ஒரு துரதிர்ஷ்டசாலியின் வெற்றி
ஒரு மனிதன் முன்னேற நல்ல
குடும்பச் சூழல் அமைய வேண்டும், அனுசரணையான மனைவி அமைய வேண்டும், வெற்றிகரமான அனுபவங்கள்
வேண்டும் என்று பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு.
நிலைமைகள் மாறாக அமைந்தாலும்
ஒரு மனிதரால் வெற்றி பெற முடியுமா? அப்படியும் முடியும் போலிருக்கிறது. இது கதையில்தான்
சாத்தியம் என்கிறீர்களா? வாழ்க்கையிலும் நடைமுறை எதார்த்தத்தில் சாத்தியம் என்பதை நான்
ஒருவரைப் பார்த்துப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
நான் சொல்லப் போகும் சாம்பசிவத்துக்கு
சாதகமான எதுவும் அமையவில்லை. அவர் பிறந்த உடனே அவருடைய அம்மா சில நாட்களில் இறந்து
விட்டார். அப்பா இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டார். சாம்பசிவத்திற்கும்
சித்திக்கும் ஒத்துப் போகவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது
இருக்கும் போது பிரச்சனை முற்றிப் போய் வீட்டை
விட்டே ஓடினார்.
அந்தச் சிறு வயதில் ஏதோ வேலைகள்
செய்து எங்கெங்கோ எப்படியோ பிழைத்துக் கொண்டிருந்தார். எல்லா கெட்டப் பழக்கங்களும்
அவருக்குப் பழக்கமாகத் தொடங்கின. ஒரு திருட்டு வழக்கில் சிக்கிச் சில வருடங்கள் சீர்திருத்த
பள்ளியில் இருந்தார். அங்கிருந்து எப்படியோ படித்து ஒரு மென்பொருள் பொறியாளராக (சாப்ட்வேர்
என்ஜினியர்) ஆனார். இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படியும் ஒரு மனிதனுக்கு நடக்குமா
என்ன? சாம்பசிவத்துக்கு நடந்தது.
சூழ்நிலைகள் எவ்வளவுதான்
சரியில்லை என்றாலும் ஒரு மனிதன் முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பதை நிரூபிக்கலாம்
என்பதைத்தான் சாம்பசிவம் நிரூபிக்கிறாரோ என்று எல்லாருக்கும் தோன்றியது. இனி அவருடைய
வாழ்க்கையில் வசந்த காலம் வந்து விட்டது என்று எல்லாரும் பேசிக் கொண்டோம். அவரும் அப்படித்தான்
அந்த நேரத்தைப் பற்றிப் பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
வசந்த காலம் வந்த அந்த 22
சொச்சம் வயதுகளில் அவர் திகட்ட திகட்ட காதலித்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இனி சாம்பசிவத்துக்கு வானமே எல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவர் செய்த திருமணம்
இரண்டு வருடங்கள் கூட நீடிக்காமல் விவாகரத்தில் போய் முடிந்தது. விவாகரத்து ஆன விரக்தியில்
நான்கு வருடங்களை மதுவைக் குடித்தே வீணாக்கினார். பார்த்து வந்த வேலையில் கவனம் இல்லாமல்
போக அவர் வேலையிலிருந்து தூக்கப்பட்டார்.
இனி சாம்பசிவம் அவ்வளவுதான்
என்று எல்லாரும் முடிவு கட்டி விட்டோம். நிஜமாக அப்போதைய நிலைமை அப்படித்தான் இருந்தது.
மது அருந்துவதற்காக அவர் பிச்சை எடுத்தார். உணவகத்தில் எச்சில் இலைகளை எடுத்துப் போடும்
வேலை பார்த்தார். பணம் தருவதாகச் சொன்னால் எந்த வேலையைச் செய்யவும் தயாராக இருந்தார்.
அந்த அளவுக்கு அவருடைய புத்தி மதுவால் மழுங்கியிருந்தது.
சாம்பசிவம் மதுவைக் குடித்துக்
குடித்தே சாகப் போகிறார் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் ஒரு
நாள் மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வந்தார். அவரை விவாகரத்து செய்தவரும் அவரது காதல்
மனைவியாக இருந்தவருமான அந்தப் பெண் அவர் இருந்த நிலைமையை எதேச்சையாக நடந்த சந்திப்பில்
ஏளனமாகப் பார்த்தது அவர் மனதை ஏதோ செய்து விட்டது. வாழ்க்கையில் இனிமேல் உருப்படியாக
எதையாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
அந்தப் பெண்ணுக்காகத்தான்
அவர் குடித்துக் குடித்தே தன்னை அழித்துக் கொள்வதாக அடிக்கடிக் கூறிக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்தப் பெண்ணோ சந்தோஷமாக இருந்து கொண்டு அவரை ஏளனமாகப் பார்த்த போது தான் மட்டும்
ஏன் கவலையோடு அவளுக்காகத் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றி விட்டதாக
அவர் சொன்னார். அவரது தொழில்நுட்ப மென்பொருள் மூளை மீண்டும் வேலை செய்யத் துவங்கியது.
அந்த நேரத்தில் அவருக்கு
இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உண்டாகியிருந்தது. தன்னுடைய மென்பொருள் மூளையையும், இயற்கை
மீதான ஆர்வத்தையும் ஒருங்கிணைத்து இயற்கை வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும்
நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த நேரம் கொரோனா பெருந்தொற்று வந்து ஆரம்பித்த
நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதாகி விட்டது.
சாம்பசிவம் சோர்ந்து விடவில்லை.
ஆனால் நிறுவனம் இப்படியாகி விட்டதே என்ற வேதனை கொஞ்சம் அவருக்கு இருந்தது. லேசான விரக்தியும்
அவர் மனதில் இருக்கத்தான் செய்தது.
இதில் தோற்றால் என்ன இன்னொன்றை
ஆரம்பித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் அவருக்குள் எட்டிப் பார்த்தது. சாம்பசிவம்
ஒரு வகை சூதாட்ட செயலியை (ஆப்) உருவாக்கி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
விட்ட இடத்தைப் பிடிக்கக் கூடிய நிலைக்கு வந்த போது, அதில் ஏதோ பிரச்சனையாகி சில மாதங்கள்
புழல் சிறையில் இருந்தார். மீண்டும் சாம்பசிவத்துக்குக் கட்டம் சரியில்லை என்று எல்லாரும்
பேசத் தொடங்கிய நேரம் அது.
இதற்கு மேல் சாம்பசிவம் எழுந்திருக்க
முடியாது என்று நினைத்த போது, சிறையை விட்டு வெளியே வந்தவர் சுணங்கி விடவில்லை. சில
நாட்கள் சரக்கு அடித்து விட்டு நடுசாலையில் விழுந்து கிடந்தாலும், எழுந்து நிற்பதற்கான
எதையாவது செய்து கொண்டிருந்தார். பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களை (செகண்ட் ஹேண்ட்)
வாங்கி விற்கும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தத் தொழில் ஆரம்பத்தில் போக்குக்
காட்டி பிற்பாடு அவருக்கு நன்றாக ஒத்து வந்தது.
சாம்பசிவத்தை மீண்டும் காதல்
துரத்த ஆரம்பித்தது. அவர் நிறுவனத்தில் அவர் பார்த்து வேலைக்கு வைத்தப் பெண்ணையேக்
காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய இந்தத் திருமணம் இரண்டு வருடமா, மூன்று
வருடமா என்று எல்லாரும் ஆருடம் பார்த்துக் கொண்டிருந்த போது சாம்பசிவம் குழந்தை குட்டிகளோடு
உற்சாகமாக இயங்கத் தொடங்கினார்.
இப்போது ராயல் என்பீல்ட்
டீலர்சிப் வாங்கி ஒரு விற்பனையகத்தையும் துவங்கியிருக்கிறார். மகிந்திரா வாகனங்கள்
விற்பனையகத்துக்கான டீலர்சிப் வாங்கி அதையும் வைத்திருக்கிறார்.
மனிதர் இப்போது படு சுறுசுறுப்பாக
இருக்கிறார். நான் சாம்பசிவத்தைச் சந்தித்த போது இதிலும் அடி சறுக்கினால் என்ன செய்வீர்கள்
என்று சாம்பசிவத்தைக் கேட்டேன். இன்னொன்று ஆரம்பித்துக் கொள்வேன் என்றார் அசால்ட்டாக.
அப்படி ஒரு நிலை வந்தால் எதை ஆரம்பிப்பீர்கள் என்று கேட்டேன். அது ஆரம்பிக்கும் போதுதான்
எனக்கே தெரியும் என்றார் மனிதர் படு சோக்காக.
ஒவ்வொரு முறை சறுக்கும் போதும்
உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்றார். இதென்னடா
கூத்தாக இருக்கிறதே என்றால் சறுக்கினால்தானே எழுந்திருக்க முடியும், சறுக்காமல் எழுந்திருப்பதைப்
போலப் பாவனை செய்ய முடியாதே என்று சொல்லிச் சிரிக்கிறார். சறுக்குவதும் எழுவதும் எவ்வளவு
மகிழ்ச்சி தரும் விளையாட்டு தெரியுமா என்கிறார். அது அப்படித்தானா? சாம்பசிவம் அப்படித்தான்
சொல்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எனக்குத் தெரிந்த வரையில்
சாம்பசிவத்துக்கு இப்போதுதான் நல்ல குடும்பச் சூழல் அமைந்திருக்கிறது. அதற்கு முன்பு
வரை அவரது குடும்பச் சூழல் சூறாவளியும் சுனாமியுமாகவே இருந்தது. அவருக்கு அமைந்த சந்தர்ப்பங்களும்
நேர்மறையாக இருந்திருக்கவில்லை. நிறைய எதிர்மறையான சம்பவங்களாகவே இருந்தன. அதிர்ஷ்டமும்
அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துரதிர்ஷ்டமும், சீர்திருத்த
பள்ளிக்குப் போகும் அளவுக்குச் சூழ்நிலைகளும், ஒரு வெற்றி பெற்றால் இன்னொரு தோல்வியால்
சூழப்படும் அளவுக்கு நெருக்கடிகளோடும்தான் அவர் இருந்தார்.
ஆனால் அவர் தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இப்போதும் எதையாவது புதிது புதிதாக முயன்று பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறார். அப்படி முயல்வதில் முக்கால்வாசிக்கு மேல் தோல்விதான் காண்கிறார்.
அது அவருக்குப் பொருட்டாகப் படுவதில்லை. அவரைப் பொருத்த வரையில் வெற்றியோ, தோல்வியோ
புதிது புதிதாக எதையாவது முயன்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
சில நேரங்களில் தோல்வியால்
முடங்கிப் போய் மதுவுக்கு அடிமையாகித்தான் போகிறார். அப்படி ஆனாலும் எப்படியும் அதிலிருந்து
மீண்டு வந்து பல மாதங்கள் மதுவை மறந்து எதையாவது சாதிக்கும் வரையில் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
சாம்பசிவத்தின் சூழ்நிலைகள்
எப்போதும் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் அசௌகரியங்கள் சூழ்ந்ததாகத்தான் இருக்கின்றன.
இப்போதும் ராயல் என்பீல்ட் சர்வீசில் திருப்தி இல்லையென்று தினம் தினம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்
வருகிறது என்கிறார். அத்துடன் சாம்பசிவம் என்ன சொல்கிறார் என்றால் அது பாட்டுக்கு அது
இருக்கட்டும், நான் பாட்டுக்கு எனக்குத் தோன்றுகிறதைச் செய்து கொண்டிருக்கிறேன், அதற்கும்
எனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இந்தக் குணம்தான் அவரைத் தளராமல் நடை போடச் செய்து
வெற்றியை அடையச் செய்கிறதோ என்னவோ!
இப்படி நம்மைச் சுற்றி எத்தனை
சாம்பசிவம்கள்? நீங்களும் ஒரு சாம்பசிவமாக அவருக்கு நேர்ந்த சம்பவங்கள் உங்களுக்கு
உத்வேகமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள். அது மற்றவர்களுக்கும்
உத்வேகம் தரலாம்.
*****
No comments:
Post a Comment