20 Feb 2024

கூட்டிக் கழித்துப் பார்க்கும் கூட்டணிக் கணக்குகள்!

கூட்டிக் கழித்துப் பார்க்கும் கூட்டணிக் கணக்குகள்!

இத்தனை கேட்டால் எப்படிக் கொடுப்பது? அது என்ன? – இப்படி ஒரு விடுகதையை எழுப்பினால் அதன் விடை என்னவாக இருக்கும் சொல்லுங்கள்.

நாடாளுமன்ற தொகுதிப் பங்கீடுதான் இந்த விடுகதைக்கான விடை. நடைபெற இருக்கும் 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்குக் கூட்டணி அமைத்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளைப் பங்கீடு செய்வதென்றால் தமிழகம் மற்றும் புதுவையின் நாடாளுமன்ற தொகுதிகளை நாற்பதிலிருந்து எண்பதாக உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினாலும் கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி விடும் போலும்.

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டும்தான் தற்போதைக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள். இந்தக் கட்சிகள் எப்படியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் 25க்கும் குறைவாகப் போட்டியிட விரும்பாது. மீதி இருக்கும் பதினைந்து தொகுதிகளைத்தான் இக்கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும்.

நிலைமை இப்படி இருக்க தி.மு.க அல்லது அ.தி.மு.கவோடு இணைய நினைக்கும் கூட்டணிக் கட்சிகள் நாற்பதிலும் போட்டியிட வேண்டும் என்றால் தனியாகத்தான் நிற்க வேண்டும். இல்லையென்றால் மிச்சமிருக்கும் 15 தொகுதிகளில் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ ஒதுக்கும் இடங்களை ஏற்றுக் கொண்டுதான் போட்டியிட வேண்டும்.

ஒவ்வொரு கட்சியின் கூட்டணி பேரங்களைக் கேள்விப்படும் போது மிகுந்த சுவாரசியங்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணத்திற்குத் தே.மு.தி.க 14 இடங்களைத் தருபவர்களோடுதான் கூட்டணி என்கிறது. ஒரு காலத்தில் திராவிட கட்சிகளோடு கூட்டணியே கிடையாது, திராவிட கட்சிகளுக்குத் தான்தான் மாற்று என்று சொன்ன கட்சி இது. தற்போது 14 இடங்களைத் தந்தால் எந்தக் கட்சியோடும் கூட்டணி என்கிறது. சித்தாந்த ரீதியான கூட்டணிகளுக்கு இனி இடமில்லை என்பதை தே.மு.தி.கவின் நிலைபாடு காட்டுகிறது.

கூட்டணி பேரங்களில் முந்தைய தேர்தல்களின் பெற்ற வாக்கு சதவீதம் முக்கிய அளவீடாகக் கொள்ளப்படும். தொடர்ந்து நல்ல வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள்தான் கூட்டணி பேரத்தில் அதிக இடங்களைக் கேட்டு வாங்க முடியும். வாக்கு வங்கியும் சரிந்து அதே நேரத்தில் அதிக இடங்களைக் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி கேட்குமானால் அந்தக் கட்சி கூட்டணியிலிருந்து கழற்றி விடப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க வலுவாக இருப்பதாகத் தன்னை உணர்கிறது. அதனால் தி.மு.க 25 இடங்களை வைத்துக் கொண்டு மீதி இடங்களைத்தான் கூட்டணி கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும். அ.தி.மு.கவில் சிற்சில பிளவுகள் இருப்பதால் 20 இடங்கள் வரை இறங்கி வந்து மீதி 20 இடங்களைக் கூட்டணி கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். இப்போதைக்கு நிலைமை இப்படித்தான் தெரிகிறது. கூட்டணி பேரங்கள் எப்படி முடிகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறது. விஜய்யின் த.வெ.க. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலை விட வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதையே விரும்புகிறது. பா.ஜ.க தனித்துப் போட்டியிட விரும்புகிறதா, அ.தி.மு.கவோடு கை கோர்க்கப் போகிறதா என்பது தெளிவுபடுவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. ஒருவேளை பா.ஜ.க அ.தி.மு.கவோடு கைகோர்த்தால் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் மும்முனைப் போட்டியாகவும், பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்தால் நான்கு முனைப் போட்டியாகவும் அமையும். எப்படி அமைந்தாலும் பிரதானப் போட்டி என்பது தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுக்கு இடையில்தான் இருக்கும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...