10 Aug 2024

வரிகளும் பொருளாதார அறிகுறிகளும்!

வரிகளும் பொருளாதார அறிகுறிகளும்!

பொருளாதாரம் குறித்து மூன்று விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதல் விடயம் வருமான வரி தொடர்பானது.

கழிவுகள், சலுகைகள் போக ஏழரை லட்சம் வரை புதிய வருமான வரி முறையில் வரிச் சலுகை இருப்பதாகப் பெரிதாகப் பேசப்படுகிறது. இன்றைய அதிகரித்து விட்ட விலைவாசி, குடிக்கின்ற தண்ணீர் வரை காசு, உண்ணும் உணவுக்கும் வரி என்று ஆகி விட்ட நிலையில் இந்த வருமான வரி வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்?

இதற்கான அளவுகோல் ஏதேனும் இருக்கிறதா என்றால் இருக்கிறது.

தங்கத்தின் விலையே எதற்கும் அளவுகோல். 2005 ஆம் ஆண்டில் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ளவருக்கு வருமான வரி கிடையாது. அப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு 18 பவுன் தங்கம் வாங்கலாம். ஒரு பவுன் 5500 ரூபாய்தான். இது ஒரு முக்கியமான குறியீடு. இந்தக் குறியீட்டின்படி தற்போதைய நிலையைப் பாருங்கள்.

இந்த பத்தொன்பது ஆண்டுகளில் அதாவது 2024 இல் தற்போது அதே அளவு 18 பவுன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் ஒன்பது லட்ச ருபாய் தேவை. அப்படியானால் ஒன்பது லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு தர வேண்டும். ஆனால் மூன்று லட்ச ரூபாய் வரையிலான வருமானத்துக்கே வரி விலக்கு இருக்கிறது. அதாவது வருமான வரிக்கான வருமான வரம்பானது மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பழைய வருமான வரி முறையில் நீங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளைக் காட்டி இந்த வரம்பை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம்.

புதிய வருமான வரி முறையை எடுத்துக் கொண்டால் கழிவுகள், சலுகைகளை தந்து ஏழரை லட்சம் வரை வருமானத்துக்கு வருமான வரி இல்லை. அப்படிப் பார்த்தாலும் ஒன்றரை லட்ச ரூபாய்க்கான வரி விலக்கு குறையத்தானே செய்கிறது.

ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒன்பது லட்ச ரூபாய்க்கான வருமானத்துக்கு எவ்வித கழிவுகள் மற்றும் சலுகைகளுமின்றி வருமான வரி விலக்குத் தந்தால்தான் அது சரியாக இருக்கும். அதன் பிறகு கழிவுகள், சலுகைகள் தந்து பனிரெண்டு லட்ச ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தற்போதைய நிலைக்கு அது சரியானது.

இரண்டாவது விடயம் பொருளாதாரத்தை இன உணர்வோடு தொடர்புபடுத்துவது சம்பந்தமானது. இது எப்போதும் பொருளாதாரத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்று விடும். கர்நாடகம் இதை அடிக்கடி செய்கிறது. மகாராட்டிரத்தில் எப்போதாவது இது சார்ந்த அரசியல் எழும்.

கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற முழக்கத்தோடு, காவிரி நீர் கர்நாடகத்துக்கு மட்டுமே என்ற குரல் அரசியல் நிமித்தம் அங்கு எழுந்து கொண்டே இருக்கிறது. இந்தியா போன்ற பல இன மக்கள் வாழும் நாட்டிற்கு இது போன்ற அணுகுமுறைகள், முழக்கங்கள் கொஞ்சம் கூட உதவாது. அதுவும் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்ட இக்கால கட்டத்தில் இதைப் போன்ற பிற்போக்கான அணுகுமுறை வேறெதுவும் இருக்க முடியாது.

கன்னடர்களைப் பொருத்த வரை பெங்களூரு தகவல் தொழில் நுட்ப நகரமாகவும் காவிரி மகத்தான நீராதாரமாகவும் இருப்பதால் அவர்கள் தங்கள் முன்னுரிமையை அளவுக்கதிகமாக முன்னிருத்துகிறார்கள்.

பெங்களூருவில் கன்னடர்களைத் தவிர மற்றவர்களைக் கழித்து விட்டுப் பார்த்தால் அந்த நகரம் தொழில் நுட்ப நகரம் என்ற பெருமையை இழந்து விடும் என்பதுதான் உண்மை.

காவிரியை எடுத்துக் கொண்டால் அது உருவாகும் இடத்தில் இருப்போருக்கு இருப்பதை விட அதை பல்லாண்டு காலம் பயன்படுத்தும் மக்களுக்கே அதன் மீது அதிக உரிமை இருக்கிறது. அப்படித்தான் நதி நீர்ப் பங்கீடு குறித்த உலக நீதி சொல்கிறது.

கர்நாடகம் தன் அணுகுமுறையை ஏன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு வலுவான உலக எதார்த்தங்கள் நிறைய இருக்கின்றன. ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால்…

கர்நாடகம் செய்து கொண்டிருக்கும் இதே வேலையை தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் டொனால்ட் டிரம்பும் அவர் அதிபராக இருந்த காலத்தில் செய்து பார்த்தார். அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே வேலை என்றார். அவரது பாச்சா எடுபடவில்லை. எப்படி எடுபடாமல் போனது என்கிறீர்களா?

டிரம்ப் அப்படிச் சொன்னதும், அப்படியானால் நாங்கள் எங்கள் அலுவலகங்களை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்கிறோம் என்றன அமெரிக்க நிறுவனங்கள். டிரம்ப் ஆடிப் போனார். அப்படி நடந்தால் அந்த நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்குக் கிடைக்கும் வரி வருமானம் குறையும். எந்த நாடுகளில் அந்த நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்கின்றனவோ அந்த நாடுகளின் வரி வருமானம் கூடுதலாகும். உடனே டிரம்ப் பல்டி அடித்தார். தேவையா இது?

கர்நாடகம் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்ப தலைநகரம் என இரண்டையும் ஒரு சேர இழக்க நினைத்தால் கன்னடர்களுக்கே எதிலும் முன்னுரிமை என்பதைத் தாராளமாகச் செயல்படுத்தலாம்.

மூன்றாவது விடயம் ஜி.எஸ்.டி. வரி குறித்தது. இந்த வரிக்குப் பிறகு சகலமும் வரி வரம்பிற்குள் வந்து விட்டன. நீங்கள் சாப்பிடும் இட்டிலி, தோசை வரைக்கும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, தாமதக் கட்டணம், அபராதக் கட்டணம் வரைக்கும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உங்கள் வங்கி பரிவர்த்தனைக் கணக்கு விவரங்களைச் சோதித்தால் தெரிய வரும்.

மாணவர்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தாமதமாகக் கட்டணம் செலுத்தி அதற்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அதற்கும் வரி செலுத்தியிருப்பதை நன்றாகவே அறிந்திருப்பார்கள்.

நீங்கள் உங்கள் பணத்தை வங்கியில் சேமித்தால் அதற்கு நான்கு சதவீத வட்டி. நிரந்தர வைப்பில் போட்டால் ஏழு சதவீத வட்டி. ஆனால் ஜி.எஸ்.டி? அதன் குறைந்தபட்ச அளவே எட்டு சதவீதத்தில் தொடங்கி அதிகபட்சம் இருபத்து எட்டு சதவீதம் வரை நீள்கிறது.

ஒரு நாடு எந்த வரியை வசூலிப்பதாக இருந்தாலும் அந்த வரியானது வங்கிகள் தரும் நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதத்தை விட குறைவாகவே இருக்க வேண்டும். அதுவே சரியான வரி விதிப்பு முறை.

இருபத்து எட்டு சதவீத வரி என்றால் நினைத்துப் பாருங்கள். இது நான்கில் ஒரு பங்கை விட அதிகமான வரி அளவு. இந்த அளவுக்கு வரியை வாங்கிய பிறகாவது தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சுகாதார வசதிகள் என்று எதுவும் மேம்பட்டிருக்கிறதா என்றால், அதை மக்கள் தனியாரிடம் காசு கொடுத்துதான் தரமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.

வரிகள் குறித்த மேற்படி வரிகள் அனைத்தும் முக்கியமானவை. இவை எதிர்கால பொருளாதார அறிகுறிகளை மட்டுமல்ல, எதிர்கால அரசியல் அறிகுறிகளையும் காட்டக் கூடியன.

வரிச்சுமை என்பது வேலைவாய்ப்புகள், பொருளாதார சுழற்சி, மக்களின் வாங்கும் திறன் என்று பலவற்றையும் பாதிக்கக்கூடியது. அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் என்ன செய்யும் என்பதற்கு இலங்கையும், வங்கதேசமும் நேரடி கள உதாரணங்கள். இந்தியாவும் அப்படி ஓர் உதாரணமாகி விடக் கூடாது.

ஆகவே வரி என்பது மக்கள் மனமுவந்து சந்தோசமாகச் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். திறமையுள்ளவர்களை ஊக்குவித்துப் பொருளாதாரத்தைப் பெருக்கும் வகையில் அரசின் அணுகுமுறைகள் பெருந்தன்மையாக இருக்க வேண்டுமே தவிர இன உணர்வைக் குவித்துப் பொருளாதாரத்தை முடக்கிக் கொள்ளும் வகையில் இருக்கக் கூடாது. எந்த வரியாக இருந்தாலும் அது வங்கிகள் தரும் நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதத்தை விட குறைவாக இருக்க வேண்டும். இந்த மூன்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தால் நாட்டில் நிறைய முன்னேற்றங்கள் நிகழும் என்பது சாசுவதமான உண்மை.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...