28 Mar 2023

காயிதம் போட்ட கார்ப்பரேட்காரன்

திருவாளர் நட்பாளர்

அக்கம் பக்கத்தில்

நட்பென யாரும் இல்லையெனினும்

முகநூலில் மூவாயிரம் சொச்சம்

நட்புகளை வைத்திருந்தார்

தனிமை தாங்காது பக்கத்துப் பிளாட்டில்

நேற்று தூக்கில் தொங்கியவர்

*****

காயிதம் போட்ட கார்ப்பரேட்காரன்

அக்கம் பக்கத்துக் கொல்லைகளில்

மேய்ந்து விட்டு வந்து விடும்

அப்பத்தா வளர்த்த கோழி

மேய விட்டே

ஆட்டையும் மாட்டையும் வளர்த்தாள் அம்மச்சி

தீனி போடாமல் மீன்களையும்

முயலையும் காடையையும்

வளர்க்காமலே பிடித்து வந்தார் தாத்தா

அம்மா அப்பா காலத்தில்

நொய்யும் பழஞ்சோறும் தின்றன கோழிகள்

அறுத்து வந்த புல்லையும் வைக்கோலையும் தின்றன

ஆடுகளும் மாடுகளும்

மீன்காரர்கள் மிதிவண்டிகளில் வர

கெண்டையும் ஜிலேபியும் விற்பனைக்கு வந்தன

முயலையும் காடையையும்

வளர்க்கத் தொடங்கினார் பட்டாமணியார்

எல்லாம் அரத பழசாகிப் போனதென

மீனுக்குத் தீவனத்தோடு

வயலையெல்லாம் குட்டையாக்கி

அங்காடி அரிசி போட்டு வளர்க்க ஆரம்பித்தான்

பள்ளிக்காலத்துச் சிநேகிதன் ஒருவன்

கோழிகளைக் கூண்டில் அடைத்து

முறை வைத்து ஊசி போட்டு

விலைகொடுத்து தீனி வாங்கிப் போட்டான்

கல்லூரி காலத்து நண்பனொருவன்

வளர்ந்து கிடக்கும் புல்லை விடுத்து

வளர்ப்புப் புல் வளர்த்து

மேடை கட்டி ஆடுகளும்

அங்கங்கே கொட்டகைப் போட்டு

காடைகளும் முயல்களும்

வளர்க்கத் தொடங்கினான்

தொழிலதிபர் ஆகி விட்ட பெருமிதத்தோடு

உறவுக்கார ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன்

அவனவன் தோட்டத்தில்

அவனவன் நட்டு வைத்தான்

காசுக்கு வாங்கிக் கஞ்சாங் கோரையை

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி

கவர்மென்டுக்குக் காயிதம் போட்டான் கார்ப்பரேட்காரன்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...