30 Jun 2023

உருமாற்றம்

உருமாற்றம்

இதை நிலைநிறுத்தினால்

அது சரியாகி விடலாம் என்று தோன்றலாம்

அதை நிலைநிறுத்தினால்

இது சரியாகி விடலாம் என்று தோன்றலாம்

எதை நிலைநிறுத்தும் போது

எது எப்படி மாறும் என்று

உனக்கு எனக்கு யாருக்குத் தெரியும்

இதனால் இதுவோ

அதனால் அதுவோ

எதனால் எதுவோ

என்றெல்லாம் எதிலும் நிச்சயமற்றிருக்கலாம்

எது வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும் மாறலாம்

மாறிக் கொண்டிருக்கும் என்பதொன்று மட்டும்

மாறாது இருக்கலாம்

மாறாது இருக்கும் அதுவும்

ஒரு நாள் மாறிப் போகலாம்

*****

29 Jun 2023

மெட்ராஸ் போபியா

மெட்ராஸ் போபியா

வானில் புதிது புதிதாக நட்சத்திரங்கள் தோன்றும் போது பயமாக இருக்கிறது. புதிதாக நட்சத்திரம் தோன்றும் போது மகா புருஷர்கள் பிறப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ நட்சத்திரங்கள் என்றால் பயம். நட்சத்திரங்கள் தோன்றும் போதெல்லாம் பயம் தோன்றுகிறது.

சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், ராக் ஸ்டார், லிட்டில் ஸ்டார் என்று இப்படி பல நட்சத்திரங்கள் தோன்றி உண்டான பயத்தில் அண்மைக் காலத்தில் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைப் பார்த்தும் பயம் உண்டாகத் தொடங்கி விட்டது.

உலகை ரட்சிக்க வந்த கருணை மகான் கிறிஸ்து. அவர் தோன்றிய உலகில் இப்படிப் பல ஸ்டார்கள் உருவாகிக் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைக் கண்டு பயம் காணும்படி பண்ணி விட்டார்களே. நிஜமாகவே நான் வாழ்வது கலி காலமா? அல்லது கிலி காலமா?

நட்சத்திரங்கள் என்ன பாவம் செய்தது? இவர்கள் ஏன் பெயருக்கு முன்னால் ஸ்டாரைப் போட்டுக் கொள்ள வேண்டும்? இந்த ஸ்டார்கள் இரவில் தோன்றி பகலில் மறைந்து விடுகின்றன. அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? ஒருவேளை இருட்டுத்திரையில் அவர்களின் படங்கள் காட்டப்படுவதால் ஸ்டாருக்கு அவ்வளவு மௌசோ என்னவோ.

மனோதத்துவ மருத்துவரைப் பார்த்த போது இந்த ஸ்டார் பயம் ரொம்பவே புதியது என்றார். இந்த ஸ்டார் போபியா உலகில் முதல் முறையாகத் தமிழகத்தில் என்னிடம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் மெட்ராஸ் ஐ என்பது போல மெட்ராஸ் போபியா என்று பெயர் வைக்கப்படலாம் என்கிறார். என்னால் மெட்ராஸ்க்கு இப்படி ஓர் அவப்பெயர் ஏற்பட வேண்டுமா?

பக்கத்து வீட்டு பாப்பா ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று பாடிக் கொண்டிருந்தாள். என்ன அழகான குரல். தேன் சிந்தும் குரல். ரெண்டு சொட்டு எடுத்து நக்கிக் கொள்ளலாம். கேட்க கேட்க ஆசையாக இருந்திருக்க வேண்டும். அது உங்களுக்கு. எனக்கு? நான் ஓடிப் போய் பாப்பாவின் வாயைப் பொத்தி விட்டேன். அடே பாதகா என்ன காரியம் பண்ணி விட்டாய் என்று ஆளாளுக்குச் சண்டைக்கு வந்துவிட்டார்கள். ஸ்டார் பயம் எனக்கல்லவா தெரியும். ஏன்டா இப்படிப் பண்ணினாய் என்றார்கள். ஸ்டார் வராமல் எந்தப் பாடலையாவது பாடிக் கொள்ளட்டும் என்றேன். ஏன்டா ஸ்டார் என்றால் இப்படிப் பயந்து சாகிறாய் என்று தலையில் அடித்துக் கொண்டார்கள்.

பக்கத்து வீட்டு அம்மாஞ்சி மாமி இருக்கிறாளே. அவளைத் தெரியுமா உங்களுக்கு? உங்கள் பக்கத்து வீட்டு ஆசாமிகளையே தெரியாது உங்களுக்கு. என்னுடைய பக்கத்து வீட்டு மாமி பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? அவளுக்கு ஒரு பையன் இருந்தான். இருந்தான் என்றால் இப்போது இல்லை. போய் சேர்ந்து விட்டான். ஒரே ஒரு பையன்தான் இருந்தான். அவனும் போய்ச் சேர்ந்து விட்டதால் மாமி இப்போது பாவம் ஒண்டிக்கட்டை. தனியாகக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறாள். காலம் ஓட மாட்டேன்கிறது, நகர மாட்டேன்கிறது என்று ஓயாத புலம்பல்.

அவளுடைய கதையைக் கேட்டால் அது ஓர் இராமாயணம். ரொம்ப காலம் கல்யாணம் ஆகாமல் கிடந்திருக்கிறாள் மாமி. இப்படிக் கழிசடையாகக் கிடந்து இம்சை பண்ணுகிறாளே என்று ஆளாளுக்குத் திட்டிய பின்னும் கடவுள் கொஞ்சம் கூட அவளுக்குக் கருணை காட்டவில்லை. அவள் காலத்தில் பாருங்கள் கடவுள்கள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறார்கள். கடைசியில் தெருமுக்கு விநாயகர் கொஞ்சம் பரிதாபப்பட்டதில் மாக்கான் மாமா மூன்று முடிச்சைப் போட்டிருக்கிறார்.

கல்யாணம்தான் தாமதல் என்றால் குழந்தைபேறும் தாமதம். அதற்குள் படித்துப் பட்டம் பெறாமல் ரொம்ப சுலபமாக மலடி என்ற பட்டத்தை வாங்கி விட்டாள். அந்தப் பட்டம் பத்து ஆண்டுகளுக்கு மேல் தரிக்காமல் ஒரு பையனும் பிறந்து விட்டான்.

பையன் பிறந்த யோகமும் சோகமும் என்று மாமிக்கு இரண்டு பக்கங்கள் பையன் பிறப்பால் இருந்தன. யோகம் மலடிப் பட்டத்தைப் பறிகொடுத்தது. சோகம் மாக்கான் மாமாவை விபத்தில் பறிக்கொடுத்தது. மாக்கான் தனியாய் விடாமல் பிள்ளையைக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்திருக்கிறான் என்ற பெருமை ஒன்றுதான் மிச்சமாக இருந்தது.

மாமி பெற்றெடுத்த பிள்ளை பால் குடித்த பத்தாவது நாள் பால் குடியை மறந்து டிவி பெட்டியைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. ரோலக்ஸ் ஸ்டார் என்ற நடிகன் கை வித்தை, கால் வித்தை, மூக்கு வித்தை, நாக்கு வித்தை என்று காட்டி ரொம்ப பெரிய ஆளாக வளர்ந்து கொண்டிருந்தான். அந்த ரோலக்ஸ் ஸ்டாருக்கு இந்தப் பையன் பரம ரசிகனாகி விட்டான். வினா தெரிய ஆரம்பித்து மூன்று நான்கு வயதுக்கு எல்லாம் பூஜை அறையில் வைத்துப் பவ்வியமாக வழிபடத் தொடங்கினான்.

பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த நாட்களில் ரோலக்ஸ் ஸ்டார் பற்றிய அத்தனை செய்திகளையும் செய்தித்தாள்கள், இதழ்களிலிருந்து கத்தரித்துச் சேகரிக்கத் தொடங்கி விட்டான். பையிலிருந்த பாடப்புத்தகத்தைத் தூக்கி எறிந்து விட்டு கத்தரித்துச் சேகரித்த செய்திகளின் ஆல்ப புக்கை வைத்துக் கொண்டான். பள்ளியில் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆல்ப புக்கை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த வரிகளைக் கர்ம சிரத்தையாக மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

பதின்ம வயதைக் கடந்த போது ரோலக்ஸ் ஸ்டார் பற்றிய அத்தனை விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தான். வாலிப வயதை நெருங்கிய போது முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு ஐந்து அத்தியாயங்களில் ரோலக்ஸ் ஸ்டார் பற்றிய கருதுகோள்களை 400 பக்கங்களில் எழுதிமுடித்திருந்தான்.

மாமி நியாயமாகப் பையனைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வேண்டும். பெருமைபட்டுக் கொண்டிருந்தாள். எத்தனை பிள்ளைகள் இப்படி சுயம்புவாக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி தனக்குத்தானே படித்துத் தனக்குத்தானே ஓர் ஆய்வைச் செய்ய முடியும் என்ற நிறைவு இருந்தது அவளுக்கு.

வாலிபத்தோடு வளர வளர பையன் ரோலக்ஸ் ஸ்டார் போல சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் கேட்ச் பிடித்து புகையைக் காற்று மண்டலத்துக்கு வள்ளலைப் போல வாரி வழங்கினான். பெண்களைக் கண்ட போது நாணிக் கோணி சேஷ்டைகள் செய்தான். பார்ப்போரை எல்லாம் வாங்கண்ணா, போங்கண்ணா என்று மரியாதைக் காட்டினான். அப்படி அவன் மரியாதை காட்டிய பட்டியலில் எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்த ஒரு பொடியனும் இருந்தான். அடிக்கடி அது, இது, எது, உது, மது, பொது என்று வாய் கோணியபடி வசனங்களை உளறியபடி இருந்தான். விரல்களை விதவிதமாகச் சுழற்றிக் கொண்டிருந்தான். கிழிந்த ஜீன்ஸ் பேண்டை வாங்கி மேலும் கிழித்துக் கொண்டு போட்டுக் கொண்டான்.

ரோலக்ஸ் ஸ்டார் படம் வரும் போதெல்லாம் வெடி வெடித்தான். தோரணம் கட்டினான். பெரிய பெரிய கட் அவுட்டுகள் வைத்தான்.

இந்த வருஷம் பொங்கலில் வெளிவந்த ரோலக்ஸ் ஸ்டாருக்காகக் கட் அவுட் வைத்து அதன் மேலேறி பீரைப் பீய்ச்சி அடித்து தன்னுடைய அத்தனை சந்தோஷங்களையும் வெளிபடுத்திய போது அந்த உயரத்திலிருந்து கீழே விழுந்து ரத்தசிவப்பில் அடிபட்ட கொசுவைப் போலச் சேதாரமாகிப் போய்ச் சேர்ந்தான்.

மாமி மாரில் அடித்துக் கொண்டு புலம்பினாள். கொடுத்த பத்து நாள் பாலெல்லாம் ரத்தமாகப் போய்விட்டதே என அரற்றினாள். ரோலக்ஸ் ஸ்டார் மாமிக்கு நிவாரணமாக முப்பதாயிரத்தை மணி ஆர்டரில் அனுப்பி வைத்ததாகக் கேள்வி. ரோலக்ஸ் ரசிகர்கள் சேர்ந்து மூன்றாயிரம் தேற்றித் தந்தார்கள். வந்த பணத்தை எல்லாம் ஒரு சிட்பண்ட் கம்பெனியில் கட்டி அதில் வரும் வட்டியில் வாழ்ந்து விட மாமி போட்ட கணக்கைக் கம்பெனிகாரன் மாற்றி விட்டான். ஆறு மாதத்தில் கம்பெனிக்காரன் கட்டிடத்தை இழுத்து மூடி பூட்டைப் போட்டு விட்டான். மாமிக்கு பையனும் போய் விட்டான். பையன் மூலம் வந்த முப்பத்து மூன்று ஆயிரமும் போய் விட்டது.

ஒரு தர்க்கத்துக்குப் பார்த்தால் மாமிக்கு நட்சத்திரங்களைப் பார்த்தால் பயம் வர வேண்டும். அது என்ன டிசைனோ? எனக்கு நட்சத்திரங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இப்போது சொல்லுங்கள்? என் நட்சத்திர பயத்தில் என்ன தவறு இருக்கிறது? இந்தப் பயத்திற்கு மெட்ராஸ் போபியா என்றோ கோலிவுட் போபியா என்று பெயர் வைப்பதால் என்ன கெட்டு விடப் போகிறது?

*****

28 Jun 2023

பெண் தேடும் படலங்கள்

பெண் தேடும் படலங்கள்

ஜாதகம் பொருந்திப் போக வேண்டும். ராகு, செவ்வாய் தோஷங்கள் ஆகாது. உற்றார் உறவினர்களுக்குப் பிடித்துப் போக வேண்டும். குணமாக இருக்க வேண்டும். குணமென்றால் கோபம் கூடாது. தன்மானம், சுயகௌரவம் அறவே கூடாது. எதிர்பார்க்கும் சீர் சனத்தியும் செய்ய வேண்டும். மாப்பிள்ளை வீட்டின் கணக்கை மனதில் பிடித்து அப்படியே வரதட்சணை கணக்கை நேர் செய்ய வேண்டும். நாங்கள் என்ன கேட்கப் போகிறோம் என்ற வாக்கியம் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் உதிர்க்கப்படும். ஆனால் உங்கள் பெண்ணுக்கு நீங்கள் குறைத்தா செய்யப் போகிறீர்கள் என்ற வாசகத்தின் பொருள் உணர்ந்தோராகப் பெண் வீட்டார் இருக்க வேண்டும்.

பொண்ணும் நல்ல நிறமாக அழகாக இருக்க வேண்டும். கருப்பு கூடாது. நல்ல சிவப்பு முக்கியம். வத்தலாகவோ தொத்தலாகவோ இருக்கக் கூடாது. மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும். இவ்வளவு எதிர்பார்ப்புகளை வைத்து ஒரு பையனுக்குப் பெண் பார்க்க தொடங்கினால் ஒன்று ஒத்து வந்தால் இன்னொன்று ஒத்துப் போகாது.

இதற்காக ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என அலைந்து இன்னும் அலைந்து கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல் அலுத்துப் போய், கிடைக்கும் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகப் போய் விடும்.

ஆண் பிள்ளைகள் நன்றாகப் படித்திருக்கிறார்கள். நன்றாக யோசிக்கிறார்கள். இருந்தும் அவர்கள் உள்ளத்தில் ஏதோ பயம் இருக்கிறது. இல்லையென்றால் அறிவை நம்பாமல் அவர்கள் ஏன் ஜாதகத்தை நம்ப வேண்டும்? யோசிக்காமல் எதையாவது செய்கிறார்கள். அல்லது யோசிக்க ஆரம்பித்து எதையும் செய்யாமல் விட்டு விடுகிறார்கள். ஜாதகங்களுக்கு என்ன அறிவியல் நிரூபணம் இருக்க முடியும்? ஏதோ அள்ளுபுள்ளிக் கணக்குகளில் புள்ளியல் குறிப்பிடும் சில சாத்தியங்களுக்கு வேண்டுமானால் அது ஒத்து வரலாம். அந்த அள்ளுபுள்ளிக் கணக்குகளுக்கு அப்படி அலமலந்து போகிறார்கள் மக்கள். ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரை விட ஒரு பிரபல ஜோதிடர் மிக அதிகமாகச் சம்பாதிக்க முடிகிறது.

ஜாதகம் முடிந்தால் அடுத்த வேகத் தடையாக சாதி இருக்கிறது. இன்னும் சாதிக்குள் திருமணம் செய்வதிலேயே ஏன் நிற்க வேண்டும்? ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எதிர்பார்த்து நீண்ட காலத்தை வீணாக்கி விடுவதைப் போலத்தான் இருக்கிறது. நாளைக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் சாதிக்காரர்கள் முன் நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படியோ வந்து விடுகிறது. என் அனுபவம் என்னவோ நல்லது, கெட்டதுகளில் உற்றார், உறவினர், சாதிக்காரர்களை விட முகம் தெரியாத நட்புகளும் அன்புள்ளங்களும் முன் நின்றது அதிகம்.

நன்றாகச் சம்பாதிக்கும் ஆண் பிள்ளைகளும் பெண் வீட்டாரின் சீர் சனத்திக் குறைந்து விடக் கூடாது என்ற பயத்தில் இருக்கிறார்கள். கிடைப்பதை ஏன் விட வேண்டும் என்ற நினைப்பு காரணமாக இருக்கலாம். எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரைதான் ஆதாயம் என்பதாகவும் இருக்கலாம்.

இன்னும் பையனுக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தபாடில்லை என்று பெருமூச்சு விடுவோர் ஏராளம். பகவான் கண் திறந்து பார்க்க மாட்டேன்கிறார் என்று கடவுளுக்குக் குற்ற உணர்ச்சியை உண்டாக்குவோர் அநேகம். பெண் தேடும் வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிகம் என்று யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதிகபட்சமான எதிர்பார்ப்புகளை ஓரளவு நியாயமான எதிர்பார்ப்புகளுக்குள் கொண்டு வருவதையும் ஏற்க மாட்டார்கள். அவர்களைப் பொருத்த வரையில் இந்த உலகில் பெண்கள் இல்லை. அதுவும் உண்மைதான். அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ற இந்த உலகில் மட்டுமல்ல, எந்தப் பிரபஞ்சத்திலும் இருக்க மாட்டார்கள்.

காலம் போன கடைசியில் வேறு வழியில்லாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அருமையான பல பெண்களை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள். மனங்களின் எதிர்பார்ப்பு அந்த அருமைகளைக் கண்ணுக்குத் தெரியாமல் அடித்திருக்கும்.

*****

27 Jun 2023

மனமெனும் பிரமாண்டப் புதிர்

மனமெனும் பிரமாண்டப் புதிர்

சின்ன சின்ன அபத்தங்கள், கோணல்கள், பிசகுகள் என்று தெரிந்தாலும் அதுதான் மனதுக்கு இஷ்டம்.

அசட்டுத்தனங்கள், பித்துக்குளித்தனங்கள் – இதுதான் மனம் விரும்புவது. மற்றவர்களுக்காக நான் புத்திசாலித்தனத்தை விரும்புவது போல நடிக்கவே செய்கிறேன். மனதுக்கு நிஜமாக அந்தப் புத்திசாலித்தனத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

இந்த மனம் ரொம்ப விஷேசமாக இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக. ஒரு நேரத்தில் இருந்ததைப் போல இன்னொரு நேரத்தில் வாய்க்க மாட்டேன்கிறது.

அந்த நேரத்தில் இருந்தது அந்த நேரத்தில் இருந்ததுதான். பிறிதொரு நேரத்தில் அது போல அதன் சாயலில் கூட இருக்க முடியாது. எல்லாம் அந்தந்த நேரத்தில் இருந்து அப்படியே கடந்து போக வேண்டியன. அதே போல மறுபடியும் இருக்க நினைத்து இந்த நேரத்தில் இருக்க வேண்டிய மனோபாவத்தை இழக்க வேண்டியதில்லை.

அந்தந்த மனோபாவத்தை அப்படி அப்படியே ஏற்க வேண்டுமென்றால் அசட்டுத்தனம் வேண்டியிருக்கிறது. புத்திசாலித்தனம் அதை ஏற்காது. புத்திசாலித்தனம் என்ன செய்யும் என்றால், முன்னர் இருந்தது போன்ற அதே அற்புதமான மனநிலையை எப்படி உருவாக்குவது என்று கிளம்பி விடும். பித்துக்குளி தனங்களை ஏற்கும் மனம் அதைப் பொருட்படுத்தாது. அது எதையும் பொருட்படுத்தாமல் அந்தந்த நேரத்து மனநிலையோடு போய்க் கொண்டு இருக்கும். பைத்தியக்கரத்தனமாக இருப்பதன் மகிழ்ச்சி அது. பைத்தியக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு புத்திசாலிதனத்தோடு இல்லாத மனநிலை முக்கிய காரணம்.

ஏதோ ஒரு நேரத்தில் ரொம்ப பிரமாதாக இருக்கும் மனநிலை பிறிதொரு நேரத்தில் சுமாராகத் தோன்றுவதும் உண்டு. சுமாராக இருந்த மனநிலையைப் பிறிதொரு நேரத்தில் ரொம்பை பிரமாதமாக நினைத்துக் கொள்வதும் உண்டு.

இப்போது எவ்வளவோ வசதி இருக்கிறது. இப்படி இருக்கும் மனநிலையை இப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. டிவியைப் போட்டு விட்டோ, மொபைலை எடுத்து வைத்துக் கொண்டோ அல்லது போதைப் பாக்கைப் போட்டுக் கொண்டோ எப்படியெல்லாமோ மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.

மனநிலையை அப்படி ஒரு நிலையிலிருந்து இன்னொரு அதீத நிலைக்கு மாற்ற என்ன அவசியம் வந்து கிடக்கிறது? நாம் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் அதுவே மாறிக் கொள்ளத்தான் போகிறது. அப்படியும் மாற்ற வேண்டும் தோன்றினால் சுற்றிக் கிடக்கும் இயற்கையை, நடக்கும் வேடிக்கையைப் பார்க்க, புத்தகங்களை எடுத்து வைத்துப் படிக்க, பிடித்தவர்களோடு சில நிமிஷம் பேச, அன்போடு ஒரு செடியோடோ, பிராணியோடோ உறவாட என்று நிறைய இருக்கிறது.

வாசிக்க வாசிக்க மனதைப் போன்ற பிரமாண்ட புத்தகம் ஏது? தோண்ட தோண்ட மனதைப் போன்ற புதையல் உண்டா? யோசிக்க யோசிக்க மனதைப் போன்ற பிரமாண்டம் வேறெதும் இருக்கிறதா என்ன? விடை மேல் விடை காண மனதைப் போன்ற புதிரான உலகத்தைப் போல வேறொன்றைப் படைத்து விட முடியாது.

*****

26 Jun 2023

விவசாயம் காக்க நெல் மூட்டைக்கு நல்ல விலை கொடுங்கள்!

விவசாயம் காக்க நெல் மூட்டைக்கு நல்ல விலை கொடுங்கள்!

இந்த வருஷம் விளைச்சல் நன்றாக இருப்பதாக அப்பா சொன்ன போது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அதைக் கேட்டு எனக்குச் சந்தோசம் இல்லை. விளைச்சல் நன்றாக இருப்பது எனக்கும் தெரிந்த சங்கதிதான். இருந்தாலும் விவசாயத்தைப் பற்றிப் பேசும் போது விளைச்சலைப் பற்றி இப்படி எதையாவது பேசியாக வேண்டும். விளைச்சல் நன்றாக இருக்கிறது அல்லது இல்லை, இந்த வருஷம் நிச்சயம்நிவாரணம் கிடைக்கும் அல்லது கிடைக்காது, இந்த வருஷம் இன்ஷ்யூரன்ஸ் வந்து விடும் அல்லது வராது என்று இப்படித்தான் சமீப காலமாக விவசாய விளைச்சலைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விளைச்சல் நன்றாக இருந்தால் சந்தோசப்பட்டதெல்லாம் ஒரு காலம். இப்போ எங்கே சந்தோசப்பட முடிகிறது? விளைச்சல் நன்றாக இருந்தால் இன்ஷ்யூரன்சும் கிடைக்காது, நிவாரணமும் வராது. இந்த இரண்டும் வராவிட்டால் வயலில் போட்ட முதலுக்குக் கட்டுபடி ஆகாது. இதுதான் சந்தோஷமின்மைக்கும் நல்ல விளைச்சல் கூட வேண்டாம் என்ற எதிர்பார்ப்பின்மைக்கும் காரணம்.

கனமழைப் பொழிந்து நெற்பயிர்கள் அழுகினால் அத்தோடு அதற்குச் செலவு செய்வது முடிந்து விடும். செலவுக்கு ஏற்றாற்போல நிவாரணம் கொடுத்து விடுவார்கள். பூச்சித் தாக்குதலோ அல்லது இயற்கை இடர்பாடுகளோ விளைச்சலைப் பாதித்தால் இன்ஷ்யூரன்ஸ் கொடுத்து விடுவார்கள். அதுவும் செலவுக்கு ஈடாகி விடும்.

நல்ல விளைச்சல் என்றால் நெல்லை விதைத்ததிலிருந்து அறுவடை செய்து வியாபாரியிடம் போடும் வரை செலவுதான். அரசு கொள்முதல் நிலையங்களில் போட்டாலும் மூட்டைக்கு இவ்வளவு என்று கிஷ்தி கட்டிதான் காரியம் சாதித்தாக வேண்டும். விதைப்புச் செலவு, நடவு செலவு, களைபறிப்புக்கான செலவு, உரத்திற்கான செலவு, களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிக்கான செலவு, அறுவடைக்கான செலவு, போக்குவரத்திற்கான செலவு என்று செலிவிட்ட எல்லா தொகையின் கூடுதலும் நெல் மூட்டைக்குக் கிடைக்கும் வரவும் தராசின் இரண்டு தட்டுகளையும் சமப்படுத்துவதில்லை. செலவுத்தொகைக்கான தட்டு எப்போதும் அழுத்திக் கீழே பிடிக்கிறது. வரவுக்கான தட்டு எப்போதும் மேலே போகிறது. இந்தச் சமமின்மை நல்ல விளைச்சலைத் தரும் நிறைவான விவசாயத்தை வெறுத்து நிவாரணமோ, இன்ஷ்யூரன்ஸோ கிடைக்காமல் போய் விடுமோ என்ற குறுக்கு மனத்தை உருவாக்குகிறது.

நியாயமாகச் சொல்வதென்றால் நெல் மூட்டைக்கு வழங்கப்படும் நியாயமற்ற விலைதான் நல்ல விளைச்சல் என்ற சந்தோஷத்தைச் சந்தோஷமில்லாமல் ஆக்குகிறது.

வருடா வருடம் விதை நெல்லின் விலை ஏறுகிறது, உரத்தின் விலை ஏறுகிறது, விவசாயத்திற்குப் போட வேண்டிய முதலீடும் ஏறுகிறது, அதற்குக் கடன் வாங்கினால் அந்தக் கடனுக்கான வட்டியும் ஏறுகிறது, ஆள்கூலி, இயந்திரக் கூலி என்று எல்லாம் ஏறுகிறது. நெல் மூட்டையின் விலை மட்டும் ஏறாமல் போவதால் நிவாரணம் மற்றும் இன்ஷ்யூரன்ஸ் குறித்த அதீத எதிர்பார்ப்பும் நல்ல விளைச்சலை வேண்டாமென்ற நிராகரிக்கும் மனப்போக்கும் விவசாயிகள் மத்தியில் உருவாகி விடுகின்றன.

விவசாயத்திற்கு எவ்வளவோ மானியங்கள் தருகிறார்கள். நிவாரணங்கள் தருகிறார்கள். வேளாண் உதவித்தொகைள் என்ற பெயரில் வருடா வருடம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துகிறார்கள். இவற்றைப் பெறுவதற்குள் அதற்கு வழங்கப்படும் லஞ்சத் தொகைகளையும் அதற்குள் நிகழும் ஊழல் நடைமுறைகளையும் பார்த்தால் அது பல்லாயிரம் கோடி புரளும் ஒரு திருட்டு வணிகமாக இருக்கிறது. இந்தத் தொகைகளைத் தொகுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப நெல் மூட்டைக்குக் கட்டுபடியாகக் கூடிய ஒரு நல்ல விலையை ஏன் தரக் கூடாது? அதுதான் விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தருவதாக இருக்கும்.

பெட்ரோல் விலை, தங்கத்தின் விலை எல்லாம் ஏறிக் கொண்டு போகும் போது நெல் மூட்டையின் விலை மட்டும் எப்படி அதே விலையில் ஆண்டாண்டு காலம் இருக்க முடியும்? அவற்றின் விலையேற்ற விகிதாச்சாரத்துக்கு ஏற்றாற் போல நெல் மூட்டையின் விலையையும் நிர்ணயிக்க வேண்டும்.

நம் நாட்டைப் பொருத்த மட்டில் விவசாயத்தைத் தற்சார்பாகவும் இயற்கையான முறையிலும் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. விவசாயத்தின் தற்சார்பை அழித்து, அதன் இயற்கை முறைகளை மாற்றியமைத்து அதைச் சார்புடையதாகவும், செயற்கை முறைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகவும் மாற்றுவது விவசாயத்தை லாபமற்ற தொழில்முறையாக மாற்றிக் கொண்டு இருக்கிறது.

நெல் மூட்டைக்கான சரியான விலை கிடைப்பதை உறுதி செய்து விட்டால் விவசாயத்திற்கான எந்த உதவித் திட்டங்களோ, கடன் உதவித் திட்டங்களோ கூட தேவையில்லை. நெல் மூட்டைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றால் விவசாயத்துக்கான முதலீட்டை எப்படிப் பணமாகத் திரட்டிக் கொள்வது என்பதை விவசாயிகளே பார்த்துக் கொள்வார்கள். விவசாயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.

விளைச்சலுக்குக் கிடைக்கும் நியாயமற்ற விலை விவசாயிகளைத் தடுமாறச் செய்கிறது. எப்படிச் செய்து அதை லாபகரமாக மாற்றுவது என்ற யோசனையில் களைக்கொல்லியை வாங்கி அடித்து, பூச்சிக் கொல்லிகளைச் சகட்டு மேனிக்குத் தெளித்து, உரத்தைக் கண்டபடி இடுபொருளாக இட்டு விவசாயத்திற்கான முதலீட்டை இவற்றிலேயே இழக்கிறார்கள். விவசாயத்திற்கான இப்பொருட்களை விற்கும் நிறுவனங்களும் வியாபாரிகளும் கொழித்துக் கொண்டிருக்க இவற்றை வாங்கிப் பயன்படுத்தும் விவசாயிகள் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டுச் சோர்ந்து போகிறார்கள்.

விவசாயத்திற்குத் தேவையானது போலியான கழிவிரக்கமோ, விவசாயம் காப்போம் என்ற வெற்று முழக்கங்களோ இல்லை. நிவாரணங்களோ, இன்ஷ்யூரன்ஸ் உறுதிப்பாடுகளோ கூட தேவை இல்லை. மானியங்கள், வேளாண் உதவித் திட்டங்கள் கூட இல்லை. நெல் மூட்டைக்குக் கிடைக்கும் நியாயமான விலைதான் விவசாயத்திற்குத் தேவையானது. அதுதான் விவசாயத்தைக் காக்கும்.

*****

25 Jun 2023

மதிப்பிழந்த ரூபாய்கள்

மதிப்பிழந்த ரூபாய்கள்

2016 ஆம் ஆண்டு

நவம்பர் மாதம்

8 ஆம் நாள்

மறக்க முடியாத நாள்.

பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பு வெளியான நாள்.

அப்போது 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் ஆகிய தாள்கள் புழக்கத்தில் இருந்தன. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தாள்களும் புழக்கத்தில் இருந்தாலும் அவை அதிகமாக நாணயங்களாகப் புழக்கத்தில் இருந்தன.

ரூபாய் தாள்களில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்களை பண மதிப்பிழக்கச் செய்வதாக அப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களில் தோன்றி அறிவித்தார். கருப்பு பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக இந்த நடிவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அதற்கான காரணத்தை விளக்கினார்.

இந்த அறிவிப்பைப் பலர் சிலாகித்தனர். தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்த ரஜினி காந்த் ஆதரித்துக் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டில் உள்ள பல பிரபலங்களும் அதைச் செய்தனர். பிரபலங்கள் யாரும் இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தாக நினைவில்லை. பிரதான எதிர்காட்சியான காங்கிரசிடமிருந்து மட்டும் எதிர்க் கருத்துகள் வந்து கொண்டிருந்தன.

மதிப்பிழக்கச் செய்யப்பட்ட 500 ரூபாயையும் 1000 ரூபாயையும் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மாற்றிக் கொள்ள மக்கள் முண்யடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர். பணத்தை மாற்றுவது அடுத்து வந்த நாட்களில் பெரும் போராட்டமாக இருந்தது.

எங்கள் வீட்டில் அப்போது நகைக்கடன் மூலமாக ஆறு லட்ச ரூபாயை ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களாக வாங்கி வைத்திருந்தனர். அவ்வளவு ரூபாய் பணத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு போய் வங்கியில் கணக்கு வைக்கத்தான் முடிந்தது. கையில் தற்போதைக்குப் பணத்தைத் தர முடியாது என்று வங்கியில் சொல்லி விட்டார்கள். அதாவது வங்கிக் கணக்கில் பணம் இருந்தது. கையில் பணம் இல்லை.

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் சென்னையில் நடைபெறும் திருமணத்திற்குச் சென்றிருந்தார். கையில் இருந்த ஐநூறும் ஆயிரமும் செல்லாமல் போனதில் மொய் வைக்க முடியாமல் போனது. கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை மொய்யாக எழுதினால் எப்படி வீடு திரும்புவது என்ற பயத்தில் மொய் எழுதாமலே ஊர் திரும்பியதை வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படி ஆளாளுக்குச் சொல்ல வேதனையான சம்பவங்கள் பெருகிக் கொண்டிருந்தன. பணத்தை மாற்றுவதற்காக வங்கியில் வரிசையில் காத்திருந்த சர்க்கரை நோயாளிகள் மயக்கமடித்து விழுந்தனர். மாரடைப்பால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பணப்புழக்கம் சிரம தசையில் இருந்தது. மதிப்பிழக்கச் செய்த 500க்கும் 1000க்கும் மாற்றாக மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) புதிய 500 ரூபாயையும், 2000 ரூபாயையும் வெளியிட்டது. புதிய 200 ரூபாய், 100 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் தாள்களையும் வெளியிட்டது. அந்தப் புதிய தாள்களைப் பெறுவதில் மிகுந்த சிரமம் நிலவியது.

ஏற்கனவே இருந்த பழைய 500ம், 1000ம் 80 சதவீதத்திற்கும் மேல் அதாவது தோராயமாக 86 சதவீத அளவுக்கு நாட்டின் பணப்புழக்க மதிப்பில் இருந்தன. அவற்றிற்கு மாற்றாக புதிய ரூபாய் தாள்களை வெளியிடுவது சிரமமாக இருந்தது. 80 சதவீதத்திற்கு மேல் இருந்த நோட்டுகளை மாற்றுவது மிகுந்த சள்ளை பிடித்த வேலை என்பதை விட புதிதாக வெளியிடப்பட்ட தாள்கள் பழைய தாள்களை விட அளவில் சிறியதாக இருந்தது. இதற்காக ஏற்கனவே இருந்த பணம் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரங்களை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியிருந்தது. ஏற்கனவே கடினமாக இருந்த பணப்புழக்கத்தின் பல்வேறு சிரமங்களில் இது ஒரு புதிய சிரமமாகச் சேர்ந்து கொண்டது.

புதிய 500 ரூபாய் தாளை வெளியிட்டதைக் கூட ஏற்றுக் கொள்ள முடிந்தது. 2000 ரூபாய் தாள்களை வெளியிட்டதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது புரியவில்லை. வேறு வழியில்லாமல் பழைய பணத்தை மாற்ற 2000 ரூபாய் தாள்கள்தான் அப்போதைய தற்காலிக தீர்வாக இருந்திருக்க வேண்டும். புதிய 2000 ரூபாய் தாள்களில் சிப்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பதாகவும் பல்வேறு வதந்திகளை உருவாக்கி 2000 ரூபாய் தாள்களுக்கான நியாயங்கள் வேறு சொல்லப்பட்டன. இந்தப் புதிய 2000 தாளைக் கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாது என்று வியாக்கியானங்கள் சொல்லப்பட்ட வேளையில் சாதாரணமாக வண்ணத்தில் நகலெடுக்கும் இயந்திரத்திலேயே (கலர் செராக்ஸ் மிஷின்) இதை பலர் நகலெடுத்துப் புழக்கத்தில் விடடனர். அது வேறு பெருங் குழப்பத்தை உண்டு பண்ணியது. கையில் இருக்கும் பணம் நல்ல பணமா, கள்ளப் பணமா என்ற குழப்பம் ஒவ்வொரு முறை 2000 ரூபாய் தாள் கைக்கு வரும் போது ஒவ்வொருவருக்கும் இருந்தது.

2000 ரூபாய் தாள்களால் மேலும் சில புதிய பிரச்சனைகள் எழுந்தன. சில்லரை மாற்றுவதில் பெருத்த சிரமத்தை நிலவியது. எப்படிப் பார்த்தாலும் 500, 1000 எனப் பதுக்குவதை விட 2000மாகப் பதுக்குவது சுலபமானது என்பதைச் சொல்ல ஆய்வறிவு தேவையில்லை. சாதாரண அறிவுக்கேப் புலப்படும் உண்மை. இந்த உண்மையையும் பலர் அப்போது ஆவேசமாகப் பேசிக் கொண்டார்கள்.

பணத்தை மாற்றியாக வேண்டிய நிலையில் 2000 ரூபாய் தாள் கைக்கு வருவது தவிர்க்க முடியாததாக இருந்தது. என் கைக்கு 2000 ரூபாய் தாள் வந்த போதெல்லாம் பயமாக இருந்தது. பதற்றமாக இருந்தது. உடனடியாக 200க்கோ 300க்கோ இரு சக்கர வாகனத்தில் எரிபொருளை (பெட்ரோல்) நிரப்பி அதை மாற்றுவதில் குறியாக இருந்தேன். அப்போது சில்லரை தட்டுபாடில்லாமல் பணம் கிடைத்த இடம் எரிபொருள் நிலையங்கள்தான் (பெட்ரோல் பங்குகள்).

2000 ரூபாய் தாளை வெளியிட்ட நேரத்திலயே எனக்குப் பயம் இருந்தது. இந்தத் தாளை எப்படியும் திரும்பப் பெறுவார்கள் அல்லது மதிப்பிழக்கச் செய்வார்கள் என்று. உடனடியாகச் செய்யவில்லை. அதற்கு ஏழாண்டுகள் பிடித்தன.

2023

மே மாதம்

19 ஆம் நாள்

மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) 2000 ரூபாய் நோட்டைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டது. மாற்றிக் கொள்ளத்தான் என்னிடம் ஒரு 2000 தாள் கூட என்னிடம் இல்லை.

காலத்தின் சாட்சியமாக ஒரு 2000 ரூபாய் தாளையாவது வைத்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது. தெரிந்த பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் ஒரு தாளையாவது வைத்திருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அப்போது தோன்றவில்லை. அவை இனிமேல் செல்லப் போவதில்லை என்றாலும் மதிப்பிழக்கச் செய்யப்பட்ட ரூபாய் தாள்களின் வரலாற்று சாட்சியங்கள் அல்லவா!

*****

24 Jun 2023

வெக்கையில் விளையும் பருத்தி

வெக்கையில் விளையும் பருத்தி

மே மாதம் வந்தாலே வியர்வை ஊற்றி வழிகிறது. இந்த 2023 ஆம் ஆண்டின் மே மாதம் சில நாட்களில் மழையையும் கொண்டு வந்தது வானத்தின் வியர்வையைப் போல. அது இந்தக் கோடைக்குக் குளுமையைத் தந்தது. வங்கக் கடலில் சில காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் உருவாயின. அவ்வபோது வானம் மேகமூட்டமாக இருந்து வெயிலைத் தணித்தது. சில நேரங்களில் மழை வருவதைப் போலப் புழுங்கித் தள்ளும். மழை வராமலும் போனது.

அவ்வபோது பெய்த மழையின் தாக்கத்தால் வெயிலின் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. இந்த மழை வயலில் பருத்தி போட்டிருந்தவர்களைத்தான் கலவரப்படுத்திக் கொண்டு இருந்தது. பருத்திக்கு வெயில்தான் கொண்டாட்டம். இப்படி வெயிலைத் தணிக்கும் மழை பெய்யக் கூடாது. அதுவும் பிஞ்சு பிடித்துப் பஞ்சாக வெடிக்கும் சமயத்தில் பெய்தால் பஞ்சின் தரம் குறைந்து விடும். காயாக மாறும் பிஞ்சுகளும் பாதிக்கப்பட்டு விடும்.

டெல்டா மாவட்டத்தின் நெல் வயல்கள் ஏகத்துக்குப் பருத்தி வயல்களாக மாறி விட்டன. போன வருடம் பருத்தியின் விலை கிலோ நூறுக்கு மேல் போனதை நினைத்துக் கொண்டு இந்த வருடமும் பலரும் பருத்தி போட்டிருக்கிறார்கள். இந்த வருடம் இவ்வளவு பேர் போட்டிருப்பதால் ஐம்பது அல்லது அறுபதுக்கு மேல் போனால் ஆச்சரியம் என்றும் பருத்திப் போட்டவர்களே விரக்தியாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி வந்தாலும் லாபம்தான் என்றும் உதடு விரியாமல் உள்ளுக்குள் புன்னகைத்தபடிச் சொன்னார்கள். இந்தப் பேச்சில் இருந்த முரணான சுவாரசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பருத்திப் போடுவதின் வரவு – செலவு விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பருத்திக்குச் செலவென்று பார்த்தால் நிலத்தைச் சீரமைப்பது, விதை போடுவது, உரம் வைப்பது, பார் அணைப்பது, தண்ணீர் வைப்பது, மருந்து அடிப்பது, பஞ்சு எடுப்பது என்று ஒரு கிலோ பஞ்சு எடுப்பதற்கு அதிகபட்சமாக நாற்பது ரூபாய் வரை செலவாகி விடும். மீதி கிடைப்பதெல்லாம் லாபம்தான். நாற்பது ரூபாய் செலவு செய்து அறுபது ரூபாய் வருவாய் ஈட்டினால் நல்ல லாபம்தானே. அதுவே நூறு ரூபாய் வருவாய் ஈட்டினால் கொள்ளை லாபமல்லவா! இந்த வருடம் அவ்வளவு லாபம் இருக்க வாய்ப்பிருக்காது என்பதை, விவசாயிகள் பலரும் பருத்திப் போட்டிருப்பதை வைத்துக் கணித்துக் கொண்டிருந்தார்கள்.

நெல் விவசாயத்தை விட பருத்தி விவசாயத்தில் டெல்டா விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். யானையைக் கட்டி போரடித்த வயல் வெளிகளில் ஆட்களை வைத்துப் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை பருத்திப் போட்டு லாபம் பார்த்து விட்டால் ஒவ்வொரு வருடமும் பருத்தி போடும் ஆர்வமும் இயல்பாக வந்து விடும். அப்படித்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூச்சிப் பிடிக்காமல் ஒரு செடிக்கு நாற்பது காய்களுக்கு மேல் காய்த்தால் நல்ல லாபம். அதுவே அறுபது காய்கள் வரை என்றால் பருத்தியைப் போல ஒரு விவசாயியை எந்தப் பயிரும் தூக்கி விடாது என்று சொல்லலாம். அப்படி அடித்துத் தூக்கி விட்டு விடும்.

இந்தக் கோடை வெக்கையில் விளையும் பருத்திதான் வெக்கையைச் சமாளிக்கும் காட்டன் உடையாகிறது. வெக்கையில் விளைவதால் வெக்கையைச் சமாளிக்கும் ஆற்றல் பருத்திக்கு இருக்கிறது போலும்.

*****

23 Jun 2023

நிர்சலன நித்திய கல்யாணிகள்

நிர்சலன நித்திய கல்யாணிகள்

தற்கொலைக்கு முன் தோன்றிய

அற்புத கவிதையை எழுதாமல்

தொங்கி விட்ட ரகசியம்

அறைந்து முழுவதும் அடைந்து கிடக்கிறது

விபத்தில் சிக்கி சின்னபின்னமாகும்

சில நொடிகளுக்கு முன் தெரிந்த உண்மை

காற்று மண்டலத்திற்குள் எங்கு போவதென்று

அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது

அணுகுண்டு வெடிக்கும் சற்று முன்பு

விவாகரத்து முடிவைக் கைவிட்ட

சமாதானப் பதிவு ஜீவனை இழந்து

அடையாளமற்று அலைந்து கொண்டிருக்கிறது

நிச்சயமற்ற எல்லாவற்றுக்கும் பாடம் சொல்வதாக

எங்கு விழுந்தோம் என்று தெரியாமல்

பாறையிலும் முளைத்துக் கிடக்கின்றன விதைகள்

நெருக்கடிக்கு மத்தியில் கல்லறைகளைச் சுற்றி

பூத்துக் கிடக்கின்றன நிர்சலன நித்திய கல்யாணிகள்

*****

யுகாந்திரத்தின் சபிக்கப்பட்ட பாடல்

ஒரு குழந்தையை வைத்துப்

பிச்சையெடுக்கும் வகையில்

உலகம் ஈரமற்றதாகிறது

உறுப்புகளைச் சிதைத்துக் கொண்டு

கையேந்தும் வகையில்

மனிதம் வறண்டதாகிறது

வண்ண வண்ணக் கொடிகள் பறந்தும்

கோவணத்திற்கான தட்டுபாடு

தேசம் முழுவதும் நிலவுகிறது

குருவிகளும் கொக்குகளும்

கையில் காசின்றித்

தண்ணீர் புட்டிகள் வாங்க முடியாமல் தவிக்கின்றன

விலைபோகாத பூக்களை வைத்துக் கொண்டு

பூக்காரி ஒருத்தி வீதி வீதியாகக் கூவிக் கொண்டிருக்கிறாள்

கடவுளின் உண்டியல்கள் நிரம்ப

கடவுள் பசியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்

ஆறு தம்பிகள் இருந்தும்

அண்ணன் ஒருவன் அனாதையாய் அலைகிறான்

இரண்டு கணவர்கள் இருந்தும்

பெண்ணொருத்தி விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறாள்

இந்த யுகம் முழுவதும்

நன்மையை நாடி தீமையை விலக்கிப் பாட சபிக்கப்பட்டிருக்கிறது

*****

22 Jun 2023

பாழ் மனங்களிலும் முளைக்கக் கற்றுக் கொள்ளும் அன்பு

பாழ் மனங்களிலும் முளைக்கக் கற்றுக் கொள்ளும் அன்பு

சொற்களில் முட்கள் முளைக்கின்றன

தழுவுதலின் அணைப்பில் வெஞ்சுடர்கள் தகிக்கின்றன

இதழ்களின் முத்தங்களில்விஷங்கள் துளிர்க்கின்றன

கைகுலுக்கும் கரங்களில் கத்திகள் மறைந்து இருக்கின்றன

பகிரப்படும் உணவில் கிருமிகள் நிறைந்திருக்கின்றன

ஒரு பொழுதைக் கழிக்க நினைத்தால்

உயிருக்கான உத்திரவாதமற்ற தன்மையைச் சந்திப்பது நிச்சயம்

புன்னகையின் பின்னே கோரப் பற்கள் நகைக்கின்றன

சமாதானக் கொடிகளைச் செந்நிறம் நனைக்கிறது

இவ்வளவு கொடூரமாக எல்லாம் மாறிய பின்னும்

அன்பின் மீது நம்பிக்கைகள் வைக்கப்படுகின்றன

சிலுவையில் அறையப்பட்டுக் கொண்டிருந்தாலும்

துப்பாக்கிகள் தொடர்ச்சியாகச் சுட்டுக் கொண்டிருந்தாலும்

வெடிகுண்டுகள் துண்டு துண்டாகச் சிதைத்துக் கொண்டிருந்தாலும்

நம்பிக்கையின் சாத்தியங்களில் ஒளிந்தபடி

எப்படியோ எல்லாவற்றையும் மீறி

காங்கிரீட் தளங்களிலும் முளைக்கும் செடிகளைப் போல

பாழ் மனங்களுக்கு மத்தியிலும் முளைக்கக் கற்றுக் கொள்கிறது அன்பு

*****

வீடுகள் நடத்தும் குடித்தனம்

அப்பாவின் மன உளைச்சலுக்கோ மன மகிழ்வுக்கோ

டாஸ்மாக்

அம்மாவின் மன ஆற்றாமைக்கோ மன நெகிழ்வுக்கோ

நெடுந்தொடர்கள்

குழந்தைகளின் கொந்தளிப்புகளுக்கோ கொண்டாட்டத்திற்கோ

அலைபேசி விளையாட்டுகள்

மனிதர்களை விட்டு வெளியேற முடியாத வீடுகள்

அதே புழுக்கத்தில் அன்றும் இன்றும்

அங்கிங்கு நகர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல்

கொஞ்சம் முன்னே பின்னே மாற்றிக்

காட்சிகளைத் தளர்த்திக் கொள்ள முடியாமல்

பார்த்துப் பார்த்து அலுத்துச் சலித்தவற்றை

மீண்டும் மீண்டும் வேடிக்கை பார்த்தபடி

மனிதர்களுக்கு மத்தியில்

மனிதர்களை அடைத்துப் போட்டுக் கொண்டு

ஆதியிலிருந்து அப்படியே கட்டுசெட்டோடு

குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றன

*****

21 Jun 2023

துக்கத்தின் சாயல்

அந்தகாரச் சாமி

அந்தச் சாமியிடம் வேண்டிக் கொண்டு எடுத்த

எல்லா படங்களும் நன்றாகப் போக

ஏன் அந்தச் சாமி பற்றியே

படம் எடுக்கக் கூடாதென

படம் எடுத்துப் போண்டியானார் அவர்

என்னைப் பற்றிப் படம் எடுக்க வேண்டாம் என

அந்தச் சாமி வந்து கனவில் சொல்லவில்லை என்ற

கோபம் போகவில்லை பிற்பாடு அவருக்கு

போண்டியான கதையைப் படமெடுத்து

பிய்த்துக் கொண்டு போன போது

கதை தந்தச் சாமிக்கு நன்றியைச் சொல்லியபடி

அந்தச் சாமி இருந்த அத்தனைக் கோபமும்

அவரை விட்டு அகன்று போயிருந்தது

அந்தகாரச் சாமி சூட்சமத்தைப்

போண்டியாவதிலும் புட்டு வைக்கும் என்று

*****

துக்கத்தின் சாயல்

இறந்ததற்காக அழுகை

கொஞ்ச நேரம் நீடிக்கிறது

எப்படிச் செத்தார் எனச் சிலர்

கவலையோடு விசாரிக்கின்றனர்

கூலர் பாக்ஸ் வரும் அரை மணி நேரத்திற்குள்

சொந்தக் கதைகள் சோகக் கதைகள் துவங்கி விடுகின்றன

சிரிப்பு வேடிக்கை என்று துவங்கி விடும் போது

தலைமாட்டில் ஊதுவத்தியின் நறுமணம் கமகமக்கிறது

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவோர்

கூலி கட்டாதெனப் பேரம் பேசுகின்றனர்

ஐம்பது கூட்டித் தருவதாக வாக்குறுதி தந்ததும்

முகமலர்ச்சியோடு செல்கின்றனர் செத்தவர் புண்ணியவான் என

ஒலிப்பெருக்கியில் துஷ்டி சொல்பவருக்கு

முடிவில் ஓரு குவார்ட்டர் நிச்சயம் என்றதும்

சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு

சோகத்தை வரவழைத்துக் கொண்டு

வார்த்தை சொல்ல வருந்துகிறோம் என

துக்கத்தின் சாயல் குரலை எடுக்கத் துவங்கிறார்

இரங்கலின் அமானுஷ்யம் பரவத் தொடங்குகிறது காற்றலைகளில்

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...