31 Dec 2024

உடனடித் தேவை – ஆக்கப்பூர்வ அரசியலும் தொலைநோக்குத் திட்டங்களும்!

உடனடித் தேவை –

ஆக்கப்பூர்வ அரசியலும் தொலைநோக்குத் திட்டங்களும்!

இப்போதைய உடனடித் தேவை என்ன தெரியுமா?

ஆக்கப்பூர்வமான அரசியலும் தொலைநோக்குத் திட்டங்களும்.

அரசுகளும் கட்சிகளும் கவர்ச்சிகரமான விளம்பரத் திட்டங்களைக் கைவிட வேண்டும். வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்ளும் மற்றும் பழி சுமத்திக் கொள்ளும் வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

இதற்கான முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அரசுகளும் கட்சிகளும் எப்படி இருந்தாலும் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் நடுத்தர மக்கள் ஏழையாகிறார்கள். ஏழைகள் பரம ஏழைகளாகிறார்கள்.

இது உண்மையா என்றால், உண்மைதான். புள்ளி விவரங்களும் அவ்வபோது வெளியாகும் தகவல்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு சில விவரங்களைப் பார்த்தால் நீங்களே இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

உணவுப் பொருட்களின் விலை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது. இதை அறிந்து கொள்ள புள்ளி விவரங்கள் தேவையில்லை என்றாலும் புள்ளி விவரங்களை நோக்கும் போது எந்த அளவுக்கு விலை உயர்வு அதிகரித்திருக்கிறது என்பது புரிய வரும்.

காய்கறிகளின் விலை 30 சதவீததுக்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஒரு சில காய்கறிகளின் விலை 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. குறிப்பாகத் தக்காளியின் விலை 247 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வெங்காயத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் தாறுமாறாக சதவீதக் கணக்கே வெடித்துப் போகும் அளவுக்கு விலை உயரலாம். ஒரு கிலோ பூண்டின் விலை 5 கிராம் வெள்ளியின் விலையை நெருங்கியிருக்கிறது.

மளிகைப் பொருட்கள், பருப்பு போன்றவற்றின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்றவை 180 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. விலை உயர்வால் கொண்டைக் கடலைக்குப் பதிலாக கடலைப் பருப்பிற்கு மாறி சுண்டல் செய்து கொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றுமொரு புள்ளிவிவரம் இன்னோர் அதிர்ச்சிகரமான உண்மையைச் சொல்கிறது.

2023 இல் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர உணவு செலவு 3051 ஆக இருந்ததாகவும், அது 2024 இல் 4631 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விவர அடிப்படையில் பார்க்கும் போது இது 50 சதவீத உயர்வாகும்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன என்றாலும், முக்கிய காரணம் சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்களில் ஏற்படும் விலை உயர்வு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் அதிகரித்துக் கொண்டு போகும் சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) காரணமாகக் கூறப்படுகிறது. சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு மூன்றாவது காரணம்.

சரக்குப் போக்குவரத்தைப் பொருத்த மட்டில் எரிபொருள் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவைப் பொருத்த வரையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசலுக்கான கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே போகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே போகும் போது இந்தியாவில் மட்டும் விலை ஏறி வருவது அதிசயம்தான். இந்த அதிசயம்தான் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறது.

இதன் விளைவுகள் இந்தியக் குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.

அதிகரித்து வரும் விலைவாசியால் சம்பாத்தியத்தில் போதாமையை ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் எதிர்கொள்கின்றது. இந்தப் போதாமையைச் சமாளிக்க பட்டினியோடு படுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 16 கோடி மக்கள் இரவு உணவு உண்ணாமல் பட்டினியோடு படுப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கீழே நீங்கள் காணும் புள்ளி விவரத்தை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

127 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நிகழாண்டில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 105.

இப்போது சொல்லுங்கள். இந்தியக் குடும்பங்கள் என்னதான் செய்யும்?

சம்பாத்தியப் போதாமையை எதிர்கொள்ள கூடுதல் வேலைகளைச் செய்ய இந்தியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் வேலை வாய்ப்புகள்? வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்த வண்ணம் இருப்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் 9 சதவீத ஆண்களும், 13 சதவீத பெண்களும் வேலை இல்லாமல் அல்லாடுவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்நிலை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது தெரியுமா?

வேலையில்லாப் பிரச்சனையும், சம்பாத்திய போதாமையும் இந்தியக் குடும்பங்களைக் கடன் வாங்க வைக்கின்றன. இவர்களைக் குறி வைத்து இந்தியாவில் நுண்நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்) கடன் வழங்குகின்றன. மக்களின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டு, கிட்டதட்ட கந்து வட்டி நிறுவனங்கள் போலவே இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.

நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் பட்ட ஆடவர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றவை தற்போது இந்த நுண்நிதி நிறுவனங்களின் முகவர்கள் போலவே செயல்பட ஆரம்பித்து விட்டன. இக்குழுக்கள் கடன்களைப் பெற்றுத் தருவது, அக்கடன்களை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வது என்று நுண்நிதி நிறுவனங்களின் அறிவிக்கப்படாத வசூலிக்கும் அமைப்புகளாகவே சுயஉதவிக் குழுக்கள் இயங்கத் தொடங்கி விட்டன.

இதற்கு என்னதான் தீர்வு?

மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அமல்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்க வேண்டும். அவற்றிற்கு எவ்வித வரியும் இல்லாமல் இருப்பது கூட நல்லதுதான்.

உணவுப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்களைக் குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

ஏழ்மையையும் வறுமையையும் பயன்படுத்தி கடன் வழங்கி கந்து வட்டிக்காரர்களைப் போலச் செயல்பட்டு வரும் நுண்நிதி நிறுவனங்களை (மைக்ரோ பைனான்ஸ்) நெறிபடுத்த வேண்டும்.

இலவசப் பொருட்களை வாரி வழங்கும் வாக்கு அரசியலை அரசியல் கட்சிகள் தவிர்த்து விட்டு, ஆக்கப்பூர்வமான பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கும் ஆரோக்கியமான அரசியலையும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொலைநோக்குத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இனியும் அரசுகளும் கட்சிகளும் வெறுப்பு அரசியலையும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தும் சமாளிப்பு அரசியலையும் முன்னெடுத்தால் அதனால் பாதிக்கப்படப்போவது ஏழை மற்றும் நடுத்தர மக்களே.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வ அரசியலையும் தொலைநோக்குத் திட்டங்களையும் அரசியல் கட்சிகளும் ஆளும் அரசுகளும் கவனம் செலுத்தி இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பு ஆகும். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

*****

30 Dec 2024

ஆதி ஏன் அந்தமாகிறது?

ஆதி ஏன் அந்தமாகிறது?

அப்படித்தான் வாழ்க்கையைத் துவங்கினேன்

ஆபாசமானவராக அசிங்கமானவராக

எல்லா எச்சிலையும் துப்பிய பிறகு

சகல மலங்களையும் கழித்த பிறகு

மொத்த பிராணனும் போன பிறகு

உன் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல்

தோற்பதுதானே என் வாழ்க்கை

கடைசியில் உனக்கும் எனக்கும் எதற்கும்

மனம் நிறைவடையாமல் சாவதுதானே வாழ்க்கை

வாழ்க்கைக்கு என்ன பொருள் இருக்கிறது

எந்தப் பொருளும் இல்லாது முடியும் வாழ்வில்

எத்தனைப் பொருட்களைச் சேர்த்தாயிற்று

உபயோகமான பொருள் ஏதுமில்லை

உபயோகமற்ற வாழ்க்கையில்

சேர்த்துக் கொண்ட அர்த்தங்கள் எதற்கும்

முடிவில் எந்தப் பொருளுமில்லை

நிறைவற்ற வாழ்வில் நிறைய வேண்டும் என்ற

பொருளாவது இருந்தது

நிறைந்து வழியும் வாழ்வில் அந்தப் பொருளும் இல்லை

எந்தப் பொருளும் இல்லாத வாழ்வுக்கு

ஆயிரம் அர்த்தங்கள் கண்டாயிற்று

அர்த்தமிழந்து போவதொன்றே வாழ்வின் பொருள் என்ற

பொருண்மையும் விளங்கியாயிற்று

மரணத்தின் மூச்சைத் தொடும் மூர்ச்சைப் பொழுதில்

அசமந்தமாய்த் தெளிவாகிறது

பொருளற்றதொரு பொருள் வாழ்வு

இப்போது சத்தமிடத் தோன்றுகிறது

மரணம் மன்னித்து விடும் எனில்

எல்லாவற்றையும் முடித்து வைத்துவிடும் எனில்

அதுவே முதலாவதாக இருக்கட்டும்

அதைக் கடைசிக்குப் போக விடாதீர்கள்

*****

 

29 Dec 2024

கல்வியை நோக்கித் திரும்ப வேண்டிய மூன்று கேள்விகள்!

கல்வியை நோக்கித் திரும்ப வேண்டிய மூன்று கேள்விகள்!

ஏன் படிக்கிறோம்?

கல்வியின் நோக்கமே ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களை எழுப்ப வேண்டும் என்பதே.

அதே கேள்வியைக் கல்வியை நோக்கித் திருப்பினால் எப்படி இருக்கும்?

ஏன் படிக்கிறோம்?

எதற்குப் படிக்கிறோம்?

எப்படி படிக்கிறோம்?

முதலில் ஏன் படிக்கிறோம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

இதற்கான பொதுவான மற்றும் எதார்த்தமான பதில் என்னவாக இருக்க முடியும்?

வேலைக்குப் போவதற்காகப் படிக்கிறோம் என்பதாகத்தானே இருக்க முடியும்.

வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களைப் பெரும்பாலான ஆசிரியர்கள் கேட்ட கேள்வி என்னவாக இருக்க முடியும்?

படித்த நீ என்ன வேலைக்குப் போகப் போகிறாய் என்பதாகத்தானே இருக்க முடியும்.

யாராவது ஒரு மாணவர் எழுந்து, படித்து எனக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று பதில் சொன்னால் எப்படி இருக்கும்? அத்துடன், அது எப்படி நோக்கப்படும்? அத்துடன் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று நினைக்கிறீர்களா?

ஆகப் படித்து எதுவாகவோ ஆக வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படிக்க வைத்தல் நடைபெறுகிறது.

தாங்கள் செய்யும் வேலையை பிடித்தமில்லாததாகவோ அல்லது அவமானகரமாகவோ கருதும் ஒரு சமுதாயத்தில் படிப்பின் மூலம் அடுத்த கட்ட வேலையை எட்டுவதற்காகப் படிக்கிறோம் என்கிற பதில் பொதுவாக ஒத்துப் போகக் கூடிய ஒரு பதில்தான்.

ஏன் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்கள் என்று பெற்றோர்களைப் பொதுவாகக் கேட்டுப் பாருங்களேன். என் பிள்ளை என்னை மாதிரி கஷ்டப்படக் கூடாது என்கிற பதிலைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் அனிச்சையாய் உதிர்ப்பார்கள். திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் கூட அப்படி ஒரு பார்வையைத்தான் கல்வி குறித்துத் திணித்து வருகின்றன எனலாம்.

எதற்குப் படிக்கிறோம் என்கிற வினாவை எழுப்பிப் பாருங்களேன். இதற்கும் ஏன் படிக்கிறோம் என்பதற்குக் கிடைத்த பதிலை ஒத்த பதிலே கிடைப்பதைப் பார்க்கலாம்.

ஒரு விவசாயி தன் தலைமுறையை அரசு வேலையைப் பெற வைக்க வேண்டும் என்று படிக்க வைக்கிறார்.

ஓர் அரசு வேலையில் உள்ள பணியாளர் தன் தலைமுறையை மருத்துவராகவோ அல்லது போறியாளராகவோ அல்லது அதை விட இன்னும்  பெரிய வேலையைப் பெறுவதற்காகவோ படிக்க வைக்கிறார்.

ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் தன் தலைமுறையைத் தன்னுடைய அதே நிலையில் தக்க வைக்க அல்லது அதை விட இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல படிக்க வைக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் வேலை அல்லது பெரிய வேலை என்ற ஆசை காட்டியே இங்கு படிக்க வைத்தல் என்ற கல்வி முறையானது செயல்படுத்தப்படுகிறது.

இப்போது எப்படி படிக்கிறோம் என்ற வினாவைக் கேட்டுப் பாருங்களேன்.

மதிப்பெண்கள் பெறுவதற்கேற்ப படிக்கிறோம்.

நுழைவுத் தேர்வுகளில் தேர்வு பெறுவதற்கேற்ப படிக்கிறோம்.

எந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதோ, அந்தப் படிப்பைப் பிடித்தம் இருக்கிறதோ அல்லது இல்லையோ அதை அடைய வேண்டும் என்ற நோக்கில் எப்படியோ படிக்கிறோம்.

இந்தியப் படிப்பு முறையையே திணித்தல் வகையான படிப்பு முறை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

மதிப்பெண்களையும் நுழைவுத் தேர்வு தகுதியையும் பெறுவதற்கு மதிப்பெண் தகுதியே அளவீடு என்பதால், அதைப் பெறுவதற்கேற்ப எப்படியெல்லாம் திணித்தல் செய்ய முடியுமோ, அப்படியெல்லாம் திணித்துக் கொள்ளும் வழிமுறைகளில் படிக்கிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

மதிப்பெண்களைப் பெறுவதற்கு மனப்பாட வழியிலான திணித்தல் ஒரு எளிய குறுக்கு வழியாகப் பார்க்கப்படுவதன் பார்வையே எப்படி படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக நம் சமுதாயத்தில் மாறியிருக்கிறது.

இப்போது,

ஏன் படிக்கிறோம்?

எப்படி படிக்கறோம்?

எதற்குப் படிக்கிறோம்?

என்ற வினாக்களுக்கான விடைகள் வேலைவாய்ப்பு, மதிப்பெண்கள், நுழைவுத்தேர்வு என்ற மூன்றைச் சுற்றி அலைவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதைப் புரிந்து கொண்டு மட்டும் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.

புரிந்து கொள்ளாமல் எப்படி வெளியேற முடியும்?

நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத வரை எப்படி சிறையிலிருந்து வெளியேற முடியும்?

இந்தப் புரிதல் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். நகர்த்துவது மட்டுமல்ல விட்டு விடுதலையாவதற்கான துணிச்சலையும் தரும்.

ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பது உங்களுக்கு இப்போது தெரிய வந்திருக்கும்.

*****

28 Dec 2024

எதிராக வாழ வைத்தல்!

எதிராக வாழ வைத்தல்!

எனக்கு புத்திமதி சொல்லி விட்டு

நீங்கள் மீறி செய்ய முடியாது

நான் கஷ்டப்பட்டு இந்த மனநிலைக்கு வந்திருக்கிறேன்

நீங்களும் அப்படித்தான் வர வேண்டி இருக்கும்

வாழ்க்கை முழுவதும்

பிடித்ததையே செய்து கொண்டிருக்க முடியாது

அதுவும் ஒரு நாள் சலித்துப் போகும்

ஒரு புதிய ஆசை தோன்றும் போது

விருப்பம் மாறுபடும் போது

நம் ஆசைகளை நிறைவேற்றி வைத்தவரே

நமக்கு எதிரியாகிப் போவார்

என்ன நடந்தாலும்

வாழ்க்கை போய்க் கொண்டே இருக்கும்

எதிரியும் இல்லை

நண்பரும் இல்லை

எல்லாம் தொடர்கதை

மாறி மாறி நடக்கும் மர்மக் கதை

எல்லாரும் இக்கட்டை

ஒரு நாள் எதிர்கொண்டு ஆக வேண்டும்

விரும்பாவிட்டாலும்

சிக்காமல் இருக்க முடியாது

சிக்கிக் கொண்டு

மீண்டு வர வேண்டும்

எதற்கும் அவசரப்பட முடியாது

எல்லாவற்றுக்கும்

பொறுமையாகத்தான்

இருந்தாக வேண்டும்

சரியாகச் செய்யவில்லை என்று

குற்றம் சாட்டுவார்கள்

அதற்காகச் சரியாகச் செய்தால்

பாராட்டுவார்கள் என்றில்லை

எதாவது செய்தால்

குறை காண்பார்கள்

அதற்காக எதுவுமே செய்யாமல் இருந்தால்

கண்டு கொள்ளவே மாட்டார்கள்

நான் நினைப்பதற்கு எதிராக

என்னை வாழ வைத்துப் பார்த்து விடுகிறீர்கள் இல்லையா

*****

27 Dec 2024

சனம் அண்டா மனம்!

சனம் அண்டா மனம்!

தன்னை இதுவரை கவனிக்காதவர்களை

ஒருவர்

காணாமல் போய் கவனிக்க வைத்து விடுகிறார்

இனி திரும்ப மாட்டார் என்ற எண்ணம்

இருக்கும் போது நன்றாகக் கவனித்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது

கடந்த காலத்தில் எடுத்திருக்க வேண்டிய முடிவை

நிகழ்காலத்தில் எடுத்து எந்தப் பயனுமில்லாமல் போகிறது

அன்பு கொடுப்பதைப் பற்றி யோசித்த போது

மனம் கஞ்சத் தனத்தைப் பற்றிக் கொண்டிருந்தது

உலகம் இப்போது எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்

தன்னுடைய பார்வையில்

தன்னைத் தான் எப்படி பார்ப்பது என்பதுதான் முக்கியம்

பலவீனமானவர்களிடம் நடந்து கொள்ளும் முறைதான்

மதிப்பீட்டுக்கு உகந்தது

கொடுப்பதால் குறைந்து போகப் போவதில்லை

எதையாவது கொடுக்கும் இடத்தில் இருக்க பிசுனாரித்தனம் அனுமதித்ததில்லை

கொடுப்பது பெருகும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்று

எத்தனையோ பேர் எத்தனை முறை சொன்னாலும்

பெற்றுக் கொள்ளும் இடத்தில் இருக்கவே பிரியப்படுகிறது

ஆளண்டா பட்சியாகி சனம் அண்டா கட்சியாகி விட்ட மனம்

*****

26 Dec 2024

கதை சொல்பவர்கள்!

கதை சொல்பவர்கள்!

என் மேல் எனக்கே நம்பிக்கையில்லை

அவர்கள் நம்பும் போது

எனக்கு வேறு வழியில்லை

செய்து தொலைக்க வேண்டியதாகி விட்டது

அது என்னவோ சாதனையாகியும் விட்டது

நம்பிக்கை இருந்தால் எதையும்

சாதிக்கலாம் என்ற வாசகமும் பிரபலமாகி விட்டது

எனக்கென்னவோ

இப்போது வரை நம்பிக்கையில்லை

ஆனாலும் சொல்கிறார்கள்

இன்னும் ஒரு நாள் காத்திரு

எல்லாம் மாறி விடும் என்கிறார்கள்

ஒரு நாள் காத்திருப்பது

கொடுமை என்றால்

கதையை முடித்துக் கொள் என்கிறார்கள்

அவர்களைப் பொருத்த வரை

அந்த நாளுக்கு அதுவும் ஒரு கதை

*****

25 Dec 2024

கூகுளுக்கு மெமரி லாஸ் வருமா?

கூகுளுக்கு மெமரி லாஸ் வருமா?

விவசாயத்துக்காக

அம்மாவிடம் வாங்கிய பணத்தை

அப்பா எப்போதும் திருப்பித் தந்ததே இல்லை

திருப்பித் தரவும் விவசாயம் அனுமதித்தது இல்லை

ஸோ ஸ்வீட் விவசாயம்

*****

அலைபேசியைப் பிடுங்கினால்

கை ஒடிந்து விடுபவர்கள் இருக்கிறார்கள்

எலும்புகள் அவ்வளவு பலகீனம்

கால்சிய மாத்திரைகள்

காலாவதியாகி விடும்

*****

நீ தேடுவதை

உன்னுடன்   சேர்ந்து

கூகுளும் தேடுகிறது

நீ மறந்தாலும்

நீ தேடுவதை

கூகுள் மறக்காது

மெமரி லாஸ்

மனிதருக்குத்தான் வரும்

கூகுளுக்கு வராது

*****

தேய்க்க தேய்க்க

தேய்த்துக் கொண்டிருக்கிறது

கிரெடிட் கார்டு

செய்கூலி சேதாரம் தனி

*****

நீ அதை எவ்வளவு

நேசிக்கிறாயோ

அதுவும் உன்னை

அவ்வளவு நேசிக்கும்

உன் கடன்

டோன்ட் மிஸ் யூ

*****

ஐந்து நிமிட

டைட்டில் கார்டுகளைப் பார்க்க

தில் இருந்தால்

இரண்டரை மணி நேர

திரைப்படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்

*****

அந்தப் பிரச்சனை எப்போதும்

அங்கேதான் இருக்கிறது

ஒரு மரணம்

ஓர் அழுகை

ஒரு வார்த்தை

ஏதேனும் ஒன்று

அதை மாற்றலாம்

அதுவரை அது

அங்கேதான் இருக்கும்

அதுவரை நாம்

அதை பேசிக் கொண்டிருக்கலாம்

*****

24 Dec 2024

அலைபேசி இணைப்பில் ஞானமடைதல்

அலைபேசி இணைப்பில் ஞானமடைதல்

உங்கள் அலைபேசி எண்ணுக்கு

ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது

என்று இணைப்பைச் சொடுக்க

சொன்னது!

சொடுக்கி விட்டுப் பார்த்தால்

வங்கிக் கணக்கிலிருந்து

பத்தாயிரம் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகக்

குறுஞ்செய்தி தகவல்

தந்தது!

ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்ற

புத்தரின் ஞானம்

அதன் பின்னே வந்தது!

*****

எண்ணிப் பார்க்காமல் வாங்கி வந்ததில்

ஐந்து ரூபாய் குறைந்தது சில்லரை!

அன்றோடு நம்பி வாங்குவதற்குக்

கட்டினேன் கல்லறை!

*****

பயணத்தில் பறி போவதால்

கல்யாணத்தில் மட்டும்

நகைகளை

அணிவதாகப் பீற்றிக் கொண்டார்

தன் சாமர்த்திய புத்தியை!

அருகிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டவர்

சமத்தாகக் தூக்கிக் கொண்டார் சாமர்த்தியசாலியின்

நகைப்பெட்டியை!

*****

23 Dec 2024

கடைசியாகப் படிக்கும் தலைமுறை

கடைசியாகப் படிக்கும் தலைமுறை

ஒரு போட்டித் தேர்வுக்குப் போயிருந்தேன்

யார் கையிலும் புத்தகம் இல்லை

யாரிடமும் என்றால் என்னைத் தவிர

எல்லார் கையிலும் அலைபேசி

அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தார்கள்

மற்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

மகள் கூட படிப்பதற்கு PDF அனுப்பியிருக்கிறாள்

அடிக்கடி இது போன்று அனுப்பி

அச்செடுத்து வந்து விடுங்கள் என்கிறாள்

புத்தகம் கிடக்கட்டும்

குறைந்தபட்சம் கையேடுகள் (நோட்ஸ்) வைத்து படிக்கும் தலைமுறை கூட

ஒழிந்து விட்டது

நானெல்லாம் கையேடு (நோட்ஸ்) வைத்து படிப்பது தெரிந்து

ஆசிரியர்களிடம் செமையாக அடி வாங்கியவன்

என்று சொன்னால் எந்தத் தலைமுறை நம்பும்?

சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள்

மாத்திரை போட்டுக் கொண்டும் படித்தார்கள்

சர்க்கரையோ ரத்த அழுத்தமோ

படித்ததால் வந்ததோ

படிப்பதற்கு முன்போ வந்ததோ

ஆயிரம்தான் சொன்னாலும்

தேர்வு ஒன்றுதான் படிக்க வைக்கிறது

அல்லது படிக்க வேண்டியதைப் பார்க்க வைக்கிறது

தேர்வுகள் இல்லாத உலகில்

படிப்பது என்பது மதிப்பிழந்து போய் விடுமோ என்னவோ

கடைசியாகப் படிக்கும் தலைமுறையாக

இதுவாக இருக்குமோ என்னவோ

*****

வேகமாகப் போகின்ற வேகம்

வேகமாகப் போகின்ற வேகம்

வேகத்திற்கு ஆட்பட்டு விட்டவர்

நிறுத்துவது தெரியாமல் தடுமாறுகிறார்

கைகளைக் கால்களை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்

வேகம் அதிகமாகிறது

எதையோ உதைக்கிறார் திமிறுகிறார்

வேகம் இன்னும் அதிகமாகிறது

வேகத்தைக் குறைக்க தளர்வாக வேண்டும் என்பது புரியாது

மேலும் இறுக்கிப் பிடிக்கிறார்

அப்படியே பழக்கப்பட்டுப் போன அவர்

அவரை இன்னும் இறுக்கிப் பிடித்து

வேகத்தைக் கூட்டுகிறார்கள் சுற்றி இருப்பவர்கள்

அவர் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்

நின்று பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல்

*****

22 Dec 2024

முகவரி மாற்றாத மனிதன்!

முகவரி மாற்றாத மனிதன்!

மீண்டும் மீண்டும்

தோல்விதான்

என் முகவரி

என்னைத் தேடி வருபவர்கள்

முகவரி மாறி

சிரமப்படக் கூடாது என்பதற்காகவே

மாற்றாமல் வைத்திருக்கிறேன்

முகவரியை

*****

எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள்

அதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது

முடியாது என்றால் இப்போதல்ல

பின்னர் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது

*****

பின்னால் நடக்க இருக்கும்

எவ்வளவோ விசயங்களுக்காக

நாம் இப்போதே

நாடகமாடி வைக்கிறோம்

*****

செய்யதையே செய்து

அலுத்துப் போய்

ஒரு நாள் வித்தியாசமாகச் செய்யப் போய்

அதன் உச்சத்தை அடைவாய்

*****

இவ்வளவு நேரம்

நீள்வதைப் பார்க்கையில்

இவ்வளவு அதிகம்

கசிவதைப் பார்க்கையில்

ஆறுதல் தேடும்

கண்களின் கண்ணீர்

இந்த மழை

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...