31 Mar 2023

பூனைக்காகக் காத்திருத்தல்

பூனைக்காகக் காத்திருத்தல்

ஒரு பூனையை விட

நாய் பிடித்தமானதாக இருக்கிறது

எட்டி உதைத்தாலும்

காலடியில் வந்து படுத்துக் கொள்கிறது

பூனைகளின் அகம்பாவம்

ஒரு சிறு புறக்கணிப்பையும்

பொறுத்துக் கொள்ள முடியாமல்

விலகி ஓடச் செய்து விடுகிறது

இரவின் சிநேகம் அதிகம் கொண்டு பூனைகள்

பகலின் சிநேகம் கொண்டு நாய்களை

மனிதர்களுக்குக் கோர்த்து விட்டு விலகிக் கொள்கின்றன

அன்றொரு நாள் உணர்வு வேகத்தில் திட்டியதற்குப் பின்

காணாமல் போய் விட்ட பூனையைப் பற்றி

புலம்பிக் கொண்டிருக்கிறாள் அம்மா

அத்தனை நாய்கள் நிறைந்த வீட்டில்

அம்மாவின் சிநேகிதியாய் இருந்த பூனை

இப்போது எந்த வீட்டின் ராஜபாட்டையில்

பயணித்துக் கொண்டிருக்கிறதோ

என்றோ ஒரு நாள் வீடு தேடி வரும் என்ற

நம்பிக்கையோடு அம்மாவும் காத்துக் கொண்டிருக்கிறாள்

அம்மாவுக்குத் தெரியாமல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்

போனால் போகட்டு விடு என்று அடிக்கடி சொல்லியபடி

*****

30 Mar 2023

விளம்பரமற்ற வெளிச்சம்

விளம்பரமற்ற வெளிச்சம்

மின்சாரம் வந்த பிறகும்

விளக்குகள் ஏற்றி வைக்கப்படுகின்றன

ஏற்றிய தீபங்கள் அணையாமல் இருப்பதற்கேற்ப

மின்விசிறிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன

விளக்கின் வெளிச்சம் தேவையற்றது போல

அனைத்து மின் விளக்குகளும் பிரகாசமாகின்றன

திடீரென மின்சாரம் தடைபடும் நேரத்தில்

விளக்குக்கான பிரபல்யம் வந்திருக்கக் கூடும்

அதற்கும் வாய்ப்பின்றி

ஒட்டுமொத்த வீடும் மின்தடையற்ற

மின் சேமிப்புக் கலங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது

என்றாலும் ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம்

என்ற எரிச்சல் ஏதும் இல்லாது

எரிந்து கொண்டிருக்கிறது திரி

வெளிச்சத்திற்கு ஓர் விளம்பரம் இல்லாமல்

ஒளி வீசிக் கொண்டிருக்கிறது விளக்கு

*****

29 Mar 2023

ஏன் பல்டியடிக்கிறது பொருளாதாரம்?

ஏன் பல்டியடிக்கிறது பொருளாதாரம்?

உலக அளவில் பொருளாதாரம் பல்டியடிப்பதற்கு முக்கியக் காரணம் பண வீக்கம் ஆகும். 2008 லிருந்தே உலகப் பொருளாதாரம் நெருக்கடியான நிலைகளைச் சந்தித்து வருகிறது. அந்த ஆண்டில்தான் அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான லேமன் பிரதர்ஸ் திவாலானது.

இடையே கோவிட் பெருந்தொற்று உலகப் பொருளாதார நிலைமைகளை சுணக்கத்தில் ஆழ்த்தி முடக்கியது.

2008 லிருந்து பார்த்தால் நாம் 2023ஐப் பார்த்தால் பதினைந்து ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இருந்தும் பணவீக்கம் பெரிய பிரச்சனையாக மாற ஆரம்பிக்க, உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பித்தன.

வட்டி விகித உயர்வு மற்ற நாடுகளைப் பாதிப்பதற்கு முன்பாக அமெரிக்காவைப் பதம் பார்த்தது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து பல அமெரிக்க வங்கிகள் திவால் நிலையை நோக்சிச் சென்று ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பை அதிரடியாகச் செய்து கொண்டிருக்கின்றன. கூகுள் நிறுவனமோ, முகநூல் நிறுவனமோ, அமேசான் நிறுவனமோ இந்த அளவுக்கு ஆட்குறைப்பில் இறங்கும் என்று யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள். எலான் மாஸ்கின் டிவிட்டரின் ஆட்குறைப்பு ஓர் அச்சாரத்தைச் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கி விட்டன. உலகெங்கும் ஆட்குறைப்பு எனும் அதிர்வலைகளின் பிரதிபலிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பருவ நிலைகளின் சாதகமற்ற நிலைமைகள் விவசாய விளைபொருட்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. வெள்ளமும் வறட்சியும் சுழற்சி முறையில் மாறி மாறி அமைந்து வேளாண் வளர்ச்சியை ஊடாடச் செய்கின்றன. இதனால் வேளாண் பொருட்களின் பண வீக்க விகிதம் உயர்ந்து காணப்படுகிறது.

பணவீக்கமும் அதைத் தொடரும் வட்டி விகித உயர்வும் குறு மற்றும் சிறுதொழில்களைத் தடுமாறச் செய்கின்றன. தொடரும் வட்டி விகித உயர்வு வீட்டுக்கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், தொழில் கடன் என கடன் வாங்கியவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கடன் வாங்கியவர்கள் தவணை எண்ணிக்கையை முடிவற்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பண வீக்கத்தாலும் வட்டி விகித உயர்வு மற்றும் வரி உயர்வுகளாலும் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் நுகர்வு குறைந்து கொண்டே போகின்றது. இந்நுகர்வு குறைவு தொழில் துறையைப் பெரிய அளவில் பாதிக்கவல்லது.

மறுபுறம் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பண மதிப்பும், கச்சா எண்ணெய் விலைப் போக்கும் சவாலாக மாறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வெவ்வேறு விதமாக நன்மையும் தீமையுமாகக் கலந்து உலக நாடுகளைப் பாதிக்கக் கூடியன. உதாரணமாக ரூபாயின் வீழ்ச்சி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாபகரமாக அமைந்தால் இறக்குமதி நிறுவனங்களை அசைத்து ஆட்டம் காணச் செய்து விடும்.

இந்தியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் சாமானிய மக்களின் நுகர்வு பொருட்களைக் கடுமையாக விலையேற்றி விடும். விலையேற்றத்தின் காரணமாகச் சாமானியர்கள் தங்கள் நுகர்வை வெகு சிக்கனமாகவும், கறாராகக் கட்டு செட்டாகவும் வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் அது ஒரு பொருளாதார சுணக்கத்தை உண்டு பண்ணி விடும். சாமானியர்கள் இது போன்ற நிலைமைகளில் தங்கள் நுகர்வைக் கூட அது எவ்வளவு அத்தியாவசியம் என்றாலும் நிறுத்தி விடுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

பணவீக்கமும் வட்டி விகித உயர்வும் தொடர்ச்சியான விளைவுகளை அடுத்தடுத்து ஏற்படுத்தக் கூடியவை. இவை இரண்டும் தொடர்ந்து சரியும் சீட்டுக்கட்டுகளைப் போலத் தொடர்ச்சியாகப் பொருளாதார அடுக்குகளைச் சரியச் செய்து விடக் கூடியவை.

பணவீக்கத்தைக் கட்டுபடுத்துவதற்காக மத்திய வங்கிகள் பணத்தை அளவோடு அச்சடித்தால் பணப்புழக்கத்தை அது வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பிட்ட அளவைத் தாண்டி அச்சடித்துப் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் போது அது பணவீக்கத்தை அதிகம் பண்ணி விடுகிறது.

பணவீக்கத்தை ஓர் ஒப்பீட்டு அளவாகக் கொண்டு மத்திய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பண வீக்கம் அதிகமாக இருக்கும் போது வட்டி விகிதத்தைக் குறைப்பதோ பண வீக்கத்தைக் காரணம் காட்டி வட்டி விகிதத்தை அதிகரிப்பதோ இரண்டும் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணக் கூடியவையாக இருக்கின்றன. அந்தப் பாதகத்தைச் செய்யாமல் இருப்பதும் கடினத்தினும் கடினமாக இருக்கின்றது. பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பதும் பணவீக்கத்தை எதிர்மறையாகப் பாதிக்கக் கூடியது.

பணவீக்கத்தையும் வட்டி விகிதத்தையும் சமாளிப்பதற்கு நாட்டின் உற்பத்தியும் ஏற்றுமதியும் நிலையாக இருக்க வேண்டியதும் உயர்ந்து கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இறக்குமதி அளவு குறைந்து கொண்டிருக்க வேண்டியதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா போன்ற வேளாண்மை சார்ந்த வளர்ந்து வரும் நாடுகளில் நாட்டின் உற்பத்தி பல்வேறு காரணங்களால் நிலைத்தன்மை உடையதாக அமைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. வளர்ந்த நாடுகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஏற்றுமதியை உயர்த்துவதும் போராட்டமாக உள்ளது. இறக்குமதி மட்டும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டு போவதால் அதைச் சார்ந்து பணவீக்கத்தையும் வட்டி விகிதத்தையும் கட்டுபடுத்த வேண்டிய சூழல் இந்தியா போன்ற நாடுகளுக்கு எப்போதும் இருக்கிறது.

பொருளாதார நிலைத்தன்மை போராட்டத்தால் அவ்வபோது பொருளாதாரம் பல்டியடிக்கத்தான் செய்கிறது என்றாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதாரப் பின்னடைவைப் பார்க்கும் போது இந்தியாவின் மக்கள் சக்தியும் இளைஞர்களின் ஆற்றலும் இந்தியப் பொருளாதாரத்தைத் தலைநிமிர்ந்து முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றன.

இந்தியப் பொருளாதாரம் பல்டியடிக்காமல் தொடர்வதற்கு இதன் பொருளாதார அமைப்பு மக்களின் சக்தியையும் ஆற்றலையும் நம்பிச் செயல்படுவதும் தமக்கே உரிய பொருளாதார கட்டமைப்புகளோடு உறுதியாகச் செயல்படுவதும் பொருத்தமான காரணங்களாக அமைகின்றன. இந்தக் காரணங்களை இனிவரும் காலங்களில் இந்தியா விட்டு விடாமல் தொடர்வது அவசியம் எதிர்பார்க்கப்படுகிறது.

*****

சாதுவாகி விட்ட ஐயனார்

மேலையும் கீழையும் ஒன்றாக்கும் ராட்டினம்

ஏற வேண்டும் என்ற ஆசைதான்

மேலே ஏற்றியது

ஏறியதும் தலைசுற்றும் என்று தெரிந்திருந்தால்

கீழேயே இருந்திருப்பேன்

இறங்கினால் ஏற முடியுமா என்ற பயத்தினாலோ

இறங்கத்தான் வேண்டுமா என்ற தயக்கத்தினாலோ

இப்போது கீழிறங்க யோசனையாக இருந்து

மேலா கீழா என்ற குழம்பத் தொடங்குகையில்

மேலும் கீழும் யார் கையிலும் இல்லை என்பது போல

ராட்டினம் போலாகும் வாழ்க்கையில்

ஏறாமலும் இறங்காமலும்

வருடங்களைக் கண நேரங்களைப் போல மாற்றிப் போட்டு

மேலும் கீழும் மாறி மாறி வந்து விடுகின்றன

*****

சாதுவாகி விட்ட ஐயனார்

தனியாய் வந்தால்

ஆளை அடித்துப் போடும்

ஊர் கோடி ஐயனார்

கூட்டம் கூட்டமாய் வருவதால்

பேசாமல் இருக்கிறாரோ என்னவோ

ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பக்கத்தில் வந்ததும்

விளையாட்டுப் பொம்மையைப் போல அமர்ந்து

உடைந்து விட்ட அரிவாளைப் பொருட்படுத்தாது

ஜெசிபி பொம்மைகளை வாங்கிச் செல்லும் குழந்தைகளை

வேடிக்கை பார்க்க துவங்கி விட்டார்

இடையிடையே வந்து போகும் குவார்ட்டர் குடியர்களையும்

பின்புறமாய் வந்து சொக்கிப் போகும் கஞ்சாப் பிரியர்களையும்

நடுநிசியில் வந்து சோரம் போகுபவர்களையும்

மிரட்டுவது கூட இல்லை

கிடா வெட்டி படையல் போடுபவர்களும்

உடைந்து போய் விட்ட அரிவாளைக் கண்டு கொள்வதுமில்லை

பழங்கதைகளில் மட்டும்

ஐயனார் இன்னும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்

*****

28 Mar 2023

காயிதம் போட்ட கார்ப்பரேட்காரன்

திருவாளர் நட்பாளர்

அக்கம் பக்கத்தில்

நட்பென யாரும் இல்லையெனினும்

முகநூலில் மூவாயிரம் சொச்சம்

நட்புகளை வைத்திருந்தார்

தனிமை தாங்காது பக்கத்துப் பிளாட்டில்

நேற்று தூக்கில் தொங்கியவர்

*****

காயிதம் போட்ட கார்ப்பரேட்காரன்

அக்கம் பக்கத்துக் கொல்லைகளில்

மேய்ந்து விட்டு வந்து விடும்

அப்பத்தா வளர்த்த கோழி

மேய விட்டே

ஆட்டையும் மாட்டையும் வளர்த்தாள் அம்மச்சி

தீனி போடாமல் மீன்களையும்

முயலையும் காடையையும்

வளர்க்காமலே பிடித்து வந்தார் தாத்தா

அம்மா அப்பா காலத்தில்

நொய்யும் பழஞ்சோறும் தின்றன கோழிகள்

அறுத்து வந்த புல்லையும் வைக்கோலையும் தின்றன

ஆடுகளும் மாடுகளும்

மீன்காரர்கள் மிதிவண்டிகளில் வர

கெண்டையும் ஜிலேபியும் விற்பனைக்கு வந்தன

முயலையும் காடையையும்

வளர்க்கத் தொடங்கினார் பட்டாமணியார்

எல்லாம் அரத பழசாகிப் போனதென

மீனுக்குத் தீவனத்தோடு

வயலையெல்லாம் குட்டையாக்கி

அங்காடி அரிசி போட்டு வளர்க்க ஆரம்பித்தான்

பள்ளிக்காலத்துச் சிநேகிதன் ஒருவன்

கோழிகளைக் கூண்டில் அடைத்து

முறை வைத்து ஊசி போட்டு

விலைகொடுத்து தீனி வாங்கிப் போட்டான்

கல்லூரி காலத்து நண்பனொருவன்

வளர்ந்து கிடக்கும் புல்லை விடுத்து

வளர்ப்புப் புல் வளர்த்து

மேடை கட்டி ஆடுகளும்

அங்கங்கே கொட்டகைப் போட்டு

காடைகளும் முயல்களும்

வளர்க்கத் தொடங்கினான்

தொழிலதிபர் ஆகி விட்ட பெருமிதத்தோடு

உறவுக்கார ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன்

அவனவன் தோட்டத்தில்

அவனவன் நட்டு வைத்தான்

காசுக்கு வாங்கிக் கஞ்சாங் கோரையை

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி

கவர்மென்டுக்குக் காயிதம் போட்டான் கார்ப்பரேட்காரன்

*****

27 Mar 2023

என்னை யாரென்று நான் பார்க்கிறேன்

என்னை யாரென்று நான் பார்க்கிறேன்

காலில்லாமல் காலம் ஓடுகிறது

டிஜிட்டல் கடிகாரத்தில்

மாடின்றிப் பால் தருகின்றன

தெருவுக்குத் தெரு இருக்கும் பாலகங்கள்

கல்யாணம் ஆகாது

கர்ப்பமாய் இருக்கும் தோழி

வருமானத்துக்காக வாடகைத் தாயாக

இருப்பதாகச் சொல்கிறாள்

ஊருக்கு வந்து திரும்பும் போதெல்லாம்

எனக்குப் பிடிக்குமென

சீடை முறுக்கைக் கடையிலிருந்து வாங்கி வைத்து

மறக்காமல் தந்து அனுப்புகிறாள் அம்மா

பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த

பஞ்சு தாத்தா பேரன்

கல்யாணமாகி பத்து வருடங்களாய்

ஆஸ்பத்திரிக்கும் கோயிலுக்குமாய்

அலைந்து கொண்டிருக்கிறான்

இருபது வேலி நிலத்தையும் விற்று விட்டு

நகரத்துக்கு வந்து அரிக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார்

பெரிய பண்ணை ஆளவந்தார்

எல்லாம் மாறி விட்டதோ என நினைக்கையில்

ஆதார் நம்பர் இல்லாமல்

பைத்தியமாய் அலைந்து கொண்டிருக்கிறான்

பால்யக் கால நண்பர்களின் ஒருவன்

திருட்டு விசாவில் மலேசியா போன இன்னொருவன்

அங்கேயே தங்கி விட்டதாகக் கேள்வி

அரசியல்வாதியாகி விட்ட மற்றொருவனைப் பற்றி

ஊருக்கே தெரியும்

எல்லாரையும் பார்த்துக் கொண்டிருக்கும்

நகரத்தில் இருந்து கொண்டு

இன்னும் கிராமத்தில் ஓட்டுரிமையும்

ரேஷன் கார்டில் பெயரும் வைத்திருக்கும்

என்னைப் பற்றி எனக்கே தெரியுமா என்று

எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது

*****

24 Mar 2023

இந்தா வாழ்த்து எடுத்துக் கொள்

இந்தா வாழ்த்து எடுத்துக் கொள்

மூன்று நாள் சாப்பாட்டிற்கு

என்ன செய்வதென்று

யோசித்து யோசித்துச் சோர்ந்து போகிறேன்

ஹேப்பி பொங்கல் சொல்லி விட்டுப் போகிறான்

மாநகர வாழ்க்கை புரியாதவன்

*****

அட்வான்ஸ் வாழ்த்துகள்

ஹலோ ஹலோ

நான் அப்பாவாகி விட்டேன் என்று

எவ்வளவு சந்தோசமாய்ச் சொல்கிறான்

இருக்கட்டும் சந்தோஷமாகவே இருக்கட்டும்

எல்.கே.ஜி.க்கு சீட்

இரவு கண் விழித்து ப்ராஜக்ட்

ஊதியமில்லா விடுப்பில் பெற்றோர் கூட்டம்

கராத்தே கிரிக்கெட் ஸ்விம்மிங்

ஆல் இந்தியா டூருக்கு கந்து வட்டிக் கடன்

பேமன்ட் சீட் கல்விக் கடன்

ஹாஸ்டலில் தங்குவதற்கு புல்லட்

அப்பாவாகக் கடக்க வேண்டிய நிறைய தூரம் இருக்கிறது

அப்பாவாகி விட்டதாக மகிழ்பவனிடத்து

இப்போதே ஏன் பயமுறுத்த வேண்டும்

அப்பாவாக அட்வான்ஸ் விஸஸ் என்று மட்டும்

சொல்லித் துண்டித்துக் கொண்டேன்

*****

நிலையாமைக்குப் பின் சமத்துவம்

பாடை நல்லது

உன்னைச் சுமக்கிறது

மாலை மோசம்

உன்னைச் சுமக்க செய்கிறது

உன்னைக் கேட்டால்

பாடை மோசம்

மாலை நல்லது என்பாய்

ஏறி நெஞ்சில் மிதிப்பவர்களுக்கு

எப்போதும் தனி மதிப்பு

எட்டி மிதித்தும் எப்போதும் சுமப்பவர்களுக்கு

என்றும் இளக்காரம்

கனி தராத மல்லிகைக்குத்தான்

தலையில் சூடும் மதிப்பு

சுவையான கனி தரும்

வாழையின் பூவைத் தலையில் சூடுவார் யார்

பயனுள்ளவைச் செரிக்கப்படும்

மேனாமினுக்கிகள் உச்சி முகரப்படும்

முடிவில் சமத்துவம் பேணுவதற்கென

யாவும் கழிவுகளாக் கொள்ளப்படும்

*****

23 Mar 2023

பாழாய்ப் போன புயல்

அழுக்காறு என ஒரு பாவி

உன் பண இருப்பு அல்ல

உன் சுகபோக ஊர்தி அல்ல

உன் உல்லாச மாளிகை அல்ல

உன் பெண் சிநேகிதி அல்ல

உண்மையைச் சொன்னால்

உனக்கு முடி இருப்பது அல்ல

எனக்கு முடி இல்லாமல் இருப்பதே

உன் மீதான என் பொறாமையை

வளர்த்துக் கொண்டிருக்கிறது

கொழுந்து விட்டு எரியும் முடி காட்டில்

உன் முடிகள் ஒட்டு மொத்தமாக

உதிர்ந்து போகும் நாளில்

என் பொறாமையும் உதிர்ந்து போகலாம்

*****

பாழாய்ப் போன புயல்

விடாது பெய்யும் மழை

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்

வானிலை ஆய்வு மையம்

தலைப்புச் செய்திகளுக்காக

எல்லாரும் காத்திருக்கிறார்கள்

புயல் திசை தவறிப் போய்விட்டதாக

அறிவிப்பு வருகிறது

எல்லாரும் கன்னத்தில் கை வைத்தபடி

ஏமாற்றத்தோடு செல்கிறார்கள்

இந்த வருடமும்

நிவாரணத்தில் மண்ணள்ளிப் போட்டு விட்டது

பாழாய்ப் போன புயல்

*****

கண்ணதாசன் பாட்டு

எப்போதோ போட்ட சோற்றிற்கு

இப்போதும் விசுவாசமாய்

வாலை ஆட்டுகிறது நாய்

எப்போதும் போட்ட சோற்றைத் தின்று விட்டு

இப்போது பெண்டாட்டி சொல் கேட்டு

வீட்டை விட்டுத் துரத்துகிறது பிள்ளை

நாய்க்குக் கல்யாணம் செய்யாது போனது

நல்லதாகப் போய் விட்டது

கல்யாணம் செய்து வைப்பதற்கு முன்

கொத்தி விரட்டி விடும் கோழி மேலானது

கண்ணதாசன் இருந்திருந்தால்

பிள்ளையைப் பெற்றால் தெருவோரம்

நாயை வளர்த்தால் சாவு வரை வரும்

என்று பாடியிருப்பார்

*****

22 Mar 2023

ஆயுள் ரேகையில் நிகழும் அற்புத மரணம்

ஆயுள் ரேகையில் நிகழும் அற்புத மரணம்

ஒரு கை தட்டினால் சாவேது

இரு கையைச் சேர்த்து தட்ட

சரியாக ஆயுள் ரேகைப் பகுதியில்

அடிபட்டு மண்டை மசிந்து

குடல் பிதுங்கி உடல் நசுங்கிச்

செத்திருக்கும் கொசு

*****

தத்துவத்தின் சாசுவதம்

ஓர் இளநீர்

வாழ்வை மாற்றி விடும்

உச்சந் தலையில் விழும் போது

ஒரு கயிறு

சாவை மாற்றி விடும்

அறுந்து விடும் போது

இப்படித்தான் இது இது மாறும் என்பதில்லை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி

ஒவ்வொன்றும் மாறும் என்பதால்

எதை வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும் பேசலாம்

சொல்வதில் ஏது சாசுவதம்

மாறிக் கொண்டும் மாற்றிக் கொண்டே இருப்பதே தத்துவம்

*****

உலகைக் காக்க வீட்டில் உண்மின்

உணவகத்தில் தொடர்ந்து உண்டால்

பாரதி போல்

ரௌத்திரம் பழகிடுமோ

ரத்த அழுத்தம் எகிறிடுமோ

தனியொரு மனிதருக்கு

கூடுதல் கட்டணம்

ஜி.எஸ்.டி.

டிப்ஸ் இல்லாத

வீட்டுச் சாப்பாடுதான்

வயிற்றை நிறைக்குமோ

ஜகத்தை அழித்திடும்

கோபத்தைக் குறைக்குமோ

இனியொரு விதி செய்வோம்

வீட்டிலே உணவு செய்து

அதை எந்த நாளும் காப்போம்

என்று ஆடுவோமோ பள்ளு பாடுவோமோ

ஆனந்த சாப்பாட்டை அடைந்து விட்டோம் என்று

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...