நிர்சலன நித்திய கல்யாணிகள்
தற்கொலைக்கு முன் தோன்றிய
அற்புத கவிதையை எழுதாமல்
தொங்கி விட்ட ரகசியம்
அறைந்து முழுவதும் அடைந்து
கிடக்கிறது
விபத்தில் சிக்கி சின்னபின்னமாகும்
சில நொடிகளுக்கு முன் தெரிந்த
உண்மை
காற்று மண்டலத்திற்குள் எங்கு
போவதென்று
அங்கும் இங்கும் அலைபாய்ந்து
கொண்டிருக்கிறது
அணுகுண்டு வெடிக்கும் சற்று
முன்பு
விவாகரத்து முடிவைக் கைவிட்ட
சமாதானப் பதிவு ஜீவனை இழந்து
அடையாளமற்று அலைந்து கொண்டிருக்கிறது
நிச்சயமற்ற எல்லாவற்றுக்கும்
பாடம் சொல்வதாக
எங்கு விழுந்தோம் என்று தெரியாமல்
பாறையிலும் முளைத்துக் கிடக்கின்றன
விதைகள்
நெருக்கடிக்கு மத்தியில்
கல்லறைகளைச் சுற்றி
பூத்துக் கிடக்கின்றன நிர்சலன
நித்திய கல்யாணிகள்
*****
யுகாந்திரத்தின் சபிக்கப்பட்ட பாடல்
ஒரு குழந்தையை வைத்துப்
பிச்சையெடுக்கும் வகையில்
உலகம் ஈரமற்றதாகிறது
உறுப்புகளைச் சிதைத்துக்
கொண்டு
கையேந்தும் வகையில்
மனிதம் வறண்டதாகிறது
வண்ண வண்ணக் கொடிகள் பறந்தும்
கோவணத்திற்கான தட்டுபாடு
தேசம் முழுவதும் நிலவுகிறது
குருவிகளும் கொக்குகளும்
கையில் காசின்றித்
தண்ணீர் புட்டிகள் வாங்க
முடியாமல் தவிக்கின்றன
விலைபோகாத பூக்களை வைத்துக்
கொண்டு
பூக்காரி ஒருத்தி வீதி வீதியாகக்
கூவிக் கொண்டிருக்கிறாள்
கடவுளின் உண்டியல்கள் நிரம்ப
கடவுள் பசியோடு வெளியேறிக்
கொண்டிருக்கிறார்
ஆறு தம்பிகள் இருந்தும்
அண்ணன் ஒருவன் அனாதையாய்
அலைகிறான்
இரண்டு கணவர்கள் இருந்தும்
பெண்ணொருத்தி விபச்சாரம்
செய்து கொண்டிருக்கிறாள்
இந்த யுகம் முழுவதும்
நன்மையை நாடி தீமையை விலக்கிப்
பாட சபிக்கப்பட்டிருக்கிறது
*****
No comments:
Post a Comment