21 Feb 2024

மை தீட்டிக் கொள்ளும் மகளும், திரைப்பாடல்களின் ரசிக தகப்பனும்!

மை தீட்டிக் கொள்ளும் மகளும், திரைப்பாடல்களின் ரசிக தகப்பனும்!

திரைப்பாடலாசிரியர்கள் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாடல்களைப் புத்தகங்களாக்கி வெளியிடுகின்றனர். விலை ரொம்பவே அதிகம். அதில் அவர்களுக்கு ஓர் ஆனந்தமும் பெருமிதமும் இருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு பிரபல திரைப்பாடலாசிரியரின் ஆயிரம் பாடல்கள் அடங்கிய தொகுதியைப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தின் ஓரங்கள் கிழிந்திருந்தன. வேறு நல்ல பிரதி இருக்கிறதா என்றேன். இல்லையென்றார் கடைக்காரர். அதை எதற்கு வாங்க வேண்டும், பாட்டாகவே கேட்டுக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன். யூடியூப்பைத் தட்டினால் பாடல்கள் அது பாட்டுக்கு வந்து கொட்டுகிறது, படித்தலினும் கேட்டல் இனிது என்று என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொண்டேன். நிச்சயமாக அந்தப் புத்தகத்தின் ஓரங்கள் மட்டும் கிழியாமல் இருந்திருந்தால் வாங்கியிருப்பேன். இப்படியா ஒரு திரைப்பட பாடல்களின் ரசிகன் இருப்பான் என்று என் மேலே எனக்கு ஒரு கோபம் வந்தது.

***

என்னிடம் நிறைய சாணித்தாள் திரைப்பாடல் தொகுதிகள் இருக்கின்றன. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வாங்கியது. அந்தக் காலத்தில் ஐம்பது காசுக்குக் கூட வாங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் திருவிழா கடைகளில் பாட்டுப்புத்தகக் கடையும் இருக்கும். அப்போது வெளிவந்த திரைப்படங்களின் பாடல் தொகுப்புகளை ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு என்று வாங்கலாம். எம்.ஜி.ஆர். பாடல்கள், சிவாஜி பாடல்கள், ரஜினி பாடல்கள், கமல் பாடல்கள் என்று தொகுப்பாக வைத்து பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு விற்பார்கள். உண்மையில் அந்தப் பாடல்கள் எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ எழுதியதோ கிடையாது. பாடலாசிரியர்கள் எழுதியதுதான். ஆனால் டி.ராஜேந்தர் பாடல்கள் மட்டும் அவர் எழுதிய பாடல்களின் தொகுப்புத்தான். இருந்தாலும் தலைப்பு அப்படி வைத்தால்தானே அந்தந்த ரசிகர்கள் வாங்குவார்கள். அந்தப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு பாடுவது ஆனந்தமாக இருக்கும். அதை விட அந்தப் புத்தகங்களை வாங்கிப் பாடுவது வீட்டில் இருக்கும் அக்காமார்களுக்கும், தங்கைமார்களுக்கும் அளவிடற்கரிய ஆனந்தமாக இருக்கும். இப்போது அதையெல்லாம் யார் வாங்குகிறார்கள்? எந்தப் பாட்டுண்ணா என்று கேட்டு யூடியூப்பைத் தட்டி விடுகிறார்கள் அக்காக்களும் தங்கைகளும்.

***

அப்பா அப்பா இந்தப் பென்சில் வேண்டும்?

பென்சில் வாங்குவதற்கெல்லாம் கேட்க வேண்டுமா?

விலை 199 ரூபாய் அப்பா.

அப்படி என்ன அது அவ்வளவு தரமான பென்சில்? நட்ராஜ் பென்சில் தரமாக இருக்கும். அதை விட்டால், அப்சரா பென்சில் இன்னும் தரம். அதையே வாங்கிக் கொள்ளேன்.

அப்பா இது ஐ புரோ பென்சில்.

அப்படி ஒரு கம்பெனி வந்திருக்கிறதா? அதெல்லாம் வேண்டாம். நீ அப்சராவே வாங்கிக் கொள். அந்தத் தரமே போதும்.

நீ சரியான லூசு அப்பா. அப்சரா பென்சிலை வைத்து எப்படி கண்ணில் தீட்டிக் கொள்ள முடியும்? ஐ புரோ பென்சில்தான் வேண்டும்.

இப்படியெல்லாம் நாட்டில் பென்சில் வந்தால் தகப்பன்கள் என்ன செய்ய முடியும்?

தகப்பனின் ஒரு நாள் வருமானமே முந்நூறு ரூபாய்தானே.

இந்தப் பெண்கள் இப்படிச் செய்யலாமா?

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...