20 May 2024

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான்

அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள்

தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது

அவர்கள் முன் நான் சாதாரணம் அற்பம்

அற்பத்திலிருந்து விடுபடுவதனால்

அற்புத மகிழ்ச்சி கிடைக்கக்கூடும் என நினைக்கிறேன்

பிரமாண்டம் கொண்டவராக மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன்

அவர்களோடு போட்டி போட

அவர்களில் ஒருவராக

அவர்கள் மத்தியில் ஓர் இடம் பிடிக்க முடியுமா

எண்ணி எண்ணி குமைகிறேன்

மிகவும் மெனக்கெட்டுப் பார்க்கிறேன்

காலம் முழுவதும் காத்திருந்து பார்க்கிறேன்

அவர்கள் போல் இனி யாரால் முடியும்

என்னைப் போலவும் இனி யாரால் முடியும்

என்னைப் போலிருக்கு நான் ஏன் முயற்சிக்கவில்லை

*****

சமரசமற்ற ஒன்று

எனக்கு உங்களைப் பிடிக்காது

உங்களுக்கு என்னைப் பிடிக்காது

இதில் எந்தச் சமரசமும் இல்லை

சமரசம் இருந்துதான் என்னவாகப் போகிறது

அப்படியே இருந்து விடுவதால்

உலகின் அமைதிக்கு எந்தக் குந்தகமும் விளையப் போவதில்லை

ஒரு சமாதானக் கொடி பறக்காமல் போவதால்

எந்தப் போர்க்களத்துக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது

சமாதானப் புறாக்கள் சந்தோஷமாகப் பறக்கட்டும்

நமக்காகப் பறந்து சமாதானம் நாராசம் ஆக வேண்டாம்

தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும்

அந்தத் தண்ணீரைக் குடிக்காதாம்

பிறந்த குழந்தைகள் அழுதாலும் கண்ணீர் வராதாம்

அப்படியே இருக்கட்டும் நமது சமரசமற்ற தன்மை

அதன் கன்னிமை கெட்டு விடாதபடிக்கு

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...