ரத்தம் தெறிக்கும் பிரபஞ்சம்
நானே பிறப்பு
நானே இறப்பு
கதை துவங்குகிறது
கதை முடிகிறது
நானே கடவுள்
நானே துஷ்டன்
வரம் வழங்கப்படுகிறது
சாபம் பெறப்படுகிறது
நானே ஆக்கம்
நானே அழிவு
உலகம் உயிர் பெறுகிறது
உலகம் மரணிக்கிறது
புரியாத வரை பயமில்லை
புரியத் தொடங்கினால் பயம்
படரத் தொடங்கும்
புரிவதை எடுத்துச் சொல்ல
முடியாது
எடுத்துச் சொன்னாலும் புரிந்து
கொள்ள முடியாது
புரிகிறதோ புரியவில்லையோ
விளக்கம் கொடுக்காமலும் இருக்க
முடியாது
விளக்கங்கள் கொடுத்தாலும்
தப்பர்த்தங்களாகவே புரிந்து
கொள்ளப்படும்
விளக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்
சந்தேகங்கள் எதிரிகளுக்கு
இருக்கலாம்
உங்களிடம் இருக்கக் கூடாது
கண்களில் வழியும் குருதியை
நாவினால் ருசி பாருங்கள்
உங்கள் உடம்பின் மாமிசத்தில்
உப்பு குறைவாக இருக்கட்டும்
கால் விரல் வெட்டப்படும்
போது
சர்க்கரையின் அளவைக் குறைத்து
வையுங்கள்
கொஞ்சம் அரசியல்
நிறைய வன்முறை
வெள்ளை வானில் பிரதிபலிக்கும்
சிவந்த மண்ணின்
மாமிசக் கவிச்சமும்
ரத்தச் சோகையும் தெறிக்கும்
பிரபஞ்சம்தான் இது
*****
No comments:
Post a Comment