என்றால், நீங்கள் தவறியும் எண் ஒன்றை அழுத்தி
விடாதீர்கள். ஏனென்றால், இது போன்றெல்லாம் எந்த நிறுவனமும் கேட்பதில்லை.
உங்கள்
பெயருக்குப் போதைப் பொருள் பொட்டலம் வந்துள்ளது என்று வரும் அழைப்புகளையும் நம்பாதீர்கள்.
உடனடியாக அழைப்பைத் துண்டியுங்கள். இல்லையென்றால் உங்களை எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்)
செய்துள்ளதாகக் கூறி பணம் பிடுங்க ஆரம்பிப்பார்கள். உண்மையில் எண்மக் கைது (டிஜிட்டல்
அரெஸ்ட்) என்ற ஒன்று இல்லவே இல்லை.
தவறுதலாக
உங்களுக்குப் பணம் அனுப்பி விட்டதாக வரும் அழைப்புகளையும் நம்பவே நம்பாதீர்கள். அவர்கள்
உங்கள் இணையவழி வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிக்கவே நாடகமாடுகிறார்கள் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள்.
உங்களுடைய
பழைய வண்டியை வாங்க அழைக்கிறேன், உங்களுடைய பழைய குளிர்சாதனப் பெட்டியை வாங்க அழைக்கிறேன்
என்று வரும் அழைப்புகளையும் நம்பாதீர்கள். நீங்கள் உங்களுடைய பழைய வண்டியை விற்பதாக
அறிவிப்பு செய்யாத நிலையில், இப்படி வரும் அழைப்புகள் உங்களை மோசடி செய்யவே என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்.
காவல்
துறை, புலனாய்வுத் துறை போன்றவற்றிலிருந்து அழைப்பதாக வரும் கணினி குரலை நம்பவே நம்பாதீர்கள்.
அப்படி கணினிக் குரலில் அவர்கள் அழைப்பதே இல்லை.
இவைத் தவிரவும்,
தெரியாத
இணைப்புகளைச் சொடுக்குதல்,
ஒரு
முறை கடவு எண்ணை (ஓடிபி) பகிர்தல்,
தெரியாதவர்களிடமிருந்து
வரும் அழைப்புகள் மற்றும் அறியாதவர்களின் காணொளி அழைப்புகள் ஆகியவற்றை ஏற்று விவரங்கள்
வழங்குதல் போன்றவற்றைச் செய்யவே செய்யாதீர்கள்.
இவ்வளவையும்
தாண்டி, ஒரு வேளை நீங்கள் இணையவழி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி விட்டால் பயப்படாதீர்கள்.
1930 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவித்து புகார் அளிக்க தயங்காதீர்கள்.
மேற்படி
விழிப்புணர்வு செய்திகளைப் படித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பெற்ற விழிப்புணர்வை
உங்கள் குடுபத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அனைவரும் விழிப்புணர்வுடன்
இருக்கும் போதுதான் மோசடிக்காரர்களின் சதிகளை முறியடிக்க முடியும். தேவையற்ற பண இழப்பு
மற்றும் அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் தடுக்க முடியும்.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.” (குறள், 435)
என்ற
வள்ளுவர் வாக்கை எப்போதும் மனதில் வைத்திருங்கள். மோசடிகளுக்கு உட்படாமல் பாதுகாப்பாக
இருங்கள்.
*****
No comments:
Post a Comment