31 Dec 2024

உடனடித் தேவை – ஆக்கப்பூர்வ அரசியலும் தொலைநோக்குத் திட்டங்களும்!

உடனடித் தேவை –

ஆக்கப்பூர்வ அரசியலும் தொலைநோக்குத் திட்டங்களும்!

இப்போதைய உடனடித் தேவை என்ன தெரியுமா?

ஆக்கப்பூர்வமான அரசியலும் தொலைநோக்குத் திட்டங்களும்.

அரசுகளும் கட்சிகளும் கவர்ச்சிகரமான விளம்பரத் திட்டங்களைக் கைவிட வேண்டும். வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்ளும் மற்றும் பழி சுமத்திக் கொள்ளும் வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

இதற்கான முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அரசுகளும் கட்சிகளும் எப்படி இருந்தாலும் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் நடுத்தர மக்கள் ஏழையாகிறார்கள். ஏழைகள் பரம ஏழைகளாகிறார்கள்.

இது உண்மையா என்றால், உண்மைதான். புள்ளி விவரங்களும் அவ்வபோது வெளியாகும் தகவல்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு சில விவரங்களைப் பார்த்தால் நீங்களே இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

உணவுப் பொருட்களின் விலை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது. இதை அறிந்து கொள்ள புள்ளி விவரங்கள் தேவையில்லை என்றாலும் புள்ளி விவரங்களை நோக்கும் போது எந்த அளவுக்கு விலை உயர்வு அதிகரித்திருக்கிறது என்பது புரிய வரும்.

காய்கறிகளின் விலை 30 சதவீததுக்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஒரு சில காய்கறிகளின் விலை 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. குறிப்பாகத் தக்காளியின் விலை 247 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வெங்காயத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் தாறுமாறாக சதவீதக் கணக்கே வெடித்துப் போகும் அளவுக்கு விலை உயரலாம். ஒரு கிலோ பூண்டின் விலை 5 கிராம் வெள்ளியின் விலையை நெருங்கியிருக்கிறது.

மளிகைப் பொருட்கள், பருப்பு போன்றவற்றின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்றவை 180 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. விலை உயர்வால் கொண்டைக் கடலைக்குப் பதிலாக கடலைப் பருப்பிற்கு மாறி சுண்டல் செய்து கொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றுமொரு புள்ளிவிவரம் இன்னோர் அதிர்ச்சிகரமான உண்மையைச் சொல்கிறது.

2023 இல் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர உணவு செலவு 3051 ஆக இருந்ததாகவும், அது 2024 இல் 4631 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விவர அடிப்படையில் பார்க்கும் போது இது 50 சதவீத உயர்வாகும்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன என்றாலும், முக்கிய காரணம் சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்களில் ஏற்படும் விலை உயர்வு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் அதிகரித்துக் கொண்டு போகும் சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) காரணமாகக் கூறப்படுகிறது. சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு மூன்றாவது காரணம்.

சரக்குப் போக்குவரத்தைப் பொருத்த மட்டில் எரிபொருள் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவைப் பொருத்த வரையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசலுக்கான கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே போகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே போகும் போது இந்தியாவில் மட்டும் விலை ஏறி வருவது அதிசயம்தான். இந்த அதிசயம்தான் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறது.

இதன் விளைவுகள் இந்தியக் குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.

அதிகரித்து வரும் விலைவாசியால் சம்பாத்தியத்தில் போதாமையை ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் எதிர்கொள்கின்றது. இந்தப் போதாமையைச் சமாளிக்க பட்டினியோடு படுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 16 கோடி மக்கள் இரவு உணவு உண்ணாமல் பட்டினியோடு படுப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கீழே நீங்கள் காணும் புள்ளி விவரத்தை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

127 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நிகழாண்டில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 105.

இப்போது சொல்லுங்கள். இந்தியக் குடும்பங்கள் என்னதான் செய்யும்?

சம்பாத்தியப் போதாமையை எதிர்கொள்ள கூடுதல் வேலைகளைச் செய்ய இந்தியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் வேலை வாய்ப்புகள்? வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்த வண்ணம் இருப்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் 9 சதவீத ஆண்களும், 13 சதவீத பெண்களும் வேலை இல்லாமல் அல்லாடுவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்நிலை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது தெரியுமா?

வேலையில்லாப் பிரச்சனையும், சம்பாத்திய போதாமையும் இந்தியக் குடும்பங்களைக் கடன் வாங்க வைக்கின்றன. இவர்களைக் குறி வைத்து இந்தியாவில் நுண்நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்) கடன் வழங்குகின்றன. மக்களின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டு, கிட்டதட்ட கந்து வட்டி நிறுவனங்கள் போலவே இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.

நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் பட்ட ஆடவர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றவை தற்போது இந்த நுண்நிதி நிறுவனங்களின் முகவர்கள் போலவே செயல்பட ஆரம்பித்து விட்டன. இக்குழுக்கள் கடன்களைப் பெற்றுத் தருவது, அக்கடன்களை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வது என்று நுண்நிதி நிறுவனங்களின் அறிவிக்கப்படாத வசூலிக்கும் அமைப்புகளாகவே சுயஉதவிக் குழுக்கள் இயங்கத் தொடங்கி விட்டன.

இதற்கு என்னதான் தீர்வு?

மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அமல்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்க வேண்டும். அவற்றிற்கு எவ்வித வரியும் இல்லாமல் இருப்பது கூட நல்லதுதான்.

உணவுப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்களைக் குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

ஏழ்மையையும் வறுமையையும் பயன்படுத்தி கடன் வழங்கி கந்து வட்டிக்காரர்களைப் போலச் செயல்பட்டு வரும் நுண்நிதி நிறுவனங்களை (மைக்ரோ பைனான்ஸ்) நெறிபடுத்த வேண்டும்.

இலவசப் பொருட்களை வாரி வழங்கும் வாக்கு அரசியலை அரசியல் கட்சிகள் தவிர்த்து விட்டு, ஆக்கப்பூர்வமான பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கும் ஆரோக்கியமான அரசியலையும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொலைநோக்குத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இனியும் அரசுகளும் கட்சிகளும் வெறுப்பு அரசியலையும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தும் சமாளிப்பு அரசியலையும் முன்னெடுத்தால் அதனால் பாதிக்கப்படப்போவது ஏழை மற்றும் நடுத்தர மக்களே.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வ அரசியலையும் தொலைநோக்குத் திட்டங்களையும் அரசியல் கட்சிகளும் ஆளும் அரசுகளும் கவனம் செலுத்தி இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பு ஆகும். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...