26 Aug 2024

ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ – ஓர் எளிய அறிமுகம்!

ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ – ஓர் எளிய அறிமுகம்!

ப.சிங்காரத்தின் இரண்டாவது புதினம் ‘புயலிலே ஒரு தோணி’. 1962 இல் இந்நாவலை எழுதினார் ப.சிங்காரம். நாவலை வெளியிடுவதற்கு பத்தாண்டு காலம் ஆனது. பத்தாண்டுகள் கழித்து வெளியான பதிப்பும் அவருக்கு உவப்பான பதிப்பாக அமையவில்லை. அவர் எழுதிய பகுதிகளைச் சுருக்கியும் குறைத்தும் வெளியான பதிப்பு அது.

இலக்கிய ஆளுமைகளில் ப.சிங்காரம் மாறுபட்டவர். தன்னை ஓர் இலக்கிய ஆளுமையாக நிலைநிறுத்திக் கொள்ளவோ காட்டிக் கொள்ளவோ விரும்பாதவர். அவரது முதல் புதினம் ‘கடலுக்கு அப்பால்’. இப்புதினத்தை அவர் 1950 இல் எழுதினார். ஒன்பதாண்டுகள் கழித்துதான் அப்புதினம் வெளியானது. இப்புதினம் கலைமகள் பரிசு பெற்ற புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதினமும் ஒரு முறை மட்டுமே மறுபதிப்பு கண்டது.

‘புயலிலே ஒரு தோணி’ புதினத்தைப் புரிந்து கொள்வதற்கு ப.சிங்காரத்தின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. 1920 இல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர் ப.சிங்காரம். சிங்கம்புணரியிலும் மதுரையிலும் கல்வி பயின்ற ப.சிங்காரம் 1938இல் இந்தோனேசியா சென்று அங்கிருந்த கடையில் பணி புரிந்தார். 1940 இல் தாயகம் திரும்பி மீண்டும் இந்தோனேசியா சென்று மராமத்து துறை அலுவலகத்தில் பணியாற்றினார். தென்கிழக்கு ஆசியப் போர் மூண்ட நேரம் அது. 1946 வரை இந்தோனேசியாவில் இருந்தார். போர் நிகழ்வுகளை உற்றுக் கவனித்த அனுபவம் அவருக்கு இருந்தது. இந்தியா திரும்பிய ப.சிங்காரம் 1947லிருந்து 1987 வரை மதுரை தினத்தந்தியில் பணியாற்றினார். பிறகு ஓய்வு பெற்றார். 1997இல் காலமானார்.

இந்தியா திரும்பிய பின்பு சிங்காரம் மதுரையில் 50 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தார். தீவிர வாசகர்களுக்கு மட்டுமே சிங்காரத்தின் படைப்புகள் பற்றித் தெரிந்திருந்தன. தனது இறப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை எனக் கூறி இறந்து போனவர் ப.சிங்காரம்.

‘புயலிலே ஒரு தோணி’ தென்கிழக்கு ஆசியப் பகுதியில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போர் சம்பவங்களை ஒரு புதினத்திற்குரிய அழகியலோடும் தீவிரத்தோடும் காட்சிப்படுத்துகிறது. அதே நேரத்தில் உலகளவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகள் தென்கிழக்கு ஆசிய அரசியலிலும் வணிகத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

தென்கிழக்கு ஆசியப் போர் நடைபெற்ற நேரத்தில் சிங்காரத்திற்குள் ஒரு சாகச வாலிபன் மனதில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சாகச இளைஞன் பாண்டியனாக உருப்பெறுகிறான். அவன் வாழ்க்கை முழுவதும் புயலிலே போராடும் தோணி போல உள்ளது. புதினத்தில் புயலில் சிக்கும் தோணியின் காட்சிச் சித்திரமும் இடம் பெறுகிறது. அந்த வகையில் மட்டுமல்லாது புதினம் பேசும் பாண்டியனின் வாழ்க்கை நிகழ்வுகளும் புயலிலே சிக்கிய தோணியாக அடுத்தடுத்து தடம் மாறிக் கொண்டே இருக்கிறது.

புதினத்தில் முதல் பாதி தென்கிழக்கு ஆசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மாறி மாறி சொல்லிக் கொண்டுபோகிறது. அதாவது முன்னோக்கிய பயணமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், நினைவுகளின் ஊடே பின்னோக்கிய பயணமாக தமிழகத்தின் ஊடே மாறி மாறிப் பயணிக்கிறது. தமிழகத்தில் அப்போதிருந்த கார் ஸ்டாண்டுகள் பற்றிய காட்சி இப்புதினத்தில் பதிவாகியிருக்கிறது. பேருந்துகளை அப்போது கார் என்று மக்கள் அழைத்ததையும் கார்களை ப்ளஷர் என்று அழைத்ததையும் நடத்துநர்களைக் கிளீனர் என்று அழைத்ததையும் இப்புதினத்தில் சிங்காரம் பதிவு செய்திருக்கிறார். பேருந்துகளில் பயணியர்களைச் சேகரித்துத் தர தரகர்கள் இருந்த செய்தியும் இப்புதினத்தில் பதிவாகியிருக்கிறது.

‘குச்சுக்காரி’ என்ற சொல்லின் காரணத்தையும் இப்புதினத்தில் காண முடிகிறது. பாலியல் தொழில் செய்த ஏழைப் பெண்டிர் அக்காலத்தே ஊருக்கு வெளியே குச்சு வீடுகளை அதாவது குடிசை வீடுகளை அமைத்துக் கொண்டு அத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் குச்சுவீடுகளில் வசித்த அவர்களைக் குச்சுக்காரிகள் என்று குறிக்கும் வழக்கம் வந்திருக்கிறது. ஆடவரை மயக்கக் காத்திருக்கும் அப்பெண்கள் ஆடவர்கள் அவர்கள் பக்கம் திரும்பினால் அந்தரங்கத்தை மறைவின்றிக் காட்டுவதையும், பார்த்து விட்டு பேசாமல் போனால் வெற்றிலை எச்சிலால் காறித் துப்புவதையும் இப்புதினப் பதிவுகளில் காண முடிகிறது. சங்கக்கால பரத்தமையின் தொடர்ச்சியாகச் செட்டிமார்களும் செல்வ குடிமக்களும் குடியும் கூத்தியாளுமாக வாழ்ந்த வாழ்க்கையையும் இப்புதினம் பதிவு செய்கிறது.

நிலையாமையைப் பேசும் தமிழ்ச் செய்யுள்களைப் பல இடங்களில் பாத்திரங்கள் வழி பதிவு செய்கிறார் சிங்காரம். அந்நாளைய வணிகப் பிரிவினருக்கு இருந்த தமிழ்ப் புலமையையும் ஈடுபாட்டையும் காட்டுவதாக இவ்விடங்கள் புதினத்தில் உள்ளன.

“ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு

சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே”

என்று செய்யுளைக் குறிப்பிட்டு, வாழ்க்கையின் வரவு செலவு கணக்கானது இறப்பில் நேர் செய்யப்பட்டு விடுவதாக இப்புதினம் குறிப்பிடும் இடம் ஒரு நிமிடம் வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்து விடுகிறது.

அந்நாளில் தமிழ்நாட்டிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களை பற்றிய துல்லியமான பதிவு இப்புதினத்தில் இருக்கிறது. அவர்களில் பல்வேறு சாதியினரும் இருப்பினும் செட்டியார்களும், பிள்ளைகளும், நாடார்களும், ராவுத்தர்களும் அதிகம் புலம் பெயர்ந்திருப்பதை இப்புதினம் காட்டுகிறது. புதினத்தில் பெரும்பாலான பாத்திரங்களும் அவர்களே.

இந்தோனேசியாவின் மெடான் நகரில் புதினம் தொடங்குகிறது. மெடான் நகரை ஜப்பானிய ராணுவம் பிடிக்கிறது. அப்போது நிகழும் சம்பவங்களின் கொடூரத்தைப் புதினத்தில் சிங்காரம் சொல்லிச் செல்கிறார். பேர்ல் ஹார்பர் தாக்கப்பட்ட  சம்பவமும் இப்புதினத்தில் பதிவாகியிருக்கிறது.

தொடர்ந்து நிகழும் சம்பவங்களால் வட்டிக் கடையில் வேலை பார்க்கும் பாண்டியன் தேசாந்திரியாகி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான். புதினத்தில் நேதாஜியும் ஒரு பாத்திரமாகிறார். பாண்டியன் நேதாஜியைச் சந்திக்கிறான். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான். நேதாஜிக்காக உயிரைப் பணயம் வைத்து சாகசங்களில் ஈடுபடுகிறான். அவர் எழுதிய ஒரு ரகசிய கடிதத்தைக் கைப்பற்றுவதற்காக ஜப்பானிய ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியைக் கொல்கிறான்.

போர்க் காலங்களில் யார் நண்பராவார், யார் எதிரியாவார் என்பது விளங்காத மர்மம். பழிவாங்கல், பழி தீர்த்தல், காட்டிக் கொடுத்தல் போன்ற அந்த மர்மங்களுக்கு இடையிலும் அன்பு, நன்றி, விசுவாசம் போன்ற நல்லுணர்வு நிகழ்வுகளையும் புதினத்தில் பதிவு செய்கிறார் சிங்காரம்.

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு பாங்காங்கில் அமைதியான வளமான வாழ்வு அமைந்த போதும் பாண்டியன் இந்தோனேசியாவின் கெர்க்ஸ்ராட்டுக்கே வருகிறான். இரண்டாம் உலகப் போர் முடிந்தாலும் காலனித்துவத்துக்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போரில் இந்தோனேசியாவுக்கு ஆதரவாகவும், டச்சு காலனியத்திற்கு எதிராகவும் பாண்டியன் கொரில்லா தாக்குதலில் ஈடுபடுகிறான். முடிவில் அவன் வீரமரணம் அடைவதோடு நாவல் முடிகிறது.

ஒரு நாட்குறிப்பைப் படிக்கும் தொணியில் நீளும் நாவலில் தென்கிழக்கு ஆசியாவைக் கட்டியாண்ட தமிழர்கள், அங்கு பிழைப்பிற்காகச் சென்று பணியாளர்களாகப் பணியாற்றுவதையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டமைப்பவர்களாக மாறுவதையும் காண முடிகிறது.

நேரடியான பிரச்சார தொணி இப்புதினத்தில் இல்லையென்றாலும் எளிமையாக பகட்டின்றி ஆணவமின்றி வாழ்வதை இப்புதினத்தின் பாத்திரங்களின் வழியாகச் சிங்காரம் வலியுறுத்துகிறார். அவரே அப்படி எளிமையாகவும் பகட்டின்றி தேவையை மட்டும் கருத்தில் கொண்டு வாழ்ந்தவர்தான். தேவையில்லாதவற்றை வாங்குபவர்கள் தேவையானவற்றை அதாவது வாய்மை, நேர்மை, மானம் போன்றவற்றை விற்க நேரிடும் என்று இப்புதினம் பதிவு செய்யும் இடம் குறிப்பிடத்தக்கது. ஆடம்பரத்திற்கும் சுகத்திற்கும் அடிமையாகி, அதற்காகப் பணத்திற்கு விலை போய், பணத்திற்காகக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பாத்திரங்களையும் இப்புதினத்தில் காண முடிகிறது.

சிங்காரத்திற்குத் தமிழ் இலக்கியத்திலும் நாட்டார் வழக்காற்றிலும் நல்ல பரிச்சயம் இருப்பதை நாவலில் இடம் பெறும் செய்யுள் மற்றும் பாடல் வரிகள் காட்டுகின்றன. அக்காலத்திய நடப்புச் சூழல்களோடு இலக்கிய வரிகளை மேற்கோள் காட்டி பல இடங்களில் விவாதம் நடத்தவும் செய்கிறார் சிங்காரம். சில இடங்களில் தத்துவார்த்தமாகவும் அன்றைக்கும் இன்றைக்குமான நிலைமைகள் குறித்த கருத்துகளை முன் வைக்கிறார்.

ஊன் கறி உண்டதையும், பரத்தமை கொண்டு திரிந்ததையும், பொருள்தேடி பிரிந்ததையும், கள்ளுண்டு களித்ததையும், போர்க்களத்தில் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்டதையும் காட்டும் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும், அத்தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் நீளும் படைப்பாகவும் சிங்காரத்தின் இப்புதினத்தைக் காண முடிகிறது.

சிங்காரத்தைப் போலவே பாண்டியன் குடும்பம் இல்லாத தனியனாக இருந்தாலும் அவனது வாழ்க்கையைப் பின்தொடரும் வகையில் சங்கக் காலத்தின் கள்ளுண்டலை மது அருந்தலாகவும், பரத்தமையைப் பெண் பித்தர்களாய் அலையும் பாத்திரங்களின் வழியாகவும், பொருள்தேடிப் பிரிதலைப் புலம்பெயரும் தமிழர்கள் வாயிலாகவும், போர்க்களக் காட்சிகளைப் பாண்டியனின்  சாகசங்களிலும் காண முடிகிறது. சங்க இலக்கியக் காட்சிகளின் நிகழ்கால மீட்டுருவாக்கம் போல இப்படைப்பைச் சிங்காரம் படைத்திருக்கிறார். அத்துடன் புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வின் காலப் பதிவாகவும் இப்புதினத்தை வெகு நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறும் வாழ்வும் கலந்த பதிவு சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...