29 Feb 2024

‘நிதி குறித்த நீதிகள்’ – நிதி நிர்வாகப் பால பாடம்

‘நிதி குறித்த நீதிகள்’ – நிதி நிர்வாகப் பால பாடம்

பணத்தை மேலாண்மை செய்வதற்கான நியதிகளை ‘நிதி குறித்த நீதிகள்’ எனலாம். தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட நிதியை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம். அதன் சாதகங்களும் பாதங்களும் அவருக்குத்தான். தனிப்பட்ட ஒருவர் குடும்ப நபராகும் போது அதில் பொதுப்படைத்  தன்மைகளும் வெளிப்படைத் தன்மைகளும் அனைவரது கருத்துகளின் ஒருங்கணைந்த பரிசீலனைகளும் தேவைப்படுகின்றன. இது ஒவ்வொன்று குறித்தும் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

வெளிப்படைத் தன்மை

குடும்பமாகி வரவு – செலவுகளை மேற்கொள்ளும் போது அது குறித்த வெளிப்படை தன்மை மிகவும் அவசியம். இந்த வெளிப்படைத் தன்மைக்கு மனம் திறந்த பேச்சு தேவை.

பணம் குறித்துப் பேசத் தொடங்கினால் ஒரு குடும்பத்தில் பிரச்சனைகளும் மன தாபங்களும் ஏற்படுகின்றன என்றால் அந்தக் குடும்பமானது பணத்தை அறிவுப்பூர்வமாக நிர்வகிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படியானால் அந்தக் குடும்பம் பணத்தை எப்படி நிர்வகிக்கிறது என்றால் உணர்வுப்பூர்வமாக நிர்வகிக்கிறது அல்லது மனம் போன போக்கில் எல்லாம் நிர்வகிக்கிறது எனலாம். இவ்வகைப் போக்கு நிதி நிர்வாகத்தில் மிகவும் ஆபத்தான போக்காகும். விரைவில் அந்தக் குடும்பம் நிதி நிர்வாகத்தை அறிவுப்பூர்வமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நிதியை அறிவுப்பூர்வமாக நிர்வகிப்பதற்கான முதல்படி குடும்பத்தின் வரவு – செலவைப் பட்டியலிடுவதுதான். பட்டியல் மூலம் எவ்வளவு வரவு வருகிறது, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடலில் சில வரம்புகள் இருக்கின்றன. வரவை விட செலவு அதிகமாகி விடக் கூடாது. எதிர்கால வரவைக் கருத்தில் கொண்டு நிகழ்காலத்தில் கடனைப் பெருக்கி விடக் கூடாது. இந்த இரு வரம்புகளுக்கு உட்பட்டுதான் குடும்ப வரவு – செலவு திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

பொதுப்படைத் தன்மை

குடும்ப வரவு – செலவு திட்டத்தை உருவாக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்து அனைவரது கருத்துகளையும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவர் கருத்துக்கும் மதிப்பளித்து அனைவரது ஒப்புதலோடும் வரவு – செலவில் சில பொதுவான விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் குடும்ப நிதி நிர்வாகத்தின் பொதுப்படைத் தன்மை.

குடும்ப வரவு – செலவு எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான பொதுப்படைத் தன்மை உருவாகி விட்டால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வரவுகள் – செலவினங்கள் எப்படி அமைந்திருக்கும் என்பதோடு இனி எப்படி அமையும் என்பதை ஒவ்வொருவரும் அறுதியிட்டுக் கூற இயலும். இதனால் வரவு எப்படி இருக்கும், செலவு எப்படி இருக்கும் என்பது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்தப் பொதுப்படைத் தன்மை உருவான பின்பு குடும்ப உறுப்பினர்களின் தேவைகளும் விருப்பங்களும் கூட வரவு – செலவிற்கேற்ப செவ்வனே மாற்றம் பெறும்.

கருத்துகளின் பரிசீலனைகள்

குடும்ப அமைப்பில் பணம் குறித்த கொடுக்கல் – வாங்கல் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பணம் சார்ந்த உதவுதல், கடன் கொடுத்தல், கடன் வாங்கல், கைமாற்று, வங்கி பரிவர்த்தனைகள், முதலீட்டு விவரங்கள் என அனைத்தையும் ஒவ்வொரு நாளும் கூடிப் பேசுவது நல்லது. இது குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நிதி குறித்த அசட்டையான மனநிலையோடு இருப்பதைத் தவிர்க்க முடியாது.

ஆரம்பத்தில் இது குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கும். போகப் போக இந்தப் பேச்சும் விவாதமும் அற்புதமான யோசனைகளைக் கொண்டு தருவதாக மாறி விடும். எல்லாவற்றிலும் துவக்கமும் சிறிது கால தொடர்ச்சியும் கடினமே. அந்தக் கடினத்தைக் கடந்து விட்டால் அதன் சுலபத்தையும் அற்புதத்தையும் எண்ணி ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் இழப்போ, திடீரென ஏற்படும் விபத்தோ குடும்ப நிதி நிர்வாகத்தைச் சிதைத்து விடலாம். அப்படியொரு சிதைவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் வரவு – செலவு மற்றும் கொடுக்கல் – வாங்கல் குறித்த ஆரோக்கியமான உரையாடல்களும் விவாதங்களும் ஒவ்வொரு இரவும் குடும்பத்தில் நடைபெற வேண்டும்.

நிதி நிர்வாகம் குறித்த ஒவ்வொருவரின் கருத்துகளையும் ஆரோக்கியமாகப் பரிசீலிக்க வேண்டும். அனுபவத்தின் அடிப்படையிலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பேச்சும் விவாதமும் அற்புதமான வாய்ப்புகளை உண்டாக்கும். இந்த அனுபவப் பகிர்வே வளரும் தலைமுறையின் பொருளாதார நிர்வாகத்திற்கான ஆதார நீராகும்.

பலாபலன்களின் பெருக்கம்

கொடுக்கல் – வாங்கல் குறித்த வெளிப்படையான பேச்சுகளும் விவாதங்களும் பல தவறான நிதி அணுகுமுறைகளைத் தடுத்து விடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்த ஒரு கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இந்தப் பேச்சும் விவாதமுமே அற்புதமான கல்விமுறையாகவும் ஆராய்ச்சி முறையாகவும் செயல்படும்.

குடும்பத்தில் ஒருவருக்குத் தோன்றாத அற்புத யோசனை இன்னொருவரிடமிருந்து வந்து அதைச் செயல்படுத்தும் போது உங்களது பண சேமிப்பும் பணப் பெருக்கமும் ஆச்சரியம் தரக் கூடியதாக இருக்கும். கருத்துகளின் பரிசீலனைகள் நடைபெறும் போதே இந்த அற்புத வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

நிறைவாக…

‘நிதி குறித்த நீதிகள்’ என்ற இப்பத்தி உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றலாம். இந்தச் சாதாரணத்தைத் தவற விடுவதே அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள இயலாமல் செய்து விடுகிறது.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வரவை மிஞ்சி செலவு செய்திருக்கலாம். வரம்பு தெரியாமல் கடன் பட்டிருக்கலாம். நம்பி பணத்தைக் கொடுத்து மோசம் போயிருக்கலாம். தவறான ஒன்றில் முதலீடு செய்து பணத்தை இழந்திருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? குடும்பத்தின் ஆணிவேராகவும் கிளை வேராகவும் இருக்கும் வரவு – செலவு குறித்த விவாதங்களையும் பேச்சுகளையும் பேசாமல் தவிர்த்துக் கொள்வதுதான்.

குடும்பத்தில் நிதி நிர்வாகம் குறித்தும் பேசும் போது நிறைய முரண்பாடுகள், பிரச்சனைகள் ஏற்படலாம். அதைப் பேச்சு மற்றம் விவாத அளவில் சமாளித்து விட்டால் தவறான ஒரு நிதிப் பிரச்சனை ஏற்பட்டு சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடும். அதற்கு நிதி குறித்த நீதிகளை உருவாக்கிக் கொள்ள உதவும் மூன்று கூறுகளான

Ø வெளிப்படைத் தன்மை

Ø பொதுப்படைத் தன்மை

Ø கருத்துகளின் பரிசீலனை

ஆகிய மூன்றும் எப்போதும் துணை நிற்கும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...