26 Jun 2023

விவசாயம் காக்க நெல் மூட்டைக்கு நல்ல விலை கொடுங்கள்!

விவசாயம் காக்க நெல் மூட்டைக்கு நல்ல விலை கொடுங்கள்!

இந்த வருஷம் விளைச்சல் நன்றாக இருப்பதாக அப்பா சொன்ன போது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அதைக் கேட்டு எனக்குச் சந்தோசம் இல்லை. விளைச்சல் நன்றாக இருப்பது எனக்கும் தெரிந்த சங்கதிதான். இருந்தாலும் விவசாயத்தைப் பற்றிப் பேசும் போது விளைச்சலைப் பற்றி இப்படி எதையாவது பேசியாக வேண்டும். விளைச்சல் நன்றாக இருக்கிறது அல்லது இல்லை, இந்த வருஷம் நிச்சயம்நிவாரணம் கிடைக்கும் அல்லது கிடைக்காது, இந்த வருஷம் இன்ஷ்யூரன்ஸ் வந்து விடும் அல்லது வராது என்று இப்படித்தான் சமீப காலமாக விவசாய விளைச்சலைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விளைச்சல் நன்றாக இருந்தால் சந்தோசப்பட்டதெல்லாம் ஒரு காலம். இப்போ எங்கே சந்தோசப்பட முடிகிறது? விளைச்சல் நன்றாக இருந்தால் இன்ஷ்யூரன்சும் கிடைக்காது, நிவாரணமும் வராது. இந்த இரண்டும் வராவிட்டால் வயலில் போட்ட முதலுக்குக் கட்டுபடி ஆகாது. இதுதான் சந்தோஷமின்மைக்கும் நல்ல விளைச்சல் கூட வேண்டாம் என்ற எதிர்பார்ப்பின்மைக்கும் காரணம்.

கனமழைப் பொழிந்து நெற்பயிர்கள் அழுகினால் அத்தோடு அதற்குச் செலவு செய்வது முடிந்து விடும். செலவுக்கு ஏற்றாற்போல நிவாரணம் கொடுத்து விடுவார்கள். பூச்சித் தாக்குதலோ அல்லது இயற்கை இடர்பாடுகளோ விளைச்சலைப் பாதித்தால் இன்ஷ்யூரன்ஸ் கொடுத்து விடுவார்கள். அதுவும் செலவுக்கு ஈடாகி விடும்.

நல்ல விளைச்சல் என்றால் நெல்லை விதைத்ததிலிருந்து அறுவடை செய்து வியாபாரியிடம் போடும் வரை செலவுதான். அரசு கொள்முதல் நிலையங்களில் போட்டாலும் மூட்டைக்கு இவ்வளவு என்று கிஷ்தி கட்டிதான் காரியம் சாதித்தாக வேண்டும். விதைப்புச் செலவு, நடவு செலவு, களைபறிப்புக்கான செலவு, உரத்திற்கான செலவு, களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிக்கான செலவு, அறுவடைக்கான செலவு, போக்குவரத்திற்கான செலவு என்று செலிவிட்ட எல்லா தொகையின் கூடுதலும் நெல் மூட்டைக்குக் கிடைக்கும் வரவும் தராசின் இரண்டு தட்டுகளையும் சமப்படுத்துவதில்லை. செலவுத்தொகைக்கான தட்டு எப்போதும் அழுத்திக் கீழே பிடிக்கிறது. வரவுக்கான தட்டு எப்போதும் மேலே போகிறது. இந்தச் சமமின்மை நல்ல விளைச்சலைத் தரும் நிறைவான விவசாயத்தை வெறுத்து நிவாரணமோ, இன்ஷ்யூரன்ஸோ கிடைக்காமல் போய் விடுமோ என்ற குறுக்கு மனத்தை உருவாக்குகிறது.

நியாயமாகச் சொல்வதென்றால் நெல் மூட்டைக்கு வழங்கப்படும் நியாயமற்ற விலைதான் நல்ல விளைச்சல் என்ற சந்தோஷத்தைச் சந்தோஷமில்லாமல் ஆக்குகிறது.

வருடா வருடம் விதை நெல்லின் விலை ஏறுகிறது, உரத்தின் விலை ஏறுகிறது, விவசாயத்திற்குப் போட வேண்டிய முதலீடும் ஏறுகிறது, அதற்குக் கடன் வாங்கினால் அந்தக் கடனுக்கான வட்டியும் ஏறுகிறது, ஆள்கூலி, இயந்திரக் கூலி என்று எல்லாம் ஏறுகிறது. நெல் மூட்டையின் விலை மட்டும் ஏறாமல் போவதால் நிவாரணம் மற்றும் இன்ஷ்யூரன்ஸ் குறித்த அதீத எதிர்பார்ப்பும் நல்ல விளைச்சலை வேண்டாமென்ற நிராகரிக்கும் மனப்போக்கும் விவசாயிகள் மத்தியில் உருவாகி விடுகின்றன.

விவசாயத்திற்கு எவ்வளவோ மானியங்கள் தருகிறார்கள். நிவாரணங்கள் தருகிறார்கள். வேளாண் உதவித்தொகைள் என்ற பெயரில் வருடா வருடம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துகிறார்கள். இவற்றைப் பெறுவதற்குள் அதற்கு வழங்கப்படும் லஞ்சத் தொகைகளையும் அதற்குள் நிகழும் ஊழல் நடைமுறைகளையும் பார்த்தால் அது பல்லாயிரம் கோடி புரளும் ஒரு திருட்டு வணிகமாக இருக்கிறது. இந்தத் தொகைகளைத் தொகுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப நெல் மூட்டைக்குக் கட்டுபடியாகக் கூடிய ஒரு நல்ல விலையை ஏன் தரக் கூடாது? அதுதான் விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தருவதாக இருக்கும்.

பெட்ரோல் விலை, தங்கத்தின் விலை எல்லாம் ஏறிக் கொண்டு போகும் போது நெல் மூட்டையின் விலை மட்டும் எப்படி அதே விலையில் ஆண்டாண்டு காலம் இருக்க முடியும்? அவற்றின் விலையேற்ற விகிதாச்சாரத்துக்கு ஏற்றாற் போல நெல் மூட்டையின் விலையையும் நிர்ணயிக்க வேண்டும்.

நம் நாட்டைப் பொருத்த மட்டில் விவசாயத்தைத் தற்சார்பாகவும் இயற்கையான முறையிலும் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. விவசாயத்தின் தற்சார்பை அழித்து, அதன் இயற்கை முறைகளை மாற்றியமைத்து அதைச் சார்புடையதாகவும், செயற்கை முறைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகவும் மாற்றுவது விவசாயத்தை லாபமற்ற தொழில்முறையாக மாற்றிக் கொண்டு இருக்கிறது.

நெல் மூட்டைக்கான சரியான விலை கிடைப்பதை உறுதி செய்து விட்டால் விவசாயத்திற்கான எந்த உதவித் திட்டங்களோ, கடன் உதவித் திட்டங்களோ கூட தேவையில்லை. நெல் மூட்டைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றால் விவசாயத்துக்கான முதலீட்டை எப்படிப் பணமாகத் திரட்டிக் கொள்வது என்பதை விவசாயிகளே பார்த்துக் கொள்வார்கள். விவசாயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.

விளைச்சலுக்குக் கிடைக்கும் நியாயமற்ற விலை விவசாயிகளைத் தடுமாறச் செய்கிறது. எப்படிச் செய்து அதை லாபகரமாக மாற்றுவது என்ற யோசனையில் களைக்கொல்லியை வாங்கி அடித்து, பூச்சிக் கொல்லிகளைச் சகட்டு மேனிக்குத் தெளித்து, உரத்தைக் கண்டபடி இடுபொருளாக இட்டு விவசாயத்திற்கான முதலீட்டை இவற்றிலேயே இழக்கிறார்கள். விவசாயத்திற்கான இப்பொருட்களை விற்கும் நிறுவனங்களும் வியாபாரிகளும் கொழித்துக் கொண்டிருக்க இவற்றை வாங்கிப் பயன்படுத்தும் விவசாயிகள் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டுச் சோர்ந்து போகிறார்கள்.

விவசாயத்திற்குத் தேவையானது போலியான கழிவிரக்கமோ, விவசாயம் காப்போம் என்ற வெற்று முழக்கங்களோ இல்லை. நிவாரணங்களோ, இன்ஷ்யூரன்ஸ் உறுதிப்பாடுகளோ கூட தேவை இல்லை. மானியங்கள், வேளாண் உதவித் திட்டங்கள் கூட இல்லை. நெல் மூட்டைக்குக் கிடைக்கும் நியாயமான விலைதான் விவசாயத்திற்குத் தேவையானது. அதுதான் விவசாயத்தைக் காக்கும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...