அளவுகோலே தவறாக இருந்தால் அளவீடு எப்படி இருக்கும்?
பள்ளிக் கல்வியில் ஏகப்பட்ட
மாற்றங்கள் நிகழ்ந்த காலம் என்று 2000க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிப்பிடலாம்.
இது கிட்டதட்ட கால் நூற்றாண்டு கால கட்டம். அதுவும் குறிப்பாகத் தொடக்கக் கல்வியில்
தடபுடலான மாற்றங்கள். ஒரு மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் அடுத்த மாற்றம் தலையெடுத்த
மகத்தான காலமாகவும் இந்தக் கால இடைவெளியைச் சொல்லலாம்.
‘கற்றலில் இனிமை’ என்று தொடங்கிய
இந்த மாற்றம், செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி, எண்ணும் எழுத்தும், கண்ணும்
கருத்தும் என்று பல மாற்றங்களுக்கு உள்ளானது. இந்த மாற்றங்களுக்கு இடையில் பாடப்புத்தகங்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது இந்த முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பது
புரியாமல் கற்பிப்பவர்கள் குழம்பிப் போகிறார்கள்.
முறைகளை மாற்றிக் கொண்டு
போனதில் தரமான கல்வி உருவாவதற்குப் பதிலாக எழுதப் படிக்கத் தெரியாத மற்றும் அடிப்படைக்
கணக்குகள் தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மைதான்
என்றாலும் முறையை மாற்றி விட்டால் எல்லாம் மாறி விடும் என்று நினைத்து அடிக்கடி செய்த
மாற்றங்களால் அடிப்படைகளே தெரியாமல் மாறிப் போகிறார்கள் கற்போர். இந்த மாற்றங்களுக்கு
இடையில் கொரோனா கால கற்றல் இடைவெளியும் சேர்ந்து கொண்டதில் கற்போரின் நிலை மிகவும்
பின்னடைவைச் சந்திப்பதாக உள்ளது.
முறைகளில் எதுவும் பிரச்சனையா?
முறைகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு முறையைப் புரிந்து கொண்டு கற்பிப்போர் தயாராகும்
போது, உடனடியாக அடுத்த முறையைப் புகுத்துவதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. இதனால்
கற்போரை விட கற்பிக்கும் முறையே முக்கியம் என்று மாறிப் போன நிலையும் ஏற்பட்டதுதான்
சோகம்.
பொதுவாக வழமையான முறையை விட்டு
மாறுதலுக்கு உட்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் கற்பிப்போர் அதற்கும் தயாராக
இருந்தார்கள். ஆனால் அது அடிக்கடி, உடனடி என்றால் அவர்கள் தவித்துப் போய் நிற்கிறார்கள்.
அதுவும் ஒவ்வொரு ஆட்சி மாற்றம்
நடைபெறும் போதும் ஒரு புதிய முறை என்றால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இடையில் ஒரு கற்பித்தல்
முறை மாற்றி மாற்றி புகுத்தப்படுகிறது.
ஆட்சியாளர்களின் மனோநிலைக்கு
ஏற்ப புதிய கற்பித்தல் முறையை உருவாக்கித் தர கல்வியாளர்களும் தயாராக இருக்கிறார்கள்
என்பது விநோதமாக இருக்கிறது.
பாடப்புத்தகமே நெகிழ்வான
புதுமையான அனைத்து அம்சங்களைக் கொண்டிருந்த போதும் இவர்கள் பாடப்புத்தகத்திலிருந்து
மாறுபட்ட புதுப்புது கையேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாடப்புத்தகமும் சுமையாக
இருக்கும் அளவுக்கு அதிக அளவு பாடங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கிடையில் இந்தக் கையேடுகள்
இன்னொரு சுமையாகச் சேரும் போது கற்பிப்போர் எந்தச் சுமையைச் சுமப்பது என்று கலங்கிப்
போகிறார்கள். அவர்கள் தங்கள் கலக்கத்தை வெளிக்காட்ட முடியாத அவலத்தோடு தங்கள் பணியைத்
தொடர்கிறார்கள்.
உச்சமாக கல்வி முறையின் வெளிப்பாடுகளை
அதாவது அடைவுகளைத் தரமான குழுவினர் வைத்து ஆய்வு செய்வதற்குப் பதிலாகப் பயிற்சி ஆசிரியர்களைக்
கொண்டு (பி.எட். படிக்கும் மாணவர்களைக் கொண்டு) சோதிக்கிறார்கள். பி.எட். மாணவர்கள்
பள்ளிகளில் பயிற்சி பெற வருவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் ஆய்வு செய்ய வருவதை
இப்போதுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
பயிற்சி ஆசிரியர் ஆய்வாளர்
ஆகக் கூடாதா என்றால், அவர் ஆசிரியராகி அனுபவம் பெற்று ஆய்வாளர் ஆகலாம். பயிற்சிக் காலத்திலேயே
ஆய்வாளர் என்றால் அவர்களுக்குப் பள்ளிகளில் உற்றுநோக்கல் பயிற்சி, கற்பித்தல் பயிற்சிக்
கொடுக்கும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
ஆய்வுக்குரியவர்களைச் சரியாகத்
தேர்ந்தெடுத்து நியமிக்க முடியாத நிலையில் கல்வித்துறை இருப்பது விநோதமான விளைவுகளை
ஏற்படுத்தக் கூடியது. சரியான முறையில் ஆய்விற்கான அலகுகளையும் ஆய்வாளர்களையும் தீர்மானிப்பது
கல்வி முறையில் அளவிடுதலில் முக்கியமானது. அளவுகோலே தவறாக இருந்தால் அளவிட்டது சரியாக
இருக்குமா என்ன?
*****
No comments:
Post a Comment