மனக்கண்ணாடியில் பார்த்தல்
நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய்
எப்படி அதை எதிர்கொள்வது
என்று தெரியவில்லை
இருந்தாலும் எப்படி எதிர்கொண்டு
வருகிறேன்
நான் எப்போதும் எதைச் சிந்தித்துக்
கொண்டிருக்கிறேன்
என் சந்தேகங்களை என் அனுபவங்களை
எந்நேரமும் அசை போட்டுக்
கொண்டு இருக்கிறேன்
என்னுடையதை எல்லாம் உன்னுடையதாக
மாற்றிக் கொடுக்க முடியுமா
என்று பார்க்கிறேன்
ஒன்றை இன்னொன்றாக மாற்றிக்
கொடுத்து
தப்பித்து ஓடப் பார்க்கிறேன்
நீ இழுத்துப் பிடிக்கிறாய்
என்னை எப்போது அப்படியே ஏற்றுக்
கொள்வாய் என்கிறாய்
அது சரி என்னை நீ எப்போது
அப்படியே ஏற்றுக் கொள்வாய்
அதற்காகத்தான் நாம் யோசிக்கிறோமா
சண்டை பிடிக்கிறோமா அழுகிறோமா
கவலைப் படுகிறோமா
மீண்டும் மீண்டும் விமர்சனங்களை
வைத்துக் கொண்டிருக்கிறோமா
தன் முனைப்புகளை மோத விட்டுக்
கொண்டிருக்கிறோமா
எப்போதும் ஒருவரையொருவர்
ஏற்றுக் கொண்டுதான் இருக்க வேண்டுமா
எப்போதாவது ஏற்றுக் கொள்ளாமல்
இருந்தால்தான் என்ன
ஏற்றுக் கொள்ளாமையை ஏற்றுக்
கொள்ளும்
நீயும் நானும் எவ்வளவு அழகானவர்கள்
என்று
ஒருமுறையாவது நம் மனக்கண்ணாடியில்
பார்க்க வேண்டும்
*****
No comments:
Post a Comment