22 Aug 2024

சங்கரராமன் பண வழக்கு! (சிறுகதை)

சங்கரராமன் பண வழக்கு!

(சிறுகதை)

-         விகடபாரதி

நாடி நரம்புகள் துடிக்க நின்றிருந்தான் சங்கர். நேர்மையா அலைஞ்சு வசூலிச்ச பணம் சார்! இன்னும் சாப்பிடக் கூட இல்லே. கொடுத்திருங்க சார். ஆபிசில கட்டிட்டு வீட்டுக்குப் போவணும். வீட்டுல எலலாரும் காத்திருப்பாங்க சார் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். நாற்பதைக் கடந்தும் கல்யாணம் ஆகவில்லை என்றாலும் அம்மாவும் அப்பாவும் பெற்றப் பிள்ளைக்காகக் காத்திருப்பார்கள்தானே.

அப்பா அம்மா வைத்த பெயர் சங்கரராமன். ஒருத்தனுக்கு எதற்கு இரண்டு பெயர் என்று கூப்பிடுபவர்கள் நினைத்ததால் என்னவோ சங்கர் என்ற பெயரே நிலைத்து விட்டது. கையெழுத்துப் போடும் போது மட்டும் சங்கரராமன் என்ற பெயர் நினைவுக்கு வருகிறது அவனுக்கு. நெடுநெடுவென வளர்ந்த தேகம். ஓடித்துப் போட்டால் ஒடிந்து விடும் அளவுக்கு லொடுக்குப் பாய் தோற்றம். அவ்வளவுதான் சங்கரராமனைப் பற்றிச் சொல்ல முடியும். உடம்புக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத உருவம். பார்த்தால் இவன் யாருடா கிறுக்குப் பயல் என்றுதான் சொல்வீர்கள். என்றாலும் சங்கரராமனின் மூளை யோசிக்கும் விதம் அபாரமானது.

ஒரு காலத்தில் செழிப்பாக இருந்து தற்போது கருவை மரங்கள் மட்டும் செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி டெல்டா பகுதியில் செய்வதற்கென்று இருக்கின்ற வேலை என்று பார்த்தால் நூறு நாள் வேலையும், அரையும் குறையுமாக மானியத்தில் கக்கூஸ் கட்டும் வேலையும்தான். சங்கர் இருக்கிற தேகத்துக்கு அரை மணி நேரம் பார்க்கும் நூறு நாள் வேலைக்கே மயக்கம் அடித்து விழுந்தான். கக்கூஸ் கட்டும் சித்தாள் வேலைக்கு அவனைப் பார்த்தாலே துரத்தி அடித்தார்கள். தட்டுத் தடுமாறி படித்து எப்படியோ டிகிரி பட்டம் வாங்கி வைத்திருந்த பி.ஏ. எக்கனாமிக்ஸ் புத்தகங்களைப் பொழுது போகாமல் படித்துக் கொண்டிருந்தான்.

எத்தனை நாளு இப்படி வெட்டியா சுத்துவே? வீட்டுல உன்னையெல்லாம் மதிச்சு சோத்தைப் போடுறாங்க பாரு அவங்களச் சொல்லணும், என்று அக்கறையாகப் பேசுவது போலக் காட்டி அவனை அரசியலுக்குக் கொண்டு போனவர் ஓ.கே. ஜம்புலிங்கம். அந்த ஊருக்கு அவர்தான் தொழிலதிபர், அரசியல்வாதி, தர்மகர்த்தா, தாதா, ரௌடி, பேங்கர் என்று சலக பொறுப்புகளையும் சுமந்து கொண்டிருந்தார். வெட்டியாய்த் திரியும் ஆட்களைப் பத்திக் கொண்டு போய் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு பண்ணுவது அவருக்குக் கை வந்த கலை. சங்கருக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்தவர், அதாவது அரசியலைக் கற்றுக் கொடுத்தவர். சங்கரராமன் உருவத்திற்கு அப்படியே நேர் எதிர் ஜம்புலிங்கம். ஆள் குட்டைப் பிசுக்கு போல் இருப்பார். ஓ.கே. ஜம்புலிங்கம் என்று சொல்வதை விட சொட்டை ஜம்புலிங்கம் என்று சொன்னால் ஆள் யாரென்று சட்டென்று சின்னக் குழந்தையும் சொல்லி விடும். நான்கு பக்கமும் வரப்பு கட்டி வயலுக்குள் நட்டதெல்லாம் சுருண்டு போய் தரிசாகக் கிடப்பது போன்ற தலை. தலை சொட்டையை மறைப்பதற்காக முகத்தில் எடுப்பாகத் தெரியும் அளவுக்குக் கத்தரித்து விட்ட தாடியை வளர்த்திருந்தார். கட்சிக்கரை போட்ட வெள்ளை வேட்டியும், கஞ்சி போட்ட வெள்ளை சட்டையும் அத்தோடு கட்சி கரை போட்ட தோளில் கிடக்கும் துண்டும் அவரைச் சட்டென அடையாளம் காட்டும். எவ்வளவு தகிடுதித்தங்கள் செய்தாலும் நெற்றியில் பளிச்சென்று தெரியும் விபூதிப் பட்டையும் சந்தனமும் குங்குமமும் கலந்த பொட்டும் அவரை உத்தமரென்று காட்டப் போதுமானது. இருப்பினும் அவர் ஓ.கே.ஜே. என்ற முன்னெழுத்து அடையாளத்தையும் தனக்காக உண்டு பண்ணி வைத்திருந்தார்.

ஆட்களை வைத்துப் பிரியாணி செய்வது, பொட்டலம் கட்டுவது, பொட்டலங்களில் பத்தையோ இருபதையோ வீட்டுக்கும் தெருவுக்கும் கட்டிக் கொள்வது, தேர்தல் நேரங்களில் பூத் ஏஜன்ட் வேலை பார்ப்பது, பண பட்டுவாடா செய்வது, வட்டிக்கு விட்டு பணத்தை வசூலிப்பது, பொதுக்கூட்டம் என்றால் வட்டிக்கு பணத்தை வாங்கியவர்களைக் கூட்டமாகத் திரட்டிக் கொண்டு போய் தலைக்கு ஐநூறு வசூலித்து விடுவது இப்படி எத்தனையோ சூட்சமங்களை ஜம்புலிங்கம் வழியாகக் கற்றுத் தேர்ந்தான் சங்கர் என்ற சங்கரராமன். இப்படி அரசியலில் நுழைந்து பெரிய ஆளாகி விடுவான் என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். கிரகம் விட வேண்டுமே. யாருடைய தலையில் என்ன எழுதியிருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? எப்படியும் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று ஒரு சுற்று வருவான் என்று எதிர்பார்க்கப்பட்டவன் வாழ்க்கையில் ஓர் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், வளர்த்து விட்ட ஜம்புலிங்கம் மேலே பாய வேண்டிய சூழ்நிலை. ஏற்றி விட்டவனை எட்டி உதைக்காமல் அரசியலில் எப்படி வளர்வது? வளர்த்த கடாவாக மாரில் பாய விருப்பமில்லாமல் கசாப்பு கடைக்குப் போகும் ஆடாகத் தன்னை அரசியலிலிருந்து விடுவித்துக் கொண்டான் சங்கர். இப்படி ஒரு திருப்பத்தை ஜம்புலிங்கமே எதிர்பார்க்கவில்லை. அந்தச் செய்தியைக் கேட்ட கனம் அவர் சொட்டையெல்லாம் வேர்த்து கட்சிக்கரை போட்ட துண்டால் தலையைத் துடைத்துக் கொண்டார். தோளில் போட்ட துண்டுக்கு வேலை வந்தது அன்றுதான் அவருக்கு. அவர் வளர்த்து விட்டு அவர் மேல் பாய்ந்து அவரை விட அரசியலில் பெரிய ஆளானவர்கள் அதிகம். நா தழுதழுக்க உளறி குழறி ஜம்புலிங்கம் உருகிக் கரைந்து போனார். சங்கருக்கு எந்த உதவி கேட்டாலும் செய்வதாகச் சொன்னார்.

வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வேலை இருந்தால் போதும் என்று அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிதி நிறுவனத்தில் அவனைச் சேர்த்து விட்டார் சொட்டை ஜம்புலிங்கம். முன்பு அரசியலில் அரித்துப் பிரித்துச் சம்பாத்தித்ததைப் போல அவ்வளவு சம்பாத்தியம் இல்லையென்றாலும் சங்கரின் வாழ்க்கை நிம்மதியாகவும் நிதானமாகவும் போக ஆரம்பித்தது. அவனை நிதி நிறுவன வேலைக்குச் சேர்த்து விட்ட பிறகும் பக்கவாட்டு வணிகமாக பிரியாணி ஆர்டர், பண பட்டுவாடா செய்து தருவது போன்ற வேலைகளைக் கொடுத்துப் பார்த்தார் ஜம்புலிங்கம். ஆனால் சங்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. போதுமடா நீங்களும் உங்கள் சகவாசமும் என்று ஒதுங்கி விட்டான். சங்கர் ஒதுங்கிப் போனதில் ஜம்புலிங்கத்துக்குச் சங்கர் மேல் இருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. அந்த முதிர் கண்ணனுக்கான ஜம்புலிங்கம் பெண் பார்க்கும் புரோக்கர் வேலையையும் பார்த்தார். அதற்கும் முடியாது என்று சொல்லி விட்டான் சங்கர். அப்பா அம்மா சொல்லிக் கேட்காதவன் ஜம்புலிங்கம் சொல்லி கேட்பான் என்று தப்பு கணக்குப் போட்டு விட்டார் அவர்.

காலையில் பதினோரு மணி வாக்கில் பஜாஜ் பிளாட்டினாவை உதைத்து வண்டியைக் கிளப்பினான் என்றால் அவன் வீடு வந்து சேர இரவு ஒன்பது பத்து ஆகி விடும். அலுவலகத்தில் அவன் அடி எடுத்து வைக்கும் போது மணி மதியத்தை நெருங்கும் பனிரெண்டு ஆகியிருக்கும். கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ அலுவலகத்தில் இருப்பான். பணத்தை வசூலிக்க வேண்டியவர்கள் பட்டியல் கைக்கு வந்ததும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுவான். அவனை மட்டும் அலுவலகத்தில் யாரும் எதுவும் கேட்பதில்லை. வேலையில் அவனுக்கு இருக்கும் நெளிவு சுளிவு அப்படி. மற்றவர்கள் யாராக இருந்தாலும் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் வருகைப் பதிவைப் போட்டாக வேண்டும்.

சங்கரைப் பொருத்த வரை ஒன்பது மணிக்கு அலுவலகம் போவதெல்லாம் அவனே நினைத்தாலும் நடக்காத காரியம். அவன் காலையில் எழுந்திருக்கவே எப்படியும் எட்டு ஒன்பது ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டுக் கிளம்பினான் என்றால் பண வசூலைத்  தவிர வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது. கடிவாளம் கட்டிய குதிரைதான் அவன். அவன் மதிய சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆகி விட்டன. பணத்தை வசூலித்து விட்டுச் சாப்பிடும் பிரியாணிதான் அடுத்த வேளை சாப்பாடு. சில நாட்களில் பணத்தை வசூலித்து முடிக்க இரவு எட்டு மணி வரை கூட ஆகி விடும். அதன் பிறகுதான் பிரியாணி. அதுவும் லெக் பீஸோடு சிக்கன் பிரியாணி மட்டுமே சாப்பிடுவான். தான் சாப்பிடப் போகும் கடையில் லெக் பீஸோடு பிரியாணி இல்லையென்றால் அதற்காக இருபது முப்பது கடைகள் கூட அலையோ என்று அலைவான். லெக் பீஸ் பிரியாணி சாப்பிட்டு ஆன பின்புதான் வசூலித்த பணம் அலுவலகம் போய் சேரும். இப்படி வீட்டை விட்டுக் கிளம்பும் போது சாப்பிடும் சாப்பாடு, பணத்தை வசூலித்து முடித்து விட்டுச் சாப்பிடும் பிரியாணி என இரண்டு வேளை சாப்பாடுதான் அவனுடைய ஒரு நாள் சாப்பாடு. அதனால் எவ்வளவு சம்பாதித்தும் அவனுடைய லொடுக்கு பாய் தோற்றம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு கட்டாமல் இருக்கும் விடா கொண்டன்களையும் விடாமல் வசூலித்து விடுவான். அந்த ஒரு காரணத்திற்காகவே அவன் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும் அலுவலகத்தில் யாரும் எதையும் சொல்லாமல் இருந்தார்கள்.

பணத்தை வசூலித்துக் கொண்டு அலுவலகம் சென்றால், பணத்தை ஒப்படைத்து விட்டு சங்கர் வீட்டுக்குப் பறந்தோடவும் மாட்டான். இரவு பத்து பதினொன்று ஆனாலும் பேசிக் கொண்டே ஏதாவது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் அந்தச் சிட்பண்ட் அலுவலகம் நேரம் காலம் இல்லாமல் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவனும் விடியற்காலை நான்கு ஐந்து மணிக்கு வீடு திரும்பியிருக்கிறான். இப்படிப்பட்டவனை எப்படி வேலை நேரம் என்ற வலைக்குள் சிக்க வைக்க முடியும். அவன் வருவதும் வேலை பார்ப்பதும்தான் வேலை நேரம் என்று ஆக்கிக் கொண்டு விட்டான். அந்த அலுவலகத்தில் நிறுவன மேலாளரை விட அதிக செல்வாக்கு சங்கருக்குத்தான் இருந்தது.

நீண்ட நாட்கள் வசூலாகாத கடன்களை, சீட்டுகளை எல்லாம் சங்கர்தான் வசூலிக்க முடியும். அப்படி வசூலிப்பதில் மாதச் சம்பளத்தைத் தாண்டி தனி கமிஷனும் உண்டு. அவன் ஒரு ரௌடியில்லை என்றாலும் ரௌடிகளால் வசூலிக்க முடியாத பணத்தையும் வசூலிக்கும் சூட்சமம் அவனுக்குள் அத்துபடியாகியிருந்தது. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது என்பதையெல்லாம் சங்கரிடம் கேட்டே அந்த சிட்பண்ட் அலுவலகத்தில் முடிவானது. அவனையே மேலாளராகப் போட்டு விடலாம் என்று நிதி நிறுவன மேலிடம் எவ்வளவே முயன்று பார்த்தது. ஜம்புலிங்கம் கூட அதற்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார். அவரும் அந்த நிதி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்ததாலும் சங்கருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று துடித்ததாலும் அவர் அப்படி நினைத்தார். சங்கர் தனக்கு இப்படி இருப்பதுதான் பிடித்திருக்கிறது என்ற சொன்னதால் அதற்கு மேல் அவனை வற்புறுத்த முடியவில்லை. வேண்டாம் என்பவனுக்கு எதைக் கொடுத்து திருப்திபடுத்துவது?

சங்கர் ஏன் இப்படி இருக்கிறான் என்பதற்குப் பின்னணி அவனை ஒரு துறவி போல எல்லாருக்கும் காட்டியது. ஆனால் நிஜத்தில் பணத்தைக் கொடுத்து வசூலிப்பதில் அவனுக்கு ஒரு திரில் உண்டாகி விட்டது என்பது அவன் மட்டும் அறிந்த ரகசியம். அரசியலில் வேறு இருந்தததால் எந்த ஊருக்குப் போனாலும் அவன் தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தான். அவன் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கித் தர முடியும், அதை போல பணத்தை வாங்கிக் கொண்டு எவன் எங்கு ஓடினாலும் அவனைத் துரத்திப் பிடித்துப் பணத்தை வசூலிக்க முடியும் என்ற பிம்பத்தையும் உருவாக்கி வைத்திருந்தான்.

சங்கர் பரிந்துரைத்துப் பணம் கொடுத்து வசூலாகாமல் இருந்த வரலாறு சரித்திரத்தில் இதுவரை இல்லை. எழுதப்பட்ட வரலாற்றை அடித்துத் திருத்தி மாற்றவா முடியும்? அதென்ன சிறுகதை, நாவலுக்குப் பண்ணும் வேலையா? பணத்தைக் கொடுப்பதிலும் வசூலிப்பதிலும் வசூலித்த பணத்தைப் பத்திரமாகச் சேர்ப்பதிலும் சங்கருக்கு இணை சங்கர்தான் என்றான பின்பு வசூல் உலகில் அவன் சக்கரவர்த்தியாகி விட்டான்.

ஜம்புலிங்கத்தோடு அரசியலில் இருந்த காலத்திலும் இந்த அம்சமே அவனைத் தூக்கிக் காட்டியது. எத்தனையோ முறை சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என்று அத்தனை வகையான தேர்தலுக்கும் பணத்தை படு ஜோராக, கன கச்சிதமாகப் பட்டுவாடா செய்திருக்கிறான். எதிலும் சிக்கியதில்லை. பணமாகப் பட்டுவாடா செய்ய முடியாத போது வங்கிக் கணக்கை வாங்கி அதில் பணத்தைப் போட்டு ரசீதுகளை அவ்வளவு கச்சிதமாக ஒப்படைப்பான். பணம் அனுப்புவதற்கு ஜி பே, போன் பே, வாலட்டுகள் என வராத காலத்திலேயே அவன் எவ்வளவோ சோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறான். பணத்தை எப்படி எடுத்துச் செல்வது என்ற சூட்சமங்கள் அவனுக்கு அத்துப்படியாகி இருந்தன. பெட்ரோல் டேங்க், எவர்சில்வர் வாட்டல் பாட்டில் என்று எது எதிலோ எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். எதிலும் சிக்கியதில்லை.

சங்கர் வருகிறான் என்றால் பணத்தோடுதான் வருகிறான் என்பது எல்லாருக்கும் தெரியும். அவன் பணத்தை எங்கே வைத்திருக்கிறான், எப்படி பட்டுவாடா செய்யப் போகிறான் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. அதெல்லாம் தங்கமலை ரகசியம் போன்றது.

அப்படி பணத்தைச் சாமர்த்தியமாக எடுத்துச் செல்பவன்தான் இப்போது இந்த நாடாளுமன்றத் தேர்தல் பறக்கும் படையிடம் அன்றைய தினம் வசூலித்த ஒரு லட்சத்து எண்பதினாயிரத்து முந்நூறு ஐம்பது ரூபாயைக் கொடுத்து விட்டு நிற்கிறான்.

சங்கர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். தான் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையைக் காட்டினான். கடன் வாங்கியவர்களிடம் வசூலித்த பணம்தான் என்பதை வசூலித்தவர்களிடம் எல்லாம் போன் செய்து நிரூபித்துக் காட்டினான். பறக்கும் படை பணத்தைக் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்து விட்டது. இப்படி ஓர் அவமானகரமான சம்பவத்தைச் சங்கர் எதிர்பார்க்கவில்லை. ஜம்புலிங்கத்துக்குக் கூட போன் செய்தான். அவர் அது கிடக்கு விடப்பா, தேர்தல் முடிந்ததும் கொடுத்துடப் போறாங்க என்றார் அலட்சியமாக. அவர் வீட்டைச் சோதனையிட்டதில் அவரே இருபது கோடி ரூபாய் பணத்தை இழந்து நிற்கிறார். அதற்கு முன்பு அவருக்கு ஒரு லட்சத்து எண்பதினாயிரம் சொச்சம் பெரிய விசயமாகத் தெரியவில்லை. திரில் போன பிறகு அதற்குப் பின் என்ன வாழ்வது என்று தோன்றியது சங்கருக்கு. 

சங்கருக்கு இது அவனுடைய கௌரவத்துக்கு நேர்ந்த இழுக்காக வேற தெரிந்தது. ஒரு முழம் கயிற்சில் தொங்கி விடலாமா என்று கூட யோசித்தான். பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை எப்படி மீட்பது என்பதே யோசனையாக இருந்தது. எப்படியும் திரும்பவும் வாங்கி விடக் கூடிய பணம்தான் என்றாலும் உடனடியாக வாங்க வேண்டும் என்று மனம் குதியாட்டம் போட்டது. தன்னுடைய கௌரவத்துக்கு நேர்ந்த இழுக்கைச் சாதாரணமாக ஜம்புலிங்கம் பேசியது அவனுக்கு தாங்க முடியாத கோபத்தைத் தந்தது. ஜம்புலிங்கத்தை போட்டுத் தள்ளினாலும் அந்த ஆத்திரம் அடங்காது போலத் தோன்றியது.

அன்றிரவு சங்கருக்கு அலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. மறுநாள் சங்கர் ஜம்புலிங்கம் சார்ந்திருந்த கட்சிக்குப் பணத்தை பட்டுவாடா செய்வதற்காகத்தான் பணத்தை எடுத்துச் சென்றதாகச் சொல்லி போலீசில் சரணடைந்தான். அடுத்த சில மணி நேரங்களில் சங்கரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. திடீரென வங்கிக் கணக்கில் வந்து விழுந்த மூன்று கோடியை எந்தத் துறையும் கண்காணிக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை. ஒரு லட்சத்து எண்பதினாயிரத்து முந்நூறு ஐம்பது ரூபாய்க்கான சங்கரராமன் பண வழக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...