நீங்கள் மட்டும் ஏன் ஏழையாக இருக்க வேண்டும்?
உங்களது வருமான குறைவால்
நீங்கள் ஏழைகளாவதில்லை. சேமிப்புக் குறைவால்தான் ஏழைகளாகிறீர்கள்.
நீங்கள் எவ்வளவு அதிகமாகச்
சம்பாதித்தாலும் நீங்கள் எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியம். மிக அதிகமாகச்
சம்பாதித்து அனைத்துச் சம்பாத்தியத்தையும் செலவுகளாகச் செய்து கொண்டிருந்தால் உங்களிடம்
சேமிப்பு என்று எதுவும் மிஞ்சாது. சேமிக்காத ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் செல்வந்தர்
ஆக முடியாது.
நீங்கள் எவ்வளவு குறைவாகச்
சம்பாதித்தாலும் உங்கள் செலவினங்களைச் சம்பாத்தியத்திற்குள் வைத்துக் கொண்டால் நீங்கள்
சேமிப்பதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டியதில்லை. செலவினம் போக எஞ்சுவதெல்லாம் உங்கள்
சேமிப்பாகத் தானாகவே உருவாகி விடும்.
காலப்போக்கின் மாற்றம்இப்போது
சேமிப்பையும் ஒரு செலவாகக் கருதிக் கொண்டு வருமானத்தின் முதல் செலவினமாக அதைத் தனியாக
சேமிப்புக் கணக்குகளில் சேர்க்கும் பழக்கமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது.
சேமிப்பு எப்போது செலவாக
ஆனது என்று நீங்கள் கேட்கக் கூடாது. அப்படி நினைத்துக் கொண்டால்தான் இப்போது பலராலும்
சேமிக்க முடிகிறது. நீங்களும் அப்படியே சேமியுங்கள். அது சரி நீங்கள் மாதா மாதம் சேமிப்புக்காக
எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?
சேமிப்புக்காக நிறைய செலவு
செய்யுங்கள். அந்தச் செலவுதான் உங்களை பணக்காரராக ஆக்கப் போகிறது.
*****
உங்கள் பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பது?
உங்களுக்கென எதிர்பார்ப்புகள்,
நோக்கங்கள் இருந்தால் நேரடியாக நிறைவேற்ற முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்து அப்படி
இப்படி என்று எப்படியோதான் நிறைவேற்ற முடியும்.
சொல்லியிருந்தால் செய்திருப்பேன்,
கேட்டிருந்தால் உதவியிருப்பேன், நாடியிருந்தால் நிறைவேற்றியிருப்பேன் என்று சொல்பவர்கள்
சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். பேச வேண்டும்
என்பதற்காகத்தான்.
பேச்சை வைத்து யாரையும் நம்பி
விட முடியாது. அவர்களிடம் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்குமே, இவ்வளவு சிரம
பட்டிருக்க வேண்டாமே என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. ஓர் ஆறுதலாகச் சொல்லாவிட்டால்
நாமெல்லாம் என்ன மனித ஜென்மம் என்று நினைத்துக் கொண்டு கலெக்டர் வேலையையே வாங்கிக்
கொடுத்திருப்பேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
சட்டென்று எதற்கும் தீர்வு
கண்டு விட முடியாது. ஆர அமரச் சிந்தித்து அதைச் செயல்படுத்திதான் தீர்வு காண வேண்டும்.
இதற்கு மற்றவர்கள் எல்லாம் உதவுவார்கள், துணை நிற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
உதவ மாட்டார்கள், துணை நிற்க மாட்டார்கள் என்றும் முடிவு கட்டி விட முடியாது. உபத்திரவமாக
இருந்து விட மாட்டார்கள் என்று உறுதி கூறி விட முடியாது.
ஆனால் ஒரு துவக்கத்தை நீங்கள்தான்
செய்தாக வேண்டும். அதற்குப் பின்பு உதவுபவர்கள் வந்து சேரலாம், உபத்திரவம் கொடுப்பவர்கள்
வந்து கொடுக்கலாம், காலை வாரி விடுபவர்கள் காலை வாரி விடலாம், தாங்கி நிற்பவர்கள் வந்து
தாங்கி நிற்கலாம். உங்கள் சுமையை நீங்கள் சுமந்துதான் ஆக வேண்டும், நீங்கள் ஏற்க வேண்டிய
பொறுப்பை நீங்கள் ஏற்றுதான் ஆக வேண்டும்.
ஓர் உண்மை என்னவென்றால்,
நீங்கள் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளுக்கு நீங்களேதான் பிரச்சனைகளை உருவாக்கியிருக்க
முடியும். உங்கள் மனம் உருவாக்கிய பிரச்சனை என்னவென்று உங்களுக்கே தெளிவாக தெரியும்.
இன்னொருவர் உருவாக்கிய பிரச்சனைக்கு நீங்கள் எப்படித் தீர்வு காண முடியும். அது அவர்
மனதுக்கே துலக்கமாகும். அக உலகைப் பொருத்த வரையில் இதுதான் நிலைமை. அவரவர் உருவாக்கிய
பிரச்சனைகளுக்கு அவரவர்களே தீர்வு காண முடியும்.
இப்போது உங்கள் பிரச்சனைக்கு
யார் தீர்வு காண முடியும் என்று சொல்லுங்கள். சாட்சாத் நீங்கள்தான். உங்களை விட உங்கள்
பிரச்சனைகளுக்கு யார் சிறப்பாகத் தீர்வு காண முடியும் என்று சொல்லுங்கள்!
அதனால் போய் உங்கள் பிரச்சனைக்கு
நீங்களே தீர்வு கண்டு கொள்ளுங்கள்! இதுதான் உலகிலேயே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான
ஆபத்தில்லாத ஆகச் சிறந்த ஒரே வழிமுறை.
*****
54321 சூத்திரம் தெரியுமா?
54321 என்ற ஒரு சூத்திரம்
இருக்கிறது.
இப்படி ஒரு கௌண்ட் டவுன்
சூத்திரமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இப்படியும் ஒரு சூத்திரம்
இருக்குமா என்று நீங்கள் நினைக்கலாம்.
இந்தச் சூத்திரத்தைப் பற்றித்
தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தச் சூத்திரத்தை நோக்கித்தான்
இன்றைய மனித சமூகம் ஆளாய்ப் பறக்கிறது, பேயாய் அலைகிறது.
இந்த நூற்றாண்டு மனிதர்களின்
சூத்திரம் இதுதான்.
இனி அந்தச் சூத்திரத்தைக்
காண்போம்.
5 |
ஐந்திலக்கச்
சம்பளம் |
4 |
நான்கு
சக்கர வாகனம் |
3 |
மூன்று
படுக்கையறை வீடு |
2 |
இரண்டு
குழந்தைகள் |
1 |
ஒரு மனைவி |
ஐந்திலக்கச்
சம்பளம் என்பது லட்சத்தில் சம்பளத்தைப் பெறுவதைக் குறிக்கிறது.
நான்கு சக்கர வாகனம் என்பது
மகிழுந்து எனும் கார் வாங்குவதைக் குறிக்கிறது.
மூன்று படுக்கறை வீடு என்பது
அடுக்ககம் எனப்படும் அப்பார்ட்மென்டுகளில் மூன்று படுக்கையறை உள்ள வீடு வாங்குவதைக்
குறிக்கிறது.
இரண்டு குழந்தைகள் என்பது
ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. அது தவறிப்
போய் இரண்டு ஆணாகவோ, இரண்டும் பெண்ணாகவோ ஆகி விடுவதும் உண்டு. அதெல்லாம் மனிதர்களின்
கணக்குச் சூத்திரத்திலா இருக்கிறதா? இருந்தாலும் இந்தச் சூத்திரம் சொல்வது ஓர் ஆண்
மற்றும் ஒரு பெண் குழந்தையை.
ஒரு மனைவி என்பது கனக்கச்சிதமான
ஒரு தார மணத்திற்கான சூத்திர முறையைச் சொல்கிறது. இன்னொரு மனைவி என்றால் பிறகு நீங்கள்
இன்னொரு ஐந்திலக்கச் சம்பளம், இன்னொரு நான்கு சக்கர வாகனம், இன்னொரு மூன்று படுக்கையறை
வீடு, இன்னும் இரண்டு குழந்தைகள் என்று இதனை இன்னொரு மடங்கிற்கு விரிவு பண்ணிக் கொள்ள
வேண்டும்.
கடைசியாக ஒரு மனைவி என்று
முடிவதால் இது இளைஞர்களுக்கான சூத்திரமாகி ஆணாதிக்கச் சூத்திரமாகவும் இருக்கும் துர்பாக்கியத்தையும்
அடைகிறது. ஒரு பெண்ணுக்கு இந்தச் சூத்திரத்தை எப்படிக் கட்டமைப்பது? கடைசியில் ஒரு
கணவன் என்றா?
பொதுவாக இந்தச் சூத்திரம்
இன்றைய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. வேறெப்படி எடுத்துக் கொள்வது
இந்தச் சூத்திரத்தை?
*****
No comments:
Post a Comment