24 Feb 2024

தேர்தல் செலவுகளை ஏன் மேலும் ஒழுங்குபடுத்தக் கூடாது?

தேர்தல் செலவுகளை ஏன் மேலும் ஒழுங்குபடுத்தக் கூடாது?

தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் முடிந்த உடன் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய சொல்கிறது. போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக் கணக்கு விவரங்களையும் வேட்புமனுவில் குறிப்பிடச் சொல்கிறது. இவை அனைத்தும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள்.

இருப்பினும் ஒரு வேட்பாளர் வழங்கும் தேர்தல் செலவு கணக்கு என்பது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையது என்ற கேள்வி எழாமல் இருக்காது. பொதுவாக நடைமுறையில் செலவைக் குறைவாகச் செய்து விட்டு அதிகமாகக் காட்டும் வழக்கம்தான் உண்டு. ஆனால் தேர்தல் செலவு கணக்கில் இது உல்ட்டாவாக அமையும். அதிகச் செலவைச் செய்து விட்டு, குறைவான செலவு கணக்கையே வேட்பாளர்கள் தாக்கல் செய்வார்கள்.

இந்தத் தேர்தல் செலவுக் கணக்கை முறைபடுத்த ஏதேனும் வழிகள் இருக்காதா? நிச்சயம் இருக்கின்றன. ஆட்சியாளர்கள் நம்மை மின்னணு பரிவர்த்தனை எனும் டிஜிட்டல் டிரான்ஸாக்சனுக்கு மாறச் சொல்லி எவ்வளவு வலியுறுத்துகிறார்கள். நாட்டில் எல்லாம் மின்னணு பரிவர்த்தனை எனும் டிஜிட்டல் மயம் என்றால் தேர்தல் செலவுகளையும் ஏன் அதே முறையிலேயே செய்யக் கூடாது? அப்படிச் செய்தால் மிகச் சுலபமாக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை மிக துல்லியமாகக்  கணக்கிடலாம்.

தேர்தல் பத்திரம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் மூலமாக நன்கொடைகளைப் பெறுகின்றன. உண்மையில் இது சரியானதா? நிறைய லாபம் கொழிக்கும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகள் வழங்குகின்றன. நிறுவனங்கள் இதை எதற்காகச் செய்ய வேண்டும்? ஆதாயம் இல்லாமல் எதற்காக ஆற்றைக் கட்டி இறைக்க வேண்டும்? இது ஒரு கட்சியை நம்பி, அதன் தேர்தல் வெற்றியை நம்பி நிறுவனங்கள் செய்யும் லாப நோக்கிலான அச்சாரம். ஒரு கட்சிக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளிக்கும் போது, அந்தக் கட்சி ஆளுங்கட்சியாக அமையுமானால் அரசு ஒப்பந்தங்களைப் பெற முன்பணம் போல இந்தத் தேர்தல் பத்திர நன்கொடைகள் ஆகின்றன என்பதுதான் நிதர்சனம். இத்தகைய நடைமுறை வாக்களித்துத் தேர்ந்தேடுக்கும் ஜனநாயக அமைப்பு முறையையே கேலிக்கூத்தாக்கி விடும். மக்களுக்காக இயங்க வேண்டிய ஆட்சியமைப்பை, நிறுவனங்கள் இயக்கும் ஆட்சியமைப்பாகவும் உருவாக்கி விடும்.

கணக்கில் வராத பணம் தேர்தல் பத்திரங்களாக மாற்றப்படுகிறது என்ற கருத்தும் நாட்டில் நிலவுகிறது. கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் வெளியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கருப்புப் பணத்திற்கு ஒரு வடிகாலை அமைத்து விட வழிகோலி விடக் கூடாது.  

தற்போது வருமான வரித்துறையில் வரிக் கணக்கீடுகளை ஆராய்வதில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது போலத் தேர்தல் வரவு செலவு கணக்குகளை ஆராய்வதிலும் ஏன் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் பயன்படுத்தக் கூடாது? அதற்கேற்ப செலவினங்களை மின்னணு பரிவர்த்தனை மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஏன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது? தற்போது அரசு நிறுவனங்களின் செலவின முறைகளில் இது போன்ற மின்னணு பரிவர்த்தனை முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதே நிலைமையை அரசியல் கட்சிகளின் சொத்து மற்றும் வரவு – செலவு முறைமைகளிலும் கொண்டு வருவதன் மூலம் கணக்கில் வராத பணப்புழக்கத்தையும், முறைகேடான நிதி பெறுதல்களையும் முறைபடுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

நிறுவனங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை முறையான கணக்காளர்களையும் தணிக்கையாளர்களையும் வைத்து கணக்கிட்டு, மிகத் துல்லியமாகத் தணிக்கை செய்து நிதிநிலை முடிவுகளை வெளியிடுகின்றன.

தேர்தல் கட்சிகளும் ஏன் இப்படி ஒரு முறையைப் பின்பற்றக் கூடாது? அரசியல் கட்சிகளின் நிதி திரட்டல்கள் மற்றும் தேர்தல் செலவினங்களுக்கான தணிக்கை முறையை ஏன் தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் இணைந்து அறிவிக்கக் கூடாது?

நாட்டில் எல்லாவற்றிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் போது ஏன் தேர்தல் நிதிகளுக்கும் விதிக்கக் கூடாது? தேர்தல் நடக்கும் போது பெறப்படும் நன்கொடைகளுக்கும், செலவிடப்படும் தேர்தல் செலவினங்களுக்கும் முறையாக ஜி.எஸ்.டி. வரி விதித்தால் அரசின் வருவாயும் பன்மடங்கு பெருகும். நிதிப்பற்றாக்குறையும் தீரும்.

அரசியல் கட்சிகளின் சொத்துகள், நிதி பெறுதல்கள் மற்றும் தேர்தல் செலவுகளை மின்னணு முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலமாக ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். அரசியல் கட்சிகளின் நிதி முறைகேடுகள் மற்றும் பித்தலாட்டங்களை குறைக்கவும் முடியும். அல்லதைக் குறைத்து நல்லதை நிறைக்க இது அருமையான முறை இல்லையா!

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...