15 Aug 2024

அரசுப் பள்ளி – பிம்பப் பெருமிதங்கள்!

அரசுப் பள்ளி – பிம்பப் பெருமிதங்கள்!

‘இவர் அரசுப் பள்ளியில் படித்தவர்’, ‘அவர் அரசுப் பள்ளியில் படித்தவர்’ என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறோம். அந்தக் காலத்தில் அரசுப் பள்ளிகள்தான் அதிகம் இருந்தன. இனிமேல் தனியார் பள்ளிகளில் இருந்தும் அப்படிப் பெருமிதங்களோடு வருவார்கள்.

திறமைக்குப் பள்ளிகள் ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான். பள்ளிகள் மட்டுமே திறமையாளர்களை உருவாக்கி விட முடியாது. உருவாகி வரும் திறமையானவர்கள் எல்லாம் பள்ளிகளில் இருந்து மட்டுமே உருவாகி வருகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. பள்ளிகளில் சென்று படிக்காத மேதைகளும் இருக்கிறார்கள்.

அதற்காகப் பள்ளிக்கல்வியை நாம் புறக்கணிக்க முடியாது. அது எந்தப் பள்ளியில்? அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியா? என்பதுதான் கேள்வி.

பணம் இருப்பவர்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். இல்லாதவர்கள் அரசுப் பள்ளிகளை நாடுகிறார்கள். தற்போதைய எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

பணம் இருப்பவர்களுக்கு எப்போதும் ஒரு திருப்தி தேவையாக இருக்கிறது. அந்தத் திருப்தியைத் தனியார் பள்ளிகள் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு வகையில் கல்வி என்பது வியாபாரமாகி விட்டது. அதில்தான் வாடிக்கையாளர்களின் திருப்தி முதன்மையாகப் பார்க்கப்படுகிறது. தவிரவும் வாடிக்கையாளர்களின் திருப்தியை முதன்மைப்படுத்துவதை விட அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. திருப்திபடுத்தினால்தான் வாடிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றி வலம் வருவார்கள்.

கல்வி நிறுவனங்கள் எல்லாம் பக்கா வியாபார நிறுவனங்களாகி விட்டதால் வாடிக்கையாளர் திருப்தியை முதன்மையாகப் பார்க்கின்றன. தனியார் பள்ளிகளுக்குப் பெற்றோர்களே வாடிக்கையாளர்கள். இலவசமாக எதைக் கொடுத்தாலும், அதாவது எதை என்றாலும் வாங்கிக் கொள்ளும் சமுதாயம், கல்வியைத் தனியாரிடம் காசு கொடுத்து வாங்குவது முரணானதுதான். ஒருவேளை தனியார் பள்ளிகளில் அவர்களுக்குக் கிடைக்கும் திருப்தி அரசுப் பள்ளிகளிலும் கிடைத்தால் அவர்கள் அரசுப் பள்ளிகளையும் நாடி வருவார்கள்.

எதை இலவசமாகக் கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கத் தயாராக இல்லை. அதிலும் ஒரு தரத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு ‘கல்வி’ ஓர் உதாரணம். அதுவே நிவாரணத் தொகை வழங்கும் போது ஏழை, பணக்காரர்கள் என்ற பேதம் பார்க்காமல் அதை வாங்க முன்வரிசையில் காத்திருக்கிறார்கள். நிவாரணமாகக் கொடுக்கப்படும் பணத்தின் தரம் வேறுபடுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம். அப்படி ஒரு தரத்தை அரசாங்கம் அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும்.

‘கல்வி’ என்பது அரசுப் பள்ளிகளில் படித்தாலும், தனியார் பள்ளிகளில் படித்தாலும் ஒரே தரத்துடன்தான் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனும் போதே அது தரம் மற்றும் தரக் குறைவுக்கான தனியொரு பாதையை உருவாக்குவதாக உள்ளது. 7.5 சதவீதம் போக மீதமுள்ள 92.5 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது என்பதை உறுதிபடுத்துவதாக இந்த இட ஒதுக்கீடானது அமைந்துள்ளது.

முந்தைய காலங்களில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்களின் பிம்பப் பெருமிதங்களைக் கொண்டு மட்டும் அரசுப் பள்ளிகளை நாடி வாருங்கள் என்று சொல்லி மாணவர்களின் எண்ணிக்கையை இனியும் அதிகரித்து விட முடியாது. இலவசமாகக் கொடுத்தும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நாடாமல் தனியார் பள்ளிகளை நாடுவதன் பின்னுள்ள நுட்பமான உளவியல் மற்றும் சமூகவியல் பின்னணிகளை அறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால்தான் அரசுப் பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது ‘அனைவருக்கும் கல்வி’ என்பதைச் சாத்தியப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களை முன்னிலைக்குக் கொண்டு வரும் சமூக நீதிக்கான நெடும்பயணம் என்பதை அரசாங்க அமைப்புகள் கருத்தில் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்குச் செலவிடுவதை அரசாங்கம் வெறும் செலவினமாக மட்டும் பார்க்கக் கூடாது. அறிவு வளம் எனும் மகத்தான சொத்துக்கு அரசாங்கம் செய்யும் மூலதனம் அதுவாகும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்குக் கல்வியில் சமத்துவத்தையும் அதற்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை உறுதி செய்வதும் அவசியமாகும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...