27 Mar 2023

என்னை யாரென்று நான் பார்க்கிறேன்

என்னை யாரென்று நான் பார்க்கிறேன்

காலில்லாமல் காலம் ஓடுகிறது

டிஜிட்டல் கடிகாரத்தில்

மாடின்றிப் பால் தருகின்றன

தெருவுக்குத் தெரு இருக்கும் பாலகங்கள்

கல்யாணம் ஆகாது

கர்ப்பமாய் இருக்கும் தோழி

வருமானத்துக்காக வாடகைத் தாயாக

இருப்பதாகச் சொல்கிறாள்

ஊருக்கு வந்து திரும்பும் போதெல்லாம்

எனக்குப் பிடிக்குமென

சீடை முறுக்கைக் கடையிலிருந்து வாங்கி வைத்து

மறக்காமல் தந்து அனுப்புகிறாள் அம்மா

பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த

பஞ்சு தாத்தா பேரன்

கல்யாணமாகி பத்து வருடங்களாய்

ஆஸ்பத்திரிக்கும் கோயிலுக்குமாய்

அலைந்து கொண்டிருக்கிறான்

இருபது வேலி நிலத்தையும் விற்று விட்டு

நகரத்துக்கு வந்து அரிக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார்

பெரிய பண்ணை ஆளவந்தார்

எல்லாம் மாறி விட்டதோ என நினைக்கையில்

ஆதார் நம்பர் இல்லாமல்

பைத்தியமாய் அலைந்து கொண்டிருக்கிறான்

பால்யக் கால நண்பர்களின் ஒருவன்

திருட்டு விசாவில் மலேசியா போன இன்னொருவன்

அங்கேயே தங்கி விட்டதாகக் கேள்வி

அரசியல்வாதியாகி விட்ட மற்றொருவனைப் பற்றி

ஊருக்கே தெரியும்

எல்லாரையும் பார்த்துக் கொண்டிருக்கும்

நகரத்தில் இருந்து கொண்டு

இன்னும் கிராமத்தில் ஓட்டுரிமையும்

ரேஷன் கார்டில் பெயரும் வைத்திருக்கும்

என்னைப் பற்றி எனக்கே தெரியுமா என்று

எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...