29 Jun 2023

மெட்ராஸ் போபியா

மெட்ராஸ் போபியா

வானில் புதிது புதிதாக நட்சத்திரங்கள் தோன்றும் போது பயமாக இருக்கிறது. புதிதாக நட்சத்திரம் தோன்றும் போது மகா புருஷர்கள் பிறப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ நட்சத்திரங்கள் என்றால் பயம். நட்சத்திரங்கள் தோன்றும் போதெல்லாம் பயம் தோன்றுகிறது.

சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், ராக் ஸ்டார், லிட்டில் ஸ்டார் என்று இப்படி பல நட்சத்திரங்கள் தோன்றி உண்டான பயத்தில் அண்மைக் காலத்தில் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைப் பார்த்தும் பயம் உண்டாகத் தொடங்கி விட்டது.

உலகை ரட்சிக்க வந்த கருணை மகான் கிறிஸ்து. அவர் தோன்றிய உலகில் இப்படிப் பல ஸ்டார்கள் உருவாகிக் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைக் கண்டு பயம் காணும்படி பண்ணி விட்டார்களே. நிஜமாகவே நான் வாழ்வது கலி காலமா? அல்லது கிலி காலமா?

நட்சத்திரங்கள் என்ன பாவம் செய்தது? இவர்கள் ஏன் பெயருக்கு முன்னால் ஸ்டாரைப் போட்டுக் கொள்ள வேண்டும்? இந்த ஸ்டார்கள் இரவில் தோன்றி பகலில் மறைந்து விடுகின்றன. அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? ஒருவேளை இருட்டுத்திரையில் அவர்களின் படங்கள் காட்டப்படுவதால் ஸ்டாருக்கு அவ்வளவு மௌசோ என்னவோ.

மனோதத்துவ மருத்துவரைப் பார்த்த போது இந்த ஸ்டார் பயம் ரொம்பவே புதியது என்றார். இந்த ஸ்டார் போபியா உலகில் முதல் முறையாகத் தமிழகத்தில் என்னிடம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் மெட்ராஸ் ஐ என்பது போல மெட்ராஸ் போபியா என்று பெயர் வைக்கப்படலாம் என்கிறார். என்னால் மெட்ராஸ்க்கு இப்படி ஓர் அவப்பெயர் ஏற்பட வேண்டுமா?

பக்கத்து வீட்டு பாப்பா ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று பாடிக் கொண்டிருந்தாள். என்ன அழகான குரல். தேன் சிந்தும் குரல். ரெண்டு சொட்டு எடுத்து நக்கிக் கொள்ளலாம். கேட்க கேட்க ஆசையாக இருந்திருக்க வேண்டும். அது உங்களுக்கு. எனக்கு? நான் ஓடிப் போய் பாப்பாவின் வாயைப் பொத்தி விட்டேன். அடே பாதகா என்ன காரியம் பண்ணி விட்டாய் என்று ஆளாளுக்குச் சண்டைக்கு வந்துவிட்டார்கள். ஸ்டார் பயம் எனக்கல்லவா தெரியும். ஏன்டா இப்படிப் பண்ணினாய் என்றார்கள். ஸ்டார் வராமல் எந்தப் பாடலையாவது பாடிக் கொள்ளட்டும் என்றேன். ஏன்டா ஸ்டார் என்றால் இப்படிப் பயந்து சாகிறாய் என்று தலையில் அடித்துக் கொண்டார்கள்.

பக்கத்து வீட்டு அம்மாஞ்சி மாமி இருக்கிறாளே. அவளைத் தெரியுமா உங்களுக்கு? உங்கள் பக்கத்து வீட்டு ஆசாமிகளையே தெரியாது உங்களுக்கு. என்னுடைய பக்கத்து வீட்டு மாமி பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? அவளுக்கு ஒரு பையன் இருந்தான். இருந்தான் என்றால் இப்போது இல்லை. போய் சேர்ந்து விட்டான். ஒரே ஒரு பையன்தான் இருந்தான். அவனும் போய்ச் சேர்ந்து விட்டதால் மாமி இப்போது பாவம் ஒண்டிக்கட்டை. தனியாகக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறாள். காலம் ஓட மாட்டேன்கிறது, நகர மாட்டேன்கிறது என்று ஓயாத புலம்பல்.

அவளுடைய கதையைக் கேட்டால் அது ஓர் இராமாயணம். ரொம்ப காலம் கல்யாணம் ஆகாமல் கிடந்திருக்கிறாள் மாமி. இப்படிக் கழிசடையாகக் கிடந்து இம்சை பண்ணுகிறாளே என்று ஆளாளுக்குத் திட்டிய பின்னும் கடவுள் கொஞ்சம் கூட அவளுக்குக் கருணை காட்டவில்லை. அவள் காலத்தில் பாருங்கள் கடவுள்கள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறார்கள். கடைசியில் தெருமுக்கு விநாயகர் கொஞ்சம் பரிதாபப்பட்டதில் மாக்கான் மாமா மூன்று முடிச்சைப் போட்டிருக்கிறார்.

கல்யாணம்தான் தாமதல் என்றால் குழந்தைபேறும் தாமதம். அதற்குள் படித்துப் பட்டம் பெறாமல் ரொம்ப சுலபமாக மலடி என்ற பட்டத்தை வாங்கி விட்டாள். அந்தப் பட்டம் பத்து ஆண்டுகளுக்கு மேல் தரிக்காமல் ஒரு பையனும் பிறந்து விட்டான்.

பையன் பிறந்த யோகமும் சோகமும் என்று மாமிக்கு இரண்டு பக்கங்கள் பையன் பிறப்பால் இருந்தன. யோகம் மலடிப் பட்டத்தைப் பறிகொடுத்தது. சோகம் மாக்கான் மாமாவை விபத்தில் பறிக்கொடுத்தது. மாக்கான் தனியாய் விடாமல் பிள்ளையைக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்திருக்கிறான் என்ற பெருமை ஒன்றுதான் மிச்சமாக இருந்தது.

மாமி பெற்றெடுத்த பிள்ளை பால் குடித்த பத்தாவது நாள் பால் குடியை மறந்து டிவி பெட்டியைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. ரோலக்ஸ் ஸ்டார் என்ற நடிகன் கை வித்தை, கால் வித்தை, மூக்கு வித்தை, நாக்கு வித்தை என்று காட்டி ரொம்ப பெரிய ஆளாக வளர்ந்து கொண்டிருந்தான். அந்த ரோலக்ஸ் ஸ்டாருக்கு இந்தப் பையன் பரம ரசிகனாகி விட்டான். வினா தெரிய ஆரம்பித்து மூன்று நான்கு வயதுக்கு எல்லாம் பூஜை அறையில் வைத்துப் பவ்வியமாக வழிபடத் தொடங்கினான்.

பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த நாட்களில் ரோலக்ஸ் ஸ்டார் பற்றிய அத்தனை செய்திகளையும் செய்தித்தாள்கள், இதழ்களிலிருந்து கத்தரித்துச் சேகரிக்கத் தொடங்கி விட்டான். பையிலிருந்த பாடப்புத்தகத்தைத் தூக்கி எறிந்து விட்டு கத்தரித்துச் சேகரித்த செய்திகளின் ஆல்ப புக்கை வைத்துக் கொண்டான். பள்ளியில் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆல்ப புக்கை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த வரிகளைக் கர்ம சிரத்தையாக மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

பதின்ம வயதைக் கடந்த போது ரோலக்ஸ் ஸ்டார் பற்றிய அத்தனை விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தான். வாலிப வயதை நெருங்கிய போது முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு ஐந்து அத்தியாயங்களில் ரோலக்ஸ் ஸ்டார் பற்றிய கருதுகோள்களை 400 பக்கங்களில் எழுதிமுடித்திருந்தான்.

மாமி நியாயமாகப் பையனைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வேண்டும். பெருமைபட்டுக் கொண்டிருந்தாள். எத்தனை பிள்ளைகள் இப்படி சுயம்புவாக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி தனக்குத்தானே படித்துத் தனக்குத்தானே ஓர் ஆய்வைச் செய்ய முடியும் என்ற நிறைவு இருந்தது அவளுக்கு.

வாலிபத்தோடு வளர வளர பையன் ரோலக்ஸ் ஸ்டார் போல சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் கேட்ச் பிடித்து புகையைக் காற்று மண்டலத்துக்கு வள்ளலைப் போல வாரி வழங்கினான். பெண்களைக் கண்ட போது நாணிக் கோணி சேஷ்டைகள் செய்தான். பார்ப்போரை எல்லாம் வாங்கண்ணா, போங்கண்ணா என்று மரியாதைக் காட்டினான். அப்படி அவன் மரியாதை காட்டிய பட்டியலில் எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்த ஒரு பொடியனும் இருந்தான். அடிக்கடி அது, இது, எது, உது, மது, பொது என்று வாய் கோணியபடி வசனங்களை உளறியபடி இருந்தான். விரல்களை விதவிதமாகச் சுழற்றிக் கொண்டிருந்தான். கிழிந்த ஜீன்ஸ் பேண்டை வாங்கி மேலும் கிழித்துக் கொண்டு போட்டுக் கொண்டான்.

ரோலக்ஸ் ஸ்டார் படம் வரும் போதெல்லாம் வெடி வெடித்தான். தோரணம் கட்டினான். பெரிய பெரிய கட் அவுட்டுகள் வைத்தான்.

இந்த வருஷம் பொங்கலில் வெளிவந்த ரோலக்ஸ் ஸ்டாருக்காகக் கட் அவுட் வைத்து அதன் மேலேறி பீரைப் பீய்ச்சி அடித்து தன்னுடைய அத்தனை சந்தோஷங்களையும் வெளிபடுத்திய போது அந்த உயரத்திலிருந்து கீழே விழுந்து ரத்தசிவப்பில் அடிபட்ட கொசுவைப் போலச் சேதாரமாகிப் போய்ச் சேர்ந்தான்.

மாமி மாரில் அடித்துக் கொண்டு புலம்பினாள். கொடுத்த பத்து நாள் பாலெல்லாம் ரத்தமாகப் போய்விட்டதே என அரற்றினாள். ரோலக்ஸ் ஸ்டார் மாமிக்கு நிவாரணமாக முப்பதாயிரத்தை மணி ஆர்டரில் அனுப்பி வைத்ததாகக் கேள்வி. ரோலக்ஸ் ரசிகர்கள் சேர்ந்து மூன்றாயிரம் தேற்றித் தந்தார்கள். வந்த பணத்தை எல்லாம் ஒரு சிட்பண்ட் கம்பெனியில் கட்டி அதில் வரும் வட்டியில் வாழ்ந்து விட மாமி போட்ட கணக்கைக் கம்பெனிகாரன் மாற்றி விட்டான். ஆறு மாதத்தில் கம்பெனிக்காரன் கட்டிடத்தை இழுத்து மூடி பூட்டைப் போட்டு விட்டான். மாமிக்கு பையனும் போய் விட்டான். பையன் மூலம் வந்த முப்பத்து மூன்று ஆயிரமும் போய் விட்டது.

ஒரு தர்க்கத்துக்குப் பார்த்தால் மாமிக்கு நட்சத்திரங்களைப் பார்த்தால் பயம் வர வேண்டும். அது என்ன டிசைனோ? எனக்கு நட்சத்திரங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இப்போது சொல்லுங்கள்? என் நட்சத்திர பயத்தில் என்ன தவறு இருக்கிறது? இந்தப் பயத்திற்கு மெட்ராஸ் போபியா என்றோ கோலிவுட் போபியா என்று பெயர் வைப்பதால் என்ன கெட்டு விடப் போகிறது?

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...