31 May 2024

கொடுமையான காலை வணக்கம் அனுப்புங்கள்!

ஒரு மணி நேரமாய்

ஒரு செய்தியும் வராத

புலனப் பொழுது

கொலை செய்வதைப் போலிருக்கிறது

பொழுதுகள் சவமாக்கப்பட்டதாய்

ஒரு வெறுமை சூழ்கிறது

எந்தச் செய்தியும் அனுப்பாமல்

இந்த மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று

கோபம் கோபமாய் வருகிறது

எந்நேரமும் செய்திகளுக்காய்க் காத்துக் கொண்டிருக்கும்

மனம்

ஒரு பரபர செய்திக்காக ஒற்றைக் காலில் தவமிருக்கிறது

தயவு செய்து ஒரு பரபர செய்தியை அனுப்புங்கள்

அது வதந்தியாகவும் இருக்கலாம்

அபத்த செய்தியாகவும் இருக்கலாம்

இதற்கு மேல் தாங்க முடியாத

பித்துப் பிடித்த மனதிற்கு எதுவாய் இருந்தால் என்ன

ஒரு செய்தி அனுப்புங்கள்

கொடுமையான காலை வணக்கம் என்றாவது

30 May 2024

ஒரு துரதிர்ஷ்டசாலியின் வெற்றி

ஒரு துரதிர்ஷ்டசாலியின் வெற்றி

ஒரு மனிதன் முன்னேற நல்ல குடும்பச் சூழல் அமைய வேண்டும், அனுசரணையான மனைவி அமைய வேண்டும், வெற்றிகரமான அனுபவங்கள் வேண்டும் என்று பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு.

நிலைமைகள் மாறாக அமைந்தாலும் ஒரு மனிதரால் வெற்றி பெற முடியுமா? அப்படியும் முடியும் போலிருக்கிறது. இது கதையில்தான் சாத்தியம் என்கிறீர்களா? வாழ்க்கையிலும் நடைமுறை எதார்த்தத்தில் சாத்தியம் என்பதை நான் ஒருவரைப் பார்த்துப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

நான் சொல்லப் போகும் சாம்பசிவத்துக்கு சாதகமான எதுவும் அமையவில்லை. அவர் பிறந்த உடனே அவருடைய அம்மா சில நாட்களில் இறந்து விட்டார். அப்பா இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டார். சாம்பசிவத்திற்கும் சித்திக்கும் ஒத்துப் போகவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கும் போது பிரச்சனை முற்றிப்   போய் வீட்டை விட்டே ஓடினார்.

அந்தச் சிறு வயதில் ஏதோ வேலைகள் செய்து எங்கெங்கோ எப்படியோ பிழைத்துக் கொண்டிருந்தார். எல்லா கெட்டப் பழக்கங்களும் அவருக்குப் பழக்கமாகத் தொடங்கின. ஒரு திருட்டு வழக்கில் சிக்கிச் சில வருடங்கள் சீர்திருத்த பள்ளியில் இருந்தார். அங்கிருந்து எப்படியோ படித்து ஒரு மென்பொருள் பொறியாளராக (சாப்ட்வேர் என்ஜினியர்) ஆனார். இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படியும் ஒரு மனிதனுக்கு நடக்குமா என்ன? சாம்பசிவத்துக்கு நடந்தது.

சூழ்நிலைகள் எவ்வளவுதான் சரியில்லை என்றாலும் ஒரு மனிதன் முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பதை நிரூபிக்கலாம் என்பதைத்தான் சாம்பசிவம் நிரூபிக்கிறாரோ என்று எல்லாருக்கும் தோன்றியது. இனி அவருடைய வாழ்க்கையில் வசந்த காலம் வந்து விட்டது என்று எல்லாரும் பேசிக் கொண்டோம். அவரும் அப்படித்தான் அந்த நேரத்தைப் பற்றிப் பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

வசந்த காலம் வந்த அந்த 22 சொச்சம் வயதுகளில் அவர் திகட்ட திகட்ட காதலித்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இனி சாம்பசிவத்துக்கு வானமே எல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவர் செய்த திருமணம் இரண்டு வருடங்கள் கூட நீடிக்காமல் விவாகரத்தில் போய் முடிந்தது. விவாகரத்து ஆன விரக்தியில் நான்கு வருடங்களை மதுவைக் குடித்தே வீணாக்கினார். பார்த்து வந்த வேலையில் கவனம் இல்லாமல் போக அவர் வேலையிலிருந்து தூக்கப்பட்டார்.

இனி சாம்பசிவம் அவ்வளவுதான் என்று எல்லாரும் முடிவு கட்டி விட்டோம். நிஜமாக அப்போதைய நிலைமை அப்படித்தான் இருந்தது. மது அருந்துவதற்காக அவர் பிச்சை எடுத்தார். உணவகத்தில் எச்சில் இலைகளை எடுத்துப் போடும் வேலை பார்த்தார். பணம் தருவதாகச் சொன்னால் எந்த வேலையைச் செய்யவும் தயாராக இருந்தார். அந்த அளவுக்கு அவருடைய புத்தி மதுவால் மழுங்கியிருந்தது.

சாம்பசிவம் மதுவைக் குடித்துக் குடித்தே சாகப் போகிறார் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் ஒரு நாள் மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வந்தார். அவரை விவாகரத்து செய்தவரும் அவரது காதல் மனைவியாக இருந்தவருமான அந்தப் பெண் அவர் இருந்த நிலைமையை எதேச்சையாக நடந்த சந்திப்பில் ஏளனமாகப் பார்த்தது அவர் மனதை ஏதோ செய்து விட்டது. வாழ்க்கையில் இனிமேல் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

அந்தப் பெண்ணுக்காகத்தான் அவர் குடித்துக் குடித்தே தன்னை அழித்துக் கொள்வதாக அடிக்கடிக் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணோ சந்தோஷமாக இருந்து கொண்டு அவரை ஏளனமாகப் பார்த்த போது தான் மட்டும் ஏன் கவலையோடு அவளுக்காகத் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றி விட்டதாக அவர் சொன்னார். அவரது தொழில்நுட்ப மென்பொருள் மூளை மீண்டும் வேலை செய்யத் துவங்கியது.

அந்த நேரத்தில் அவருக்கு இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உண்டாகியிருந்தது. தன்னுடைய மென்பொருள் மூளையையும், இயற்கை மீதான ஆர்வத்தையும் ஒருங்கிணைத்து இயற்கை வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த நேரம் கொரோனா பெருந்தொற்று வந்து ஆரம்பித்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதாகி விட்டது.

சாம்பசிவம் சோர்ந்து விடவில்லை. ஆனால் நிறுவனம் இப்படியாகி விட்டதே என்ற வேதனை கொஞ்சம் அவருக்கு இருந்தது. லேசான விரக்தியும் அவர் மனதில் இருக்கத்தான் செய்தது.

இதில் தோற்றால் என்ன இன்னொன்றை ஆரம்பித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் அவருக்குள் எட்டிப் பார்த்தது. சாம்பசிவம் ஒரு வகை சூதாட்ட செயலியை (ஆப்) உருவாக்கி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். விட்ட இடத்தைப் பிடிக்கக் கூடிய நிலைக்கு வந்த போது, அதில் ஏதோ பிரச்சனையாகி சில மாதங்கள் புழல் சிறையில் இருந்தார். மீண்டும் சாம்பசிவத்துக்குக் கட்டம் சரியில்லை என்று எல்லாரும் பேசத் தொடங்கிய நேரம் அது.

இதற்கு மேல் சாம்பசிவம் எழுந்திருக்க முடியாது என்று நினைத்த போது, சிறையை விட்டு வெளியே வந்தவர் சுணங்கி விடவில்லை. சில நாட்கள் சரக்கு அடித்து விட்டு நடுசாலையில் விழுந்து கிடந்தாலும், எழுந்து நிற்பதற்கான எதையாவது செய்து கொண்டிருந்தார். பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களை (செகண்ட் ஹேண்ட்) வாங்கி விற்கும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தத் தொழில் ஆரம்பத்தில் போக்குக் காட்டி பிற்பாடு அவருக்கு நன்றாக ஒத்து வந்தது.

சாம்பசிவத்தை மீண்டும் காதல் துரத்த ஆரம்பித்தது. அவர் நிறுவனத்தில் அவர் பார்த்து வேலைக்கு வைத்தப் பெண்ணையேக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய இந்தத் திருமணம் இரண்டு வருடமா, மூன்று வருடமா என்று எல்லாரும் ஆருடம் பார்த்துக் கொண்டிருந்த போது சாம்பசிவம் குழந்தை குட்டிகளோடு உற்சாகமாக இயங்கத் தொடங்கினார்.

இப்போது ராயல் என்பீல்ட் டீலர்சிப் வாங்கி ஒரு விற்பனையகத்தையும் துவங்கியிருக்கிறார். மகிந்திரா வாகனங்கள் விற்பனையகத்துக்கான டீலர்சிப் வாங்கி அதையும் வைத்திருக்கிறார்.

மனிதர் இப்போது படு சுறுசுறுப்பாக இருக்கிறார். நான் சாம்பசிவத்தைச் சந்தித்த போது இதிலும் அடி சறுக்கினால் என்ன செய்வீர்கள் என்று சாம்பசிவத்தைக் கேட்டேன். இன்னொன்று ஆரம்பித்துக் கொள்வேன் என்றார் அசால்ட்டாக. அப்படி ஒரு நிலை வந்தால் எதை ஆரம்பிப்பீர்கள் என்று கேட்டேன். அது ஆரம்பிக்கும் போதுதான் எனக்கே தெரியும் என்றார் மனிதர் படு சோக்காக.

ஒவ்வொரு முறை சறுக்கும் போதும் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்றார். இதென்னடா கூத்தாக இருக்கிறதே என்றால் சறுக்கினால்தானே எழுந்திருக்க முடியும், சறுக்காமல் எழுந்திருப்பதைப் போலப் பாவனை செய்ய முடியாதே என்று சொல்லிச் சிரிக்கிறார். சறுக்குவதும் எழுவதும் எவ்வளவு மகிழ்ச்சி தரும் விளையாட்டு தெரியுமா என்கிறார். அது அப்படித்தானா? சாம்பசிவம் அப்படித்தான் சொல்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்த வரையில் சாம்பசிவத்துக்கு இப்போதுதான் நல்ல குடும்பச் சூழல் அமைந்திருக்கிறது. அதற்கு முன்பு வரை அவரது குடும்பச் சூழல் சூறாவளியும் சுனாமியுமாகவே இருந்தது. அவருக்கு அமைந்த சந்தர்ப்பங்களும் நேர்மறையாக இருந்திருக்கவில்லை. நிறைய எதிர்மறையான சம்பவங்களாகவே இருந்தன. அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துரதிர்ஷ்டமும், சீர்திருத்த பள்ளிக்குப் போகும் அளவுக்குச் சூழ்நிலைகளும், ஒரு வெற்றி பெற்றால் இன்னொரு தோல்வியால் சூழப்படும் அளவுக்கு நெருக்கடிகளோடும்தான் அவர் இருந்தார்.

ஆனால் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இப்போதும் எதையாவது புதிது புதிதாக முயன்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி முயல்வதில் முக்கால்வாசிக்கு மேல் தோல்விதான் காண்கிறார். அது அவருக்குப் பொருட்டாகப் படுவதில்லை. அவரைப் பொருத்த வரையில் வெற்றியோ, தோல்வியோ புதிது புதிதாக எதையாவது முயன்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

சில நேரங்களில் தோல்வியால் முடங்கிப் போய் மதுவுக்கு அடிமையாகித்தான் போகிறார். அப்படி ஆனாலும் எப்படியும் அதிலிருந்து மீண்டு வந்து பல மாதங்கள் மதுவை மறந்து எதையாவது சாதிக்கும் வரையில் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சாம்பசிவத்தின் சூழ்நிலைகள் எப்போதும் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் அசௌகரியங்கள் சூழ்ந்ததாகத்தான் இருக்கின்றன. இப்போதும் ராயல் என்பீல்ட் சர்வீசில் திருப்தி இல்லையென்று தினம் தினம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வருகிறது என்கிறார். அத்துடன் சாம்பசிவம் என்ன சொல்கிறார் என்றால் அது பாட்டுக்கு அது இருக்கட்டும், நான் பாட்டுக்கு எனக்குத் தோன்றுகிறதைச் செய்து கொண்டிருக்கிறேன், அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இந்தக் குணம்தான் அவரைத் தளராமல் நடை போடச் செய்து வெற்றியை அடையச் செய்கிறதோ என்னவோ!

இப்படி நம்மைச் சுற்றி எத்தனை சாம்பசிவம்கள்? நீங்களும் ஒரு சாம்பசிவமாக அவருக்கு நேர்ந்த சம்பவங்கள் உங்களுக்கு உத்வேகமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள். அது மற்றவர்களுக்கும் உத்வேகம் தரலாம்.

*****

29 May 2024

முன் அறிவிப்பிற்கான தயாரிப்புகள்

ஒரு பெருமழை அறிவிப்பு வருகிறது

மக்கள் படகு பயணத்திற்கான

முன்பதிவைச் செய்யத் துவங்குகிறார்கள்

வறண்ட வானிலைக்கான அறிவிப்பு வருகிறது

மக்கள் சாமியார் ஒருவரின்

மழையைத் தரும் யாகத்திற்கான நிகழ்வில்

முன்பதிவிற்காக முண்டியடிக்கிறார்கள்

இனி எப்போதும் முன்பதிவுகள்தானா

ஒரு பிரளயத்திற்கான அறிவிப்பு வரும் போதும்

மக்கள் முன்பதிவுக்குத் தயாராகிறார்கள்

நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும்

தயாராக இருக்கின்றன

28 May 2024

நீர்ப்புட்டிகள் சஞ்சரிக்கும் உலகு

பாதிக் குடித்து

பாதி மீந்துக் கிடக்கும்

ஒரு நெகிழித் தண்ணீர்ப் புட்டிக்கு

மண்ணுக்குள் செல்லும் பாக்கியமில்லை

ஆவியாகி வானுக்குச் செல்லும் கொடுப்பினையுமில்லை

நுண்கிருமிகளை உருவாக்கும் தாய்மையுமில்லை

தூசு படிந்து சுவரோரமாய்த்

தூய்மைப்படுத்தும் காலம் வரை

காத்திருக்கும் உள்ளிருக்கும் நீருக்கு

இப்போதைக்கு விடுதலையும் இல்லை

தாகத்திற்கான சில மிடறுகள்

ஆங்காங்கே மீந்துக் கிடக்கும் உலகில்

காலிக் குடங்களோடு

தண்ணீருக்காக மக்களும்

குடத்தின் அடியிலிருக்கும் தண்ணீருக்காக

கற்களைப் போட்டு நீர் பருகும் காக்கைகளும்

அலையவும் திரியவும்

நீர்ப்புட்டிகளைத் தயாரிக்கும் ஆலைகள்

சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன

நீர்ப்புட்டிகளின் விலைகள்

எட்ட முடியாத உயரத்தில்

அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன

27 May 2024

எலிகளுக்கு எப்போது பாராட்டு விழா நடத்தப் போகிறோம்?

எலிகளுக்கு எப்போது பாராட்டு விழா நடத்தப் போகிறோம்?

தமிழன் தக்காளி வாங்க முடியாமல் தலை தாழ்ந்து விடுவானோ?

இப்படியே போனால் அடுத்து வெங்காயம் வாங்கும் சக்தி அவனிடம் இருக்குமா?

இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் அவனுக்கு ஆகாத சமாச்சாரங்கள் ஆகி விடுமோ?

முடிவாக அரிசி விலையும் அச்சுறுத்தத் துவங்கினால் அவன் என்னாவான்?

எல்லாம் சரக்கு விலையை விட கம்மிதான் என்று ஆறுதல் அடைவானோ என்னவோ?

*****

காவாலா பாட்டுக்குக் குத்தாட்டம் போட்டால்தான் நம்மையும் மனுஷன் என்று மதிப்பார்களோ?

ஒவ்வொரு முறை ரஜினி படம் வரும் போதும் இப்படிப் புதிதாக ஒரு பிரச்சனை வந்து சேருகிறது.

பாட்டை வைரல் ஆக்குகிறேன் என்று சமூகத்திற்குள் இப்படி ஒரு வைரஸைக் கொரோனோ வைரஸ் போலப் பரப்பி விட்டு விடுகிறார்கள். இது போன்ற கொரோனா வைரலுக்கு எல்லாம் தடுப்பூசி கண்டுபிடிக்க மாட்டார்களோ?!

*****

கடையில் ஒரு கிலோ தக்காளி வாங்குவதும் ரேஷன் கடையில் ஒரு கிலோ தக்காளி வாங்குவதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

கடையில் ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய்.

ரேஷன் கடையில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய். ஆனால் இருப்பதென்னவோ முக்கால் கிலோதான். கடையிலும் முக்கால் கிலோ தக்காளி 120 ரூபாய்தானே. இதற்கு ரேஷனில் கால் கடுக்க வரிசையில் நின்று எதற்குக் காத்திருக்க வேண்டும்? கடையிலேயே வாங்கிக் கொள்ளலாம்தானே?

*****

ஒரு பக்கத்துக்கு ஐம்பது பைசா வீதம் என்ற கணக்கில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு புத்தகம் போட்டார்கள். 100 பக்கமுள்ள புத்தகம் அதன்படி அப்போது ஐம்பது ரூபாயாக இருந்தது.

அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பக்கத்துக்கு ஒரு ரூபாய் வீதம் விலை வைத்து புத்தகம் போட்டார்கள். அதன்படி 100 பக்கமுள்ள புத்தகம் 100 ரூபாயாக இருந்தது.

இப்போது என்ன கணக்கில் புத்தகம் போடுகிறார்களோ? 87 பக்கமுள்ள புத்தகத்தின் விலை 238 ரூபாய்.

*****

தம்பா ஒரு கஞ்சா வியாபாரி.

போலீஸ் ரெய்டு வந்தும் தம்பா தப்பித்து விட்டான்.

அது எப்படி?

இதென்ன விடுகதையாக இருக்கிறதே என்று விசாரித்த போதுதான், தம்பா வாங்கி வைத்திருந்த கஞ்சா பொட்டணங்களை எல்லாம் எலிகள் தின்று விட்டனவாம். கொடுத்து வைத்த எலிகள். தம்பாவுக்கே காசு கொடுக்காமல் ஏமாற்றி ஓசியில் கஞ்சா அடித்திருக்கின்றனவே என்று ஆச்சரியம் தாங்கவில்லை. தம்பாவையே ஏமாற்றிய எலிகளுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

*****

26 May 2024

புதிய திசைகளைக் கண்டுபிடித்தல்

ஒரு புதிய திசையில் ஓட நினைக்கிறேன்

எந்த திசையில் ஓடுவது

இருக்கும் திசைகள் அனைத்தும் பழையது

கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு

தென்கிழக்கு வடமேற்கு

வடகிழக்கு தென்மேற்கு

வேறென்ன புதிய திசைகள்

இருக்கும் பழைய திசையொன்றில் ஓடத் தொடங்குகிறேன்

ஓட்டத்தின் வேகமும்

ஓடும் போது உண்டாகும் மனோபாவமும்

ஒரு புதிய திசையை உண்டாக்குகிறது

புதிய திசையில் புதுப்புது பாதைகள் தெரிகின்றன

ஓட்டத்தின் வேகம் அதிகமாகிறது

மனோபாவம் புதுப்புது திசைகளைக் கண்டுபிடிக்கிறது

25 May 2024

நான் என்கிற ஒருவனும் நினைவு என்கிற நான்களும்

நான் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை

கடந்து போய் விடுகிறேன்

நினைவுகள் அதுவாக வருகின்றன

அதுவாக மறந்து போகின்றன

சில நேரங்களில் சிரிக்கின்றன

சில நேரங்களில் அழுகின்றன

சில நேரங்களில் மௌனமாகின்றன

சில நினைவுகளுக்குச் சுவடுகள் இருக்கின்றன

சில நினைவுகள் தடமிழந்து போகின்றன

எந்த நினைவுகளுக்கு எது எப்படி என்று

அந்த நினைவுகளுக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது

ஏதோ இருந்து கொண்டிருக்கின்றன நினைவுகள்

எப்படியோ இருந்து கொண்டிருக்கிறேன் நானும்

எல்லாம் இருக்கும் உலகம்!

பெரிதாகயோசிக்க என்ன இருக்கிறது

உன் வாழ்வை நீ வாழப் போகிறாய்

என் வாழ்வை நான் வாழப் போகிறேன்

நீ சொல்வதைக் கேட்டு

என் வாழ்வை நான் எதற்கு வாழ வேண்டும்

நான் சொல்வதைக் கேட்டு

உன் வாழ்வை நீ எதற்கு வாழ வேண்டும்

உனக்குப் பிடிக்கவில்லையென்றால்

நான் விலகிக் கொள்ளப் போகிறேன்

எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்

நானே விலகிக் கொள்ளப் போகிறேன்

இதற்கு மேல் பெரிதாக யோசிக்க

இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது

உன்னிடம் அணுக்கமாய் பேச நினைப்பதை

நீயில்லாமல் போனாலும்

உன்னைப் போலக் கேட்க

இன்னொருவர் இந்தப் பூமியில்

இல்லாமலா போய் விடப் போகிறார்        

இல்லாமல் போனாலும் என்ன

இப்படி எழுதித் தீர்த்துக் கொள்ள

ஒரு தாள் கூட இல்லாமலா போய் விடும்

24 May 2024

ஒரு துளி அன்பிற்கு ஓடி வரும் நாய்!

ஒரு பப்ஸைத் தின்ன துவங்கிய போது

எதிரில் வந்த நாயைப் பார்த்து

எழுந்த பயம்

அது ஓரமாய்க் கேவியபடி ஒதுங்கிய போது

பரிதாபமாய் மாறியது

பப்ஸில் கொஞ்சம் பிய்த்து போட்ட போது

அதன் கண்களில் தெரிந்த நன்றிக்கு முன்

கடல் ஒரு சிறு துளியாக

வண்டியைக் கிளப்பிக் கொண்டு போகும் போது

பின்னால் ஓடி வரும்

அது தேடும் ஆதரவுக்குப் பிய்த்துப் போட

அவசர வாழ்க்கையில் ஏதுமில்லை

***** 

23 May 2024

ரத்தம் தெறிக்கும் பிரபஞ்சம்

ரத்தம் தெறிக்கும் பிரபஞ்சம்

நானே பிறப்பு

நானே இறப்பு

கதை துவங்குகிறது

கதை முடிகிறது

நானே கடவுள்

நானே துஷ்டன்

வரம் வழங்கப்படுகிறது

சாபம் பெறப்படுகிறது

நானே ஆக்கம்

நானே அழிவு

உலகம் உயிர் பெறுகிறது

உலகம் மரணிக்கிறது

புரியாத வரை பயமில்லை

புரியத் தொடங்கினால் பயம் படரத் தொடங்கும்

புரிவதை எடுத்துச் சொல்ல முடியாது

எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாது

புரிகிறதோ புரியவில்லையோ

விளக்கம் கொடுக்காமலும் இருக்க முடியாது

விளக்கங்கள் கொடுத்தாலும்

தப்பர்த்தங்களாகவே புரிந்து கொள்ளப்படும்

விளக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்

சந்தேகங்கள் எதிரிகளுக்கு இருக்கலாம்

உங்களிடம் இருக்கக் கூடாது

கண்களில் வழியும் குருதியை

நாவினால் ருசி பாருங்கள்

உங்கள் உடம்பின் மாமிசத்தில்

உப்பு குறைவாக இருக்கட்டும்

கால் விரல் வெட்டப்படும் போது

சர்க்கரையின் அளவைக் குறைத்து வையுங்கள்

கொஞ்சம் அரசியல்

நிறைய வன்முறை

வெள்ளை வானில் பிரதிபலிக்கும்

சிவந்த மண்ணின்

மாமிசக் கவிச்சமும்

ரத்தச் சோகையும் தெறிக்கும்

பிரபஞ்சம்தான் இது

*****

21 May 2024

சரியான வழிமுறையும் வாழ்க்கை முறையும்!

சரியான வழிமுறையும் வாழ்க்கை முறையும்!

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் புயல், வெள்ளத்திற்காகப் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதைக் கேள்விபட்டிருப்போம். இப்போது மே மாதத்தில் கோடைக்கால மழைக்கே பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த அளவுக்கு பருவ கால சுழற்சி மாற்றடைந்து வருகிறது.

ஒரு புறம் இயற்கை மாறி விட்டது என்று சொன்னாலும், அந்த இயற்கையை மாற்றியது எதுவென்றால் அது நிச்சயம் மனிதர்களின் நடவடிக்கைகள்தான். காடுகளை அழித்தது, மரங்களை வெட்டியது, நீர் நிலைகளைப் பராமரிக்கத் தவறியது, மழைநீரை நிலத்திற்குள் செல்லாத அளவுக்குக் காங்கிரீட் தளங்களை அமைத்தது என்று அதற்கான காரணங்களை அடுக்கலாம்.

மறுபுறம் சீராகப் பெய்ய வேண்டிய மழை அதிரடியாகப் பெய்கிறது. ஒரே நாளில் பத்து சென்டி மீட்டர் மழை, இருபது சென்டி மீட்டர் மழை என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. இவ்வளவு மழை நீரைச் சமாளிக்கும் கட்டமைப்புகள் தற்போது நம்மிடம் இல்லை. இயல்பாகவே எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்கும் கட்டமைப்புகள் நம்மிடம் இருந்தன. குளங்களைத் தூர்த்தது, குட்டைகளைத் தரைமட்டமாக்கியது, ஆறுகளை ஆக்கிரமித்தது, ஏரிகளை வீட்டு மனைகளாக்கியது என்று மழைநீர்க் கட்டமைப்புகள் மீது மனிதர்கள் செய்த அத்துமீறல்கள் அதிகம். அந்த அத்துமீறல்களுக்கான எதிர்வினைகளைத்தான் மழைக்காலங்களில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பருவநிலை சுழற்சி என்பது கிட்டதட்ட மாறி விட்டது. கோடை வெயில் அளவுக்கதிகமாக அதிகரித்து விட்டது. மழைக்கால அளவு சுருங்கி விட்டது. குளிர் காலம் எப்போது தொடங்குகிறது, பனிக் காலம் எப்போது முடிகிறது என்று தெரியாமல் எல்லாம் மின்னல் போலத் தோன்றி மறைகின்றன.

ஒரு பக்கம் வெள்ளம், மறு பக்கம் வறட்சி என்று இரு துருவ நிலைகளை உலகின் பல்வேறு பகுதிகள் எதிர்கொள்கின்றன. வரலாறு காணாத வெள்ளம் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. கடுமையான வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மனிதர்கள் இறப்பதையும் காண முடிகிறது. கொடிய தொற்று நோய்களுக்கு மனிதர்களைப் பலிகொடுத்தது போக, வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் மனிதர்களைப் பலிகொடுக்க வேண்டிய நிலையில் இயற்கையோடு போராட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

தனிமனித பயன்பாடுகளாலும், தொழில்சாலை செயல்பாடுகளாலும், போக்குவரத்து சாதனங்களாலும் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. கார்பன் உமிழ்வின் அளவும், கரித்துகள்களின் படிவும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவை துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்படிவுகளில் படிந்து துருவப்பனி உருகுவதை அதிகப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக உலகெங்கும் கடல்நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தனிமனித மின்சார நுகர்வும், தொழில்வளர்ச்சிக்குத் தேவையான மின்சார அளவும் கூட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பெரும்பாலான வழிமுறைகள் இயற்கையின் சமநிலையைச் சீர்குழைப்பவை. பாதுகாப்பான மாற்று எரிசக்தி மூலம் பெறப்படும் மின்சார அளவானது அத்தனை மனிதர்களின் தேவைக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது.

அணுமின் நிலையம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமானது இயற்கையின் சமநிலைக்குச் சவால் விடுவது. அதனால் ஏற்படும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்வதும் சமாளிப்பதும் மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. நிலக்கரி, பெட்ரோலியம் மூலமாகத் தயாரிக்கப்படும் மின்சார அளவும் மிக அதிக அளவிலானது. இதற்காக வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியும், உறிஞ்சி எடுக்கப்படும் பெட்ரோலியமும் ஏற்படுத்தப் போகும் சமநிலையின்மையை எதிர்கொள்ள வேண்டிய சவாலான நிலையிலும் மனித குலம் இருக்கிறது.

மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி இயங்கும் அலைபேசி போன்ற பல்வேறு மின் சாதனங்களின் பெருக்கங்களும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத மின்சார மற்றும் மின்னணு குப்பைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன. இவற்றின் பின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்ற கவலையும் அச்சமும் சுற்றுச்சசூழல் சமநிலையைப் பற்றி நினைக்கும் போது ஏற்படுகிறது.

பெருகி வரும் மக்கள்தொகைக்கு இவ்வளவு தேவைகள் அவசியம்தான் என்று சொல்லலாம். அதற்காக மிகு நுகர்வு கலாச்சாரத்தை ஆதரித்தால் அது மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு வந்து விடும். உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தியடைந்த நிலையில் இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத பசியையும் பட்டினியையும் எதிர்கொள்ளும் வறுமைகோட்டிற்குக் கீழே உள்ள மக்கள்தான் உலகில் பெரும்பான்மையினராக உள்ளனர். இதற்கு மாறாக மிகு நுகர்வு கலாச்சாரத்தை விரும்பும் மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளனர்.

அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் போக, மிகு நுகர்வுத் தன்மையைக் கைவிடுவது என்பது இந்தப் பூமியைக் காப்பதற்கும், மனித குலம் தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கும் அவசியமாகும். அளவுக்கதிகமான ஒவ்வொரு நுகர்வு பொருளிலும் பூமியின் நன்னீர்ப் பயன்பாடு மறைமுகமாக ஒளிந்திருக்கிறது. அந்தப் பொருளை உருவாக்குவதற்கான எரிபொருளானது பூமியிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அவசியம் மற்றும் அத்தியாவசியம் என்றால் ஒரு பொருளை உருவாக்கியதற்கான சக்தி மற்றும் ஆற்றல் பயன்பாட்டை நியாயப்படுத்தலாம். அதுவே ஒன்றுக்கு மேல் அநாவசியமான இன்னொன்று என்றால் அதற்கான சக்தி மற்றும் ஆற்றல் பயன்பாடானது இயற்கையின் சமநிலையில் உண்டாகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அதை நியாயம் செய்யவே முடியாது.

மனித குலம் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுத் தேவைகளோடு, எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவு அவசியத்தோடு வாழும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதே வளமாகவும் நலமாகவும் இந்தப் பூமியில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வதற்கான சரியான வழிமுறையும் வாழ்க்கை முறையாக அமையும். மனித குலம் இதைப் பரிசீலிக்க வேண்டிய போர்க்கால நெருக்கடியில் தற்போது இருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.

*****

20 May 2024

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான்

அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள்

தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது

அவர்கள் முன் நான் சாதாரணம் அற்பம்

அற்பத்திலிருந்து விடுபடுவதனால்

அற்புத மகிழ்ச்சி கிடைக்கக்கூடும் என நினைக்கிறேன்

பிரமாண்டம் கொண்டவராக மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன்

அவர்களோடு போட்டி போட

அவர்களில் ஒருவராக

அவர்கள் மத்தியில் ஓர் இடம் பிடிக்க முடியுமா

எண்ணி எண்ணி குமைகிறேன்

மிகவும் மெனக்கெட்டுப் பார்க்கிறேன்

காலம் முழுவதும் காத்திருந்து பார்க்கிறேன்

அவர்கள் போல் இனி யாரால் முடியும்

என்னைப் போலவும் இனி யாரால் முடியும்

என்னைப் போலிருக்கு நான் ஏன் முயற்சிக்கவில்லை

*****

சமரசமற்ற ஒன்று

எனக்கு உங்களைப் பிடிக்காது

உங்களுக்கு என்னைப் பிடிக்காது

இதில் எந்தச் சமரசமும் இல்லை

சமரசம் இருந்துதான் என்னவாகப் போகிறது

அப்படியே இருந்து விடுவதால்

உலகின் அமைதிக்கு எந்தக் குந்தகமும் விளையப் போவதில்லை

ஒரு சமாதானக் கொடி பறக்காமல் போவதால்

எந்தப் போர்க்களத்துக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது

சமாதானப் புறாக்கள் சந்தோஷமாகப் பறக்கட்டும்

நமக்காகப் பறந்து சமாதானம் நாராசம் ஆக வேண்டாம்

தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும்

அந்தத் தண்ணீரைக் குடிக்காதாம்

பிறந்த குழந்தைகள் அழுதாலும் கண்ணீர் வராதாம்

அப்படியே இருக்கட்டும் நமது சமரசமற்ற தன்மை

அதன் கன்னிமை கெட்டு விடாதபடிக்கு

*****

16 May 2024

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல்

நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய்

எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை

இருந்தாலும் எப்படி எதிர்கொண்டு வருகிறேன்

நான் எப்போதும் எதைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்

என் சந்தேகங்களை என் அனுபவங்களை

எந்நேரமும் அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்

என்னுடையதை எல்லாம் உன்னுடையதாக

மாற்றிக் கொடுக்க முடியுமா என்று பார்க்கிறேன்

ஒன்றை இன்னொன்றாக மாற்றிக் கொடுத்து

தப்பித்து ஓடப் பார்க்கிறேன்

நீ இழுத்துப் பிடிக்கிறாய்

என்னை எப்போது அப்படியே ஏற்றுக் கொள்வாய் என்கிறாய்

அது சரி என்னை நீ எப்போது அப்படியே ஏற்றுக் கொள்வாய்

அதற்காகத்தான் நாம் யோசிக்கிறோமா

சண்டை பிடிக்கிறோமா அழுகிறோமா கவலைப் படுகிறோமா

மீண்டும் மீண்டும் விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறோமா

தன் முனைப்புகளை மோத விட்டுக் கொண்டிருக்கிறோமா

எப்போதும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டுதான் இருக்க வேண்டுமா

எப்போதாவது ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால்தான் என்ன

ஏற்றுக் கொள்ளாமையை ஏற்றுக் கொள்ளும்

நீயும் நானும் எவ்வளவு அழகானவர்கள் என்று

ஒருமுறையாவது நம் மனக்கண்ணாடியில் பார்க்க வேண்டும்

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...