29 Mar 2023

ஏன் பல்டியடிக்கிறது பொருளாதாரம்?

ஏன் பல்டியடிக்கிறது பொருளாதாரம்?

உலக அளவில் பொருளாதாரம் பல்டியடிப்பதற்கு முக்கியக் காரணம் பண வீக்கம் ஆகும். 2008 லிருந்தே உலகப் பொருளாதாரம் நெருக்கடியான நிலைகளைச் சந்தித்து வருகிறது. அந்த ஆண்டில்தான் அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான லேமன் பிரதர்ஸ் திவாலானது.

இடையே கோவிட் பெருந்தொற்று உலகப் பொருளாதார நிலைமைகளை சுணக்கத்தில் ஆழ்த்தி முடக்கியது.

2008 லிருந்து பார்த்தால் நாம் 2023ஐப் பார்த்தால் பதினைந்து ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இருந்தும் பணவீக்கம் பெரிய பிரச்சனையாக மாற ஆரம்பிக்க, உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பித்தன.

வட்டி விகித உயர்வு மற்ற நாடுகளைப் பாதிப்பதற்கு முன்பாக அமெரிக்காவைப் பதம் பார்த்தது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து பல அமெரிக்க வங்கிகள் திவால் நிலையை நோக்சிச் சென்று ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பை அதிரடியாகச் செய்து கொண்டிருக்கின்றன. கூகுள் நிறுவனமோ, முகநூல் நிறுவனமோ, அமேசான் நிறுவனமோ இந்த அளவுக்கு ஆட்குறைப்பில் இறங்கும் என்று யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள். எலான் மாஸ்கின் டிவிட்டரின் ஆட்குறைப்பு ஓர் அச்சாரத்தைச் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கி விட்டன. உலகெங்கும் ஆட்குறைப்பு எனும் அதிர்வலைகளின் பிரதிபலிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பருவ நிலைகளின் சாதகமற்ற நிலைமைகள் விவசாய விளைபொருட்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. வெள்ளமும் வறட்சியும் சுழற்சி முறையில் மாறி மாறி அமைந்து வேளாண் வளர்ச்சியை ஊடாடச் செய்கின்றன. இதனால் வேளாண் பொருட்களின் பண வீக்க விகிதம் உயர்ந்து காணப்படுகிறது.

பணவீக்கமும் அதைத் தொடரும் வட்டி விகித உயர்வும் குறு மற்றும் சிறுதொழில்களைத் தடுமாறச் செய்கின்றன. தொடரும் வட்டி விகித உயர்வு வீட்டுக்கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், தொழில் கடன் என கடன் வாங்கியவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கடன் வாங்கியவர்கள் தவணை எண்ணிக்கையை முடிவற்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பண வீக்கத்தாலும் வட்டி விகித உயர்வு மற்றும் வரி உயர்வுகளாலும் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் நுகர்வு குறைந்து கொண்டே போகின்றது. இந்நுகர்வு குறைவு தொழில் துறையைப் பெரிய அளவில் பாதிக்கவல்லது.

மறுபுறம் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பண மதிப்பும், கச்சா எண்ணெய் விலைப் போக்கும் சவாலாக மாறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வெவ்வேறு விதமாக நன்மையும் தீமையுமாகக் கலந்து உலக நாடுகளைப் பாதிக்கக் கூடியன. உதாரணமாக ரூபாயின் வீழ்ச்சி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாபகரமாக அமைந்தால் இறக்குமதி நிறுவனங்களை அசைத்து ஆட்டம் காணச் செய்து விடும்.

இந்தியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் சாமானிய மக்களின் நுகர்வு பொருட்களைக் கடுமையாக விலையேற்றி விடும். விலையேற்றத்தின் காரணமாகச் சாமானியர்கள் தங்கள் நுகர்வை வெகு சிக்கனமாகவும், கறாராகக் கட்டு செட்டாகவும் வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் அது ஒரு பொருளாதார சுணக்கத்தை உண்டு பண்ணி விடும். சாமானியர்கள் இது போன்ற நிலைமைகளில் தங்கள் நுகர்வைக் கூட அது எவ்வளவு அத்தியாவசியம் என்றாலும் நிறுத்தி விடுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

பணவீக்கமும் வட்டி விகித உயர்வும் தொடர்ச்சியான விளைவுகளை அடுத்தடுத்து ஏற்படுத்தக் கூடியவை. இவை இரண்டும் தொடர்ந்து சரியும் சீட்டுக்கட்டுகளைப் போலத் தொடர்ச்சியாகப் பொருளாதார அடுக்குகளைச் சரியச் செய்து விடக் கூடியவை.

பணவீக்கத்தைக் கட்டுபடுத்துவதற்காக மத்திய வங்கிகள் பணத்தை அளவோடு அச்சடித்தால் பணப்புழக்கத்தை அது வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பிட்ட அளவைத் தாண்டி அச்சடித்துப் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் போது அது பணவீக்கத்தை அதிகம் பண்ணி விடுகிறது.

பணவீக்கத்தை ஓர் ஒப்பீட்டு அளவாகக் கொண்டு மத்திய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பண வீக்கம் அதிகமாக இருக்கும் போது வட்டி விகிதத்தைக் குறைப்பதோ பண வீக்கத்தைக் காரணம் காட்டி வட்டி விகிதத்தை அதிகரிப்பதோ இரண்டும் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணக் கூடியவையாக இருக்கின்றன. அந்தப் பாதகத்தைச் செய்யாமல் இருப்பதும் கடினத்தினும் கடினமாக இருக்கின்றது. பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பதும் பணவீக்கத்தை எதிர்மறையாகப் பாதிக்கக் கூடியது.

பணவீக்கத்தையும் வட்டி விகிதத்தையும் சமாளிப்பதற்கு நாட்டின் உற்பத்தியும் ஏற்றுமதியும் நிலையாக இருக்க வேண்டியதும் உயர்ந்து கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இறக்குமதி அளவு குறைந்து கொண்டிருக்க வேண்டியதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா போன்ற வேளாண்மை சார்ந்த வளர்ந்து வரும் நாடுகளில் நாட்டின் உற்பத்தி பல்வேறு காரணங்களால் நிலைத்தன்மை உடையதாக அமைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. வளர்ந்த நாடுகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஏற்றுமதியை உயர்த்துவதும் போராட்டமாக உள்ளது. இறக்குமதி மட்டும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டு போவதால் அதைச் சார்ந்து பணவீக்கத்தையும் வட்டி விகிதத்தையும் கட்டுபடுத்த வேண்டிய சூழல் இந்தியா போன்ற நாடுகளுக்கு எப்போதும் இருக்கிறது.

பொருளாதார நிலைத்தன்மை போராட்டத்தால் அவ்வபோது பொருளாதாரம் பல்டியடிக்கத்தான் செய்கிறது என்றாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதாரப் பின்னடைவைப் பார்க்கும் போது இந்தியாவின் மக்கள் சக்தியும் இளைஞர்களின் ஆற்றலும் இந்தியப் பொருளாதாரத்தைத் தலைநிமிர்ந்து முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றன.

இந்தியப் பொருளாதாரம் பல்டியடிக்காமல் தொடர்வதற்கு இதன் பொருளாதார அமைப்பு மக்களின் சக்தியையும் ஆற்றலையும் நம்பிச் செயல்படுவதும் தமக்கே உரிய பொருளாதார கட்டமைப்புகளோடு உறுதியாகச் செயல்படுவதும் பொருத்தமான காரணங்களாக அமைகின்றன. இந்தக் காரணங்களை இனிவரும் காலங்களில் இந்தியா விட்டு விடாமல் தொடர்வது அவசியம் எதிர்பார்க்கப்படுகிறது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...