22 Feb 2024

பிழைப்பு & வீட்டு மெஸ்

பிழைப்பு

இன்ஜினியரிங் படித்தால் சம்பந்தம் இல்லாத வேலை என்ற நிலைதான் சீனிவாசனுக்கும். சிவில் படித்து விட்டு ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வேலை வெறுத்துப் போய் ஒரு நாள் ராஜினாமா செய்தான். கொஞ்ச நாள் வெட்டியாக அலைந்து கொண்டிருந்தான்.

எத்தனை நாட்கள் இப்படி அலைவது என்று யூடியூப் சேனல் ஆரம்பித்தான். சேனல் பிய்த்துக் கொண்டு போனது. யார் கண் பட்டதோ சில நாட்களிலே கோழிகள், நாய்கள், பூனைகளைக் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி சேனலை முடக்கினார்கள்.

வேறு வேறு பெயர்களில் சேனல்களை ஆரம்பித்துப் பொளந்து கட்டினான். எந்தப்  பெயரில் ஆரம்பித்தாலும் பூச்சி, பறவை, ஊர்வன, நீந்துவன என்று எதையாவது ஒரு பெயரைச் சொல்லி அதைக் கொடுமைப்படுத்துவதாக முடக்கிக் கொண்டே இருந்தார்கள்.

கடைசியில் யாரையும் எதையும் கொடுமைப்படுத்தக் கூடாது என்று தன்னைத் தானே கொடுமைபடுத்திக் கொண்டு ஒரு சேனலை ஆரம்பித்தான். உன்னை நீயும் கொடுமைபடுத்திக் கொள்ள கூடாது என்று அதையும் முடக்கினார்கள்.

வெறுத்துப் போன சீனிவாசன் போங்கடா நீங்களும் உங்கள் சேனலும் என்று அதற்காக வாங்கிய கேமிராவை வைத்துக் கொண்டு இப்போது போட்டோகிராபராகிக் கிராமத்து மக்களுக்குப் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை எடுத்துக் கொடுத்து பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

யாரும் இதுவரை அவன் கேமிராவைக் கொடுமைப்படுத்துவதாகப் புகார் தெரிவிக்காமல் இருப்பதால் அவன் பிழைப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது.

*****

வீட்டு மெஸ்

ஆனந்துக்கு கிராமம் என்றால் அப்படி ஓர் இஷ்டம். படித்துத் தொலைத்து விட்டான். அதை வைத்துக் கொண்டு இந்தக் கிராமத்தில் என்ன செய்வது?

டவுனுக்கோ சிட்டிக்கோ போனால் படித்த படிப்பைச் சொல்லி ஒரு மார்கெட்டிங் வேலையை வாங்கிக் கொண்டு வீடு வீடாக, கடை கடையாக எவன் தலையையாவது தடவலாம். இங்கே கிராமத்தில் எவன் தலையைத் தடவுவது? எல்லார் தலையும் வருமானம் இல்லாத கவலையால் முடி உதிர்ந்து சொட்டையாகவும் வழுக்கையாகவும் ஆகி விட்டது. தடவினால் நான்கு முடி கூட தேறாது.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு எப்படியோ சென்னைப் பட்டணத்துக்கு வந்து டூவீலரில் அலைகின்ற ஒரு வேலையையும் தேடிக் கொண்டு விட்டான். நல்ல சாப்பாட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்.

ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ள மாட்டேன்கிறது. ஒரு நாள் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. மறுநாள் வயிற்றுக் கடுப்பாக இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் பேதியாகப் போய்த் தொலைகிறது. அதற்கும் அடுத்த நாள் வாந்தியாக உவ்வே எடுக்க வைக்கிறது. இந்தப் பட்டணத்துச் சாப்பாட்டோடு போராட்டமாக இருக்கிறது.

பேசாமல் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து விடுவோமா என்ற ஒரு யோசனை. அம்மாவை அழைத்துக் கொண்டு விட்டால் அப்பா என்ன செய்வார் ஒண்டிக் கட்டையாக? அப்பாவையும் அழைத்துக் கொண்டு விட்டால் மூன்று பேர் குடித்தனத்துக்கு ஒரு வீடு, மூன்று பேருக்கும் சாப்பாடு என்று எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்தாலும் பிழைத்துக் கொண்டு விடலாம், சிட்டியில் வேலை இருந்தாலும் பிழைக்க முடியாது.

அம்மாவும் வேண்டாம், அப்பாவும் வேண்டாம் சுயமாகச் சமைக்கலாம் என்றால் இந்த டூவீலர் அலைச்சலில் அதற்கு எங்கே நேரம் இருக்கிறது? சரிதான் என்று ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அது வேறு குழந்தை குட்டி என்று பெருகி விட்டால் அது அதை விட ஆபத்தாகத் தோன்றியது ஆனந்துக்கு.

என்னடா செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த ஆனந்துக்கு அந்தி மசங்கிக் கிடந்த ஒரு பொழுதில் பக்கத்து வீட்டிலிருந்து தொன்னையில் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலும் பேப்பர் கப்பில் பாயாசமும் வந்தன.

என்னடா இந்தச் சென்னைப் பட்டணம் திடீரென இனிக்கிறதென யோசித்தவனுக்கு அந்த வீட்டுக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்ற பதில் மொன்னையாகச் சொல்லப்பட்டது.

சாப்பிட்டுப் பார்த்தவனுக்கு ஆகா என்றிருந்தது. அடடா என்று கூத்தாட வேண்டும் என்பது போலிருந்தது. அப்படியே அம்மாவின் கைமணம், கிராமத்துச் சாப்பாட்டின் பக்குவம்.

குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போவதாகச் சொல்லி மூன்று வேளை சாப்பாட்டுக்கு அந்த வீட்டை ஒரு வீட்டு மெஸ்ஸாக மாற்றி விட்டு வந்தான்.

வீட்டு மெஸ் சாப்பாடு டவுன் வாழ்க்கைக்கு அவனை ஆசுவாசப்படுத்தி விட்டது. கூடவே எத்தனை நாள் வீட்டு மெஸ்ஸில் சாப்பிடுவது, நாமே ஒரு வீட்டு மெஸ்ஸை ஆரம்பித்துச் சாப்பிடலாமே என்ற யோசனையை உருவாக்கி விட்டது.

இப்படி ஒரு யோசனை தோன்றிய பிறகு சும்மா இருக்க முடியாமல் வீட்டைப் பிடித்து அம்மாவையும் அப்பாவையும் குண்டு கட்டாக ஏற்றிக் கொண்டு வந்து வீட்டு மெஸ்ஸை ஆரம்பித்து விட்டான். மார்க்கெட்டிங் வேலைக்கு டாட்டா காட்டி விட்டு டூவீலரை மளிகை சாமான்கள் வாங்கவும் காய்கறிகள் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டான்.

“பாத்தியம்மா! டவுன்ல எப்படியெல்லாம் பொழைப்பு இருக்குது!” என்று அம்மாவையும் அப்பாவையும் ஆச்சரியப்படுத்துவதாகத் தன் சாமர்த்தியத்தை எடுத்து விட்டான்.

“அட போடா! கிராமத்துல நமக்கு மட்டும் சமைச்சுப் போட்டுக்கிட்டு சந்தோஷமா இருந்தேன். இங்கே வந்து என்னான்னா தெனமும் நூத்துப் பேருக்குச் சமைச்சுப்  போட்டுக்கிட்டு பெண்டு கழண்டு போய்க் கிடக்குறேன்.” என்று அம்மா அவன் மூஞ்சில் குத்தியது.

அப்பா என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்று அப்பாவின் பக்கம் முகத்தைத் திருப்பினான்.

“ஏம்டா கொசக்கெட்ட பயலே! நானெல்லாம் ஒங்க அம்மா தண்ணிக் கேட்டா கூட மூஞ்சுலயே ஒரு எத்து விடுவேன். என்னைக் கொண்ணாந்து இங்க எச்சி எலைய பொறுக்க விட்டுட்டியேடா நாதாரி நாயே!” என்றார் அப்பா காறிய எச்சிலைச் சற்றுத் தூரமாகத் துப்பிக் கொண்டு.

ஆனந்துக்கு சர்வ நாடியும் ஒடுங்கியது போலிருந்தது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...