9 Aug 2024

தமிழர்களின் புவியியல்!

தமிழர்களின் புவியியல்!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழர்கள் பகுத்துச் சொல்லியிருப்பது பொருள் இலக்கணம் என்ற அளவோடும், தமிழ்ப் பாடத்தில் படிப்பது என்ற அளவோடும் முடிந்து விட்டது.

வெறும் பொருள் இலக்கணம் மட்டுமா அது?

படித்து மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்கான கருத்து மட்டுமா அது?

தமிழர்களின் நிலவியல் அறிவல்லவா அது!

நிலத்தை இப்படிப் பகுத்த புவியியல் வல்லுநர்கள் தமிழர்கள் என்பதற்கான சான்று அந்தப் பகுப்பு.

இந்தப் பகுப்பில் எவ்வளவு அறிவு அடங்கியிருக்கிறது என்பதை அறிவால் தோண்ட தோண்ட புலனாகும். தமிழர்களின் நிலவியல் அறிவு, விலங்கியல் அறிவு, சூழலியல் அறிவு, மானுடவியல் அறிவு, குடிமையியல் அறிவு, பொருளியல் அறிவு, பண்பாட்டியல் அறிவு என்று எத்தனையோ அறிவு அதனுள் பொதிந்து இருப்பதை உணர முடியும்.

நம் தமிழ் நிலம் எவ்வளவு இருந்தது?

இப்போது இருப்பது நமக்குத் தெரியும். அதற்கான நிலவரைபடத்தை நாம் கூகுளில் தட்டினால் பகுதி வாரியாகப் பிரித்து மேய்ந்து விட முடியும். ஆனால் அப்போது? அப்போது என்றால்… பண்டைய காலத்தில்… கிறித்துப் பிறப்பதற்கு முன்பு… சங்க காலத்தில்…

அதற்கான பாடல்களே அதற்கான சான்றாக இருப்பது நாம் பெற்ற தவப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும்.

“நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”            

                                                            (புறநானூறு, 9)

“குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி”                       

                                                            (புறநானூறு, 67)

எனும் சங்கப்பாடல்கள் பஃறுளி, குமரி எனும் இரு வகை ஆறுகளைப் பற்றிக் கூறுகின்றன. நாமறிந்தது வைகையும், தாமிரபரணியும், காவிரியும், பாலாறும்தானே. இந்த ஆறுகளை அறிய முடியாததற்குக் காரணம்,

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”          

                                                            (சிலப்பதிகாரம், காடு காண் காதை, 19 – 20)

எனும்படியான கடற்கோளால் குமரிக்கண்டம் எனப்பட்ட நிலப்பகுதி அழிந்ததுதான். பெரும் தமிழ்ப்பரப்பு ஒன்று அன்று இருந்திருக்கிறது, அது கடற்கோளால் அழிந்திருக்கிறது என்ற தகவல்களை மேற்படி இலக்கிய வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

பிற்பாடு தமிழ் நிலப்பரப்பு என்பது வேங்கடமும் குமரியுமாக ஆனதை

“வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகத்து”                                   

                                                            (தொல்காப்பியம், பாயிரம்)

என்றும்,

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்”               

                                                            (நன்னூல், சிறப்புப் பாயிரம்)

என்றும் இலக்கண நூல்கள் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.

சிலப்பதிகாரக் காலத்திலிருந்து தொல்காப்பியம் குறிப்பிடும் புவியியல் எல்லையே தமிழக நிலவியலாக இருந்ததை,

“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

                                                            (சிலப்பதிகாரம், வேனிற்காதை, 1 – 2)

எனும் வரிகள் புலப்படுத்துகின்றன. ஆக தொல்காப்பியம், சிலப்பதிகாரக் காலத்திலிருந்து நாம் தற்போது காணும் தமிழக நிலவியல் எல்லை தொடர்ந்து நிலைபெற்றிருக்கிறது. என்றாலும் தமிழக நிலவியல் எல்லையில் நாம் வேங்கடத்தை ஆந்திரத்திடம் கொடுத்து விட்டோம். மேற்கு நிலப்பகுதி கேரளமாக தனி மாநிலமாகப் பிரிந்து விட்டது.

நல்ல வேளையாக எப்படியோ கன்னியாகுமரியை மீட்டோம். இல்லையென்றால் வடவேங்கடத்தை இழந்தது போல, தென்குமரியையும் இழந்திருக்க வேண்டியிருக்கும்.

போராட்டப் பயனாகத் திருத்தணியும் மீட்கப்பட்டது. இல்லாது போனால் தமிழகத்தில் முருகனுக்கு அறுபடை வீடு, ஐம்படை வீடாக ஆகியிருக்கும்.

கடற்கோளால் தமிழகம் இழந்த நிலப்பரப்பு பெருத்த வேதனையென்றால், மொழிவாரி மாநிலப் பிரிப்பால் தமிழகம் இழந்த நிலப்பரப்பு தவிர்க்க முடியாத சோதனை.

தற்போது எஞ்சி நிற்கும் தமிழகத்தின் மிஞ்சி இருக்கும் நிலவியல் புகழைத் தமிழ் உணர்வோடும் தமிழர்கள் எனும் பெருமித நிலையோடும் காத்து நிற்க வேண்டிய கடமையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வும் நமக்கு இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...