29 Feb 2024

‘நிதி குறித்த நீதிகள்’ – நிதி நிர்வாகப் பால பாடம்

‘நிதி குறித்த நீதிகள்’ – நிதி நிர்வாகப் பால பாடம்

பணத்தை மேலாண்மை செய்வதற்கான நியதிகளை ‘நிதி குறித்த நீதிகள்’ எனலாம். தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட நிதியை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம். அதன் சாதகங்களும் பாதங்களும் அவருக்குத்தான். தனிப்பட்ட ஒருவர் குடும்ப நபராகும் போது அதில் பொதுப்படைத்  தன்மைகளும் வெளிப்படைத் தன்மைகளும் அனைவரது கருத்துகளின் ஒருங்கணைந்த பரிசீலனைகளும் தேவைப்படுகின்றன. இது ஒவ்வொன்று குறித்தும் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

வெளிப்படைத் தன்மை

குடும்பமாகி வரவு – செலவுகளை மேற்கொள்ளும் போது அது குறித்த வெளிப்படை தன்மை மிகவும் அவசியம். இந்த வெளிப்படைத் தன்மைக்கு மனம் திறந்த பேச்சு தேவை.

பணம் குறித்துப் பேசத் தொடங்கினால் ஒரு குடும்பத்தில் பிரச்சனைகளும் மன தாபங்களும் ஏற்படுகின்றன என்றால் அந்தக் குடும்பமானது பணத்தை அறிவுப்பூர்வமாக நிர்வகிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படியானால் அந்தக் குடும்பம் பணத்தை எப்படி நிர்வகிக்கிறது என்றால் உணர்வுப்பூர்வமாக நிர்வகிக்கிறது அல்லது மனம் போன போக்கில் எல்லாம் நிர்வகிக்கிறது எனலாம். இவ்வகைப் போக்கு நிதி நிர்வாகத்தில் மிகவும் ஆபத்தான போக்காகும். விரைவில் அந்தக் குடும்பம் நிதி நிர்வாகத்தை அறிவுப்பூர்வமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நிதியை அறிவுப்பூர்வமாக நிர்வகிப்பதற்கான முதல்படி குடும்பத்தின் வரவு – செலவைப் பட்டியலிடுவதுதான். பட்டியல் மூலம் எவ்வளவு வரவு வருகிறது, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடலில் சில வரம்புகள் இருக்கின்றன. வரவை விட செலவு அதிகமாகி விடக் கூடாது. எதிர்கால வரவைக் கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் கடனைப் பெருக்கி விடக் கூடாது. இந்த இரு வரம்புகளுக்கு உட்பட்டுதான் குடும்ப வரவு – செலவு திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

பொதுப்படைத் தன்மை

குடும்ப வரவு – செலவு திட்டத்தை உருவாக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்து அனைவரது கருத்துகளையும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவர் கருத்துக்கும் மதிப்பளித்து அனைவரது ஒப்புதலோடும் வரவு – செலவில் சில பொதுவான விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் குடும்ப நிதி நிர்வாகத்தின் பொதுப்படைத் தன்மை.

குடும்ப வரவு – செலவு எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான பொதுப்படைத் தன்மை உருவாகி விட்டால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வரவுகள் – செலவினங்கள் எப்படி அமைந்திருக்கும் என்பதோடு இனி எப்படி அமையும் என்பதை ஒவ்வொருவரும் அறுதியிட்டுக் கூற இயலும். இதனால் வரவு எப்படி இருக்கும், செலவு எப்படி இருக்கும் என்பது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்தப் பொதுப்படைத் தன்மை உருவான பின்பு குடும்ப உறுப்பினர்களின் தேவைகளும் விருப்பங்களும் கூட வரவு – செலவிற்கேற்ப செவ்வனே மாற்றம் பெறும்.

கருத்துகளின் பரிசீலனைகள்

குடும்ப அமைப்பில் பணம் குறித்த கொடுக்கல் – வாங்கல் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பணம் சார்ந்த உதவுதல், கடன் கொடுத்தல், கடன் வாங்கல், கைமாற்று, வங்கி பரிவர்த்தனைகள், முதலீட்டு விவரங்கள் என அனைத்தையும் ஒவ்வொரு நாளும் கூடிப் பேசுவது நல்லது. இது குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நிதி குறித்த அசட்டையான மனநிலையோடு இருப்பதைத் தவிர்க்க முடியாது.

ஆரம்பத்தில் இது குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கும். போகப் போக இந்தப் பேச்சும் விவாதமும் அற்புதமான யோசனைகளைக் கொண்டு தருவதாக மாறி விடும். எல்லாவற்றிலும் துவக்கமும் சிறிது கால தொடர்ச்சியும் கடினமே. அந்தக் கடினத்தைக் கடந்து விட்டால் அதன் சுலபத்தையும் அற்புதத்தையும் எண்ணி ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் இழப்போ, திடீரென ஏற்படும் விபத்தோ குடும்ப நிதி நிர்வாகத்தைச் சிதைத்து விடலாம். அப்படியொரு சிதைவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் வரவு – செலவு மற்றும் கொடுக்கல் – வாங்கல் குறித்த ஆரோக்கியமான உரையாடல்களும் விவாதங்களும் ஒவ்வொரு இரவும் குடும்பத்தில் நடைபெற வேண்டும்.

நிதி நிர்வாகம் குறித்த ஒவ்வொருவரின் கருத்துகளையும் ஆரோக்கியமாகப் பரிசீலிக்க வேண்டும். அனுபவத்தின் அடிப்படையிலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பேச்சும் விவாதமும் அற்புதமான வாய்ப்புகளை உண்டாக்கும். இந்த அனுபவப் பகிர்வே வளரும் தலைமுறையின் பொருளாதார நிர்வாகத்திற்கான ஆதார நீராகும்.

பலாபலன்களின் பெருக்கம்

கொடுக்கல் – வாங்கல் குறித்த வெளிப்படையான பேச்சுகளும் விவாதங்களும் பல தவறான நிதி அணுகுமுறைகளைத் தடுத்து விடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்த ஒரு கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இந்தப் பேச்சும் விவாதமுமே அற்புதமான கல்விமுறையாகவும் ஆராய்ச்சி முறையாகவும் செயல்படும்.

குடும்பத்தில் ஒருவருக்குத் தோன்றாத அற்புத யோசனை இன்னொருவரிடமிருந்து வந்து அதைச் செயல்படுத்தும் போது உங்களது பண சேமிப்பும் பணப் பெருக்கமும் ஆச்சரியம் தரக் கூடியதாக இருக்கும். கருத்துகளின் பரிசீலனைகள் நடைபெறும் போதே இந்த அற்புத வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

நிறைவாக…

‘நிதி குறித்த நீதிகள்’ என்ற இப்பத்தி உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றலாம். இந்தச் சாதாரணத்தைத் தவற விடுவதே அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள இயலாமல் செய்து விடுகிறது.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வரவை மிஞ்சி செலவு செய்திருக்கலாம். வரம்பு தெரியாமல் கடன் பட்டிருக்கலாம். நம்பி பணத்தைக் கொடுத்து மோசம் போயிருக்கலாம். தவறான ஒன்றில் முதலீடு செய்து பணத்தை இழந்திருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? குடும்பத்தின் ஆணிவேராகவும் கிளை வேராகவும் இருக்கும் வரவு – செலவு குறித்த விவாதங்களையும் பேச்சுகளையும் பேசாமல் தவிர்த்துக் கொள்வதுதான்.

குடும்பத்தில் நிதி நிர்வாகம் குறித்தும் பேசும் போது நிறைய முரண்பாடுகள், பிரச்சனைகள் ஏற்படலாம். அதைப் பேச்சு மற்றம் விவாத அளவில் சமாளித்து விட்டால் தவறான ஒரு நிதிப் பிரச்சனை ஏற்பட்டு சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடும். அதற்கு நிதி குறித்த நீதிகளை உருவாக்கிக் கொள்ள உதவும் மூன்று கூறுகளான

Ø வெளிப்படைத் தன்மை

Ø பொதுப்படைத் தன்மை

Ø கருத்துகளின் பரிசீலனை

ஆகிய மூன்றும் எப்போதும் துணை நிற்கும்.

*****

28 Feb 2024

இலக்கியம் என்ன செய்யும்? சால்வையைத் தூக்கி வீசும்!

இலக்கியம் என்ன செய்யும்? சால்வையைத் தூக்கி வீசும்!

நடிகர் சிவக்குமாரைப் பற்றி இந்தத் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சூரியா மற்றும் கார்த்தியின் அப்பா என்று சொன்னால்தான் புரியும்.

சுயபடம் எடுக்க முயன்ற அன்பர் ஒருவரின் அலைபேசியைப் பிடுங்கி வீசியவர், சால்வை அணிவிக்க வந்த அன்பரின் சால்வைத் தூக்கி வீசியவர் என்று சொன்னால் அவரைப் பற்றி உங்களுக்கு உடனடியாக ஞாபகம் வரலாம்.

அவர் ஒரு நடிகர் மற்றும் ஓவியர். புரான படங்களில் முருகனாக நடித்திருக்கிறார். கதை நாயகராக, குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தற்போது இலக்கியப் பேச்சாளர்.

நடிகரிலிருந்து இலக்கியப் பேச்சாளராக அவருடைய வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டதைத் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். சிவக்குமார் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும், தன்னால் அப்படி சரியான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் கூடுதலாக வெளியிட்டிருந்தார்.

சிவக்குமார் சாதாரண இலக்கியப் பேச்சாளர் அல்லர், மூன்று மணி நேரத்திற்குக் கூட மூச்சு விடாமல் பேசக் கூடிய நினைவாற்றல் உள்ளவர். யோகா அப்பியாசங்கள் கூட செய்யக் கூடியவர்.

ஓர் இலக்கியக் கூட்டத்தில் அன்பர் போட்ட சால்வையைத் தூக்கியெறிந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்.

ஏன் சால்வையைத் தூக்கிப் போட வேண்டும்?

பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

இதே போல சுயபடம் எடுக்க முயன்ற அன்பரின் அலைபேசியை வீசியெறிந்த சம்பவத்துக்கும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.”

இந்தக் குறளைப் படிக்காமலா இருந்திருப்பார் சிவக்குமார்? படிப்பதால் மட்டும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் மனப்பாடம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பர். அதனால் என்ன பயன்? ஒரு குறளைத் தெரிந்து கொண்டாலும் அதை வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ளும் போதுதான் இலக்கியம் தன் நோக்கத்தை அடைகிறது.

சால்வையைத் தூக்கி எறிவதற்கும், அலைபேசியை வீசியெறிவதற்கும் இலக்கியம்தான் என்ன செய்யும்? அது வழிகாட்ட மட்டுமே செய்யும். அந்த வழியில் நாம்தான் நடந்து செல்ல வேண்டும். இலக்கியமே கை பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. படித்தவர்கள் நாகரிகமானவர்கள் என்று கருதவும் வேண்டியதில்லை. படிக்காதவர்கள் அநாகரிகமானவர்கள் என்று கருதிக் கொள்ளவும் வேண்டியதில்லை.

*****

26 Feb 2024

அந்த இடம் & அக்கௌண்டைக் குளோஸ் பண்ணு

அக்கௌண்டைக் குளோஸ் பண்ணு

பணத்தை ஏ.டி.எம்.மில் போய் எடுத்துக் கொள்ளு கெழவி என்றார் கேஷியர் தன்னுடைய பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுப்பதைப் போல எரிச்சலாக.

எமக்கு அந்தக் கருமம் பிடிச்ச மிஷின்ல எடுக்க தெரிஞ்சா நாம்ம ஏம்டா உம்மகிட்டெ வர்றேம் என்றது கிழவி உன் பேச்சுக்கு என்னுடைய பேச்சு கொஞ்சமும் சளைத்தது இல்லை என்பது போல.

அதெல்லாம் முடியாது, போயி அங்கேயே எடுத்துக்கோ எனப் பிடிவாதம் காட்டினார் கேஷியர்.

வரிசையில நின்னு நொம்பலப்பட்டுப்புட்டு இப்போ போயி காசை அங்கே எடுத்துக்குன்னு சொல்றீயே ஞயாமா என்றது கிழவி.

ஐயோ உங்கிட்டெ பதில் சொல்லிட்டு இருந்தா இங்கே வேலை ஆகாது, எடத்தைக் காலி பண்ணு என்றார் கேஷியர்.

கிழவி இனி கிளம்பி விடும் என்பது கேஷியரின் நினைப்பு. கிளம்புகிற கிழவியா அது?

அப்படின்னா கணக்கை முடிச்சு குளோஸ் பண்ணிக் கொடு. நான் கையில வெச்சுக்கிட்டெ இனுமே சிலவே பண்ணிக்கிறேன். ஒங்கிட்டெ வந்து எங் காசை எடுக்குறதுக்கு நாம்ம ஏம் அலமலந்து போவணும்? என்றது கிழவி.

இதென்னடா புது பிரச்சனை என்று கேஷியர் கிழவியின் அக்கௌண்டைப் பார்த்தார். அவருக்கு மூச்சை அடைத்தது. பணம் பதினான்கு லட்சத்து முப்பத்து நான்காயிரத்து அறுபத்து ஏழு ரூபாய் இருந்தது.

இந்தக் கணக்கை முடித்துக் கொடுத்தால் மேனேஜரிடம் யார் திட்டு வாங்குவது என்று கிழவியைப் பார்த்துக் கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வீசினார் கேஷியர்.

சீக்கிரம் கணக்கை முடிச்சுக் கொடு ராசா. நேரமாவுது பாரு. ஒம்மட வேலையும் கெடக் கூடாது. எம்மட வேலையும் கெடக் கூடாது என்றது கிழவி விட்டேத்தியான சிரிப்பை வீசியபடி.

அது வந்துங்க பாட்டிம்மா… என்று மரியாதையான தொனிக்கு மாறி கிழவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று மனசுக்குள்ளே கணக்கு போட ஆரம்பித்தார் கேஷியர்.

*****

அந்த இடம்

அந்த இடத்திற்கு வரும் போது தனபாலுக்கு நெஞ்செல்லாம் அடித்துக் கொள்கிறது. திட்டைமங்கலத்துப் பேங்க் பக்கத்தில் இருக்கும் டீக்கடை ஓரம். பக்கத்தில் நோஞ்சான் போல உயிரைக் கையில் பிடித்துக் கொண்டபடி வளர்ந்து நிற்கும் ஒரு புங்கன் மரம். மரநடுவிழா என்று யாரோ நட்டு வைத்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

ரோட்டுப் பக்கம் தார். வீட்டுப் பக்கம் சிமெண்டைப் போட்டு மண் தெரியாமல் பூசி வைத்திருந்தார்கள். இதற்கு இடையே கொஞ்சம் மண்ணைக் காட்டிக் கொண்டிருந்த அரை அடி இடத்தை எதற்கு வீணாக்க வேண்டும் என்று அங்கே அந்த புங்கனை நட்டிருந்தார்கள். நட்டது வீண் போகாமல் அதுவும் ஒரு சவலைப் பிள்ளையைப் போல வளர்ந்திருந்தது.

டீக்கடைக்கும் புங்கனுக்கும் இடையில் இருந்த அந்த இடத்தில் நின்று ஒரு ஜாமீன் போட்டுத் தரக் கூடாதா என்று கெஞ்சிய சந்தானத்தைப் பார்த்த போது பாவமாக இருந்தது தனபாலுக்கு.

எவ்வளவோ கஷ்டம் வந்திருக்கு. ஒரு பைசா கடன் வாங்குனது இல்ல. பல்லைக் கடிச்சிட்டு ஓட்டிடுவேன். அதான் யோசனையா இருக்கு, என்றார் தனபால்.

அட நான் என்ன உங்கள கடன் வாங்கியா தரச் சொல்றேன்? உங்ககிட்டெ கடனா நையா பைசா கேட்கலியே. ஒரு கையெழுத்தைப் போட்டா பேங்க்காரன் கடன் தரப் போறான். வாங்குன கடனை மாசா மாசம் கட்டி அடைச்சிடப் போறேன். உங்களுக்குத் துளியூண்டு சிரமம் கூட இருக்கப் போறதில்ல. ஏதோ ஒரு உபகாரம் எனக்குப் பண்ணினதா இருக்கட்டுமே, என்றார் சந்தானம்.

தனபாலுக்குத் தயக்கம் தீர்ந்தபாடில்லை. இது வேண்டா வினையாகி எங்கேயாவது போய் முடிந்தால் என்ன செய்வது என்ற பயம் வேறு. என்ன வார்த்தை சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

என்னங்க நாமெல்லாம் அப்படியாவா பழகியிருக்கோம்? வாங்குன கடனைக் கட்டாம ஒங்க தலையிலயா கட்டிடப் போறேன்? கட்டாமத்தான் கண்காணாத தேசத்துக்கு ஓடிடவாப் போறேன்? அதுவும் உங்கப் பணத்தையா கேக்குறேன்? என்னவோ பேங்க்காரன் இப்படியெல்லாம் பார்மாலிட்டிஸ் வெச்சிருக்கான். நீங்க ஒரு கையெழுத்த ஜாமீனா போட்டா நாளைக்கே பணத்தை அக்கௌண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணிடப் போறான், என்று விடாமல் பிடியைப் போட்டார் சந்தானம்.

எனக்கென்னவோ நாமளும் கடன் வாங்கக் கூடாது, சுத்தி இருக்குறவங்களும் கடன் வாங்கக் கூடாதுன்னு ஒரு நெனைப்பு, என்றார் தனபால்.

அப்படீங்றீங்களா? அப்போ நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அதுக்கு மேல ஆண்டவனோட சித்தம். விளக்கெண்ணெய்ய தடவிட்டு மண்ணு தரையில பொரண்டாலும் ஒட்டுறதுதானே ஒட்டும். நமக்கு ஒட்டுறது அவ்வளவுதான் போலருக்கு, என்றார் சந்தானம்.

தனபாலுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அந்த ஒரு நொடியில் சந்தானம் சொன்ன வாக்கியம் அவரை என்னவோ செய்தது. நெஞ்சைப் பிசைந்தது. என்ன ஒரு கையெழுத்துதானே என்ற துணிச்சல் எங்கிருந்துதான் வந்ததோ, கொடுங்க அதெ என்று வாங்கிக் கையெழுத்தைப் போட்டு விட்டார்.

இப்போது சந்தானம் வீட்டுக்குத் தனபால் நடையாய் நடக்கிறார். தவணைத் தொகையைக் கட்டலைன்னு நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பிக்கிட்டு இருக்கான் பேங்க்காரன்னு கவலையோடு சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

அப்போது அவ்வளவு குழைவாகப் பேசிய சந்தானம் இப்போது எதற்கும் மசிகிற ஆளாகத் தெரியவில்லை. ஏம்ய்யா பணத்தை வெச்சுக்கிட்டு நாம்ம என்னப் பண்ணப் போறேம்? இருந்தா கட்டாம இருப்பேனா? பணம் வந்ததும் கட்டிடுறேன்யா, என்கிறார்.

அதுக்குள்ள எஞ் சொத்தெ ஜப்தி பண்ணிடப் போயிடுவான் போலிருக்கே, என்கிறார் பதறியபடி தனபால்.

என்னய்யா எப்ப பார்த்தாலும் வந்து இதெ தொணதொணப்பா இருக்கு. மனுஷனக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு விடுறீயாய்யா? என்றார் சந்தானம்.

தனபாலுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அப்படியே ஆடிப் போய் விட்டார். இப்போதெல்லாம் அவருக்குத் தூங்க முடிவதில்லை. ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டில் கைது செய்யப் படுவதைப் போலவே கனவு வந்து கொண்டிருக்கிறது. நிஜமா ஒரு நாள் வந்து கைது பண்ணிட்டுப் போனா கூட பரவாயில்லை என்று நெஞ்சில் அடித்துக் கொள்கிறார். அவராகக் கற்பனை பண்ணிக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்.

வீட்டுக்கும் ரோட்டுக்கும் போகிற வழியில் அந்த இடத்தில் பார்க்கும் போது சந்தானமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்.

புங்கன் வர வர வாடிக் கொண்டே போகிறது. வீட்டுப் பக்கம் சிமெண்டின் காங்கல். ரோட்டுப் பக்கம் தாரின் வெம்மை. அந்தப் புங்கனை விட மனப்புழுக்கம் தாங்காமல் அதிகம் வாடிக் கொண்டிருக்கிறார் தனபால். மகன் பிராகரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்துக் கேட்டாலும் ஒரு பயம். போடா போ, அம்மாகிட்டே வாங்கிக்கிடா என்று விரட்டி அடித்து விடுகிறார்.

*****

25 Feb 2024

புத்தகங்களுக்குத் தண்ணீரில் கண்டம்!

புத்தகங்களுக்குத் தண்ணீரில் கண்டம்!

சென்னை புத்தகக் கண்காட்சிதான் தமிழ்நாட்டுக்குப் பெரிய புத்தகக் கண்காட்சி. 2023 உடன் சென்னைக்குத் தண்ணீரில் இருக்கும் கண்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைத்தால் அதுதான் இல்லை. சென்னையைப் பீடித்த கண்டம் 2024 சென்னை புத்தகக் கண்காட்சியையும் பீடித்து விட்டது. கண்காட்சி அரங்கின் கூரைகளைத் தாண்டி அரங்கிற்குள்ளும் பெய்திருக்கிறது மழை. பதிப்பாளர்கள் பாவம். புத்தகங்களை நனைத்துத் துவைத்துக் காயப் போடவே நேரம் சரியாக இருந்திருக்கிறது. அதற்கு முன்பு சென்னை பெருவெள்ளம் வந்து பல பதிப்பாளர்கள் பல லட்சம் மதிப்பில் புத்தகங்களை வெள்ளத்தில் இழந்திருந்தார்கள். முன்பு வெள்ளம். இப்போது மழை. நிச்சயம் இது தண்ணீரில் கண்டம்தான்.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் சில ஆண்டுகள் சென்று வந்திருக்கிறேன். சமீப ஆண்டுகளாகச் செல்வதில்லை. பெரும்பாலும் புத்தகக் கண்காட்சிகள் பொங்கல் நேரத்தில் நடைபெறுவதால் வெளிமாவட்டங்களிலிருந்து பேருந்து பிடித்து சென்னைக்குப் போய் வருவது என்பது சாப விமோசனம் போன்றது. ஏன் சபிக்கப்பட்டு பின்பு விமோசனத்திற்காக ஏங்கி நிற்க வேண்டும் என்று இப்போதெல்லாம் தவிர்த்து விட்டேன். மாவட்டந்தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

போகாவிட்டாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? சென்னைப் புத்தகக் கண்காட்சிகள் பற்றி வரும் செய்திகளை ஆர்வமோடு அறிந்து கொள்கிறேன். அப்படி நான் அறிந்து கொண்ட சில செய்திகள்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் நாற்றம் அடிப்பதாக இருக்கிறதாம். அதனால் பலர் கழிவறைப் பக்கமே போவதில்லையாம். மல ஜலம் வந்தால் போகாமல் இருக்க முடியாதே. கழிவறைப் பக்கமே யாரும் போகக் கூடாது என்பதற்காக இந்த எற்பாடோ என்னவோ? அவரவர் நாற்றங்களை அவரவரே சுமந்து கொள்ளுங்கள் என விட்டு விட்டார்களோ என்னவோ!

உணவு விலையும் பயங்கரமாக இருக்கிறதாம். அறிவுப்பசிக்கு வந்திருப்பவர்களுக்கு வயிற்றுப் பசி எதற்கு என்று நினைத்திருப்பார்கள் போலும். சிற்றுண்டிகள் விலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லையாம். எல்லாம் தாறுமாறு தக்காளி சோறு.

நடந்து நடந்து கால் வலித்தால் உட்கார நாற்காலி இல்லையாம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சபதிமலை யாத்திரை போல நடந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

புத்தகம் வெளியிடும் பதிப்பாளர்களுக்கு அரங்கங்கள் ஒதுக்கப்படுகிறதோ இல்லையோ, வணிக நிறுவனங்களுக்கு அரங்கங்கள் கட்டாயம் ஒதுக்கப்படுகின்றனவாம். கண்காட்சி என்பது புத்தக வணிகம் என்பதால் வணிகத்திற்கும் அரங்கங்கள் இருக்கட்டும் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அரசியல்தான். தமிழர்களுக்கு அரசியல் அறிவு ரொம்பவே அதிகம். அதே அரசியலைப் புத்தகக் கண்காட்சியிலும் செய்கிறார்கள்.

நாட்டின் அரசியல் என்னவெல்லாம் செய்கிறது? விலைவாசியை உயரச் செய்கிறது, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குகிறது, சுகாதாரத்தை அலட்சியமாகக் கையாள்கிறது, பெருநிறுவனங்களுக்கு சம்பாத்தியத்திற்கான வழிகளைக் காட்டுகிறது. அதையேத்தான் புத்தகக் கண்காட்சியின் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள்.

உணவு மற்றும் சிற்றுண்டியின் விலை வருடந்தோறும் அதிகரிக்கிறது, நல்ல பதிப்பாளர்கள் அரங்கங்களுக்காகத் திண்டாட வேண்டியிருக்கிறது, கழிவறைகளை நாற்றம் அடிக்கச் செய்கிறது, புத்தகத்தோடு சம்பந்தம் இல்லாத வணிக நோக்கிலான நிறுவனங்களுக்கு அரங்கங்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. அரசியல் என்ற வார்த்தையை எவ்வளவு அசுத்தப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள். அசுத்தத்தைச் சுத்தம் என்றா சொல்ல முடியும்?

*****

24 Feb 2024

தேர்தல் செலவுகளை ஏன் மேலும் ஒழுங்குபடுத்தக் கூடாது?

தேர்தல் செலவுகளை ஏன் மேலும் ஒழுங்குபடுத்தக் கூடாது?

தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் முடிந்த உடன் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய சொல்கிறது. போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக் கணக்கு விவரங்களையும் வேட்புமனுவில் குறிப்பிடச் சொல்கிறது. இவை அனைத்தும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள்.

இருப்பினும் ஒரு வேட்பாளர் வழங்கும் தேர்தல் செலவு கணக்கு என்பது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையது என்ற கேள்வி எழாமல் இருக்காது. பொதுவாக நடைமுறையில் செலவைக் குறைவாகச் செய்து விட்டு அதிகமாகக் காட்டும் வழக்கம்தான் உண்டு. ஆனால் தேர்தல் செலவு கணக்கில் இது உல்ட்டாவாக அமையும். அதிகச் செலவைச் செய்து விட்டு, குறைவான செலவு கணக்கையே வேட்பாளர்கள் தாக்கல் செய்வார்கள்.

இந்தத் தேர்தல் செலவுக் கணக்கை முறைபடுத்த ஏதேனும் வழிகள் இருக்காதா? நிச்சயம் இருக்கின்றன. ஆட்சியாளர்கள் நம்மை மின்னணு பரிவர்த்தனை எனும் டிஜிட்டல் டிரான்ஸாக்சனுக்கு மாறச் சொல்லி எவ்வளவு வலியுறுத்துகிறார்கள். நாட்டில் எல்லாம் மின்னணு பரிவர்த்தனை எனும் டிஜிட்டல் மயம் என்றால் தேர்தல் செலவுகளையும் ஏன் அதே முறையிலேயே செய்யக் கூடாது? அப்படிச் செய்தால் மிகச் சுலபமாக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை மிக துல்லியமாகக்  கணக்கிடலாம்.

தேர்தல் பத்திரம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் மூலமாக நன்கொடைகளைப் பெறுகின்றன. உண்மையில் இது சரியானதா? நிறைய லாபம் கொழிக்கும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகள் வழங்குகின்றன. நிறுவனங்கள் இதை எதற்காகச் செய்ய வேண்டும்? ஆதாயம் இல்லாமல் எதற்காக ஆற்றைக் கட்டி இறைக்க வேண்டும்? இது ஒரு கட்சியை நம்பி, அதன் தேர்தல் வெற்றியை நம்பி நிறுவனங்கள் செய்யும் லாப நோக்கிலான அச்சாரம். ஒரு கட்சிக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளிக்கும் போது, அந்தக் கட்சி ஆளுங்கட்சியாக அமையுமானால் அரசு ஒப்பந்தங்களைப் பெற முன்பணம் போல இந்தத் தேர்தல் பத்திர நன்கொடைகள் ஆகின்றன என்பதுதான் நிதர்சனம். இத்தகைய நடைமுறை வாக்களித்துத் தேர்ந்தேடுக்கும் ஜனநாயக அமைப்பு முறையையே கேலிக்கூத்தாக்கி விடும். மக்களுக்காக இயங்க வேண்டிய ஆட்சியமைப்பை, நிறுவனங்கள் இயக்கும் ஆட்சியமைப்பாகவும் உருவாக்கி விடும்.

கணக்கில் வராத பணம் தேர்தல் பத்திரங்களாக மாற்றப்படுகிறது என்ற கருத்தும் நாட்டில் நிலவுகிறது. கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் வெளியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கருப்புப் பணத்திற்கு ஒரு வடிகாலை அமைத்து விட வழிகோலி விடக் கூடாது.  

தற்போது வருமான வரித்துறையில் வரிக் கணக்கீடுகளை ஆராய்வதில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது போலத் தேர்தல் வரவு செலவு கணக்குகளை ஆராய்வதிலும் ஏன் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் பயன்படுத்தக் கூடாது? அதற்கேற்ப செலவினங்களை மின்னணு பரிவர்த்தனை மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஏன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது? தற்போது அரசு நிறுவனங்களின் செலவின முறைகளில் இது போன்ற மின்னணு பரிவர்த்தனை முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதே நிலைமையை அரசியல் கட்சிகளின் சொத்து மற்றும் வரவு – செலவு முறைமைகளிலும் கொண்டு வருவதன் மூலம் கணக்கில் வராத பணப்புழக்கத்தையும், முறைகேடான நிதி பெறுதல்களையும் முறைபடுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

நிறுவனங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை முறையான கணக்காளர்களையும் தணிக்கையாளர்களையும் வைத்து கணக்கிட்டு, மிகத் துல்லியமாகத் தணிக்கை செய்து நிதிநிலை முடிவுகளை வெளியிடுகின்றன.

தேர்தல் கட்சிகளும் ஏன் இப்படி ஒரு முறையைப் பின்பற்றக் கூடாது? அரசியல் கட்சிகளின் நிதி திரட்டல்கள் மற்றும் தேர்தல் செலவினங்களுக்கான தணிக்கை முறையை ஏன் தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் இணைந்து அறிவிக்கக் கூடாது?

நாட்டில் எல்லாவற்றிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் போது ஏன் தேர்தல் நிதிகளுக்கும் விதிக்கக் கூடாது? தேர்தல் நடக்கும் போது பெறப்படும் நன்கொடைகளுக்கும், செலவிடப்படும் தேர்தல் செலவினங்களுக்கும் முறையாக ஜி.எஸ்.டி. வரி விதித்தால் அரசின் வருவாயும் பன்மடங்கு பெருகும். நிதிப்பற்றாக்குறையும் தீரும்.

அரசியல் கட்சிகளின் சொத்துகள், நிதி பெறுதல்கள் மற்றும் தேர்தல் செலவுகளை மின்னணு முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலமாக ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். அரசியல் கட்சிகளின் நிதி முறைகேடுகள் மற்றும் பித்தலாட்டங்களை குறைக்கவும் முடியும். அல்லதைக் குறைத்து நல்லதை நிறைக்க இது அருமையான முறை இல்லையா!

*****

22 Feb 2024

பிழைப்பு & வீட்டு மெஸ்

பிழைப்பு

இன்ஜினியரிங் படித்தால் சம்பந்தம் இல்லாத வேலை என்ற நிலைதான் சீனிவாசனுக்கும். சிவில் படித்து விட்டு ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வேலை வெறுத்துப் போய் ஒரு நாள் ராஜினாமா செய்தான். கொஞ்ச நாள் வெட்டியாக அலைந்து கொண்டிருந்தான்.

எத்தனை நாட்கள் இப்படி அலைவது என்று யூடியூப் சேனல் ஆரம்பித்தான். சேனல் பிய்த்துக் கொண்டு போனது. யார் கண் பட்டதோ சில நாட்களிலே கோழிகள், நாய்கள், பூனைகளைக் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி சேனலை முடக்கினார்கள்.

வேறு வேறு பெயர்களில் சேனல்களை ஆரம்பித்துப் பொளந்து கட்டினான். எந்தப்  பெயரில் ஆரம்பித்தாலும் பூச்சி, பறவை, ஊர்வன, நீந்துவன என்று எதையாவது ஒரு பெயரைச் சொல்லி அதைக் கொடுமைப்படுத்துவதாக முடக்கிக் கொண்டே இருந்தார்கள்.

கடைசியில் யாரையும் எதையும் கொடுமைப்படுத்தக் கூடாது என்று தன்னைத் தானே கொடுமைபடுத்திக் கொண்டு ஒரு சேனலை ஆரம்பித்தான். உன்னை நீயும் கொடுமைபடுத்திக் கொள்ள கூடாது என்று அதையும் முடக்கினார்கள்.

வெறுத்துப் போன சீனிவாசன் போங்கடா நீங்களும் உங்கள் சேனலும் என்று அதற்காக வாங்கிய கேமிராவை வைத்துக் கொண்டு இப்போது போட்டோகிராபராகிக் கிராமத்து மக்களுக்குப் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை எடுத்துக் கொடுத்து பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

யாரும் இதுவரை அவன் கேமிராவைக் கொடுமைப்படுத்துவதாகப் புகார் தெரிவிக்காமல் இருப்பதால் அவன் பிழைப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது.

*****

வீட்டு மெஸ்

ஆனந்துக்கு கிராமம் என்றால் அப்படி ஓர் இஷ்டம். படித்துத் தொலைத்து விட்டான். அதை வைத்துக் கொண்டு இந்தக் கிராமத்தில் என்ன செய்வது?

டவுனுக்கோ சிட்டிக்கோ போனால் படித்த படிப்பைச் சொல்லி ஒரு மார்கெட்டிங் வேலையை வாங்கிக் கொண்டு வீடு வீடாக, கடை கடையாக எவன் தலையையாவது தடவலாம். இங்கே கிராமத்தில் எவன் தலையைத் தடவுவது? எல்லார் தலையும் வருமானம் இல்லாத கவலையால் முடி உதிர்ந்து சொட்டையாகவும் வழுக்கையாகவும் ஆகி விட்டது. தடவினால் நான்கு முடி கூட தேறாது.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு எப்படியோ சென்னைப் பட்டணத்துக்கு வந்து டூவீலரில் அலைகின்ற ஒரு வேலையையும் தேடிக் கொண்டு விட்டான். நல்ல சாப்பாட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்.

ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ள மாட்டேன்கிறது. ஒரு நாள் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. மறுநாள் வயிற்றுக் கடுப்பாக இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் பேதியாகப் போய்த் தொலைகிறது. அதற்கும் அடுத்த நாள் வாந்தியாக உவ்வே எடுக்க வைக்கிறது. இந்தப் பட்டணத்துச் சாப்பாட்டோடு போராட்டமாக இருக்கிறது.

பேசாமல் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து விடுவோமா என்ற ஒரு யோசனை. அம்மாவை அழைத்துக் கொண்டு விட்டால் அப்பா என்ன செய்வார் ஒண்டிக் கட்டையாக? அப்பாவையும் அழைத்துக் கொண்டு விட்டால் மூன்று பேர் குடித்தனத்துக்கு ஒரு வீடு, மூன்று பேருக்கும் சாப்பாடு என்று எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்தாலும் பிழைத்துக் கொண்டு விடலாம், சிட்டியில் வேலை இருந்தாலும் பிழைக்க முடியாது.

அம்மாவும் வேண்டாம், அப்பாவும் வேண்டாம் சுயமாகச் சமைக்கலாம் என்றால் இந்த டூவீலர் அலைச்சலில் அதற்கு எங்கே நேரம் இருக்கிறது? சரிதான் என்று ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அது வேறு குழந்தை குட்டி என்று பெருகி விட்டால் அது அதை விட ஆபத்தாகத் தோன்றியது ஆனந்துக்கு.

என்னடா செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த ஆனந்துக்கு அந்தி மசங்கிக் கிடந்த ஒரு பொழுதில் பக்கத்து வீட்டிலிருந்து தொன்னையில் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலும் பேப்பர் கப்பில் பாயாசமும் வந்தன.

என்னடா இந்தச் சென்னைப் பட்டணம் திடீரென இனிக்கிறதென யோசித்தவனுக்கு அந்த வீட்டுக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்ற பதில் மொன்னையாகச் சொல்லப்பட்டது.

சாப்பிட்டுப் பார்த்தவனுக்கு ஆகா என்றிருந்தது. அடடா என்று கூத்தாட வேண்டும் என்பது போலிருந்தது. அப்படியே அம்மாவின் கைமணம், கிராமத்துச் சாப்பாட்டின் பக்குவம்.

குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போவதாகச் சொல்லி மூன்று வேளை சாப்பாட்டுக்கு அந்த வீட்டை ஒரு வீட்டு மெஸ்ஸாக மாற்றி விட்டு வந்தான்.

வீட்டு மெஸ் சாப்பாடு டவுன் வாழ்க்கைக்கு அவனை ஆசுவாசப்படுத்தி விட்டது. கூடவே எத்தனை நாள் வீட்டு மெஸ்ஸில் சாப்பிடுவது, நாமே ஒரு வீட்டு மெஸ்ஸை ஆரம்பித்துச் சாப்பிடலாமே என்ற யோசனையை உருவாக்கி விட்டது.

இப்படி ஒரு யோசனை தோன்றிய பிறகு சும்மா இருக்க முடியாமல் வீட்டைப் பிடித்து அம்மாவையும் அப்பாவையும் குண்டு கட்டாக ஏற்றிக் கொண்டு வந்து வீட்டு மெஸ்ஸை ஆரம்பித்து விட்டான். மார்க்கெட்டிங் வேலைக்கு டாட்டா காட்டி விட்டு டூவீலரை மளிகை சாமான்கள் வாங்கவும் காய்கறிகள் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டான்.

“பாத்தியம்மா! டவுன்ல எப்படியெல்லாம் பொழைப்பு இருக்குது!” என்று அம்மாவையும் அப்பாவையும் ஆச்சரியப்படுத்துவதாகத் தன் சாமர்த்தியத்தை எடுத்து விட்டான்.

“அட போடா! கிராமத்துல நமக்கு மட்டும் சமைச்சுப் போட்டுக்கிட்டு சந்தோஷமா இருந்தேன். இங்கே வந்து என்னான்னா தெனமும் நூத்துப் பேருக்குச் சமைச்சுப்  போட்டுக்கிட்டு பெண்டு கழண்டு போய்க் கிடக்குறேன்.” என்று அம்மா அவன் மூஞ்சில் குத்தியது.

அப்பா என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்று அப்பாவின் பக்கம் முகத்தைத் திருப்பினான்.

“ஏம்டா கொசக்கெட்ட பயலே! நானெல்லாம் ஒங்க அம்மா தண்ணிக் கேட்டா கூட மூஞ்சுலயே ஒரு எத்து விடுவேன். என்னைக் கொண்ணாந்து இங்க எச்சி எலைய பொறுக்க விட்டுட்டியேடா நாதாரி நாயே!” என்றார் அப்பா காறிய எச்சிலைச் சற்றுத் தூரமாகத் துப்பிக் கொண்டு.

ஆனந்துக்கு சர்வ நாடியும் ஒடுங்கியது போலிருந்தது.

*****

21 Feb 2024

மை தீட்டிக் கொள்ளும் மகளும், திரைப்பாடல்களின் ரசிக தகப்பனும்!

மை தீட்டிக் கொள்ளும் மகளும், திரைப்பாடல்களின் ரசிக தகப்பனும்!

திரைப்பாடலாசிரியர்கள் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாடல்களைப் புத்தகங்களாக்கி வெளியிடுகின்றனர். விலை ரொம்பவே அதிகம். அதில் அவர்களுக்கு ஓர் ஆனந்தமும் பெருமிதமும் இருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு பிரபல திரைப்பாடலாசிரியரின் ஆயிரம் பாடல்கள் அடங்கிய தொகுதியைப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தின் ஓரங்கள் கிழிந்திருந்தன. வேறு நல்ல பிரதி இருக்கிறதா என்றேன். இல்லையென்றார் கடைக்காரர். அதை எதற்கு வாங்க வேண்டும், பாட்டாகவே கேட்டுக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன். யூடியூப்பைத் தட்டினால் பாடல்கள் அது பாட்டுக்கு வந்து கொட்டுகிறது, படித்தலினும் கேட்டல் இனிது என்று என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொண்டேன். நிச்சயமாக அந்தப் புத்தகத்தின் ஓரங்கள் மட்டும் கிழியாமல் இருந்திருந்தால் வாங்கியிருப்பேன். இப்படியா ஒரு திரைப்பட பாடல்களின் ரசிகன் இருப்பான் என்று என் மேலே எனக்கு ஒரு கோபம் வந்தது.

***

என்னிடம் நிறைய சாணித்தாள் திரைப்பாடல் தொகுதிகள் இருக்கின்றன. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வாங்கியது. அந்தக் காலத்தில் ஐம்பது காசுக்குக் கூட வாங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் திருவிழா கடைகளில் பாட்டுப்புத்தகக் கடையும் இருக்கும். அப்போது வெளிவந்த திரைப்படங்களின் பாடல் தொகுப்புகளை ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு என்று வாங்கலாம். எம்.ஜி.ஆர். பாடல்கள், சிவாஜி பாடல்கள், ரஜினி பாடல்கள், கமல் பாடல்கள் என்று தொகுப்பாக வைத்து பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு விற்பார்கள். உண்மையில் அந்தப் பாடல்கள் எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ எழுதியதோ கிடையாது. பாடலாசிரியர்கள் எழுதியதுதான். ஆனால் டி.ராஜேந்தர் பாடல்கள் மட்டும் அவர் எழுதிய பாடல்களின் தொகுப்புத்தான். இருந்தாலும் தலைப்பு அப்படி வைத்தால்தானே அந்தந்த ரசிகர்கள் வாங்குவார்கள். அந்தப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு பாடுவது ஆனந்தமாக இருக்கும். அதை விட அந்தப் புத்தகங்களை வாங்கிப் பாடுவது வீட்டில் இருக்கும் அக்காமார்களுக்கும், தங்கைமார்களுக்கும் அளவிடற்கரிய ஆனந்தமாக இருக்கும். இப்போது அதையெல்லாம் யார் வாங்குகிறார்கள்? எந்தப் பாட்டுண்ணா என்று கேட்டு யூடியூப்பைத் தட்டி விடுகிறார்கள் அக்காக்களும் தங்கைகளும்.

***

அப்பா அப்பா இந்தப் பென்சில் வேண்டும்?

பென்சில் வாங்குவதற்கெல்லாம் கேட்க வேண்டுமா?

விலை 199 ரூபாய் அப்பா.

அப்படி என்ன அது அவ்வளவு தரமான பென்சில்? நட்ராஜ் பென்சில் தரமாக இருக்கும். அதை விட்டால், அப்சரா பென்சில் இன்னும் தரம். அதையே வாங்கிக் கொள்ளேன்.

அப்பா இது ஐ புரோ பென்சில்.

அப்படி ஒரு கம்பெனி வந்திருக்கிறதா? அதெல்லாம் வேண்டாம். நீ அப்சராவே வாங்கிக் கொள். அந்தத் தரமே போதும்.

நீ சரியான லூசு அப்பா. அப்சரா பென்சிலை வைத்து எப்படி கண்ணில் தீட்டிக் கொள்ள முடியும்? ஐ புரோ பென்சில்தான் வேண்டும்.

இப்படியெல்லாம் நாட்டில் பென்சில் வந்தால் தகப்பன்கள் என்ன செய்ய முடியும்?

தகப்பனின் ஒரு நாள் வருமானமே முந்நூறு ரூபாய்தானே.

இந்தப் பெண்கள் இப்படிச் செய்யலாமா?

*****

20 Feb 2024

கூட்டிக் கழித்துப் பார்க்கும் கூட்டணிக் கணக்குகள்!

கூட்டிக் கழித்துப் பார்க்கும் கூட்டணிக் கணக்குகள்!

இத்தனை கேட்டால் எப்படிக் கொடுப்பது? அது என்ன? – இப்படி ஒரு விடுகதையை எழுப்பினால் அதன் விடை என்னவாக இருக்கும் சொல்லுங்கள்.

நாடாளுமன்ற தொகுதிப் பங்கீடுதான் இந்த விடுகதைக்கான விடை. நடைபெற இருக்கும் 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்குக் கூட்டணி அமைத்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளைப் பங்கீடு செய்வதென்றால் தமிழகம் மற்றும் புதுவையின் நாடாளுமன்ற தொகுதிகளை நாற்பதிலிருந்து எண்பதாக உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினாலும் கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி விடும் போலும்.

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டும்தான் தற்போதைக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள். இந்தக் கட்சிகள் எப்படியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் 25க்கும் குறைவாகப் போட்டியிட விரும்பாது. மீதி இருக்கும் பதினைந்து தொகுதிகளைத்தான் இக்கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும்.

நிலைமை இப்படி இருக்க தி.மு.க அல்லது அ.தி.மு.கவோடு இணைய நினைக்கும் கூட்டணிக் கட்சிகள் நாற்பதிலும் போட்டியிட வேண்டும் என்றால் தனியாகத்தான் நிற்க வேண்டும். இல்லையென்றால் மிச்சமிருக்கும் 15 தொகுதிகளில் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ ஒதுக்கும் இடங்களை ஏற்றுக் கொண்டுதான் போட்டியிட வேண்டும்.

ஒவ்வொரு கட்சியின் கூட்டணி பேரங்களைக் கேள்விப்படும் போது மிகுந்த சுவாரசியங்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணத்திற்குத் தே.மு.தி.க 14 இடங்களைத் தருபவர்களோடுதான் கூட்டணி என்கிறது. ஒரு காலத்தில் திராவிட கட்சிகளோடு கூட்டணியே கிடையாது, திராவிட கட்சிகளுக்குத் தான்தான் மாற்று என்று சொன்ன கட்சி இது. தற்போது 14 இடங்களைத் தந்தால் எந்தக் கட்சியோடும் கூட்டணி என்கிறது. சித்தாந்த ரீதியான கூட்டணிகளுக்கு இனி இடமில்லை என்பதை தே.மு.தி.கவின் நிலைபாடு காட்டுகிறது.

கூட்டணி பேரங்களில் முந்தைய தேர்தல்களின் பெற்ற வாக்கு சதவீதம் முக்கிய அளவீடாகக் கொள்ளப்படும். தொடர்ந்து நல்ல வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள்தான் கூட்டணி பேரத்தில் அதிக இடங்களைக் கேட்டு வாங்க முடியும். வாக்கு வங்கியும் சரிந்து அதே நேரத்தில் அதிக இடங்களைக் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி கேட்குமானால் அந்தக் கட்சி கூட்டணியிலிருந்து கழற்றி விடப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க வலுவாக இருப்பதாகத் தன்னை உணர்கிறது. அதனால் தி.மு.க 25 இடங்களை வைத்துக் கொண்டு மீதி இடங்களைத்தான் கூட்டணி கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும். அ.தி.மு.கவில் சிற்சில பிளவுகள் இருப்பதால் 20 இடங்கள் வரை இறங்கி வந்து மீதி 20 இடங்களைக் கூட்டணி கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். இப்போதைக்கு நிலைமை இப்படித்தான் தெரிகிறது. கூட்டணி பேரங்கள் எப்படி முடிகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறது. விஜய்யின் த.வெ.க. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலை விட வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதையே விரும்புகிறது. பா.ஜ.க தனித்துப் போட்டியிட விரும்புகிறதா, அ.தி.மு.கவோடு கை கோர்க்கப் போகிறதா என்பது தெளிவுபடுவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. ஒருவேளை பா.ஜ.க அ.தி.மு.கவோடு கைகோர்த்தால் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் மும்முனைப் போட்டியாகவும், பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்தால் நான்கு முனைப் போட்டியாகவும் அமையும். எப்படி அமைந்தாலும் பிரதானப் போட்டி என்பது தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுக்கு இடையில்தான் இருக்கும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

*****

19 Feb 2024

நீங்கள் மட்டும் ஏன் ஏழையாக இருக்க வேண்டும்?

நீங்கள் மட்டும் ஏன் ஏழையாக இருக்க வேண்டும்?

உங்களது வருமான குறைவால் நீங்கள் ஏழைகளாவதில்லை. சேமிப்புக் குறைவால்தான் ஏழைகளாகிறீர்கள்.

நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சம்பாதித்தாலும் நீங்கள் எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியம். மிக அதிகமாகச் சம்பாதித்து அனைத்துச் சம்பாத்தியத்தையும் செலவுகளாகச் செய்து கொண்டிருந்தால் உங்களிடம் சேமிப்பு என்று எதுவும் மிஞ்சாது. சேமிக்காத ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் செல்வந்தர் ஆக முடியாது.

நீங்கள் எவ்வளவு குறைவாகச் சம்பாதித்தாலும் உங்கள் செலவினங்களைச் சம்பாத்தியத்திற்குள் வைத்துக் கொண்டால் நீங்கள் சேமிப்பதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டியதில்லை. செலவினம் போக எஞ்சுவதெல்லாம் உங்கள் சேமிப்பாகத் தானாகவே உருவாகி விடும்.

காலப்போக்கின் மாற்றம்இப்போது சேமிப்பையும் ஒரு செலவாகக் கருதிக் கொண்டு வருமானத்தின் முதல் செலவினமாக அதைத் தனியாக சேமிப்புக் கணக்குகளில் சேர்க்கும் பழக்கமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது.

சேமிப்பு எப்போது செலவாக ஆனது என்று நீங்கள் கேட்கக் கூடாது. அப்படி நினைத்துக் கொண்டால்தான் இப்போது பலராலும் சேமிக்க முடிகிறது. நீங்களும் அப்படியே சேமியுங்கள். அது சரி நீங்கள் மாதா மாதம் சேமிப்புக்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?

சேமிப்புக்காக நிறைய செலவு செய்யுங்கள். அந்தச் செலவுதான் உங்களை பணக்காரராக ஆக்கப் போகிறது.

*****

உங்கள் பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பது?

உங்களுக்கென எதிர்பார்ப்புகள், நோக்கங்கள் இருந்தால் நேரடியாக நிறைவேற்ற முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்து அப்படி இப்படி என்று எப்படியோதான் நிறைவேற்ற முடியும்.

சொல்லியிருந்தால் செய்திருப்பேன், கேட்டிருந்தால் உதவியிருப்பேன், நாடியிருந்தால் நிறைவேற்றியிருப்பேன் என்று சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். பேச வேண்டும் என்பதற்காகத்தான்.

பேச்சை வைத்து யாரையும் நம்பி விட முடியாது. அவர்களிடம் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்குமே, இவ்வளவு சிரம பட்டிருக்க வேண்டாமே என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. ஓர் ஆறுதலாகச் சொல்லாவிட்டால் நாமெல்லாம் என்ன மனித ஜென்மம் என்று நினைத்துக் கொண்டு கலெக்டர் வேலையையே வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

சட்டென்று எதற்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஆர அமரச் சிந்தித்து அதைச் செயல்படுத்திதான் தீர்வு காண வேண்டும். இதற்கு மற்றவர்கள் எல்லாம் உதவுவார்கள், துணை நிற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உதவ மாட்டார்கள், துணை நிற்க மாட்டார்கள் என்றும் முடிவு கட்டி விட முடியாது. உபத்திரவமாக இருந்து விட மாட்டார்கள் என்று உறுதி கூறி விட முடியாது.

ஆனால் ஒரு துவக்கத்தை நீங்கள்தான் செய்தாக வேண்டும். அதற்குப் பின்பு உதவுபவர்கள் வந்து சேரலாம், உபத்திரவம் கொடுப்பவர்கள் வந்து கொடுக்கலாம், காலை வாரி விடுபவர்கள் காலை வாரி விடலாம், தாங்கி நிற்பவர்கள் வந்து தாங்கி நிற்கலாம். உங்கள் சுமையை நீங்கள் சுமந்துதான் ஆக வேண்டும், நீங்கள் ஏற்க வேண்டிய பொறுப்பை நீங்கள் ஏற்றுதான் ஆக வேண்டும்.

ஓர் உண்மை என்னவென்றால், நீங்கள் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளுக்கு நீங்களேதான் பிரச்சனைகளை உருவாக்கியிருக்க முடியும். உங்கள் மனம் உருவாக்கிய பிரச்சனை என்னவென்று உங்களுக்கே தெளிவாக தெரியும். இன்னொருவர் உருவாக்கிய பிரச்சனைக்கு நீங்கள் எப்படித் தீர்வு காண முடியும். அது அவர் மனதுக்கே துலக்கமாகும். அக உலகைப் பொருத்த வரையில் இதுதான் நிலைமை. அவரவர் உருவாக்கிய பிரச்சனைகளுக்கு அவரவர்களே தீர்வு காண முடியும்.

இப்போது உங்கள் பிரச்சனைக்கு யார் தீர்வு காண முடியும் என்று சொல்லுங்கள். சாட்சாத் நீங்கள்தான். உங்களை விட உங்கள் பிரச்சனைகளுக்கு யார் சிறப்பாகத் தீர்வு காண முடியும் என்று சொல்லுங்கள்!

அதனால் போய் உங்கள் பிரச்சனைக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளுங்கள்! இதுதான் உலகிலேயே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆபத்தில்லாத ஆகச் சிறந்த ஒரே வழிமுறை.

*****

54321 சூத்திரம் தெரியுமா?

54321 என்ற ஒரு சூத்திரம் இருக்கிறது.

இப்படி ஒரு கௌண்ட் டவுன் சூத்திரமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இப்படியும் ஒரு சூத்திரம் இருக்குமா என்று நீங்கள் நினைக்கலாம்.

இந்தச் சூத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தச் சூத்திரத்தை நோக்கித்தான் இன்றைய மனித சமூகம் ஆளாய்ப் பறக்கிறது, பேயாய் அலைகிறது.

இந்த நூற்றாண்டு மனிதர்களின் சூத்திரம் இதுதான்.

இனி அந்தச் சூத்திரத்தைக் காண்போம்.

5

ஐந்திலக்கச் சம்பளம்

4

நான்கு சக்கர வாகனம்

3

மூன்று படுக்கையறை வீடு

2

இரண்டு குழந்தைகள்

1

ஒரு மனைவி

ஐந்திலக்கச் சம்பளம் என்பது லட்சத்தில் சம்பளத்தைப் பெறுவதைக் குறிக்கிறது.

நான்கு சக்கர வாகனம் என்பது மகிழுந்து எனும் கார் வாங்குவதைக் குறிக்கிறது.

மூன்று படுக்கறை வீடு என்பது அடுக்ககம் எனப்படும் அப்பார்ட்மென்டுகளில் மூன்று படுக்கையறை உள்ள வீடு வாங்குவதைக் குறிக்கிறது.

இரண்டு குழந்தைகள் என்பது ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. அது தவறிப் போய் இரண்டு ஆணாகவோ, இரண்டும் பெண்ணாகவோ ஆகி விடுவதும் உண்டு. அதெல்லாம் மனிதர்களின் கணக்குச் சூத்திரத்திலா இருக்கிறதா? இருந்தாலும் இந்தச் சூத்திரம் சொல்வது ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை.

ஒரு மனைவி என்பது கனக்கச்சிதமான ஒரு தார மணத்திற்கான சூத்திர முறையைச் சொல்கிறது. இன்னொரு மனைவி என்றால் பிறகு நீங்கள் இன்னொரு ஐந்திலக்கச் சம்பளம், இன்னொரு நான்கு சக்கர வாகனம், இன்னொரு மூன்று படுக்கையறை வீடு, இன்னும் இரண்டு குழந்தைகள் என்று இதனை இன்னொரு மடங்கிற்கு விரிவு பண்ணிக் கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு மனைவி என்று முடிவதால் இது இளைஞர்களுக்கான சூத்திரமாகி ஆணாதிக்கச் சூத்திரமாகவும் இருக்கும் துர்பாக்கியத்தையும் அடைகிறது. ஒரு பெண்ணுக்கு இந்தச் சூத்திரத்தை எப்படிக் கட்டமைப்பது? கடைசியில் ஒரு கணவன் என்றா?

பொதுவாக இந்தச் சூத்திரம் இன்றைய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. வேறெப்படி எடுத்துக் கொள்வது இந்தச் சூத்திரத்தை?

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...