31 Aug 2024

மகத்துவம் பெற்ற மருந்தின் பெயர்

மகத்துவம் பெற்ற மருந்தின் பெயர்

அடித்தார்கள் பறித்தார்கள்

இருப்பதையெல்லாம் ஏதும் பாக்கியில்லாமல் பிடுங்கினார்கள்

முடிவில் நல்லவராக இருக்க வேண்டும் என்று போதித்தார்கள்

சிறுபிராயத்தின் வெக்கை நினைக்க நினைக்க

வியர்க்க வைக்கிறது புழுங்க வைக்கிறது

வேதனை தாளாமல் அழும் பொழுதுகளில்

இப்பிராயத்தின் எதையோ அடைந்த விட்ட வாழ்க்கை

ஆறுதல் சொல்கிறது பக்குவம் போதிக்கிறது

ஆறாத ரணங்கள் அங்கங்கு இருப்பதும்

ரகசிய இடங்களில் விரவி இருப்பதும்

மருந்திடும் செவிலியருக்குத் தெரியாது

மருந்திட்டுக் கொள்ள வேண்டியது கடமை

எல்லா ரணங்களும் ஆற வேண்டும் என நினைப்பது பேதைமை

வடுக்களை அகற்றும் வல்லமை பெற்ற மருந்தின் பெயர் மரணம்

மரணம் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது

ரணங்களை

வலிகளை

வேதனைகளை

மரணத்திற்குப் பின் ஏதுமில்லை

மரணத்தைத் தவிர

*****

26 Aug 2024

ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ – ஓர் எளிய அறிமுகம்!

ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ – ஓர் எளிய அறிமுகம்!

ப.சிங்காரத்தின் இரண்டாவது புதினம் ‘புயலிலே ஒரு தோணி’. 1962 இல் இந்நாவலை எழுதினார் ப.சிங்காரம். நாவலை வெளியிடுவதற்கு பத்தாண்டு காலம் ஆனது. பத்தாண்டுகள் கழித்து வெளியான பதிப்பும் அவருக்கு உவப்பான பதிப்பாக அமையவில்லை. அவர் எழுதிய பகுதிகளைச் சுருக்கியும் குறைத்தும் வெளியான பதிப்பு அது.

இலக்கிய ஆளுமைகளில் ப.சிங்காரம் மாறுபட்டவர். தன்னை ஓர் இலக்கிய ஆளுமையாக நிலைநிறுத்திக் கொள்ளவோ காட்டிக் கொள்ளவோ விரும்பாதவர். அவரது முதல் புதினம் ‘கடலுக்கு அப்பால்’. இப்புதினத்தை அவர் 1950 இல் எழுதினார். ஒன்பதாண்டுகள் கழித்துதான் அப்புதினம் வெளியானது. இப்புதினம் கலைமகள் பரிசு பெற்ற புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதினமும் ஒரு முறை மட்டுமே மறுபதிப்பு கண்டது.

‘புயலிலே ஒரு தோணி’ புதினத்தைப் புரிந்து கொள்வதற்கு ப.சிங்காரத்தின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. 1920 இல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர் ப.சிங்காரம். சிங்கம்புணரியிலும் மதுரையிலும் கல்வி பயின்ற ப.சிங்காரம் 1938இல் இந்தோனேசியா சென்று அங்கிருந்த கடையில் பணி புரிந்தார். 1940 இல் தாயகம் திரும்பி மீண்டும் இந்தோனேசியா சென்று மராமத்து துறை அலுவலகத்தில் பணியாற்றினார். தென்கிழக்கு ஆசியப் போர் மூண்ட நேரம் அது. 1946 வரை இந்தோனேசியாவில் இருந்தார். போர் நிகழ்வுகளை உற்றுக் கவனித்த அனுபவம் அவருக்கு இருந்தது. இந்தியா திரும்பிய ப.சிங்காரம் 1947லிருந்து 1987 வரை மதுரை தினத்தந்தியில் பணியாற்றினார். பிறகு ஓய்வு பெற்றார். 1997இல் காலமானார்.

இந்தியா திரும்பிய பின்பு சிங்காரம் மதுரையில் 50 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தார். தீவிர வாசகர்களுக்கு மட்டுமே சிங்காரத்தின் படைப்புகள் பற்றித் தெரிந்திருந்தன. தனது இறப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை எனக் கூறி இறந்து போனவர் ப.சிங்காரம்.

‘புயலிலே ஒரு தோணி’ தென்கிழக்கு ஆசியப் பகுதியில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போர் சம்பவங்களை ஒரு புதினத்திற்குரிய அழகியலோடும் தீவிரத்தோடும் காட்சிப்படுத்துகிறது. அதே நேரத்தில் உலகளவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகள் தென்கிழக்கு ஆசிய அரசியலிலும் வணிகத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

தென்கிழக்கு ஆசியப் போர் நடைபெற்ற நேரத்தில் சிங்காரத்திற்குள் ஒரு சாகச வாலிபன் மனதில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சாகச இளைஞன் பாண்டியனாக உருப்பெறுகிறான். அவன் வாழ்க்கை முழுவதும் புயலிலே போராடும் தோணி போல உள்ளது. புதினத்தில் புயலில் சிக்கும் தோணியின் காட்சிச் சித்திரமும் இடம் பெறுகிறது. அந்த வகையில் மட்டுமல்லாது புதினம் பேசும் பாண்டியனின் வாழ்க்கை நிகழ்வுகளும் புயலிலே சிக்கிய தோணியாக அடுத்தடுத்து தடம் மாறிக் கொண்டே இருக்கிறது.

புதினத்தில் முதல் பாதி தென்கிழக்கு ஆசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மாறி மாறி சொல்லிக் கொண்டுபோகிறது. அதாவது முன்னோக்கிய பயணமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், நினைவுகளின் ஊடே பின்னோக்கிய பயணமாக தமிழகத்தின் ஊடே மாறி மாறிப் பயணிக்கிறது. தமிழகத்தில் அப்போதிருந்த கார் ஸ்டாண்டுகள் பற்றிய காட்சி இப்புதினத்தில் பதிவாகியிருக்கிறது. பேருந்துகளை அப்போது கார் என்று மக்கள் அழைத்ததையும் கார்களை ப்ளஷர் என்று அழைத்ததையும் நடத்துநர்களைக் கிளீனர் என்று அழைத்ததையும் இப்புதினத்தில் சிங்காரம் பதிவு செய்திருக்கிறார். பேருந்துகளில் பயணியர்களைச் சேகரித்துத் தர தரகர்கள் இருந்த செய்தியும் இப்புதினத்தில் பதிவாகியிருக்கிறது.

‘குச்சுக்காரி’ என்ற சொல்லின் காரணத்தையும் இப்புதினத்தில் காண முடிகிறது. பாலியல் தொழில் செய்த ஏழைப் பெண்டிர் அக்காலத்தே ஊருக்கு வெளியே குச்சு வீடுகளை அதாவது குடிசை வீடுகளை அமைத்துக் கொண்டு அத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் குச்சுவீடுகளில் வசித்த அவர்களைக் குச்சுக்காரிகள் என்று குறிக்கும் வழக்கம் வந்திருக்கிறது. ஆடவரை மயக்கக் காத்திருக்கும் அப்பெண்கள் ஆடவர்கள் அவர்கள் பக்கம் திரும்பினால் அந்தரங்கத்தை மறைவின்றிக் காட்டுவதையும், பார்த்து விட்டு பேசாமல் போனால் வெற்றிலை எச்சிலால் காறித் துப்புவதையும் இப்புதினப் பதிவுகளில் காண முடிகிறது. சங்கக்கால பரத்தமையின் தொடர்ச்சியாகச் செட்டிமார்களும் செல்வ குடிமக்களும் குடியும் கூத்தியாளுமாக வாழ்ந்த வாழ்க்கையையும் இப்புதினம் பதிவு செய்கிறது.

நிலையாமையைப் பேசும் தமிழ்ச் செய்யுள்களைப் பல இடங்களில் பாத்திரங்கள் வழி பதிவு செய்கிறார் சிங்காரம். அந்நாளைய வணிகப் பிரிவினருக்கு இருந்த தமிழ்ப் புலமையையும் ஈடுபாட்டையும் காட்டுவதாக இவ்விடங்கள் புதினத்தில் உள்ளன.

“ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு

சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே”

என்று செய்யுளைக் குறிப்பிட்டு, வாழ்க்கையின் வரவு செலவு கணக்கானது இறப்பில் நேர் செய்யப்பட்டு விடுவதாக இப்புதினம் குறிப்பிடும் இடம் ஒரு நிமிடம் வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்து விடுகிறது.

அந்நாளில் தமிழ்நாட்டிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களை பற்றிய துல்லியமான பதிவு இப்புதினத்தில் இருக்கிறது. அவர்களில் பல்வேறு சாதியினரும் இருப்பினும் செட்டியார்களும், பிள்ளைகளும், நாடார்களும், ராவுத்தர்களும் அதிகம் புலம் பெயர்ந்திருப்பதை இப்புதினம் காட்டுகிறது. புதினத்தில் பெரும்பாலான பாத்திரங்களும் அவர்களே.

இந்தோனேசியாவின் மெடான் நகரில் புதினம் தொடங்குகிறது. மெடான் நகரை ஜப்பானிய ராணுவம் பிடிக்கிறது. அப்போது நிகழும் சம்பவங்களின் கொடூரத்தைப் புதினத்தில் சிங்காரம் சொல்லிச் செல்கிறார். பேர்ல் ஹார்பர் தாக்கப்பட்ட  சம்பவமும் இப்புதினத்தில் பதிவாகியிருக்கிறது.

தொடர்ந்து நிகழும் சம்பவங்களால் வட்டிக் கடையில் வேலை பார்க்கும் பாண்டியன் தேசாந்திரியாகி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான். புதினத்தில் நேதாஜியும் ஒரு பாத்திரமாகிறார். பாண்டியன் நேதாஜியைச் சந்திக்கிறான். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான். நேதாஜிக்காக உயிரைப் பணயம் வைத்து சாகசங்களில் ஈடுபடுகிறான். அவர் எழுதிய ஒரு ரகசிய கடிதத்தைக் கைப்பற்றுவதற்காக ஜப்பானிய ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியைக் கொல்கிறான்.

போர்க் காலங்களில் யார் நண்பராவார், யார் எதிரியாவார் என்பது விளங்காத மர்மம். பழிவாங்கல், பழி தீர்த்தல், காட்டிக் கொடுத்தல் போன்ற அந்த மர்மங்களுக்கு இடையிலும் அன்பு, நன்றி, விசுவாசம் போன்ற நல்லுணர்வு நிகழ்வுகளையும் புதினத்தில் பதிவு செய்கிறார் சிங்காரம்.

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு பாங்காங்கில் அமைதியான வளமான வாழ்வு அமைந்த போதும் பாண்டியன் இந்தோனேசியாவின் கெர்க்ஸ்ராட்டுக்கே வருகிறான். இரண்டாம் உலகப் போர் முடிந்தாலும் காலனித்துவத்துக்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போரில் இந்தோனேசியாவுக்கு ஆதரவாகவும், டச்சு காலனியத்திற்கு எதிராகவும் பாண்டியன் கொரில்லா தாக்குதலில் ஈடுபடுகிறான். முடிவில் அவன் வீரமரணம் அடைவதோடு நாவல் முடிகிறது.

ஒரு நாட்குறிப்பைப் படிக்கும் தொணியில் நீளும் நாவலில் தென்கிழக்கு ஆசியாவைக் கட்டியாண்ட தமிழர்கள், அங்கு பிழைப்பிற்காகச் சென்று பணியாளர்களாகப் பணியாற்றுவதையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டமைப்பவர்களாக மாறுவதையும் காண முடிகிறது.

நேரடியான பிரச்சார தொணி இப்புதினத்தில் இல்லையென்றாலும் எளிமையாக பகட்டின்றி ஆணவமின்றி வாழ்வதை இப்புதினத்தின் பாத்திரங்களின் வழியாகச் சிங்காரம் வலியுறுத்துகிறார். அவரே அப்படி எளிமையாகவும் பகட்டின்றி தேவையை மட்டும் கருத்தில் கொண்டு வாழ்ந்தவர்தான். தேவையில்லாதவற்றை வாங்குபவர்கள் தேவையானவற்றை அதாவது வாய்மை, நேர்மை, மானம் போன்றவற்றை விற்க நேரிடும் என்று இப்புதினம் பதிவு செய்யும் இடம் குறிப்பிடத்தக்கது. ஆடம்பரத்திற்கும் சுகத்திற்கும் அடிமையாகி, அதற்காகப் பணத்திற்கு விலை போய், பணத்திற்காகக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பாத்திரங்களையும் இப்புதினத்தில் காண முடிகிறது.

சிங்காரத்திற்குத் தமிழ் இலக்கியத்திலும் நாட்டார் வழக்காற்றிலும் நல்ல பரிச்சயம் இருப்பதை நாவலில் இடம் பெறும் செய்யுள் மற்றும் பாடல் வரிகள் காட்டுகின்றன. அக்காலத்திய நடப்புச் சூழல்களோடு இலக்கிய வரிகளை மேற்கோள் காட்டி பல இடங்களில் விவாதம் நடத்தவும் செய்கிறார் சிங்காரம். சில இடங்களில் தத்துவார்த்தமாகவும் அன்றைக்கும் இன்றைக்குமான நிலைமைகள் குறித்த கருத்துகளை முன் வைக்கிறார்.

ஊன் கறி உண்டதையும், பரத்தமை கொண்டு திரிந்ததையும், பொருள்தேடி பிரிந்ததையும், கள்ளுண்டு களித்ததையும், போர்க்களத்தில் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்டதையும் காட்டும் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும், அத்தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் நீளும் படைப்பாகவும் சிங்காரத்தின் இப்புதினத்தைக் காண முடிகிறது.

சிங்காரத்தைப் போலவே பாண்டியன் குடும்பம் இல்லாத தனியனாக இருந்தாலும் அவனது வாழ்க்கையைப் பின்தொடரும் வகையில் சங்கக் காலத்தின் கள்ளுண்டலை மது அருந்தலாகவும், பரத்தமையைப் பெண் பித்தர்களாய் அலையும் பாத்திரங்களின் வழியாகவும், பொருள்தேடிப் பிரிதலைப் புலம்பெயரும் தமிழர்கள் வாயிலாகவும், போர்க்களக் காட்சிகளைப் பாண்டியனின்  சாகசங்களிலும் காண முடிகிறது. சங்க இலக்கியக் காட்சிகளின் நிகழ்கால மீட்டுருவாக்கம் போல இப்படைப்பைச் சிங்காரம் படைத்திருக்கிறார். அத்துடன் புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வின் காலப் பதிவாகவும் இப்புதினத்தை வெகு நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறும் வாழ்வும் கலந்த பதிவு சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’.

*****

22 Aug 2024

சங்கரராமன் பண வழக்கு! (சிறுகதை)

சங்கரராமன் பண வழக்கு!

(சிறுகதை)

-         விகடபாரதி

நாடி நரம்புகள் துடிக்க நின்றிருந்தான் சங்கர். நேர்மையா அலைஞ்சு வசூலிச்ச பணம் சார்! இன்னும் சாப்பிடக் கூட இல்லே. கொடுத்திருங்க சார். ஆபிசில கட்டிட்டு வீட்டுக்குப் போவணும். வீட்டுல எலலாரும் காத்திருப்பாங்க சார் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். நாற்பதைக் கடந்தும் கல்யாணம் ஆகவில்லை என்றாலும் அம்மாவும் அப்பாவும் பெற்றப் பிள்ளைக்காகக் காத்திருப்பார்கள்தானே.

அப்பா அம்மா வைத்த பெயர் சங்கரராமன். ஒருத்தனுக்கு எதற்கு இரண்டு பெயர் என்று கூப்பிடுபவர்கள் நினைத்ததால் என்னவோ சங்கர் என்ற பெயரே நிலைத்து விட்டது. கையெழுத்துப் போடும் போது மட்டும் சங்கரராமன் என்ற பெயர் நினைவுக்கு வருகிறது அவனுக்கு. நெடுநெடுவென வளர்ந்த தேகம். ஓடித்துப் போட்டால் ஒடிந்து விடும் அளவுக்கு லொடுக்குப் பாய் தோற்றம். அவ்வளவுதான் சங்கரராமனைப் பற்றிச் சொல்ல முடியும். உடம்புக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத உருவம். பார்த்தால் இவன் யாருடா கிறுக்குப் பயல் என்றுதான் சொல்வீர்கள். என்றாலும் சங்கரராமனின் மூளை யோசிக்கும் விதம் அபாரமானது.

ஒரு காலத்தில் செழிப்பாக இருந்து தற்போது கருவை மரங்கள் மட்டும் செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி டெல்டா பகுதியில் செய்வதற்கென்று இருக்கின்ற வேலை என்று பார்த்தால் நூறு நாள் வேலையும், அரையும் குறையுமாக மானியத்தில் கக்கூஸ் கட்டும் வேலையும்தான். சங்கர் இருக்கிற தேகத்துக்கு அரை மணி நேரம் பார்க்கும் நூறு நாள் வேலைக்கே மயக்கம் அடித்து விழுந்தான். கக்கூஸ் கட்டும் சித்தாள் வேலைக்கு அவனைப் பார்த்தாலே துரத்தி அடித்தார்கள். தட்டுத் தடுமாறி படித்து எப்படியோ டிகிரி பட்டம் வாங்கி வைத்திருந்த பி.ஏ. எக்கனாமிக்ஸ் புத்தகங்களைப் பொழுது போகாமல் படித்துக் கொண்டிருந்தான்.

எத்தனை நாளு இப்படி வெட்டியா சுத்துவே? வீட்டுல உன்னையெல்லாம் மதிச்சு சோத்தைப் போடுறாங்க பாரு அவங்களச் சொல்லணும், என்று அக்கறையாகப் பேசுவது போலக் காட்டி அவனை அரசியலுக்குக் கொண்டு போனவர் ஓ.கே. ஜம்புலிங்கம். அந்த ஊருக்கு அவர்தான் தொழிலதிபர், அரசியல்வாதி, தர்மகர்த்தா, தாதா, ரௌடி, பேங்கர் என்று சலக பொறுப்புகளையும் சுமந்து கொண்டிருந்தார். வெட்டியாய்த் திரியும் ஆட்களைப் பத்திக் கொண்டு போய் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு பண்ணுவது அவருக்குக் கை வந்த கலை. சங்கருக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்தவர், அதாவது அரசியலைக் கற்றுக் கொடுத்தவர். சங்கரராமன் உருவத்திற்கு அப்படியே நேர் எதிர் ஜம்புலிங்கம். ஆள் குட்டைப் பிசுக்கு போல் இருப்பார். ஓ.கே. ஜம்புலிங்கம் என்று சொல்வதை விட சொட்டை ஜம்புலிங்கம் என்று சொன்னால் ஆள் யாரென்று சட்டென்று சின்னக் குழந்தையும் சொல்லி விடும். நான்கு பக்கமும் வரப்பு கட்டி வயலுக்குள் நட்டதெல்லாம் சுருண்டு போய் தரிசாகக் கிடப்பது போன்ற தலை. தலை சொட்டையை மறைப்பதற்காக முகத்தில் எடுப்பாகத் தெரியும் அளவுக்குக் கத்தரித்து விட்ட தாடியை வளர்த்திருந்தார். கட்சிக்கரை போட்ட வெள்ளை வேட்டியும், கஞ்சி போட்ட வெள்ளை சட்டையும் அத்தோடு கட்சி கரை போட்ட தோளில் கிடக்கும் துண்டும் அவரைச் சட்டென அடையாளம் காட்டும். எவ்வளவு தகிடுதித்தங்கள் செய்தாலும் நெற்றியில் பளிச்சென்று தெரியும் விபூதிப் பட்டையும் சந்தனமும் குங்குமமும் கலந்த பொட்டும் அவரை உத்தமரென்று காட்டப் போதுமானது. இருப்பினும் அவர் ஓ.கே.ஜே. என்ற முன்னெழுத்து அடையாளத்தையும் தனக்காக உண்டு பண்ணி வைத்திருந்தார்.

ஆட்களை வைத்துப் பிரியாணி செய்வது, பொட்டலம் கட்டுவது, பொட்டலங்களில் பத்தையோ இருபதையோ வீட்டுக்கும் தெருவுக்கும் கட்டிக் கொள்வது, தேர்தல் நேரங்களில் பூத் ஏஜன்ட் வேலை பார்ப்பது, பண பட்டுவாடா செய்வது, வட்டிக்கு விட்டு பணத்தை வசூலிப்பது, பொதுக்கூட்டம் என்றால் வட்டிக்கு பணத்தை வாங்கியவர்களைக் கூட்டமாகத் திரட்டிக் கொண்டு போய் தலைக்கு ஐநூறு வசூலித்து விடுவது இப்படி எத்தனையோ சூட்சமங்களை ஜம்புலிங்கம் வழியாகக் கற்றுத் தேர்ந்தான் சங்கர் என்ற சங்கரராமன். இப்படி அரசியலில் நுழைந்து பெரிய ஆளாகி விடுவான் என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். கிரகம் விட வேண்டுமே. யாருடைய தலையில் என்ன எழுதியிருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? எப்படியும் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று ஒரு சுற்று வருவான் என்று எதிர்பார்க்கப்பட்டவன் வாழ்க்கையில் ஓர் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், வளர்த்து விட்ட ஜம்புலிங்கம் மேலே பாய வேண்டிய சூழ்நிலை. ஏற்றி விட்டவனை எட்டி உதைக்காமல் அரசியலில் எப்படி வளர்வது? வளர்த்த கடாவாக மாரில் பாய விருப்பமில்லாமல் கசாப்பு கடைக்குப் போகும் ஆடாகத் தன்னை அரசியலிலிருந்து விடுவித்துக் கொண்டான் சங்கர். இப்படி ஒரு திருப்பத்தை ஜம்புலிங்கமே எதிர்பார்க்கவில்லை. அந்தச் செய்தியைக் கேட்ட கனம் அவர் சொட்டையெல்லாம் வேர்த்து கட்சிக்கரை போட்ட துண்டால் தலையைத் துடைத்துக் கொண்டார். தோளில் போட்ட துண்டுக்கு வேலை வந்தது அன்றுதான் அவருக்கு. அவர் வளர்த்து விட்டு அவர் மேல் பாய்ந்து அவரை விட அரசியலில் பெரிய ஆளானவர்கள் அதிகம். நா தழுதழுக்க உளறி குழறி ஜம்புலிங்கம் உருகிக் கரைந்து போனார். சங்கருக்கு எந்த உதவி கேட்டாலும் செய்வதாகச் சொன்னார்.

வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வேலை இருந்தால் போதும் என்று அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிதி நிறுவனத்தில் அவனைச் சேர்த்து விட்டார் சொட்டை ஜம்புலிங்கம். முன்பு அரசியலில் அரித்துப் பிரித்துச் சம்பாத்தித்ததைப் போல அவ்வளவு சம்பாத்தியம் இல்லையென்றாலும் சங்கரின் வாழ்க்கை நிம்மதியாகவும் நிதானமாகவும் போக ஆரம்பித்தது. அவனை நிதி நிறுவன வேலைக்குச் சேர்த்து விட்ட பிறகும் பக்கவாட்டு வணிகமாக பிரியாணி ஆர்டர், பண பட்டுவாடா செய்து தருவது போன்ற வேலைகளைக் கொடுத்துப் பார்த்தார் ஜம்புலிங்கம். ஆனால் சங்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. போதுமடா நீங்களும் உங்கள் சகவாசமும் என்று ஒதுங்கி விட்டான். சங்கர் ஒதுங்கிப் போனதில் ஜம்புலிங்கத்துக்குச் சங்கர் மேல் இருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. அந்த முதிர் கண்ணனுக்கான ஜம்புலிங்கம் பெண் பார்க்கும் புரோக்கர் வேலையையும் பார்த்தார். அதற்கும் முடியாது என்று சொல்லி விட்டான் சங்கர். அப்பா அம்மா சொல்லிக் கேட்காதவன் ஜம்புலிங்கம் சொல்லி கேட்பான் என்று தப்பு கணக்குப் போட்டு விட்டார் அவர்.

காலையில் பதினோரு மணி வாக்கில் பஜாஜ் பிளாட்டினாவை உதைத்து வண்டியைக் கிளப்பினான் என்றால் அவன் வீடு வந்து சேர இரவு ஒன்பது பத்து ஆகி விடும். அலுவலகத்தில் அவன் அடி எடுத்து வைக்கும் போது மணி மதியத்தை நெருங்கும் பனிரெண்டு ஆகியிருக்கும். கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ அலுவலகத்தில் இருப்பான். பணத்தை வசூலிக்க வேண்டியவர்கள் பட்டியல் கைக்கு வந்ததும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுவான். அவனை மட்டும் அலுவலகத்தில் யாரும் எதுவும் கேட்பதில்லை. வேலையில் அவனுக்கு இருக்கும் நெளிவு சுளிவு அப்படி. மற்றவர்கள் யாராக இருந்தாலும் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் வருகைப் பதிவைப் போட்டாக வேண்டும்.

சங்கரைப் பொருத்த வரை ஒன்பது மணிக்கு அலுவலகம் போவதெல்லாம் அவனே நினைத்தாலும் நடக்காத காரியம். அவன் காலையில் எழுந்திருக்கவே எப்படியும் எட்டு ஒன்பது ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டுக் கிளம்பினான் என்றால் பண வசூலைத்  தவிர வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது. கடிவாளம் கட்டிய குதிரைதான் அவன். அவன் மதிய சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆகி விட்டன. பணத்தை வசூலித்து விட்டுச் சாப்பிடும் பிரியாணிதான் அடுத்த வேளை சாப்பாடு. சில நாட்களில் பணத்தை வசூலித்து முடிக்க இரவு எட்டு மணி வரை கூட ஆகி விடும். அதன் பிறகுதான் பிரியாணி. அதுவும் லெக் பீஸோடு சிக்கன் பிரியாணி மட்டுமே சாப்பிடுவான். தான் சாப்பிடப் போகும் கடையில் லெக் பீஸோடு பிரியாணி இல்லையென்றால் அதற்காக இருபது முப்பது கடைகள் கூட அலையோ என்று அலைவான். லெக் பீஸ் பிரியாணி சாப்பிட்டு ஆன பின்புதான் வசூலித்த பணம் அலுவலகம் போய் சேரும். இப்படி வீட்டை விட்டுக் கிளம்பும் போது சாப்பிடும் சாப்பாடு, பணத்தை வசூலித்து முடித்து விட்டுச் சாப்பிடும் பிரியாணி என இரண்டு வேளை சாப்பாடுதான் அவனுடைய ஒரு நாள் சாப்பாடு. அதனால் எவ்வளவு சம்பாதித்தும் அவனுடைய லொடுக்கு பாய் தோற்றம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு கட்டாமல் இருக்கும் விடா கொண்டன்களையும் விடாமல் வசூலித்து விடுவான். அந்த ஒரு காரணத்திற்காகவே அவன் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும் அலுவலகத்தில் யாரும் எதையும் சொல்லாமல் இருந்தார்கள்.

பணத்தை வசூலித்துக் கொண்டு அலுவலகம் சென்றால், பணத்தை ஒப்படைத்து விட்டு சங்கர் வீட்டுக்குப் பறந்தோடவும் மாட்டான். இரவு பத்து பதினொன்று ஆனாலும் பேசிக் கொண்டே ஏதாவது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் அந்தச் சிட்பண்ட் அலுவலகம் நேரம் காலம் இல்லாமல் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவனும் விடியற்காலை நான்கு ஐந்து மணிக்கு வீடு திரும்பியிருக்கிறான். இப்படிப்பட்டவனை எப்படி வேலை நேரம் என்ற வலைக்குள் சிக்க வைக்க முடியும். அவன் வருவதும் வேலை பார்ப்பதும்தான் வேலை நேரம் என்று ஆக்கிக் கொண்டு விட்டான். அந்த அலுவலகத்தில் நிறுவன மேலாளரை விட அதிக செல்வாக்கு சங்கருக்குத்தான் இருந்தது.

நீண்ட நாட்கள் வசூலாகாத கடன்களை, சீட்டுகளை எல்லாம் சங்கர்தான் வசூலிக்க முடியும். அப்படி வசூலிப்பதில் மாதச் சம்பளத்தைத் தாண்டி தனி கமிஷனும் உண்டு. அவன் ஒரு ரௌடியில்லை என்றாலும் ரௌடிகளால் வசூலிக்க முடியாத பணத்தையும் வசூலிக்கும் சூட்சமம் அவனுக்குள் அத்துபடியாகியிருந்தது. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது என்பதையெல்லாம் சங்கரிடம் கேட்டே அந்த சிட்பண்ட் அலுவலகத்தில் முடிவானது. அவனையே மேலாளராகப் போட்டு விடலாம் என்று நிதி நிறுவன மேலிடம் எவ்வளவே முயன்று பார்த்தது. ஜம்புலிங்கம் கூட அதற்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார். அவரும் அந்த நிதி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்ததாலும் சங்கருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று துடித்ததாலும் அவர் அப்படி நினைத்தார். சங்கர் தனக்கு இப்படி இருப்பதுதான் பிடித்திருக்கிறது என்ற சொன்னதால் அதற்கு மேல் அவனை வற்புறுத்த முடியவில்லை. வேண்டாம் என்பவனுக்கு எதைக் கொடுத்து திருப்திபடுத்துவது?

சங்கர் ஏன் இப்படி இருக்கிறான் என்பதற்குப் பின்னணி அவனை ஒரு துறவி போல எல்லாருக்கும் காட்டியது. ஆனால் நிஜத்தில் பணத்தைக் கொடுத்து வசூலிப்பதில் அவனுக்கு ஒரு திரில் உண்டாகி விட்டது என்பது அவன் மட்டும் அறிந்த ரகசியம். அரசியலில் வேறு இருந்தததால் எந்த ஊருக்குப் போனாலும் அவன் தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தான். அவன் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கித் தர முடியும், அதை போல பணத்தை வாங்கிக் கொண்டு எவன் எங்கு ஓடினாலும் அவனைத் துரத்திப் பிடித்துப் பணத்தை வசூலிக்க முடியும் என்ற பிம்பத்தையும் உருவாக்கி வைத்திருந்தான்.

சங்கர் பரிந்துரைத்துப் பணம் கொடுத்து வசூலாகாமல் இருந்த வரலாறு சரித்திரத்தில் இதுவரை இல்லை. எழுதப்பட்ட வரலாற்றை அடித்துத் திருத்தி மாற்றவா முடியும்? அதென்ன சிறுகதை, நாவலுக்குப் பண்ணும் வேலையா? பணத்தைக் கொடுப்பதிலும் வசூலிப்பதிலும் வசூலித்த பணத்தைப் பத்திரமாகச் சேர்ப்பதிலும் சங்கருக்கு இணை சங்கர்தான் என்றான பின்பு வசூல் உலகில் அவன் சக்கரவர்த்தியாகி விட்டான்.

ஜம்புலிங்கத்தோடு அரசியலில் இருந்த காலத்திலும் இந்த அம்சமே அவனைத் தூக்கிக் காட்டியது. எத்தனையோ முறை சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என்று அத்தனை வகையான தேர்தலுக்கும் பணத்தை படு ஜோராக, கன கச்சிதமாகப் பட்டுவாடா செய்திருக்கிறான். எதிலும் சிக்கியதில்லை. பணமாகப் பட்டுவாடா செய்ய முடியாத போது வங்கிக் கணக்கை வாங்கி அதில் பணத்தைப் போட்டு ரசீதுகளை அவ்வளவு கச்சிதமாக ஒப்படைப்பான். பணம் அனுப்புவதற்கு ஜி பே, போன் பே, வாலட்டுகள் என வராத காலத்திலேயே அவன் எவ்வளவோ சோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறான். பணத்தை எப்படி எடுத்துச் செல்வது என்ற சூட்சமங்கள் அவனுக்கு அத்துப்படியாகி இருந்தன. பெட்ரோல் டேங்க், எவர்சில்வர் வாட்டல் பாட்டில் என்று எது எதிலோ எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். எதிலும் சிக்கியதில்லை.

சங்கர் வருகிறான் என்றால் பணத்தோடுதான் வருகிறான் என்பது எல்லாருக்கும் தெரியும். அவன் பணத்தை எங்கே வைத்திருக்கிறான், எப்படி பட்டுவாடா செய்யப் போகிறான் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. அதெல்லாம் தங்கமலை ரகசியம் போன்றது.

அப்படி பணத்தைச் சாமர்த்தியமாக எடுத்துச் செல்பவன்தான் இப்போது இந்த நாடாளுமன்றத் தேர்தல் பறக்கும் படையிடம் அன்றைய தினம் வசூலித்த ஒரு லட்சத்து எண்பதினாயிரத்து முந்நூறு ஐம்பது ரூபாயைக் கொடுத்து விட்டு நிற்கிறான்.

சங்கர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். தான் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையைக் காட்டினான். கடன் வாங்கியவர்களிடம் வசூலித்த பணம்தான் என்பதை வசூலித்தவர்களிடம் எல்லாம் போன் செய்து நிரூபித்துக் காட்டினான். பறக்கும் படை பணத்தைக் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்து விட்டது. இப்படி ஓர் அவமானகரமான சம்பவத்தைச் சங்கர் எதிர்பார்க்கவில்லை. ஜம்புலிங்கத்துக்குக் கூட போன் செய்தான். அவர் அது கிடக்கு விடப்பா, தேர்தல் முடிந்ததும் கொடுத்துடப் போறாங்க என்றார் அலட்சியமாக. அவர் வீட்டைச் சோதனையிட்டதில் அவரே இருபது கோடி ரூபாய் பணத்தை இழந்து நிற்கிறார். அதற்கு முன்பு அவருக்கு ஒரு லட்சத்து எண்பதினாயிரம் சொச்சம் பெரிய விசயமாகத் தெரியவில்லை. திரில் போன பிறகு அதற்குப் பின் என்ன வாழ்வது என்று தோன்றியது சங்கருக்கு. 

சங்கருக்கு இது அவனுடைய கௌரவத்துக்கு நேர்ந்த இழுக்காக வேற தெரிந்தது. ஒரு முழம் கயிற்சில் தொங்கி விடலாமா என்று கூட யோசித்தான். பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை எப்படி மீட்பது என்பதே யோசனையாக இருந்தது. எப்படியும் திரும்பவும் வாங்கி விடக் கூடிய பணம்தான் என்றாலும் உடனடியாக வாங்க வேண்டும் என்று மனம் குதியாட்டம் போட்டது. தன்னுடைய கௌரவத்துக்கு நேர்ந்த இழுக்கைச் சாதாரணமாக ஜம்புலிங்கம் பேசியது அவனுக்கு தாங்க முடியாத கோபத்தைத் தந்தது. ஜம்புலிங்கத்தை போட்டுத் தள்ளினாலும் அந்த ஆத்திரம் அடங்காது போலத் தோன்றியது.

அன்றிரவு சங்கருக்கு அலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. மறுநாள் சங்கர் ஜம்புலிங்கம் சார்ந்திருந்த கட்சிக்குப் பணத்தை பட்டுவாடா செய்வதற்காகத்தான் பணத்தை எடுத்துச் சென்றதாகச் சொல்லி போலீசில் சரணடைந்தான். அடுத்த சில மணி நேரங்களில் சங்கரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. திடீரென வங்கிக் கணக்கில் வந்து விழுந்த மூன்று கோடியை எந்தத் துறையும் கண்காணிக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை. ஒரு லட்சத்து எண்பதினாயிரத்து முந்நூறு ஐம்பது ரூபாய்க்கான சங்கரராமன் பண வழக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.

*****

19 Aug 2024

தி. ஜானகிராமனின் ‘நளபாகம்’ நாவல் ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ‘நளபாகம்’ நாவல் ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் கடைசி நாவல் நளபாகம். கணையாழியில் 1979 முதல் 1982 வரை தொடராக எழுதிய நாவல். அவரது மறைவுக்குப் பின் 1983 இல் நூல் வடிவம் பெற்ற நாவல்.

கடந்த காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ரிஷிகள் மூலமாகக் குழந்தைப் பெற்றுக் கொள்வதைப் போல நிகழ் காலத்திலும் நடந்தால் எப்படியிருக்கும் என்ற தி.ஜா.வின் புனைவே நளபாகம் எனும் நாவல்.

வடக்கு நோக்கிப் போகும் யாத்திரைத் தொடர்வண்டியில் துவங்கும் நாவல் நல்லூரில் நிலை கொண்டு மீண்டும் யாத்திரைத் தொடர்வண்டியை நோக்கிச் செல்வதாக அமைகிறது.

காமேச்வரனின் பிரயாணமே இந்த நாவல். யார் இந்த காமேச்வரன்? அவன் ஒரு சக்தி உபாசகன் மற்றும் பரிசாரகன்.

வடக்கு நோக்கிச் செல்லும் யாத்ரா ஸ்பெஷல் எனப்படும் யாத்திரைத் தொடர்வண்டியில் அவனே பரிசாரகன். இந்தத் தொடர்வண்டியை நாயுடு ஒருங்கிணைத்தாலும் இந்தத் தொடர்வண்டியின் சிறப்பே காமேச்வரனின் உபசரிப்பான ஒருங்கிணைப்புதான்.

வம்ச விருத்தி தடைபட்டு ஸ்வீகாரம் மூலமாகத் தொடரும் தலைமுறையைச் சார்ந்த ரங்கமணி இந்தத் தொடர்வண்டியில் பயணிக்கிறாள். ஜாதக கணிப்பில் கில்லாடியான முத்துச்சாமியும் அவரது குடும்பமும் இந்தத் தொடர்வண்டியில் பயணிக்கிறார்கள்.

தன்னுடைய வம்ச விருத்தி குறித்து முத்துச்சாமியிடம் கணிப்பு கேட்கிறாள் ரங்கமணி. மகனுக்குப் பிள்ளை பாக்கியம் இல்லை, ஆனால் மருமகளுக்கு உண்டு என்ற ஒரு குயுக்தியான கணிப்பைத் தருகிறார் முத்துச்சாமி.

இந்தக் கணிப்பு ரங்கமணியைக் கலவரப்படுத்தவில்லை, இப்படியாவது ஒரு வழி இருக்கிறதே என ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. இதற்குப் பின் ரங்கமணியின் மனம் வேலை செய்கிறது.

யாத்திரைத் தொடர்வண்டியில் பரிசாரகனாக இருக்கும் காமேச்வரனை ஒரு ரிஷியைப் போலப் பார்க்கிறாள். ரிஷியாக மட்டுமல்லாமல் பிள்ளையாகப் பாவித்து தன்னுடைய வீட்டில் வந்து இருக்க வேண்டுகிறாள் ரங்கமணி.

இளமையிலேயே தாயை இழந்து சிற்றன்னையின் புறக்கணிப்பில் வளர்ந்து வீட்டை விட்டு ஓடி கோயில் பரிசாரகனிடம் வளர்ந்த காமேச்வரனுக்கு ரங்கமணி காட்டும் இந்த சுவீகாரமான தாய்ப்பாசம் மனதை நெகிழச் செய்கிறது. ரங்கமணியின் அழைப்புக்கு உடன்படுகிறான் காமேச்வரன்.

காமேச்வரன் நிலைகொள்ளும் நல்லூர் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் காவிரியும் கொள்ளிடமும் பக்கத்துப் பக்கத்தே ஓடும் பிரதேசத்தில் கும்பகோணமும் தஞ்சாவூரும் பேருந்தில் போய் வரக் கூடிய தூரத்தில் இருக்கிறது. நகரமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொடர்வண்டிய நிலையம் உள்ள ஊராக இருக்கிறது.

சக்தி உபாசகனான காமேச்வரனின் வருகையின் மூலம் தன்னுடைய மருமகள் கருத்தரிப்பாள் என்ற நம்பிக்கையா? அல்லது காமேச்வரன் மூலமாகவே தன்னுடைய மருமகள் கருத்தரிப்பாள்? என்ற நம்பிக்கையா என்பது ரங்கமணியின் மனதுக்கே தெரிந்த பூடகம். ரங்கமணியின் இந்த அதிரத்தக்க மன முடிவிலிருந்து நாவல் ஒரு முடிவை நோக்கி நகர்கிறது.

இப்போது ரங்கமணியின் மருமகளான பங்கஜத்துக்கு எந்த வழியில் குழந்தை பிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை வாசகர்களிடம் உருவாக்கி விடுகிறார் தி.ஜா. இது ஒரு சிக்கலான முடிச்சு. இந்தச் சிக்கலான முடிச்சைத் தனக்கே உரிய பாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாக தி.ஜா. விடுவிக்கிறார்.

ரங்கமணியின் பூடகமான மனம் எப்படி இருந்தாலும் தனது வம்ச விருத்தி இந்த விசயத்தில் எப்படி நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனமும் அவளுக்கு உண்டாகி விடுகிறது என்பதை நாவலின் போக்கு காட்டிக் கொண்டே போகிறது.

பங்கஜம் கருத்தரிக்கிறாள். தம்பதிகளின் இணைவால் நடக்கின்ற அந்த நிகழ்வை ஊரில் சிலர் காமேச்வரனின் நடத்தையால் நிகழ்ந்ததாகக் கூறும் போது காமேச்வரன் எடுக்கும் முடிவுதான் நாவலின் முடிவாகிறது.

காமேச்வரன் நல்லூரை விட்டுக் கிளம்புகிறான். தன்னுடைய அவப்பெயருக்காகக் கிளம்பாமல் பங்கஜத்துக்கு அவப்பெயர் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகக் கிளம்புகிறான். மீண்டும் யாத்ரா ஸ்பெஷல் தொடர்வண்டியில் பரிசாரகனாகத் தொடர்வதாக முடிவெடுத்துக் கொள்கிறான். அத்துடன் கல்யாணம் செய்து கொள்வதாகவும் முடிவெடுப்பதாக நாவல் முடிகிறது.

நாவலின் காலக்கட்டத்தையும் நாவலில் துல்லியப்படுத்தி விடுகிறார் தி.ஜா. 1887க்குப் பிறகு ஐம்பது அறுபது வருஷம் என்ற குறிப்பைக்  காண்டு நாவல் நிகழும் காலக்கட்டம் சுதந்திரத்துக்குப் பிறகு என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சிக் கூட்டம், தி.மு. கட்சிக் கூட்டம் நடைபெறுவதாகக் காட்டும் இடத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 1960களை ஒட்டிய கால காலகட்டத்தில் நாவல் நடப்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

மருதகாசி எழுதி திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கியின் குரலில் ஒலிக்கும் “வாராய் நீ வாராய்” என்ற திரைப்பாடல் ஒலிக்கும் இடத்தைக் காட்சிப்படுத்துவதன் மூலமாக இக்காலகட்டம் என்பது 1950 க்குப் பிறகு 1960 ஐ ஒட்டிய காலக்கட்டம் என்பதை உறுதி செய்யலாம். இத்திரைப்பாடல் இடம் பெற்ற மந்திரிகுமாரி 1950 இல் வெளியாகியிருக்கிறது. நல்லூர் போன்ற நகரமாக மாறிக் கொண்டிருக்கும் கிராமத்தின் திரைக் கொட்டகைக்கு இப்படப்பாடல் வந்து சேர ஒரு சில ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதால் இக்காலக்கட்டம் குறித்த கணிப்பானது சரியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு காலக்கட்டத்தில் ஒரு பெண்ணின் துணிச்சலான முடிவும் அத்துணிச்சலான முடிவை பாசத்தின் நிமித்தம் ஏற்றுக் கொண்டு அதற்குப் பின் ஓர் ஆண் எடுக்கும் விவேகமான முடிவுதான் இந்த நளபாகம் நாவல் எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சங்கீத சமுத்திரமான தி.ஜா.வுக்குப் பிடித்த திரைப்பாடலாகவும் இத்திரைப்பாடல் இருந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இப்பாடலைச் சிலாகித்தே நாவலில் எழுதுகிறார் காமேச்வரன் என்ற பாத்திரத்தின் வழியாக.

தன்னுடைய மறைவு கால வரையிலும் தி.ஜா. வாசகர்களின் புதினப் பசிக்குத் தொடர்ந்து நளபாகத்தைத்தான் பரிமாறியிருக்கிறார் என்பதை இந்த ‘நளபாகம்’ என்ற பெயரிலான அவரது நாவல் பெயருக்கேற்றபடி திருப்தியும் நியாயமும் செய்கிறது.

*****

15 Aug 2024

அரசுப் பள்ளி – பிம்பப் பெருமிதங்கள்!

அரசுப் பள்ளி – பிம்பப் பெருமிதங்கள்!

‘இவர் அரசுப் பள்ளியில் படித்தவர்’, ‘அவர் அரசுப் பள்ளியில் படித்தவர்’ என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறோம். அந்தக் காலத்தில் அரசுப் பள்ளிகள்தான் அதிகம் இருந்தன. இனிமேல் தனியார் பள்ளிகளில் இருந்தும் அப்படிப் பெருமிதங்களோடு வருவார்கள்.

திறமைக்குப் பள்ளிகள் ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான். பள்ளிகள் மட்டுமே திறமையாளர்களை உருவாக்கி விட முடியாது. உருவாகி வரும் திறமையானவர்கள் எல்லாம் பள்ளிகளில் இருந்து மட்டுமே உருவாகி வருகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. பள்ளிகளில் சென்று படிக்காத மேதைகளும் இருக்கிறார்கள்.

அதற்காகப் பள்ளிக்கல்வியை நாம் புறக்கணிக்க முடியாது. அது எந்தப் பள்ளியில்? அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியா? என்பதுதான் கேள்வி.

பணம் இருப்பவர்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். இல்லாதவர்கள் அரசுப் பள்ளிகளை நாடுகிறார்கள். தற்போதைய எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

பணம் இருப்பவர்களுக்கு எப்போதும் ஒரு திருப்தி தேவையாக இருக்கிறது. அந்தத் திருப்தியைத் தனியார் பள்ளிகள் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு வகையில் கல்வி என்பது வியாபாரமாகி விட்டது. அதில்தான் வாடிக்கையாளர்களின் திருப்தி முதன்மையாகப் பார்க்கப்படுகிறது. தவிரவும் வாடிக்கையாளர்களின் திருப்தியை முதன்மைப்படுத்துவதை விட அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. திருப்திபடுத்தினால்தான் வாடிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றி வலம் வருவார்கள்.

கல்வி நிறுவனங்கள் எல்லாம் பக்கா வியாபார நிறுவனங்களாகி விட்டதால் வாடிக்கையாளர் திருப்தியை முதன்மையாகப் பார்க்கின்றன. தனியார் பள்ளிகளுக்குப் பெற்றோர்களே வாடிக்கையாளர்கள். இலவசமாக எதைக் கொடுத்தாலும், அதாவது எதை என்றாலும் வாங்கிக் கொள்ளும் சமுதாயம், கல்வியைத் தனியாரிடம் காசு கொடுத்து வாங்குவது முரணானதுதான். ஒருவேளை தனியார் பள்ளிகளில் அவர்களுக்குக் கிடைக்கும் திருப்தி அரசுப் பள்ளிகளிலும் கிடைத்தால் அவர்கள் அரசுப் பள்ளிகளையும் நாடி வருவார்கள்.

எதை இலவசமாகக் கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கத் தயாராக இல்லை. அதிலும் ஒரு தரத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு ‘கல்வி’ ஓர் உதாரணம். அதுவே நிவாரணத் தொகை வழங்கும் போது ஏழை, பணக்காரர்கள் என்ற பேதம் பார்க்காமல் அதை வாங்க முன்வரிசையில் காத்திருக்கிறார்கள். நிவாரணமாகக் கொடுக்கப்படும் பணத்தின் தரம் வேறுபடுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம். அப்படி ஒரு தரத்தை அரசாங்கம் அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும்.

‘கல்வி’ என்பது அரசுப் பள்ளிகளில் படித்தாலும், தனியார் பள்ளிகளில் படித்தாலும் ஒரே தரத்துடன்தான் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனும் போதே அது தரம் மற்றும் தரக் குறைவுக்கான தனியொரு பாதையை உருவாக்குவதாக உள்ளது. 7.5 சதவீதம் போக மீதமுள்ள 92.5 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது என்பதை உறுதிபடுத்துவதாக இந்த இட ஒதுக்கீடானது அமைந்துள்ளது.

முந்தைய காலங்களில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்களின் பிம்பப் பெருமிதங்களைக் கொண்டு மட்டும் அரசுப் பள்ளிகளை நாடி வாருங்கள் என்று சொல்லி மாணவர்களின் எண்ணிக்கையை இனியும் அதிகரித்து விட முடியாது. இலவசமாகக் கொடுத்தும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நாடாமல் தனியார் பள்ளிகளை நாடுவதன் பின்னுள்ள நுட்பமான உளவியல் மற்றும் சமூகவியல் பின்னணிகளை அறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால்தான் அரசுப் பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது ‘அனைவருக்கும் கல்வி’ என்பதைச் சாத்தியப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களை முன்னிலைக்குக் கொண்டு வரும் சமூக நீதிக்கான நெடும்பயணம் என்பதை அரசாங்க அமைப்புகள் கருத்தில் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்குச் செலவிடுவதை அரசாங்கம் வெறும் செலவினமாக மட்டும் பார்க்கக் கூடாது. அறிவு வளம் எனும் மகத்தான சொத்துக்கு அரசாங்கம் செய்யும் மூலதனம் அதுவாகும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்குக் கல்வியில் சமத்துவத்தையும் அதற்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை உறுதி செய்வதும் அவசியமாகும்.

*****

12 Aug 2024

அளவுகோலே தவறாக இருந்தால் அளவீடு எப்படி இருக்கும்?

அளவுகோலே தவறாக இருந்தால் அளவீடு எப்படி இருக்கும்?

பள்ளிக் கல்வியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்த காலம் என்று 2000க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிப்பிடலாம். இது கிட்டதட்ட கால் நூற்றாண்டு கால கட்டம். அதுவும் குறிப்பாகத் தொடக்கக் கல்வியில் தடபுடலான மாற்றங்கள். ஒரு மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் அடுத்த மாற்றம் தலையெடுத்த மகத்தான காலமாகவும் இந்தக் கால இடைவெளியைச் சொல்லலாம்.

‘கற்றலில் இனிமை’ என்று தொடங்கிய இந்த மாற்றம், செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி, எண்ணும் எழுத்தும், கண்ணும் கருத்தும் என்று பல மாற்றங்களுக்கு உள்ளானது. இந்த மாற்றங்களுக்கு இடையில் பாடப்புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது இந்த முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பது புரியாமல் கற்பிப்பவர்கள் குழம்பிப் போகிறார்கள்.

முறைகளை மாற்றிக் கொண்டு போனதில் தரமான கல்வி உருவாவதற்குப் பதிலாக எழுதப் படிக்கத் தெரியாத மற்றும் அடிப்படைக் கணக்குகள் தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மைதான் என்றாலும் முறையை மாற்றி விட்டால் எல்லாம் மாறி விடும் என்று நினைத்து அடிக்கடி செய்த மாற்றங்களால் அடிப்படைகளே தெரியாமல் மாறிப் போகிறார்கள் கற்போர். இந்த மாற்றங்களுக்கு இடையில் கொரோனா கால கற்றல் இடைவெளியும் சேர்ந்து கொண்டதில் கற்போரின் நிலை மிகவும் பின்னடைவைச் சந்திப்பதாக உள்ளது.

முறைகளில் எதுவும் பிரச்சனையா? முறைகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு முறையைப் புரிந்து கொண்டு கற்பிப்போர் தயாராகும் போது, உடனடியாக அடுத்த முறையைப் புகுத்துவதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. இதனால் கற்போரை விட கற்பிக்கும் முறையே முக்கியம் என்று மாறிப் போன நிலையும் ஏற்பட்டதுதான் சோகம்.

பொதுவாக வழமையான முறையை விட்டு மாறுதலுக்கு உட்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் கற்பிப்போர் அதற்கும் தயாராக இருந்தார்கள். ஆனால் அது அடிக்கடி, உடனடி என்றால் அவர்கள் தவித்துப் போய் நிற்கிறார்கள்.

அதுவும் ஒவ்வொரு ஆட்சி மாற்றம் நடைபெறும் போதும் ஒரு புதிய முறை என்றால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இடையில் ஒரு கற்பித்தல் முறை மாற்றி மாற்றி புகுத்தப்படுகிறது.

ஆட்சியாளர்களின் மனோநிலைக்கு ஏற்ப புதிய கற்பித்தல் முறையை உருவாக்கித் தர கல்வியாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்பது விநோதமாக இருக்கிறது.

பாடப்புத்தகமே நெகிழ்வான புதுமையான அனைத்து அம்சங்களைக் கொண்டிருந்த போதும் இவர்கள் பாடப்புத்தகத்திலிருந்து மாறுபட்ட புதுப்புது கையேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாடப்புத்தகமும் சுமையாக இருக்கும் அளவுக்கு அதிக அளவு பாடங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கிடையில் இந்தக் கையேடுகள் இன்னொரு சுமையாகச் சேரும் போது கற்பிப்போர் எந்தச் சுமையைச் சுமப்பது என்று கலங்கிப் போகிறார்கள். அவர்கள் தங்கள் கலக்கத்தை வெளிக்காட்ட முடியாத அவலத்தோடு தங்கள் பணியைத் தொடர்கிறார்கள்.

உச்சமாக கல்வி முறையின் வெளிப்பாடுகளை அதாவது அடைவுகளைத் தரமான குழுவினர் வைத்து ஆய்வு செய்வதற்குப் பதிலாகப் பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு (பி.எட். படிக்கும் மாணவர்களைக் கொண்டு) சோதிக்கிறார்கள். பி.எட். மாணவர்கள் பள்ளிகளில் பயிற்சி பெற வருவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் ஆய்வு செய்ய வருவதை இப்போதுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பயிற்சி ஆசிரியர் ஆய்வாளர் ஆகக் கூடாதா என்றால், அவர் ஆசிரியராகி அனுபவம் பெற்று ஆய்வாளர் ஆகலாம். பயிற்சிக் காலத்திலேயே ஆய்வாளர் என்றால் அவர்களுக்குப் பள்ளிகளில் உற்றுநோக்கல் பயிற்சி, கற்பித்தல் பயிற்சிக் கொடுக்கும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

ஆய்வுக்குரியவர்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து நியமிக்க முடியாத நிலையில் கல்வித்துறை இருப்பது விநோதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. சரியான முறையில் ஆய்விற்கான அலகுகளையும் ஆய்வாளர்களையும் தீர்மானிப்பது கல்வி முறையில் அளவிடுதலில் முக்கியமானது. அளவுகோலே தவறாக இருந்தால் அளவிட்டது சரியாக இருக்குமா என்ன?

*****

11 Aug 2024

சூப்பர் ஜீரோ டொலரன்ஸ் திரைப்படம்!

சூப்பர் ஜீரோ டொலரன்ஸ் திரைப்படம்!

அட்லீக்கு பழைய திரைப்படங்களைப் புது விதமாக மீளுருவாக்கம் செய்யப் பிடிக்கும். அவரது குருநாதரான ஷங்கருக்கும் அதுவே பிடித்திருந்தது. அதற்காக அவர் பழைய திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தன்னுடைய திரைப்படத்தையே தேர்ந்தெடுத்தார். அந்நியன் மற்றும் ஐ திரைப்படங்களைக் கலந்து அவர் கொடுத்த திரைப்படம் இந்தியன் – 2 எனப்பட்டது. சீடர் பாணியைக் குரு தேர்ந்து கொண்ட ஒரு விநோத விளையாட்டு அது.

ஷங்கர் படத்திற்கென்று சில வழமைகள் உண்டு. அதே வழமை இந்தியன் – 2லும் இருந்தது. மிகைப் புனைவு அவரது வழமைகளில் ஒன்று. அது படிப்படியாக வளர்ச்சி பெறும் வகையில் அவரது திரைப்பட கட்டமைப்பு இருக்கும். இந்தியன் – 2 இல் அது ஆரம்பம் முதலே இருந்தது. ஏற்கனவே இந்தியன் – 1 வந்து விட்டதால் அப்படி இருந்திருக்கலாம்.

ஷங்கரின் சிறப்பான பாணி அவரது கொடுமைப்படுத்தும் பாணி. அதை அவர் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் செய்வார். இது ஒரு வித சேடிசப் போக்கு என்றாலும் அதை ரசிக்கும் வகையில் தருவதில் கெட்டிக்காரர். இந்தியன் – 2 இல் அவரது கொடுமைப்படுத்தும் பாணி குன்றியிருக்கிறது. அவர் படவீழ்த்தி விளக்க முறை அதாவது பவர்பாய்ண்ட் பிரசென்டேஷனில் இறங்கி விட்டார்.

ஓர் ஆசிரியர் பாடங்களைச் சிறப்பாகக் கொண்டு செல்ல அந்த முறையைப் பயன்படுத்துவார். அந்த வகையில் வர்மக் கலைக்கான பவர் பாய்ண்ட் பிரசென்டேஷனாக ஆகி விட்டது இந்தியன் – 2. படம் முழுவதும் வர்மக் கலை பாடங்களைக் கமலஹாசன் மூலமாக ஷங்கர் எடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு நல்ல பேராசிரியராக ஆகும் அனைத்துத் தகுதிகளும் ஷங்கருக்கு இருந்தது.

கருட புராணமும், அதையொத்த இதர புராணங்களும், வர்மக் கலை புத்தங்களும் இல்லையென்றால் ஷங்கரின் திரைப்படங்கள் இல்லை. எல்லாம் புராதானப் போக்கை நவீனத் தொழில்நுட்பத்தில் வழங்கக் கூடியவை. அதில் காக்க காக்க கனகவேல் காக்க என்ற கந்தர் ஷஷ்டி கவசத்தைப் பாடியபடியே இறக்கச் செய்யும் வர்மக்கலை முறையும் உண்டு. தமிழ்க் கடவுளுக்கு ஷங்கரின் ஆரிய வந்தனம் அது எனப்பட்டது.

இந்தியன் தாத்தா வந்தால்தான் நாட்டில் உள்ள கொடுமைகள் ஒழியும் என்று தாத்தாவை வரவழைத்தனர். அதற்கான காட்சிகள் வழக்கமான ஷங்கரின் படங்களிலிருந்து பிடுங்கப்பட்டவை. அவருடையப் படங்களிலிருந்து அவரே பிடுங்கிக் கொண்டார்.

தாத்தாவின் வருகையை ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் மூலம் அல்லு கிளப்ப நினைத்தார்கள். அதற்கான காட்சி அமைப்புகளையும் அவரது படப் பாடல்களிலிருந்து ஷங்கர் பிடுங்கிக் கொண்டார். வித வித வண்ணமடிப்பது, பிரமாண்ட பொம்மைகளைக் காட்டுவது – அவ்வளவுதான் ஷங்கர் என்று இந்தியன் – 2 இல் சுருங்கிப் போனார்.

இப்படியா நகைச்சுவையாக தாத்தாவை வரவழைக்க வேண்டும்? அதில் தீவிரம் இருந்திருக்க வேண்டும்.

ஷங்கர் படத்தின் துணைப் பாத்திரங்கள் சுய சார்புள்ளவை கிடையாது. யாரையோ நம்பிக் காத்திருக்கும் சார்பு பாத்திரங்கள். அந்த நம்பிக்கைதான் நாயகன். யாரையோ நம்பச் சொல்லி அதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என்பதைத்தான் ஷங்கர் ஒவ்வொரு படங்களிலும் சொன்னார். இந்தியன் – 2 படத்திலும் அதையே சொன்னார்.

ஷங்கரின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னணியில் ஒரு கூட்டணி உண்டு. வாலி – வைரமுத்து – சுஜாதா – ரகுமான் மற்றும் பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தியன் – 2 படத்திற்கு அப்படி ஒரு பிரமாண்ட கூட்டணி அவருக்குக் கிடைக்கவில்லை. அல்லது அவர் உருவாக்க விரும்பவில்லை. அதனால் இந்தியன் – 2 பிரமாண்டத்தை உருவாக்குவதிலும் ஏமாற்றத்தைத் தந்தார்.

கமல் எப்படி வேண்டுமானாலும் வேஷம் கட்டுவார். வேஷம் கட்டத்தானே கலைஞர்கள். அதற்காக ரொம்ப அதி மிகைத்தன்மையோடு கமல் இந்தியன் – 2 இல் வேஷம் கட்டினார். அல்லது வேஷம் கட்டப்பட்டார்.

இந்தியன் – 1 இல் தேவையான அளவுக்கு வர்மக் கலை பாடங்களை கமலும் ஷங்கரும் போதித்து விட்டிருந்தார்கள். இதில் இன்னும் நுணுக்கமாகச் சொல்கிறேன் பேர்வழி என்று இந்தியன் – 1 ஐ மேலும் பட்டிங் டிங்கரிங் பார்ப்பது போலக் கொண்டு சென்று விட்டார்கள்.

பார்க்கக் கூடியவர்களால் யூகிக்கக் கூடிய வகையில்தான் இந்தியன் – 2 திரைக்கதை இருந்தது. சம கால நடப்புகளை தூசு தட்டினால் இந்தியன் – 2 திரைக்கதையை யாராலும் உருவாக்கி விட முடியும். லஞ்சம் ஊழலோடு கார்ப்பரேட் கொள்ளையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தாத்தாவின் வருகையை ஷங்கர் இந்தப் படத்தில் தொடங்கினார்.

ஷங்கரின் முதல் இலக்கு விஜய் மல்லையா. அவரை அப்படி இப்படி என்று பிரதியெடுத்து அவரைப் போட்டுத் தள்ள வைக்கிறார் ஷங்கர் அவரது ஆஸ்தான தாத்தா மூலமாக. தாத்தா மல்லையா வகையறாவில் இருக்கும் வில்லனுக்குக் கொடுக்கும் வர்மக்கலை அதிர்ச்சி பார்ப்போருக்கும் கொடுக்கும் அதிர்ச்சி.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பாக குஜராத்தி கிரானைட் கொள்ளைக்கார வியாபாரிக்குக் கொடுக்கும் வர்மக்கலை அதிர்ச்சி பேரதிர்ச்சி. அதற்கடுத்து பஞ்சாபி லஞ்ச அதிகாரிக்குக் கொடுக்கு வர்மக்கலை அதிர்ச்சியானது அதிர்ச்சியோ அதிர்ச்சி ரகம்.

இதைப் பார்த்துக் கொண்டே வரும் போது நீங்கள் அம்பானினையும் அதானியையும் அவதானிக்க முடியும். அவதானித்துதானே ஆக வேண்டும். அதுதான் திரைக்கதையின் பலவீனம். தெரிந்த விசயங்களைத் தெரியாத விசயம் போலக் காட்ட ஷங்கர் பிரயத்தனப்பட்டார் இந்தத் திரைப்படத்தில்.

வர்மக்கலை அதிர்ச்சிகளை வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அவற்றையெல்லாம் நகைச்சுவை சம்பவங்களாக மாற்றிக் கொண்டு போனார் ஷங்கர். கூடுதலாக அனாடமி கொசுறு வேறு. எந்தக் கலைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. ஷங்கர் இந்தியன் – 2 இல் பயன்படுத்தியது எல்லாம் எல்லை தாண்டிய தீவிரவாதமாக அமைந்தது.

 திரைப்போக்கு மாறிக் கொண்டிருந்தது. எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைக்காட்சிகளைச் சஸ்பென்ஸாக விரிய விடும் காட்சி முறைக்கு மாறாக மிகவும் வெளிப்படையாக யூகிக்கக் கூடிய காட்சிகளைக் கொண்டு பிரமாண்டத்தை நம்பி பிரமாண்டமான ஒரு வீழ்ச்சியைச் சந்தித்தார் ஷங்கர்.

திரைப்படத்தில் கமலுக்குப் பெரிதாக வேலை இருந்ததாகத் தெரியவில்லை. இந்தத் திரைப்படத்தில் அவர் ஒரு வர்மக்கலை பேராசிரியர் அவ்வளவே. அதற்காக ஷங்கர் உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரஷன்டேஷனே இந்த இந்தியன் – 2 திரைப்படம் என்ற அளவில் அந்தத் திரைப்படம் அமைந்தது. அல்லது வர்மக்கலைக்கான ஒரு விநோதமான டாக்குமென்ட்ரியாகவும் இத்திரைப்படம் அமைந்தது. அத்துடன் வர்மக்கலைக்கான அனாடமி பாடமும் உண்டு இத்திரைப்படத்தில் என்ற கருத்தும் உலாவியது. அதிலும் பூரிக்கட்டையைப் பயன்படுத்தி சிபிஐ அதிகாரிக்கு அவர் உருவாக்கும் மரண பயமெல்லாம் திரையரங்கை விட்டே வெளியே ஓட வைத்தது.

கமல் வருகிறார். கொலை செய்கிறார். கமல் எதற்காக வருகிறார்? கொலை செய்ய வருகிறார். மறுபடியும் கமல் எதற்காக வருகிறார்? மீண்டும் அதே கதைதான். கமல் வருகிறார். சில நேரங்களில் கத்தியை உருவுகிறார். கொலை செய்கிறார். சிபிஐ துரத்துகிறது. ரவுடிகள் துரத்துகின்றனர். முடிவில் மக்களும் துரத்துகின்றனர். தப்பிக்கிறார். தப்பிக்கிறார். தப்பித்துக் கொண்டே போகிறார். இந்த அளவில் சுருக்கி விட முடிந்தது ஷங்கரின் இந்தியன் – 2 கதையை.

ஒரு சில இடங்களில் கமல் பேசும் குரல் டப்பிங் படத்தில் பேசுவது போலவும் இருந்தது. கமல் ஏன் அப்படிச் செய்தார்? கமலே அப்படிச் செய்யும் போது நாம் ஏன் அதைத் தாண்டிச் செய்யக் கூடாது என இமையமைப்பாளர் அனிருத் இந்தியன் – 2 வை வைத்து நன்றாகவே சம்பவம் செய்திருந்தார்.

அதிகாரிகளின் ஊழல், தொழிலதிபர்களின் சுரண்டல், வேலைவாய்ப்பு முறைகேடுகள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு 2ஜி ஊழலை விட்டு விட்டார் ஷங்கர் என்ற குறையும் இத்திரைப்படத்தில் எதிரொலித்தது. அதைத் தொட்டிருந்தால் இந்தப் படத்தை விநியோகிக்க முடியாமல் போயிருந்திருக்கும் என்றும் பேசப்பட்டது.

ஷங்கருக்கு இந்தியன் – 2 வை ஒரு பான் இந்தியா படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாநிலம் விட்டு மாநிலம் தாத்தாவை அனுப்பி கொலைக்களத்தை உருவாக்கச் செய்தார். அடுத்த பாகத்தில் நாடு விட்டு நாடு என்று என்று ஹாலிவும் படமாகக் கொண்டு சென்று விடுவார் என்ற எதிர்பார்ப்பும் இதனால் எழுந்தது.

தாத்தாவின் இடமானது இந்தப் படத்தில் பாடம் - வர்மம், வர்மத்துக்கான அனாடமி என்று அளவோடு அதிகப்படியான அறிவுரை சொல்வதாகவும் நீண்டது. அவரை அதிகம் பேச விட்டு விட்டு அவரைப் பிடிக்க நெடுமுடி வேணுவின் வாரிசாக பாபி சிம்ஹா அலைந்து கொண்டிருந்தார். இந்தியன் 1 இல் தாத்தாவின் வர்மக்கலை பராக்கிராமங்களைப் பிறப் பாத்திருங்கள் பேசின. இந்தியன் – 2 இல் தாத்தவே அதைப் பேசினார். அது ஒரு மிகப் பெரிய பலவீனம்.

தாத்தாவின் வருகைக்காக ஷங்கர் உருவாக்கிய காட்சியமைப்புகள் அனைத்தும் ஒவ்வொரு திரைப்படத்திற்கான கருவிற்கானவை. ஏறக்குறைய இப்படியான காட்சியமைப்புகளை அவரது சீடர் அட்லீ ஜவான் திரைப்படத்திலும் பயன்படுத்தினார். எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஒரே திரைப்படத்தில் திணித்ததில் எடுபட வேண்டிய விளைவு எடுபடாமல் போனது.

இந்தப் படத்தில் கமல்தான் மையப்படுத்தப்பட்டாரா? அவரும் மையப்படுத்தப்பட வில்லை. ஏகப்பட்ட மையங்களைக் கொண்டு குழப்பமாக இருந்தது.

கமலின் பேச்சைக் கேட்டு ஊழல் செய்யும் பெற்றோர்களை மாட்டி விடும் பிள்ளைகள் அது குறித்து அதற்கு முன்பாக அவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தியிருக்கலாம் அல்லவா. சித்தார்த் அப்படி ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார். நல்லவரான அப்பாவைச் சந்தேகப்பட்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறார்.

பின்பு அவர் கெட்டவர் எனத் தெரிந்த பின்பு அதற்கான ஓர் உரையாடல் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே. அது இல்லை. ஓர் உரையாடலுக்குப் பின்பு அது நிகழ்ந்திருந்தால் திரைக்கதையின் அழுத்தம் கூடியிருக்கும். அப்படிச் செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல, இப்போது ஷங்கர் பக்கத்தில் சுஜாதா இல்லாமல் போனது ஒரு பெருங்குறையாகிப் போய் விட்டது.

படத்தின் திருப்பத்திற்காகப் பிள்ளைகள் பெற்றோர்களை மாட்டி விடுகிறார்கள் என்ற பலவீனம் திரைக்கதையில் தொனித்தது. இவையெல்லாம் சேர்ந்து ஓர் உணர்ச்சிகரமான கோவையாக இருக்கிறதே தவிர, கதைக்கோவை இல்லாமல் போனது.

எல்லாவற்றையும் இணைத்து ஷங்கர் ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தர முனைந்து அது ஒரு சூப்பர் ஜீரோ படமாக முடிந்தது. இந்தியன் – 2 ஜீரோ டோலரன்ஸ் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்கும் ஆகிப் போனது. அடுத்து இந்தியன் – 3 எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பார்ப்போம் இந்தியனின் தலையெழுத்தையும் ஷங்கரின் கதையெழுத்தையும் என்று தமிழ் மக்கள் காத்திருந்தனர். இது பான் இந்தியா படம் என்பதால் இந்தியர்களும் காத்திருந்தனர்.

*****

10 Aug 2024

வரிகளும் பொருளாதார அறிகுறிகளும்!

வரிகளும் பொருளாதார அறிகுறிகளும்!

பொருளாதாரம் குறித்து மூன்று விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதல் விடயம் வருமான வரி தொடர்பானது.

கழிவுகள், சலுகைகள் போக ஏழரை லட்சம் வரை புதிய வருமான வரி முறையில் வரிச் சலுகை இருப்பதாகப் பெரிதாகப் பேசப்படுகிறது. இன்றைய அதிகரித்து விட்ட விலைவாசி, குடிக்கின்ற தண்ணீர் வரை காசு, உண்ணும் உணவுக்கும் வரி என்று ஆகி விட்ட நிலையில் இந்த வருமான வரி வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்?

இதற்கான அளவுகோல் ஏதேனும் இருக்கிறதா என்றால் இருக்கிறது.

தங்கத்தின் விலையே எதற்கும் அளவுகோல். 2005 ஆம் ஆண்டில் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ளவருக்கு வருமான வரி கிடையாது. அப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு 18 பவுன் தங்கம் வாங்கலாம். ஒரு பவுன் 5500 ரூபாய்தான். இது ஒரு முக்கியமான குறியீடு. இந்தக் குறியீட்டின்படி தற்போதைய நிலையைப் பாருங்கள்.

இந்த பத்தொன்பது ஆண்டுகளில் அதாவது 2024 இல் தற்போது அதே அளவு 18 பவுன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் ஒன்பது லட்ச ருபாய் தேவை. அப்படியானால் ஒன்பது லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு தர வேண்டும். ஆனால் மூன்று லட்ச ரூபாய் வரையிலான வருமானத்துக்கே வரி விலக்கு இருக்கிறது. அதாவது வருமான வரிக்கான வருமான வரம்பானது மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பழைய வருமான வரி முறையில் நீங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளைக் காட்டி இந்த வரம்பை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம்.

புதிய வருமான வரி முறையை எடுத்துக் கொண்டால் கழிவுகள், சலுகைகளை தந்து ஏழரை லட்சம் வரை வருமானத்துக்கு வருமான வரி இல்லை. அப்படிப் பார்த்தாலும் ஒன்றரை லட்ச ரூபாய்க்கான வரி விலக்கு குறையத்தானே செய்கிறது.

ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒன்பது லட்ச ரூபாய்க்கான வருமானத்துக்கு எவ்வித கழிவுகள் மற்றும் சலுகைகளுமின்றி வருமான வரி விலக்குத் தந்தால்தான் அது சரியாக இருக்கும். அதன் பிறகு கழிவுகள், சலுகைகள் தந்து பனிரெண்டு லட்ச ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தற்போதைய நிலைக்கு அது சரியானது.

இரண்டாவது விடயம் பொருளாதாரத்தை இன உணர்வோடு தொடர்புபடுத்துவது சம்பந்தமானது. இது எப்போதும் பொருளாதாரத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்று விடும். கர்நாடகம் இதை அடிக்கடி செய்கிறது. மகாராட்டிரத்தில் எப்போதாவது இது சார்ந்த அரசியல் எழும்.

கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற முழக்கத்தோடு, காவிரி நீர் கர்நாடகத்துக்கு மட்டுமே என்ற குரல் அரசியல் நிமித்தம் அங்கு எழுந்து கொண்டே இருக்கிறது. இந்தியா போன்ற பல இன மக்கள் வாழும் நாட்டிற்கு இது போன்ற அணுகுமுறைகள், முழக்கங்கள் கொஞ்சம் கூட உதவாது. அதுவும் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்ட இக்கால கட்டத்தில் இதைப் போன்ற பிற்போக்கான அணுகுமுறை வேறெதுவும் இருக்க முடியாது.

கன்னடர்களைப் பொருத்த வரை பெங்களூரு தகவல் தொழில் நுட்ப நகரமாகவும் காவிரி மகத்தான நீராதாரமாகவும் இருப்பதால் அவர்கள் தங்கள் முன்னுரிமையை அளவுக்கதிகமாக முன்னிருத்துகிறார்கள்.

பெங்களூருவில் கன்னடர்களைத் தவிர மற்றவர்களைக் கழித்து விட்டுப் பார்த்தால் அந்த நகரம் தொழில் நுட்ப நகரம் என்ற பெருமையை இழந்து விடும் என்பதுதான் உண்மை.

காவிரியை எடுத்துக் கொண்டால் அது உருவாகும் இடத்தில் இருப்போருக்கு இருப்பதை விட அதை பல்லாண்டு காலம் பயன்படுத்தும் மக்களுக்கே அதன் மீது அதிக உரிமை இருக்கிறது. அப்படித்தான் நதி நீர்ப் பங்கீடு குறித்த உலக நீதி சொல்கிறது.

கர்நாடகம் தன் அணுகுமுறையை ஏன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு வலுவான உலக எதார்த்தங்கள் நிறைய இருக்கின்றன. ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால்…

கர்நாடகம் செய்து கொண்டிருக்கும் இதே வேலையை தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் டொனால்ட் டிரம்பும் அவர் அதிபராக இருந்த காலத்தில் செய்து பார்த்தார். அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே வேலை என்றார். அவரது பாச்சா எடுபடவில்லை. எப்படி எடுபடாமல் போனது என்கிறீர்களா?

டிரம்ப் அப்படிச் சொன்னதும், அப்படியானால் நாங்கள் எங்கள் அலுவலகங்களை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்கிறோம் என்றன அமெரிக்க நிறுவனங்கள். டிரம்ப் ஆடிப் போனார். அப்படி நடந்தால் அந்த நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்குக் கிடைக்கும் வரி வருமானம் குறையும். எந்த நாடுகளில் அந்த நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்கின்றனவோ அந்த நாடுகளின் வரி வருமானம் கூடுதலாகும். உடனே டிரம்ப் பல்டி அடித்தார். தேவையா இது?

கர்நாடகம் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்ப தலைநகரம் என இரண்டையும் ஒரு சேர இழக்க நினைத்தால் கன்னடர்களுக்கே எதிலும் முன்னுரிமை என்பதைத் தாராளமாகச் செயல்படுத்தலாம்.

மூன்றாவது விடயம் ஜி.எஸ்.டி. வரி குறித்தது. இந்த வரிக்குப் பிறகு சகலமும் வரி வரம்பிற்குள் வந்து விட்டன. நீங்கள் சாப்பிடும் இட்டிலி, தோசை வரைக்கும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, தாமதக் கட்டணம், அபராதக் கட்டணம் வரைக்கும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உங்கள் வங்கி பரிவர்த்தனைக் கணக்கு விவரங்களைச் சோதித்தால் தெரிய வரும்.

மாணவர்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தாமதமாகக் கட்டணம் செலுத்தி அதற்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அதற்கும் வரி செலுத்தியிருப்பதை நன்றாகவே அறிந்திருப்பார்கள்.

நீங்கள் உங்கள் பணத்தை வங்கியில் சேமித்தால் அதற்கு நான்கு சதவீத வட்டி. நிரந்தர வைப்பில் போட்டால் ஏழு சதவீத வட்டி. ஆனால் ஜி.எஸ்.டி? அதன் குறைந்தபட்ச அளவே எட்டு சதவீதத்தில் தொடங்கி அதிகபட்சம் இருபத்து எட்டு சதவீதம் வரை நீள்கிறது.

ஒரு நாடு எந்த வரியை வசூலிப்பதாக இருந்தாலும் அந்த வரியானது வங்கிகள் தரும் நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதத்தை விட குறைவாகவே இருக்க வேண்டும். அதுவே சரியான வரி விதிப்பு முறை.

இருபத்து எட்டு சதவீத வரி என்றால் நினைத்துப் பாருங்கள். இது நான்கில் ஒரு பங்கை விட அதிகமான வரி அளவு. இந்த அளவுக்கு வரியை வாங்கிய பிறகாவது தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சுகாதார வசதிகள் என்று எதுவும் மேம்பட்டிருக்கிறதா என்றால், அதை மக்கள் தனியாரிடம் காசு கொடுத்துதான் தரமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.

வரிகள் குறித்த மேற்படி வரிகள் அனைத்தும் முக்கியமானவை. இவை எதிர்கால பொருளாதார அறிகுறிகளை மட்டுமல்ல, எதிர்கால அரசியல் அறிகுறிகளையும் காட்டக் கூடியன.

வரிச்சுமை என்பது வேலைவாய்ப்புகள், பொருளாதார சுழற்சி, மக்களின் வாங்கும் திறன் என்று பலவற்றையும் பாதிக்கக்கூடியது. அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் என்ன செய்யும் என்பதற்கு இலங்கையும், வங்கதேசமும் நேரடி கள உதாரணங்கள். இந்தியாவும் அப்படி ஓர் உதாரணமாகி விடக் கூடாது.

ஆகவே வரி என்பது மக்கள் மனமுவந்து சந்தோசமாகச் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். திறமையுள்ளவர்களை ஊக்குவித்துப் பொருளாதாரத்தைப் பெருக்கும் வகையில் அரசின் அணுகுமுறைகள் பெருந்தன்மையாக இருக்க வேண்டுமே தவிர இன உணர்வைக் குவித்துப் பொருளாதாரத்தை முடக்கிக் கொள்ளும் வகையில் இருக்கக் கூடாது. எந்த வரியாக இருந்தாலும் அது வங்கிகள் தரும் நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதத்தை விட குறைவாக இருக்க வேண்டும். இந்த மூன்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தால் நாட்டில் நிறைய முன்னேற்றங்கள் நிகழும் என்பது சாசுவதமான உண்மை.

*****

9 Aug 2024

தமிழர்களின் புவியியல்!

தமிழர்களின் புவியியல்!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழர்கள் பகுத்துச் சொல்லியிருப்பது பொருள் இலக்கணம் என்ற அளவோடும், தமிழ்ப் பாடத்தில் படிப்பது என்ற அளவோடும் முடிந்து விட்டது.

வெறும் பொருள் இலக்கணம் மட்டுமா அது?

படித்து மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்கான கருத்து மட்டுமா அது?

தமிழர்களின் நிலவியல் அறிவல்லவா அது!

நிலத்தை இப்படிப் பகுத்த புவியியல் வல்லுநர்கள் தமிழர்கள் என்பதற்கான சான்று அந்தப் பகுப்பு.

இந்தப் பகுப்பில் எவ்வளவு அறிவு அடங்கியிருக்கிறது என்பதை அறிவால் தோண்ட தோண்ட புலனாகும். தமிழர்களின் நிலவியல் அறிவு, விலங்கியல் அறிவு, சூழலியல் அறிவு, மானுடவியல் அறிவு, குடிமையியல் அறிவு, பொருளியல் அறிவு, பண்பாட்டியல் அறிவு என்று எத்தனையோ அறிவு அதனுள் பொதிந்து இருப்பதை உணர முடியும்.

நம் தமிழ் நிலம் எவ்வளவு இருந்தது?

இப்போது இருப்பது நமக்குத் தெரியும். அதற்கான நிலவரைபடத்தை நாம் கூகுளில் தட்டினால் பகுதி வாரியாகப் பிரித்து மேய்ந்து விட முடியும். ஆனால் அப்போது? அப்போது என்றால்… பண்டைய காலத்தில்… கிறித்துப் பிறப்பதற்கு முன்பு… சங்க காலத்தில்…

அதற்கான பாடல்களே அதற்கான சான்றாக இருப்பது நாம் பெற்ற தவப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும்.

“நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”            

                                                            (புறநானூறு, 9)

“குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி”                       

                                                            (புறநானூறு, 67)

எனும் சங்கப்பாடல்கள் பஃறுளி, குமரி எனும் இரு வகை ஆறுகளைப் பற்றிக் கூறுகின்றன. நாமறிந்தது வைகையும், தாமிரபரணியும், காவிரியும், பாலாறும்தானே. இந்த ஆறுகளை அறிய முடியாததற்குக் காரணம்,

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”          

                                                            (சிலப்பதிகாரம், காடு காண் காதை, 19 – 20)

எனும்படியான கடற்கோளால் குமரிக்கண்டம் எனப்பட்ட நிலப்பகுதி அழிந்ததுதான். பெரும் தமிழ்ப்பரப்பு ஒன்று அன்று இருந்திருக்கிறது, அது கடற்கோளால் அழிந்திருக்கிறது என்ற தகவல்களை மேற்படி இலக்கிய வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

பிற்பாடு தமிழ் நிலப்பரப்பு என்பது வேங்கடமும் குமரியுமாக ஆனதை

“வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகத்து”                                   

                                                            (தொல்காப்பியம், பாயிரம்)

என்றும்,

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்”               

                                                            (நன்னூல், சிறப்புப் பாயிரம்)

என்றும் இலக்கண நூல்கள் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.

சிலப்பதிகாரக் காலத்திலிருந்து தொல்காப்பியம் குறிப்பிடும் புவியியல் எல்லையே தமிழக நிலவியலாக இருந்ததை,

“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

                                                            (சிலப்பதிகாரம், வேனிற்காதை, 1 – 2)

எனும் வரிகள் புலப்படுத்துகின்றன. ஆக தொல்காப்பியம், சிலப்பதிகாரக் காலத்திலிருந்து நாம் தற்போது காணும் தமிழக நிலவியல் எல்லை தொடர்ந்து நிலைபெற்றிருக்கிறது. என்றாலும் தமிழக நிலவியல் எல்லையில் நாம் வேங்கடத்தை ஆந்திரத்திடம் கொடுத்து விட்டோம். மேற்கு நிலப்பகுதி கேரளமாக தனி மாநிலமாகப் பிரிந்து விட்டது.

நல்ல வேளையாக எப்படியோ கன்னியாகுமரியை மீட்டோம். இல்லையென்றால் வடவேங்கடத்தை இழந்தது போல, தென்குமரியையும் இழந்திருக்க வேண்டியிருக்கும்.

போராட்டப் பயனாகத் திருத்தணியும் மீட்கப்பட்டது. இல்லாது போனால் தமிழகத்தில் முருகனுக்கு அறுபடை வீடு, ஐம்படை வீடாக ஆகியிருக்கும்.

கடற்கோளால் தமிழகம் இழந்த நிலப்பரப்பு பெருத்த வேதனையென்றால், மொழிவாரி மாநிலப் பிரிப்பால் தமிழகம் இழந்த நிலப்பரப்பு தவிர்க்க முடியாத சோதனை.

தற்போது எஞ்சி நிற்கும் தமிழகத்தின் மிஞ்சி இருக்கும் நிலவியல் புகழைத் தமிழ் உணர்வோடும் தமிழர்கள் எனும் பெருமித நிலையோடும் காத்து நிற்க வேண்டிய கடமையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வும் நமக்கு இருக்கிறது.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...