25 Feb 2024

புத்தகங்களுக்குத் தண்ணீரில் கண்டம்!

புத்தகங்களுக்குத் தண்ணீரில் கண்டம்!

சென்னை புத்தகக் கண்காட்சிதான் தமிழ்நாட்டுக்குப் பெரிய புத்தகக் கண்காட்சி. 2023 உடன் சென்னைக்குத் தண்ணீரில் இருக்கும் கண்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைத்தால் அதுதான் இல்லை. சென்னையைப் பீடித்த கண்டம் 2024 சென்னை புத்தகக் கண்காட்சியையும் பீடித்து விட்டது. கண்காட்சி அரங்கின் கூரைகளைத் தாண்டி அரங்கிற்குள்ளும் பெய்திருக்கிறது மழை. பதிப்பாளர்கள் பாவம். புத்தகங்களை நனைத்துத் துவைத்துக் காயப் போடவே நேரம் சரியாக இருந்திருக்கிறது. அதற்கு முன்பு சென்னை பெருவெள்ளம் வந்து பல பதிப்பாளர்கள் பல லட்சம் மதிப்பில் புத்தகங்களை வெள்ளத்தில் இழந்திருந்தார்கள். முன்பு வெள்ளம். இப்போது மழை. நிச்சயம் இது தண்ணீரில் கண்டம்தான்.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் சில ஆண்டுகள் சென்று வந்திருக்கிறேன். சமீப ஆண்டுகளாகச் செல்வதில்லை. பெரும்பாலும் புத்தகக் கண்காட்சிகள் பொங்கல் நேரத்தில் நடைபெறுவதால் வெளிமாவட்டங்களிலிருந்து பேருந்து பிடித்து சென்னைக்குப் போய் வருவது என்பது சாப விமோசனம் போன்றது. ஏன் சபிக்கப்பட்டு பின்பு விமோசனத்திற்காக ஏங்கி நிற்க வேண்டும் என்று இப்போதெல்லாம் தவிர்த்து விட்டேன். மாவட்டந்தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

போகாவிட்டாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? சென்னைப் புத்தகக் கண்காட்சிகள் பற்றி வரும் செய்திகளை ஆர்வமோடு அறிந்து கொள்கிறேன். அப்படி நான் அறிந்து கொண்ட சில செய்திகள்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் நாற்றம் அடிப்பதாக இருக்கிறதாம். அதனால் பலர் கழிவறைப் பக்கமே போவதில்லையாம். மல ஜலம் வந்தால் போகாமல் இருக்க முடியாதே. கழிவறைப் பக்கமே யாரும் போகக் கூடாது என்பதற்காக இந்த எற்பாடோ என்னவோ? அவரவர் நாற்றங்களை அவரவரே சுமந்து கொள்ளுங்கள் என விட்டு விட்டார்களோ என்னவோ!

உணவு விலையும் பயங்கரமாக இருக்கிறதாம். அறிவுப்பசிக்கு வந்திருப்பவர்களுக்கு வயிற்றுப் பசி எதற்கு என்று நினைத்திருப்பார்கள் போலும். சிற்றுண்டிகள் விலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லையாம். எல்லாம் தாறுமாறு தக்காளி சோறு.

நடந்து நடந்து கால் வலித்தால் உட்கார நாற்காலி இல்லையாம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சபதிமலை யாத்திரை போல நடந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

புத்தகம் வெளியிடும் பதிப்பாளர்களுக்கு அரங்கங்கள் ஒதுக்கப்படுகிறதோ இல்லையோ, வணிக நிறுவனங்களுக்கு அரங்கங்கள் கட்டாயம் ஒதுக்கப்படுகின்றனவாம். கண்காட்சி என்பது புத்தக வணிகம் என்பதால் வணிகத்திற்கும் அரங்கங்கள் இருக்கட்டும் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அரசியல்தான். தமிழர்களுக்கு அரசியல் அறிவு ரொம்பவே அதிகம். அதே அரசியலைப் புத்தகக் கண்காட்சியிலும் செய்கிறார்கள்.

நாட்டின் அரசியல் என்னவெல்லாம் செய்கிறது? விலைவாசியை உயரச் செய்கிறது, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குகிறது, சுகாதாரத்தை அலட்சியமாகக் கையாள்கிறது, பெருநிறுவனங்களுக்கு சம்பாத்தியத்திற்கான வழிகளைக் காட்டுகிறது. அதையேத்தான் புத்தகக் கண்காட்சியின் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள்.

உணவு மற்றும் சிற்றுண்டியின் விலை வருடந்தோறும் அதிகரிக்கிறது, நல்ல பதிப்பாளர்கள் அரங்கங்களுக்காகத் திண்டாட வேண்டியிருக்கிறது, கழிவறைகளை நாற்றம் அடிக்கச் செய்கிறது, புத்தகத்தோடு சம்பந்தம் இல்லாத வணிக நோக்கிலான நிறுவனங்களுக்கு அரங்கங்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. அரசியல் என்ற வார்த்தையை எவ்வளவு அசுத்தப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள். அசுத்தத்தைச் சுத்தம் என்றா சொல்ல முடியும்?

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...