29 Dec 2024

கல்வியை நோக்கித் திரும்ப வேண்டிய மூன்று கேள்விகள்!

கல்வியை நோக்கித் திரும்ப வேண்டிய மூன்று கேள்விகள்!

ஏன் படிக்கிறோம்?

கல்வியின் நோக்கமே ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களை எழுப்ப வேண்டும் என்பதே.

அதே கேள்வியைக் கல்வியை நோக்கித் திருப்பினால் எப்படி இருக்கும்?

ஏன் படிக்கிறோம்?

எதற்குப் படிக்கிறோம்?

எப்படி படிக்கிறோம்?

முதலில் ஏன் படிக்கிறோம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

இதற்கான பொதுவான மற்றும் எதார்த்தமான பதில் என்னவாக இருக்க முடியும்?

வேலைக்குப் போவதற்காகப் படிக்கிறோம் என்பதாகத்தானே இருக்க முடியும்.

வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களைப் பெரும்பாலான ஆசிரியர்கள் கேட்ட கேள்வி என்னவாக இருக்க முடியும்?

படித்த நீ என்ன வேலைக்குப் போகப் போகிறாய் என்பதாகத்தானே இருக்க முடியும்.

யாராவது ஒரு மாணவர் எழுந்து, படித்து எனக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று பதில் சொன்னால் எப்படி இருக்கும்? அத்துடன், அது எப்படி நோக்கப்படும்? அத்துடன் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று நினைக்கிறீர்களா?

ஆகப் படித்து எதுவாகவோ ஆக வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படிக்க வைத்தல் நடைபெறுகிறது.

தாங்கள் செய்யும் வேலையை பிடித்தமில்லாததாகவோ அல்லது அவமானகரமாகவோ கருதும் ஒரு சமுதாயத்தில் படிப்பின் மூலம் அடுத்த கட்ட வேலையை எட்டுவதற்காகப் படிக்கிறோம் என்கிற பதில் பொதுவாக ஒத்துப் போகக் கூடிய ஒரு பதில்தான்.

ஏன் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்கள் என்று பெற்றோர்களைப் பொதுவாகக் கேட்டுப் பாருங்களேன். என் பிள்ளை என்னை மாதிரி கஷ்டப்படக் கூடாது என்கிற பதிலைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் அனிச்சையாய் உதிர்ப்பார்கள். திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் கூட அப்படி ஒரு பார்வையைத்தான் கல்வி குறித்துத் திணித்து வருகின்றன எனலாம்.

எதற்குப் படிக்கிறோம் என்கிற வினாவை எழுப்பிப் பாருங்களேன். இதற்கும் ஏன் படிக்கிறோம் என்பதற்குக் கிடைத்த பதிலை ஒத்த பதிலே கிடைப்பதைப் பார்க்கலாம்.

ஒரு விவசாயி தன் தலைமுறையை அரசு வேலையைப் பெற வைக்க வேண்டும் என்று படிக்க வைக்கிறார்.

ஓர் அரசு வேலையில் உள்ள பணியாளர் தன் தலைமுறையை மருத்துவராகவோ அல்லது போறியாளராகவோ அல்லது அதை விட இன்னும்  பெரிய வேலையைப் பெறுவதற்காகவோ படிக்க வைக்கிறார்.

ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் தன் தலைமுறையைத் தன்னுடைய அதே நிலையில் தக்க வைக்க அல்லது அதை விட இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல படிக்க வைக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் வேலை அல்லது பெரிய வேலை என்ற ஆசை காட்டியே இங்கு படிக்க வைத்தல் என்ற கல்வி முறையானது செயல்படுத்தப்படுகிறது.

இப்போது எப்படி படிக்கிறோம் என்ற வினாவைக் கேட்டுப் பாருங்களேன்.

மதிப்பெண்கள் பெறுவதற்கேற்ப படிக்கிறோம்.

நுழைவுத் தேர்வுகளில் தேர்வு பெறுவதற்கேற்ப படிக்கிறோம்.

எந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதோ, அந்தப் படிப்பைப் பிடித்தம் இருக்கிறதோ அல்லது இல்லையோ அதை அடைய வேண்டும் என்ற நோக்கில் எப்படியோ படிக்கிறோம்.

இந்தியப் படிப்பு முறையையே திணித்தல் வகையான படிப்பு முறை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

மதிப்பெண்களையும் நுழைவுத் தேர்வு தகுதியையும் பெறுவதற்கு மதிப்பெண் தகுதியே அளவீடு என்பதால், அதைப் பெறுவதற்கேற்ப எப்படியெல்லாம் திணித்தல் செய்ய முடியுமோ, அப்படியெல்லாம் திணித்துக் கொள்ளும் வழிமுறைகளில் படிக்கிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

மதிப்பெண்களைப் பெறுவதற்கு மனப்பாட வழியிலான திணித்தல் ஒரு எளிய குறுக்கு வழியாகப் பார்க்கப்படுவதன் பார்வையே எப்படி படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக நம் சமுதாயத்தில் மாறியிருக்கிறது.

இப்போது,

ஏன் படிக்கிறோம்?

எப்படி படிக்கறோம்?

எதற்குப் படிக்கிறோம்?

என்ற வினாக்களுக்கான விடைகள் வேலைவாய்ப்பு, மதிப்பெண்கள், நுழைவுத்தேர்வு என்ற மூன்றைச் சுற்றி அலைவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதைப் புரிந்து கொண்டு மட்டும் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.

புரிந்து கொள்ளாமல் எப்படி வெளியேற முடியும்?

நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத வரை எப்படி சிறையிலிருந்து வெளியேற முடியும்?

இந்தப் புரிதல் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். நகர்த்துவது மட்டுமல்ல விட்டு விடுதலையாவதற்கான துணிச்சலையும் தரும்.

ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பது உங்களுக்கு இப்போது தெரிய வந்திருக்கும்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...