28 Feb 2024

இலக்கியம் என்ன செய்யும்? சால்வையைத் தூக்கி வீசும்!

இலக்கியம் என்ன செய்யும்? சால்வையைத் தூக்கி வீசும்!

நடிகர் சிவக்குமாரைப் பற்றி இந்தத் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சூரியா மற்றும் கார்த்தியின் அப்பா என்று சொன்னால்தான் புரியும்.

சுயபடம் எடுக்க முயன்ற அன்பர் ஒருவரின் அலைபேசியைப் பிடுங்கி வீசியவர், சால்வை அணிவிக்க வந்த அன்பரின் சால்வைத் தூக்கி வீசியவர் என்று சொன்னால் அவரைப் பற்றி உங்களுக்கு உடனடியாக ஞாபகம் வரலாம்.

அவர் ஒரு நடிகர் மற்றும் ஓவியர். புரான படங்களில் முருகனாக நடித்திருக்கிறார். கதை நாயகராக, குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தற்போது இலக்கியப் பேச்சாளர்.

நடிகரிலிருந்து இலக்கியப் பேச்சாளராக அவருடைய வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டதைத் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். சிவக்குமார் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும், தன்னால் அப்படி சரியான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் கூடுதலாக வெளியிட்டிருந்தார்.

சிவக்குமார் சாதாரண இலக்கியப் பேச்சாளர் அல்லர், மூன்று மணி நேரத்திற்குக் கூட மூச்சு விடாமல் பேசக் கூடிய நினைவாற்றல் உள்ளவர். யோகா அப்பியாசங்கள் கூட செய்யக் கூடியவர்.

ஓர் இலக்கியக் கூட்டத்தில் அன்பர் போட்ட சால்வையைத் தூக்கியெறிந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்.

ஏன் சால்வையைத் தூக்கிப் போட வேண்டும்?

பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

இதே போல சுயபடம் எடுக்க முயன்ற அன்பரின் அலைபேசியை வீசியெறிந்த சம்பவத்துக்கும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.”

இந்தக் குறளைப் படிக்காமலா இருந்திருப்பார் சிவக்குமார்? படிப்பதால் மட்டும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் மனப்பாடம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பர். அதனால் என்ன பயன்? ஒரு குறளைத் தெரிந்து கொண்டாலும் அதை வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ளும் போதுதான் இலக்கியம் தன் நோக்கத்தை அடைகிறது.

சால்வையைத் தூக்கி எறிவதற்கும், அலைபேசியை வீசியெறிவதற்கும் இலக்கியம்தான் என்ன செய்யும்? அது வழிகாட்ட மட்டுமே செய்யும். அந்த வழியில் நாம்தான் நடந்து செல்ல வேண்டும். இலக்கியமே கை பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. படித்தவர்கள் நாகரிகமானவர்கள் என்று கருதவும் வேண்டியதில்லை. படிக்காதவர்கள் அநாகரிகமானவர்கள் என்று கருதிக் கொள்ளவும் வேண்டியதில்லை.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...