தி. ஜானகிராமனின் ‘நளபாகம்’ நாவல் ஓர் எளிய அறிமுகம்
தி. ஜானகிராமனின் கடைசி நாவல்
நளபாகம். கணையாழியில் 1979 முதல் 1982 வரை தொடராக எழுதிய நாவல். அவரது மறைவுக்குப்
பின் 1983 இல் நூல் வடிவம் பெற்ற நாவல்.
கடந்த காலத்தில் குழந்தை
பாக்கியம் இல்லாதவர்கள் ரிஷிகள் மூலமாகக் குழந்தைப் பெற்றுக் கொள்வதைப் போல நிகழ் காலத்திலும்
நடந்தால் எப்படியிருக்கும் என்ற தி.ஜா.வின் புனைவே நளபாகம் எனும் நாவல்.
வடக்கு நோக்கிப் போகும் யாத்திரைத்
தொடர்வண்டியில் துவங்கும் நாவல் நல்லூரில் நிலை கொண்டு மீண்டும் யாத்திரைத் தொடர்வண்டியை
நோக்கிச் செல்வதாக அமைகிறது.
காமேச்வரனின் பிரயாணமே இந்த
நாவல். யார் இந்த காமேச்வரன்? அவன் ஒரு சக்தி உபாசகன் மற்றும் பரிசாரகன்.
வடக்கு நோக்கிச் செல்லும்
யாத்ரா ஸ்பெஷல் எனப்படும் யாத்திரைத் தொடர்வண்டியில் அவனே பரிசாரகன். இந்தத் தொடர்வண்டியை
நாயுடு ஒருங்கிணைத்தாலும் இந்தத் தொடர்வண்டியின் சிறப்பே காமேச்வரனின் உபசரிப்பான ஒருங்கிணைப்புதான்.
வம்ச விருத்தி தடைபட்டு ஸ்வீகாரம்
மூலமாகத் தொடரும் தலைமுறையைச் சார்ந்த ரங்கமணி இந்தத் தொடர்வண்டியில் பயணிக்கிறாள்.
ஜாதக கணிப்பில் கில்லாடியான முத்துச்சாமியும் அவரது குடும்பமும் இந்தத் தொடர்வண்டியில்
பயணிக்கிறார்கள்.
தன்னுடைய வம்ச விருத்தி குறித்து
முத்துச்சாமியிடம் கணிப்பு கேட்கிறாள் ரங்கமணி. மகனுக்குப் பிள்ளை பாக்கியம் இல்லை,
ஆனால் மருமகளுக்கு உண்டு என்ற ஒரு குயுக்தியான கணிப்பைத் தருகிறார் முத்துச்சாமி.
இந்தக் கணிப்பு ரங்கமணியைக்
கலவரப்படுத்தவில்லை, இப்படியாவது ஒரு வழி இருக்கிறதே என ஏற்றுக் கொள்ளவே செய்கிறது.
இதற்குப் பின் ரங்கமணியின் மனம் வேலை செய்கிறது.
யாத்திரைத் தொடர்வண்டியில்
பரிசாரகனாக இருக்கும் காமேச்வரனை ஒரு ரிஷியைப் போலப் பார்க்கிறாள். ரிஷியாக மட்டுமல்லாமல்
பிள்ளையாகப் பாவித்து தன்னுடைய வீட்டில் வந்து இருக்க வேண்டுகிறாள் ரங்கமணி.
இளமையிலேயே தாயை இழந்து சிற்றன்னையின்
புறக்கணிப்பில் வளர்ந்து வீட்டை விட்டு ஓடி கோயில் பரிசாரகனிடம் வளர்ந்த காமேச்வரனுக்கு
ரங்கமணி காட்டும் இந்த சுவீகாரமான தாய்ப்பாசம் மனதை நெகிழச் செய்கிறது. ரங்கமணியின்
அழைப்புக்கு உடன்படுகிறான் காமேச்வரன்.
காமேச்வரன் நிலைகொள்ளும்
நல்லூர் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் காவிரியும் கொள்ளிடமும் பக்கத்துப் பக்கத்தே
ஓடும் பிரதேசத்தில் கும்பகோணமும் தஞ்சாவூரும் பேருந்தில் போய் வரக் கூடிய தூரத்தில்
இருக்கிறது. நகரமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொடர்வண்டிய நிலையம் உள்ள ஊராக இருக்கிறது.
சக்தி உபாசகனான காமேச்வரனின்
வருகையின் மூலம் தன்னுடைய மருமகள் கருத்தரிப்பாள் என்ற நம்பிக்கையா? அல்லது காமேச்வரன்
மூலமாகவே தன்னுடைய மருமகள் கருத்தரிப்பாள்? என்ற நம்பிக்கையா என்பது ரங்கமணியின் மனதுக்கே
தெரிந்த பூடகம். ரங்கமணியின் இந்த அதிரத்தக்க மன முடிவிலிருந்து நாவல் ஒரு முடிவை நோக்கி
நகர்கிறது.
இப்போது ரங்கமணியின் மருமகளான
பங்கஜத்துக்கு எந்த வழியில் குழந்தை பிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை வாசகர்களிடம்
உருவாக்கி விடுகிறார் தி.ஜா. இது ஒரு சிக்கலான முடிச்சு. இந்தச் சிக்கலான முடிச்சைத்
தனக்கே உரிய பாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாக தி.ஜா. விடுவிக்கிறார்.
ரங்கமணியின் பூடகமான மனம்
எப்படி இருந்தாலும் தனது வம்ச விருத்தி இந்த விசயத்தில் எப்படி நடந்தாலும் ஏற்றுக்
கொள்ளும் மனமும் அவளுக்கு உண்டாகி விடுகிறது என்பதை நாவலின் போக்கு காட்டிக் கொண்டே
போகிறது.
பங்கஜம் கருத்தரிக்கிறாள்.
தம்பதிகளின் இணைவால் நடக்கின்ற அந்த நிகழ்வை ஊரில் சிலர் காமேச்வரனின் நடத்தையால் நிகழ்ந்ததாகக்
கூறும் போது காமேச்வரன் எடுக்கும் முடிவுதான் நாவலின் முடிவாகிறது.
காமேச்வரன் நல்லூரை விட்டுக்
கிளம்புகிறான். தன்னுடைய அவப்பெயருக்காகக் கிளம்பாமல் பங்கஜத்துக்கு அவப்பெயர் நேர்ந்து
விடக் கூடாது என்பதற்காகக் கிளம்புகிறான். மீண்டும் யாத்ரா ஸ்பெஷல் தொடர்வண்டியில்
பரிசாரகனாகத் தொடர்வதாக முடிவெடுத்துக் கொள்கிறான். அத்துடன் கல்யாணம் செய்து கொள்வதாகவும்
முடிவெடுப்பதாக நாவல் முடிகிறது.
நாவலின் காலக்கட்டத்தையும்
நாவலில் துல்லியப்படுத்தி விடுகிறார் தி.ஜா. 1887க்குப் பிறகு ஐம்பது அறுபது வருஷம்
என்ற குறிப்பைக் காண்டு நாவல் நிகழும் காலக்கட்டம்
சுதந்திரத்துக்குப் பிறகு என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சிக் கூட்டம்,
தி.மு. கட்சிக் கூட்டம் நடைபெறுவதாகக் காட்டும் இடத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்
1960களை ஒட்டிய கால காலகட்டத்தில் நாவல் நடப்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
மருதகாசி எழுதி திருச்சி
லோகநாதன் மற்றும் ஜிக்கியின் குரலில் ஒலிக்கும் “வாராய் நீ வாராய்” என்ற திரைப்பாடல்
ஒலிக்கும் இடத்தைக் காட்சிப்படுத்துவதன் மூலமாக இக்காலகட்டம் என்பது 1950 க்குப் பிறகு
1960 ஐ ஒட்டிய காலக்கட்டம் என்பதை உறுதி செய்யலாம். இத்திரைப்பாடல் இடம் பெற்ற மந்திரிகுமாரி
1950 இல் வெளியாகியிருக்கிறது. நல்லூர் போன்ற நகரமாக மாறிக் கொண்டிருக்கும் கிராமத்தின்
திரைக் கொட்டகைக்கு இப்படப்பாடல் வந்து சேர ஒரு சில ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதால்
இக்காலக்கட்டம் குறித்த கணிப்பானது சரியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி
ஒரு காலக்கட்டத்தில் ஒரு பெண்ணின் துணிச்சலான முடிவும் அத்துணிச்சலான முடிவை பாசத்தின்
நிமித்தம் ஏற்றுக் கொண்டு அதற்குப் பின் ஓர் ஆண் எடுக்கும் விவேகமான முடிவுதான் இந்த
நளபாகம் நாவல் எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சங்கீத சமுத்திரமான தி.ஜா.வுக்குப் பிடித்த
திரைப்பாடலாகவும் இத்திரைப்பாடல் இருந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இப்பாடலைச்
சிலாகித்தே நாவலில் எழுதுகிறார் காமேச்வரன் என்ற பாத்திரத்தின் வழியாக.
தன்னுடைய மறைவு கால வரையிலும்
தி.ஜா. வாசகர்களின் புதினப் பசிக்குத் தொடர்ந்து நளபாகத்தைத்தான் பரிமாறியிருக்கிறார்
என்பதை இந்த ‘நளபாகம்’ என்ற பெயரிலான அவரது நாவல் பெயருக்கேற்றபடி திருப்தியும் நியாயமும்
செய்கிறது.
*****
No comments:
Post a Comment