பாழ் மனங்களிலும் முளைக்கக் கற்றுக் கொள்ளும் அன்பு
சொற்களில் முட்கள் முளைக்கின்றன
தழுவுதலின் அணைப்பில் வெஞ்சுடர்கள்
தகிக்கின்றன
இதழ்களின் முத்தங்களில்விஷங்கள்
துளிர்க்கின்றன
கைகுலுக்கும் கரங்களில் கத்திகள்
மறைந்து இருக்கின்றன
பகிரப்படும் உணவில் கிருமிகள்
நிறைந்திருக்கின்றன
ஒரு பொழுதைக் கழிக்க நினைத்தால்
உயிருக்கான உத்திரவாதமற்ற
தன்மையைச் சந்திப்பது நிச்சயம்
புன்னகையின் பின்னே கோரப்
பற்கள் நகைக்கின்றன
சமாதானக் கொடிகளைச் செந்நிறம்
நனைக்கிறது
இவ்வளவு கொடூரமாக எல்லாம்
மாறிய பின்னும்
அன்பின் மீது நம்பிக்கைகள்
வைக்கப்படுகின்றன
சிலுவையில் அறையப்பட்டுக்
கொண்டிருந்தாலும்
துப்பாக்கிகள் தொடர்ச்சியாகச்
சுட்டுக் கொண்டிருந்தாலும்
வெடிகுண்டுகள் துண்டு துண்டாகச்
சிதைத்துக் கொண்டிருந்தாலும்
நம்பிக்கையின் சாத்தியங்களில்
ஒளிந்தபடி
எப்படியோ எல்லாவற்றையும்
மீறி
காங்கிரீட் தளங்களிலும் முளைக்கும்
செடிகளைப் போல
பாழ் மனங்களுக்கு மத்தியிலும்
முளைக்கக் கற்றுக் கொள்கிறது அன்பு
*****
வீடுகள் நடத்தும் குடித்தனம்
அப்பாவின் மன உளைச்சலுக்கோ
மன மகிழ்வுக்கோ
டாஸ்மாக்
அம்மாவின் மன ஆற்றாமைக்கோ
மன நெகிழ்வுக்கோ
நெடுந்தொடர்கள்
குழந்தைகளின் கொந்தளிப்புகளுக்கோ
கொண்டாட்டத்திற்கோ
அலைபேசி விளையாட்டுகள்
மனிதர்களை விட்டு வெளியேற
முடியாத வீடுகள்
அதே புழுக்கத்தில் அன்றும்
இன்றும்
அங்கிங்கு நகர்ந்து ஆசுவாசப்படுத்திக்
கொள்ள முடியாமல்
கொஞ்சம் முன்னே பின்னே மாற்றிக்
காட்சிகளைத் தளர்த்திக் கொள்ள
முடியாமல்
பார்த்துப் பார்த்து அலுத்துச்
சலித்தவற்றை
மீண்டும் மீண்டும் வேடிக்கை
பார்த்தபடி
மனிதர்களுக்கு மத்தியில்
மனிதர்களை அடைத்துப் போட்டுக்
கொண்டு
ஆதியிலிருந்து அப்படியே கட்டுசெட்டோடு
குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றன
*****
No comments:
Post a Comment