24 Jun 2023

வெக்கையில் விளையும் பருத்தி

வெக்கையில் விளையும் பருத்தி

மே மாதம் வந்தாலே வியர்வை ஊற்றி வழிகிறது. இந்த 2023 ஆம் ஆண்டின் மே மாதம் சில நாட்களில் மழையையும் கொண்டு வந்தது வானத்தின் வியர்வையைப் போல. அது இந்தக் கோடைக்குக் குளுமையைத் தந்தது. வங்கக் கடலில் சில காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் உருவாயின. அவ்வபோது வானம் மேகமூட்டமாக இருந்து வெயிலைத் தணித்தது. சில நேரங்களில் மழை வருவதைப் போலப் புழுங்கித் தள்ளும். மழை வராமலும் போனது.

அவ்வபோது பெய்த மழையின் தாக்கத்தால் வெயிலின் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. இந்த மழை வயலில் பருத்தி போட்டிருந்தவர்களைத்தான் கலவரப்படுத்திக் கொண்டு இருந்தது. பருத்திக்கு வெயில்தான் கொண்டாட்டம். இப்படி வெயிலைத் தணிக்கும் மழை பெய்யக் கூடாது. அதுவும் பிஞ்சு பிடித்துப் பஞ்சாக வெடிக்கும் சமயத்தில் பெய்தால் பஞ்சின் தரம் குறைந்து விடும். காயாக மாறும் பிஞ்சுகளும் பாதிக்கப்பட்டு விடும்.

டெல்டா மாவட்டத்தின் நெல் வயல்கள் ஏகத்துக்குப் பருத்தி வயல்களாக மாறி விட்டன. போன வருடம் பருத்தியின் விலை கிலோ நூறுக்கு மேல் போனதை நினைத்துக் கொண்டு இந்த வருடமும் பலரும் பருத்தி போட்டிருக்கிறார்கள். இந்த வருடம் இவ்வளவு பேர் போட்டிருப்பதால் ஐம்பது அல்லது அறுபதுக்கு மேல் போனால் ஆச்சரியம் என்றும் பருத்திப் போட்டவர்களே விரக்தியாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி வந்தாலும் லாபம்தான் என்றும் உதடு விரியாமல் உள்ளுக்குள் புன்னகைத்தபடிச் சொன்னார்கள். இந்தப் பேச்சில் இருந்த முரணான சுவாரசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பருத்திப் போடுவதின் வரவு – செலவு விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பருத்திக்குச் செலவென்று பார்த்தால் நிலத்தைச் சீரமைப்பது, விதை போடுவது, உரம் வைப்பது, பார் அணைப்பது, தண்ணீர் வைப்பது, மருந்து அடிப்பது, பஞ்சு எடுப்பது என்று ஒரு கிலோ பஞ்சு எடுப்பதற்கு அதிகபட்சமாக நாற்பது ரூபாய் வரை செலவாகி விடும். மீதி கிடைப்பதெல்லாம் லாபம்தான். நாற்பது ரூபாய் செலவு செய்து அறுபது ரூபாய் வருவாய் ஈட்டினால் நல்ல லாபம்தானே. அதுவே நூறு ரூபாய் வருவாய் ஈட்டினால் கொள்ளை லாபமல்லவா! இந்த வருடம் அவ்வளவு லாபம் இருக்க வாய்ப்பிருக்காது என்பதை, விவசாயிகள் பலரும் பருத்திப் போட்டிருப்பதை வைத்துக் கணித்துக் கொண்டிருந்தார்கள்.

நெல் விவசாயத்தை விட பருத்தி விவசாயத்தில் டெல்டா விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். யானையைக் கட்டி போரடித்த வயல் வெளிகளில் ஆட்களை வைத்துப் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை பருத்திப் போட்டு லாபம் பார்த்து விட்டால் ஒவ்வொரு வருடமும் பருத்தி போடும் ஆர்வமும் இயல்பாக வந்து விடும். அப்படித்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூச்சிப் பிடிக்காமல் ஒரு செடிக்கு நாற்பது காய்களுக்கு மேல் காய்த்தால் நல்ல லாபம். அதுவே அறுபது காய்கள் வரை என்றால் பருத்தியைப் போல ஒரு விவசாயியை எந்தப் பயிரும் தூக்கி விடாது என்று சொல்லலாம். அப்படி அடித்துத் தூக்கி விட்டு விடும்.

இந்தக் கோடை வெக்கையில் விளையும் பருத்திதான் வெக்கையைச் சமாளிக்கும் காட்டன் உடையாகிறது. வெக்கையில் விளைவதால் வெக்கையைச் சமாளிக்கும் ஆற்றல் பருத்திக்கு இருக்கிறது போலும்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...