21 May 2024

சரியான வழிமுறையும் வாழ்க்கை முறையும்!

சரியான வழிமுறையும் வாழ்க்கை முறையும்!

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் புயல், வெள்ளத்திற்காகப் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதைக் கேள்விபட்டிருப்போம். இப்போது மே மாதத்தில் கோடைக்கால மழைக்கே பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த அளவுக்கு பருவ கால சுழற்சி மாற்றடைந்து வருகிறது.

ஒரு புறம் இயற்கை மாறி விட்டது என்று சொன்னாலும், அந்த இயற்கையை மாற்றியது எதுவென்றால் அது நிச்சயம் மனிதர்களின் நடவடிக்கைகள்தான். காடுகளை அழித்தது, மரங்களை வெட்டியது, நீர் நிலைகளைப் பராமரிக்கத் தவறியது, மழைநீரை நிலத்திற்குள் செல்லாத அளவுக்குக் காங்கிரீட் தளங்களை அமைத்தது என்று அதற்கான காரணங்களை அடுக்கலாம்.

மறுபுறம் சீராகப் பெய்ய வேண்டிய மழை அதிரடியாகப் பெய்கிறது. ஒரே நாளில் பத்து சென்டி மீட்டர் மழை, இருபது சென்டி மீட்டர் மழை என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. இவ்வளவு மழை நீரைச் சமாளிக்கும் கட்டமைப்புகள் தற்போது நம்மிடம் இல்லை. இயல்பாகவே எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்கும் கட்டமைப்புகள் நம்மிடம் இருந்தன. குளங்களைத் தூர்த்தது, குட்டைகளைத் தரைமட்டமாக்கியது, ஆறுகளை ஆக்கிரமித்தது, ஏரிகளை வீட்டு மனைகளாக்கியது என்று மழைநீர்க் கட்டமைப்புகள் மீது மனிதர்கள் செய்த அத்துமீறல்கள் அதிகம். அந்த அத்துமீறல்களுக்கான எதிர்வினைகளைத்தான் மழைக்காலங்களில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பருவநிலை சுழற்சி என்பது கிட்டதட்ட மாறி விட்டது. கோடை வெயில் அளவுக்கதிகமாக அதிகரித்து விட்டது. மழைக்கால அளவு சுருங்கி விட்டது. குளிர் காலம் எப்போது தொடங்குகிறது, பனிக் காலம் எப்போது முடிகிறது என்று தெரியாமல் எல்லாம் மின்னல் போலத் தோன்றி மறைகின்றன.

ஒரு பக்கம் வெள்ளம், மறு பக்கம் வறட்சி என்று இரு துருவ நிலைகளை உலகின் பல்வேறு பகுதிகள் எதிர்கொள்கின்றன. வரலாறு காணாத வெள்ளம் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. கடுமையான வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மனிதர்கள் இறப்பதையும் காண முடிகிறது. கொடிய தொற்று நோய்களுக்கு மனிதர்களைப் பலிகொடுத்தது போக, வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் மனிதர்களைப் பலிகொடுக்க வேண்டிய நிலையில் இயற்கையோடு போராட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

தனிமனித பயன்பாடுகளாலும், தொழில்சாலை செயல்பாடுகளாலும், போக்குவரத்து சாதனங்களாலும் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. கார்பன் உமிழ்வின் அளவும், கரித்துகள்களின் படிவும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவை துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்படிவுகளில் படிந்து துருவப்பனி உருகுவதை அதிகப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக உலகெங்கும் கடல்நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தனிமனித மின்சார நுகர்வும், தொழில்வளர்ச்சிக்குத் தேவையான மின்சார அளவும் கூட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பெரும்பாலான வழிமுறைகள் இயற்கையின் சமநிலையைச் சீர்குழைப்பவை. பாதுகாப்பான மாற்று எரிசக்தி மூலம் பெறப்படும் மின்சார அளவானது அத்தனை மனிதர்களின் தேவைக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது.

அணுமின் நிலையம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமானது இயற்கையின் சமநிலைக்குச் சவால் விடுவது. அதனால் ஏற்படும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்வதும் சமாளிப்பதும் மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. நிலக்கரி, பெட்ரோலியம் மூலமாகத் தயாரிக்கப்படும் மின்சார அளவும் மிக அதிக அளவிலானது. இதற்காக வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியும், உறிஞ்சி எடுக்கப்படும் பெட்ரோலியமும் ஏற்படுத்தப் போகும் சமநிலையின்மையை எதிர்கொள்ள வேண்டிய சவாலான நிலையிலும் மனித குலம் இருக்கிறது.

மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி இயங்கும் அலைபேசி போன்ற பல்வேறு மின் சாதனங்களின் பெருக்கங்களும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத மின்சார மற்றும் மின்னணு குப்பைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன. இவற்றின் பின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்ற கவலையும் அச்சமும் சுற்றுச்சசூழல் சமநிலையைப் பற்றி நினைக்கும் போது ஏற்படுகிறது.

பெருகி வரும் மக்கள்தொகைக்கு இவ்வளவு தேவைகள் அவசியம்தான் என்று சொல்லலாம். அதற்காக மிகு நுகர்வு கலாச்சாரத்தை ஆதரித்தால் அது மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு வந்து விடும். உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தியடைந்த நிலையில் இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத பசியையும் பட்டினியையும் எதிர்கொள்ளும் வறுமைகோட்டிற்குக் கீழே உள்ள மக்கள்தான் உலகில் பெரும்பான்மையினராக உள்ளனர். இதற்கு மாறாக மிகு நுகர்வு கலாச்சாரத்தை விரும்பும் மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளனர்.

அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் போக, மிகு நுகர்வுத் தன்மையைக் கைவிடுவது என்பது இந்தப் பூமியைக் காப்பதற்கும், மனித குலம் தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கும் அவசியமாகும். அளவுக்கதிகமான ஒவ்வொரு நுகர்வு பொருளிலும் பூமியின் நன்னீர்ப் பயன்பாடு மறைமுகமாக ஒளிந்திருக்கிறது. அந்தப் பொருளை உருவாக்குவதற்கான எரிபொருளானது பூமியிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அவசியம் மற்றும் அத்தியாவசியம் என்றால் ஒரு பொருளை உருவாக்கியதற்கான சக்தி மற்றும் ஆற்றல் பயன்பாட்டை நியாயப்படுத்தலாம். அதுவே ஒன்றுக்கு மேல் அநாவசியமான இன்னொன்று என்றால் அதற்கான சக்தி மற்றும் ஆற்றல் பயன்பாடானது இயற்கையின் சமநிலையில் உண்டாகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அதை நியாயம் செய்யவே முடியாது.

மனித குலம் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுத் தேவைகளோடு, எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவு அவசியத்தோடு வாழும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதே வளமாகவும் நலமாகவும் இந்தப் பூமியில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வதற்கான சரியான வழிமுறையும் வாழ்க்கை முறையாக அமையும். மனித குலம் இதைப் பரிசீலிக்க வேண்டிய போர்க்கால நெருக்கடியில் தற்போது இருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...