11 Aug 2024

சூப்பர் ஜீரோ டொலரன்ஸ் திரைப்படம்!

சூப்பர் ஜீரோ டொலரன்ஸ் திரைப்படம்!

அட்லீக்கு பழைய திரைப்படங்களைப் புது விதமாக மீளுருவாக்கம் செய்யப் பிடிக்கும். அவரது குருநாதரான ஷங்கருக்கும் அதுவே பிடித்திருந்தது. அதற்காக அவர் பழைய திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தன்னுடைய திரைப்படத்தையே தேர்ந்தெடுத்தார். அந்நியன் மற்றும் ஐ திரைப்படங்களைக் கலந்து அவர் கொடுத்த திரைப்படம் இந்தியன் – 2 எனப்பட்டது. சீடர் பாணியைக் குரு தேர்ந்து கொண்ட ஒரு விநோத விளையாட்டு அது.

ஷங்கர் படத்திற்கென்று சில வழமைகள் உண்டு. அதே வழமை இந்தியன் – 2லும் இருந்தது. மிகைப் புனைவு அவரது வழமைகளில் ஒன்று. அது படிப்படியாக வளர்ச்சி பெறும் வகையில் அவரது திரைப்பட கட்டமைப்பு இருக்கும். இந்தியன் – 2 இல் அது ஆரம்பம் முதலே இருந்தது. ஏற்கனவே இந்தியன் – 1 வந்து விட்டதால் அப்படி இருந்திருக்கலாம்.

ஷங்கரின் சிறப்பான பாணி அவரது கொடுமைப்படுத்தும் பாணி. அதை அவர் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் செய்வார். இது ஒரு வித சேடிசப் போக்கு என்றாலும் அதை ரசிக்கும் வகையில் தருவதில் கெட்டிக்காரர். இந்தியன் – 2 இல் அவரது கொடுமைப்படுத்தும் பாணி குன்றியிருக்கிறது. அவர் படவீழ்த்தி விளக்க முறை அதாவது பவர்பாய்ண்ட் பிரசென்டேஷனில் இறங்கி விட்டார்.

ஓர் ஆசிரியர் பாடங்களைச் சிறப்பாகக் கொண்டு செல்ல அந்த முறையைப் பயன்படுத்துவார். அந்த வகையில் வர்மக் கலைக்கான பவர் பாய்ண்ட் பிரசென்டேஷனாக ஆகி விட்டது இந்தியன் – 2. படம் முழுவதும் வர்மக் கலை பாடங்களைக் கமலஹாசன் மூலமாக ஷங்கர் எடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு நல்ல பேராசிரியராக ஆகும் அனைத்துத் தகுதிகளும் ஷங்கருக்கு இருந்தது.

கருட புராணமும், அதையொத்த இதர புராணங்களும், வர்மக் கலை புத்தங்களும் இல்லையென்றால் ஷங்கரின் திரைப்படங்கள் இல்லை. எல்லாம் புராதானப் போக்கை நவீனத் தொழில்நுட்பத்தில் வழங்கக் கூடியவை. அதில் காக்க காக்க கனகவேல் காக்க என்ற கந்தர் ஷஷ்டி கவசத்தைப் பாடியபடியே இறக்கச் செய்யும் வர்மக்கலை முறையும் உண்டு. தமிழ்க் கடவுளுக்கு ஷங்கரின் ஆரிய வந்தனம் அது எனப்பட்டது.

இந்தியன் தாத்தா வந்தால்தான் நாட்டில் உள்ள கொடுமைகள் ஒழியும் என்று தாத்தாவை வரவழைத்தனர். அதற்கான காட்சிகள் வழக்கமான ஷங்கரின் படங்களிலிருந்து பிடுங்கப்பட்டவை. அவருடையப் படங்களிலிருந்து அவரே பிடுங்கிக் கொண்டார்.

தாத்தாவின் வருகையை ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் மூலம் அல்லு கிளப்ப நினைத்தார்கள். அதற்கான காட்சி அமைப்புகளையும் அவரது படப் பாடல்களிலிருந்து ஷங்கர் பிடுங்கிக் கொண்டார். வித வித வண்ணமடிப்பது, பிரமாண்ட பொம்மைகளைக் காட்டுவது – அவ்வளவுதான் ஷங்கர் என்று இந்தியன் – 2 இல் சுருங்கிப் போனார்.

இப்படியா நகைச்சுவையாக தாத்தாவை வரவழைக்க வேண்டும்? அதில் தீவிரம் இருந்திருக்க வேண்டும்.

ஷங்கர் படத்தின் துணைப் பாத்திரங்கள் சுய சார்புள்ளவை கிடையாது. யாரையோ நம்பிக் காத்திருக்கும் சார்பு பாத்திரங்கள். அந்த நம்பிக்கைதான் நாயகன். யாரையோ நம்பச் சொல்லி அதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என்பதைத்தான் ஷங்கர் ஒவ்வொரு படங்களிலும் சொன்னார். இந்தியன் – 2 படத்திலும் அதையே சொன்னார்.

ஷங்கரின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னணியில் ஒரு கூட்டணி உண்டு. வாலி – வைரமுத்து – சுஜாதா – ரகுமான் மற்றும் பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தியன் – 2 படத்திற்கு அப்படி ஒரு பிரமாண்ட கூட்டணி அவருக்குக் கிடைக்கவில்லை. அல்லது அவர் உருவாக்க விரும்பவில்லை. அதனால் இந்தியன் – 2 பிரமாண்டத்தை உருவாக்குவதிலும் ஏமாற்றத்தைத் தந்தார்.

கமல் எப்படி வேண்டுமானாலும் வேஷம் கட்டுவார். வேஷம் கட்டத்தானே கலைஞர்கள். அதற்காக ரொம்ப அதி மிகைத்தன்மையோடு கமல் இந்தியன் – 2 இல் வேஷம் கட்டினார். அல்லது வேஷம் கட்டப்பட்டார்.

இந்தியன் – 1 இல் தேவையான அளவுக்கு வர்மக் கலை பாடங்களை கமலும் ஷங்கரும் போதித்து விட்டிருந்தார்கள். இதில் இன்னும் நுணுக்கமாகச் சொல்கிறேன் பேர்வழி என்று இந்தியன் – 1 ஐ மேலும் பட்டிங் டிங்கரிங் பார்ப்பது போலக் கொண்டு சென்று விட்டார்கள்.

பார்க்கக் கூடியவர்களால் யூகிக்கக் கூடிய வகையில்தான் இந்தியன் – 2 திரைக்கதை இருந்தது. சம கால நடப்புகளை தூசு தட்டினால் இந்தியன் – 2 திரைக்கதையை யாராலும் உருவாக்கி விட முடியும். லஞ்சம் ஊழலோடு கார்ப்பரேட் கொள்ளையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தாத்தாவின் வருகையை ஷங்கர் இந்தப் படத்தில் தொடங்கினார்.

ஷங்கரின் முதல் இலக்கு விஜய் மல்லையா. அவரை அப்படி இப்படி என்று பிரதியெடுத்து அவரைப் போட்டுத் தள்ள வைக்கிறார் ஷங்கர் அவரது ஆஸ்தான தாத்தா மூலமாக. தாத்தா மல்லையா வகையறாவில் இருக்கும் வில்லனுக்குக் கொடுக்கும் வர்மக்கலை அதிர்ச்சி பார்ப்போருக்கும் கொடுக்கும் அதிர்ச்சி.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பாக குஜராத்தி கிரானைட் கொள்ளைக்கார வியாபாரிக்குக் கொடுக்கும் வர்மக்கலை அதிர்ச்சி பேரதிர்ச்சி. அதற்கடுத்து பஞ்சாபி லஞ்ச அதிகாரிக்குக் கொடுக்கு வர்மக்கலை அதிர்ச்சியானது அதிர்ச்சியோ அதிர்ச்சி ரகம்.

இதைப் பார்த்துக் கொண்டே வரும் போது நீங்கள் அம்பானினையும் அதானியையும் அவதானிக்க முடியும். அவதானித்துதானே ஆக வேண்டும். அதுதான் திரைக்கதையின் பலவீனம். தெரிந்த விசயங்களைத் தெரியாத விசயம் போலக் காட்ட ஷங்கர் பிரயத்தனப்பட்டார் இந்தத் திரைப்படத்தில்.

வர்மக்கலை அதிர்ச்சிகளை வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அவற்றையெல்லாம் நகைச்சுவை சம்பவங்களாக மாற்றிக் கொண்டு போனார் ஷங்கர். கூடுதலாக அனாடமி கொசுறு வேறு. எந்தக் கலைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. ஷங்கர் இந்தியன் – 2 இல் பயன்படுத்தியது எல்லாம் எல்லை தாண்டிய தீவிரவாதமாக அமைந்தது.

 திரைப்போக்கு மாறிக் கொண்டிருந்தது. எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைக்காட்சிகளைச் சஸ்பென்ஸாக விரிய விடும் காட்சி முறைக்கு மாறாக மிகவும் வெளிப்படையாக யூகிக்கக் கூடிய காட்சிகளைக் கொண்டு பிரமாண்டத்தை நம்பி பிரமாண்டமான ஒரு வீழ்ச்சியைச் சந்தித்தார் ஷங்கர்.

திரைப்படத்தில் கமலுக்குப் பெரிதாக வேலை இருந்ததாகத் தெரியவில்லை. இந்தத் திரைப்படத்தில் அவர் ஒரு வர்மக்கலை பேராசிரியர் அவ்வளவே. அதற்காக ஷங்கர் உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரஷன்டேஷனே இந்த இந்தியன் – 2 திரைப்படம் என்ற அளவில் அந்தத் திரைப்படம் அமைந்தது. அல்லது வர்மக்கலைக்கான ஒரு விநோதமான டாக்குமென்ட்ரியாகவும் இத்திரைப்படம் அமைந்தது. அத்துடன் வர்மக்கலைக்கான அனாடமி பாடமும் உண்டு இத்திரைப்படத்தில் என்ற கருத்தும் உலாவியது. அதிலும் பூரிக்கட்டையைப் பயன்படுத்தி சிபிஐ அதிகாரிக்கு அவர் உருவாக்கும் மரண பயமெல்லாம் திரையரங்கை விட்டே வெளியே ஓட வைத்தது.

கமல் வருகிறார். கொலை செய்கிறார். கமல் எதற்காக வருகிறார்? கொலை செய்ய வருகிறார். மறுபடியும் கமல் எதற்காக வருகிறார்? மீண்டும் அதே கதைதான். கமல் வருகிறார். சில நேரங்களில் கத்தியை உருவுகிறார். கொலை செய்கிறார். சிபிஐ துரத்துகிறது. ரவுடிகள் துரத்துகின்றனர். முடிவில் மக்களும் துரத்துகின்றனர். தப்பிக்கிறார். தப்பிக்கிறார். தப்பித்துக் கொண்டே போகிறார். இந்த அளவில் சுருக்கி விட முடிந்தது ஷங்கரின் இந்தியன் – 2 கதையை.

ஒரு சில இடங்களில் கமல் பேசும் குரல் டப்பிங் படத்தில் பேசுவது போலவும் இருந்தது. கமல் ஏன் அப்படிச் செய்தார்? கமலே அப்படிச் செய்யும் போது நாம் ஏன் அதைத் தாண்டிச் செய்யக் கூடாது என இமையமைப்பாளர் அனிருத் இந்தியன் – 2 வை வைத்து நன்றாகவே சம்பவம் செய்திருந்தார்.

அதிகாரிகளின் ஊழல், தொழிலதிபர்களின் சுரண்டல், வேலைவாய்ப்பு முறைகேடுகள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு 2ஜி ஊழலை விட்டு விட்டார் ஷங்கர் என்ற குறையும் இத்திரைப்படத்தில் எதிரொலித்தது. அதைத் தொட்டிருந்தால் இந்தப் படத்தை விநியோகிக்க முடியாமல் போயிருந்திருக்கும் என்றும் பேசப்பட்டது.

ஷங்கருக்கு இந்தியன் – 2 வை ஒரு பான் இந்தியா படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாநிலம் விட்டு மாநிலம் தாத்தாவை அனுப்பி கொலைக்களத்தை உருவாக்கச் செய்தார். அடுத்த பாகத்தில் நாடு விட்டு நாடு என்று என்று ஹாலிவும் படமாகக் கொண்டு சென்று விடுவார் என்ற எதிர்பார்ப்பும் இதனால் எழுந்தது.

தாத்தாவின் இடமானது இந்தப் படத்தில் பாடம் - வர்மம், வர்மத்துக்கான அனாடமி என்று அளவோடு அதிகப்படியான அறிவுரை சொல்வதாகவும் நீண்டது. அவரை அதிகம் பேச விட்டு விட்டு அவரைப் பிடிக்க நெடுமுடி வேணுவின் வாரிசாக பாபி சிம்ஹா அலைந்து கொண்டிருந்தார். இந்தியன் 1 இல் தாத்தாவின் வர்மக்கலை பராக்கிராமங்களைப் பிறப் பாத்திருங்கள் பேசின. இந்தியன் – 2 இல் தாத்தவே அதைப் பேசினார். அது ஒரு மிகப் பெரிய பலவீனம்.

தாத்தாவின் வருகைக்காக ஷங்கர் உருவாக்கிய காட்சியமைப்புகள் அனைத்தும் ஒவ்வொரு திரைப்படத்திற்கான கருவிற்கானவை. ஏறக்குறைய இப்படியான காட்சியமைப்புகளை அவரது சீடர் அட்லீ ஜவான் திரைப்படத்திலும் பயன்படுத்தினார். எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஒரே திரைப்படத்தில் திணித்ததில் எடுபட வேண்டிய விளைவு எடுபடாமல் போனது.

இந்தப் படத்தில் கமல்தான் மையப்படுத்தப்பட்டாரா? அவரும் மையப்படுத்தப்பட வில்லை. ஏகப்பட்ட மையங்களைக் கொண்டு குழப்பமாக இருந்தது.

கமலின் பேச்சைக் கேட்டு ஊழல் செய்யும் பெற்றோர்களை மாட்டி விடும் பிள்ளைகள் அது குறித்து அதற்கு முன்பாக அவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தியிருக்கலாம் அல்லவா. சித்தார்த் அப்படி ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார். நல்லவரான அப்பாவைச் சந்தேகப்பட்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறார்.

பின்பு அவர் கெட்டவர் எனத் தெரிந்த பின்பு அதற்கான ஓர் உரையாடல் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே. அது இல்லை. ஓர் உரையாடலுக்குப் பின்பு அது நிகழ்ந்திருந்தால் திரைக்கதையின் அழுத்தம் கூடியிருக்கும். அப்படிச் செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல, இப்போது ஷங்கர் பக்கத்தில் சுஜாதா இல்லாமல் போனது ஒரு பெருங்குறையாகிப் போய் விட்டது.

படத்தின் திருப்பத்திற்காகப் பிள்ளைகள் பெற்றோர்களை மாட்டி விடுகிறார்கள் என்ற பலவீனம் திரைக்கதையில் தொனித்தது. இவையெல்லாம் சேர்ந்து ஓர் உணர்ச்சிகரமான கோவையாக இருக்கிறதே தவிர, கதைக்கோவை இல்லாமல் போனது.

எல்லாவற்றையும் இணைத்து ஷங்கர் ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தர முனைந்து அது ஒரு சூப்பர் ஜீரோ படமாக முடிந்தது. இந்தியன் – 2 ஜீரோ டோலரன்ஸ் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்கும் ஆகிப் போனது. அடுத்து இந்தியன் – 3 எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பார்ப்போம் இந்தியனின் தலையெழுத்தையும் ஷங்கரின் கதையெழுத்தையும் என்று தமிழ் மக்கள் காத்திருந்தனர். இது பான் இந்தியா படம் என்பதால் இந்தியர்களும் காத்திருந்தனர்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...