26 Feb 2024

அந்த இடம் & அக்கௌண்டைக் குளோஸ் பண்ணு

அக்கௌண்டைக் குளோஸ் பண்ணு

பணத்தை ஏ.டி.எம்.மில் போய் எடுத்துக் கொள்ளு கெழவி என்றார் கேஷியர் தன்னுடைய பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுப்பதைப் போல எரிச்சலாக.

எமக்கு அந்தக் கருமம் பிடிச்ச மிஷின்ல எடுக்க தெரிஞ்சா நாம்ம ஏம்டா உம்மகிட்டெ வர்றேம் என்றது கிழவி உன் பேச்சுக்கு என்னுடைய பேச்சு கொஞ்சமும் சளைத்தது இல்லை என்பது போல.

அதெல்லாம் முடியாது, போயி அங்கேயே எடுத்துக்கோ எனப் பிடிவாதம் காட்டினார் கேஷியர்.

வரிசையில நின்னு நொம்பலப்பட்டுப்புட்டு இப்போ போயி காசை அங்கே எடுத்துக்குன்னு சொல்றீயே ஞயாமா என்றது கிழவி.

ஐயோ உங்கிட்டெ பதில் சொல்லிட்டு இருந்தா இங்கே வேலை ஆகாது, எடத்தைக் காலி பண்ணு என்றார் கேஷியர்.

கிழவி இனி கிளம்பி விடும் என்பது கேஷியரின் நினைப்பு. கிளம்புகிற கிழவியா அது?

அப்படின்னா கணக்கை முடிச்சு குளோஸ் பண்ணிக் கொடு. நான் கையில வெச்சுக்கிட்டெ இனுமே சிலவே பண்ணிக்கிறேன். ஒங்கிட்டெ வந்து எங் காசை எடுக்குறதுக்கு நாம்ம ஏம் அலமலந்து போவணும்? என்றது கிழவி.

இதென்னடா புது பிரச்சனை என்று கேஷியர் கிழவியின் அக்கௌண்டைப் பார்த்தார். அவருக்கு மூச்சை அடைத்தது. பணம் பதினான்கு லட்சத்து முப்பத்து நான்காயிரத்து அறுபத்து ஏழு ரூபாய் இருந்தது.

இந்தக் கணக்கை முடித்துக் கொடுத்தால் மேனேஜரிடம் யார் திட்டு வாங்குவது என்று கிழவியைப் பார்த்துக் கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வீசினார் கேஷியர்.

சீக்கிரம் கணக்கை முடிச்சுக் கொடு ராசா. நேரமாவுது பாரு. ஒம்மட வேலையும் கெடக் கூடாது. எம்மட வேலையும் கெடக் கூடாது என்றது கிழவி விட்டேத்தியான சிரிப்பை வீசியபடி.

அது வந்துங்க பாட்டிம்மா… என்று மரியாதையான தொனிக்கு மாறி கிழவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று மனசுக்குள்ளே கணக்கு போட ஆரம்பித்தார் கேஷியர்.

*****

அந்த இடம்

அந்த இடத்திற்கு வரும் போது தனபாலுக்கு நெஞ்செல்லாம் அடித்துக் கொள்கிறது. திட்டைமங்கலத்துப் பேங்க் பக்கத்தில் இருக்கும் டீக்கடை ஓரம். பக்கத்தில் நோஞ்சான் போல உயிரைக் கையில் பிடித்துக் கொண்டபடி வளர்ந்து நிற்கும் ஒரு புங்கன் மரம். மரநடுவிழா என்று யாரோ நட்டு வைத்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

ரோட்டுப் பக்கம் தார். வீட்டுப் பக்கம் சிமெண்டைப் போட்டு மண் தெரியாமல் பூசி வைத்திருந்தார்கள். இதற்கு இடையே கொஞ்சம் மண்ணைக் காட்டிக் கொண்டிருந்த அரை அடி இடத்தை எதற்கு வீணாக்க வேண்டும் என்று அங்கே அந்த புங்கனை நட்டிருந்தார்கள். நட்டது வீண் போகாமல் அதுவும் ஒரு சவலைப் பிள்ளையைப் போல வளர்ந்திருந்தது.

டீக்கடைக்கும் புங்கனுக்கும் இடையில் இருந்த அந்த இடத்தில் நின்று ஒரு ஜாமீன் போட்டுத் தரக் கூடாதா என்று கெஞ்சிய சந்தானத்தைப் பார்த்த போது பாவமாக இருந்தது தனபாலுக்கு.

எவ்வளவோ கஷ்டம் வந்திருக்கு. ஒரு பைசா கடன் வாங்குனது இல்ல. பல்லைக் கடிச்சிட்டு ஓட்டிடுவேன். அதான் யோசனையா இருக்கு, என்றார் தனபால்.

அட நான் என்ன உங்கள கடன் வாங்கியா தரச் சொல்றேன்? உங்ககிட்டெ கடனா நையா பைசா கேட்கலியே. ஒரு கையெழுத்தைப் போட்டா பேங்க்காரன் கடன் தரப் போறான். வாங்குன கடனை மாசா மாசம் கட்டி அடைச்சிடப் போறேன். உங்களுக்குத் துளியூண்டு சிரமம் கூட இருக்கப் போறதில்ல. ஏதோ ஒரு உபகாரம் எனக்குப் பண்ணினதா இருக்கட்டுமே, என்றார் சந்தானம்.

தனபாலுக்குத் தயக்கம் தீர்ந்தபாடில்லை. இது வேண்டா வினையாகி எங்கேயாவது போய் முடிந்தால் என்ன செய்வது என்ற பயம் வேறு. என்ன வார்த்தை சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

என்னங்க நாமெல்லாம் அப்படியாவா பழகியிருக்கோம்? வாங்குன கடனைக் கட்டாம ஒங்க தலையிலயா கட்டிடப் போறேன்? கட்டாமத்தான் கண்காணாத தேசத்துக்கு ஓடிடவாப் போறேன்? அதுவும் உங்கப் பணத்தையா கேக்குறேன்? என்னவோ பேங்க்காரன் இப்படியெல்லாம் பார்மாலிட்டிஸ் வெச்சிருக்கான். நீங்க ஒரு கையெழுத்த ஜாமீனா போட்டா நாளைக்கே பணத்தை அக்கௌண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணிடப் போறான், என்று விடாமல் பிடியைப் போட்டார் சந்தானம்.

எனக்கென்னவோ நாமளும் கடன் வாங்கக் கூடாது, சுத்தி இருக்குறவங்களும் கடன் வாங்கக் கூடாதுன்னு ஒரு நெனைப்பு, என்றார் தனபால்.

அப்படீங்றீங்களா? அப்போ நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அதுக்கு மேல ஆண்டவனோட சித்தம். விளக்கெண்ணெய்ய தடவிட்டு மண்ணு தரையில பொரண்டாலும் ஒட்டுறதுதானே ஒட்டும். நமக்கு ஒட்டுறது அவ்வளவுதான் போலருக்கு, என்றார் சந்தானம்.

தனபாலுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அந்த ஒரு நொடியில் சந்தானம் சொன்ன வாக்கியம் அவரை என்னவோ செய்தது. நெஞ்சைப் பிசைந்தது. என்ன ஒரு கையெழுத்துதானே என்ற துணிச்சல் எங்கிருந்துதான் வந்ததோ, கொடுங்க அதெ என்று வாங்கிக் கையெழுத்தைப் போட்டு விட்டார்.

இப்போது சந்தானம் வீட்டுக்குத் தனபால் நடையாய் நடக்கிறார். தவணைத் தொகையைக் கட்டலைன்னு நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பிக்கிட்டு இருக்கான் பேங்க்காரன்னு கவலையோடு சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

அப்போது அவ்வளவு குழைவாகப் பேசிய சந்தானம் இப்போது எதற்கும் மசிகிற ஆளாகத் தெரியவில்லை. ஏம்ய்யா பணத்தை வெச்சுக்கிட்டு நாம்ம என்னப் பண்ணப் போறேம்? இருந்தா கட்டாம இருப்பேனா? பணம் வந்ததும் கட்டிடுறேன்யா, என்கிறார்.

அதுக்குள்ள எஞ் சொத்தெ ஜப்தி பண்ணிடப் போயிடுவான் போலிருக்கே, என்கிறார் பதறியபடி தனபால்.

என்னய்யா எப்ப பார்த்தாலும் வந்து இதெ தொணதொணப்பா இருக்கு. மனுஷனக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு விடுறீயாய்யா? என்றார் சந்தானம்.

தனபாலுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அப்படியே ஆடிப் போய் விட்டார். இப்போதெல்லாம் அவருக்குத் தூங்க முடிவதில்லை. ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டில் கைது செய்யப் படுவதைப் போலவே கனவு வந்து கொண்டிருக்கிறது. நிஜமா ஒரு நாள் வந்து கைது பண்ணிட்டுப் போனா கூட பரவாயில்லை என்று நெஞ்சில் அடித்துக் கொள்கிறார். அவராகக் கற்பனை பண்ணிக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்.

வீட்டுக்கும் ரோட்டுக்கும் போகிற வழியில் அந்த இடத்தில் பார்க்கும் போது சந்தானமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்.

புங்கன் வர வர வாடிக் கொண்டே போகிறது. வீட்டுப் பக்கம் சிமெண்டின் காங்கல். ரோட்டுப் பக்கம் தாரின் வெம்மை. அந்தப் புங்கனை விட மனப்புழுக்கம் தாங்காமல் அதிகம் வாடிக் கொண்டிருக்கிறார் தனபால். மகன் பிராகரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்துக் கேட்டாலும் ஒரு பயம். போடா போ, அம்மாகிட்டே வாங்கிக்கிடா என்று விரட்டி அடித்து விடுகிறார்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...