29 Mar 2023

சாதுவாகி விட்ட ஐயனார்

மேலையும் கீழையும் ஒன்றாக்கும் ராட்டினம்

ஏற வேண்டும் என்ற ஆசைதான்

மேலே ஏற்றியது

ஏறியதும் தலைசுற்றும் என்று தெரிந்திருந்தால்

கீழேயே இருந்திருப்பேன்

இறங்கினால் ஏற முடியுமா என்ற பயத்தினாலோ

இறங்கத்தான் வேண்டுமா என்ற தயக்கத்தினாலோ

இப்போது கீழிறங்க யோசனையாக இருந்து

மேலா கீழா என்ற குழம்பத் தொடங்குகையில்

மேலும் கீழும் யார் கையிலும் இல்லை என்பது போல

ராட்டினம் போலாகும் வாழ்க்கையில்

ஏறாமலும் இறங்காமலும்

வருடங்களைக் கண நேரங்களைப் போல மாற்றிப் போட்டு

மேலும் கீழும் மாறி மாறி வந்து விடுகின்றன

*****

சாதுவாகி விட்ட ஐயனார்

தனியாய் வந்தால்

ஆளை அடித்துப் போடும்

ஊர் கோடி ஐயனார்

கூட்டம் கூட்டமாய் வருவதால்

பேசாமல் இருக்கிறாரோ என்னவோ

ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பக்கத்தில் வந்ததும்

விளையாட்டுப் பொம்மையைப் போல அமர்ந்து

உடைந்து விட்ட அரிவாளைப் பொருட்படுத்தாது

ஜெசிபி பொம்மைகளை வாங்கிச் செல்லும் குழந்தைகளை

வேடிக்கை பார்க்க துவங்கி விட்டார்

இடையிடையே வந்து போகும் குவார்ட்டர் குடியர்களையும்

பின்புறமாய் வந்து சொக்கிப் போகும் கஞ்சாப் பிரியர்களையும்

நடுநிசியில் வந்து சோரம் போகுபவர்களையும்

மிரட்டுவது கூட இல்லை

கிடா வெட்டி படையல் போடுபவர்களும்

உடைந்து போய் விட்ட அரிவாளைக் கண்டு கொள்வதுமில்லை

பழங்கதைகளில் மட்டும்

ஐயனார் இன்னும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...