ஆயுள் ரேகையில் நிகழும் அற்புத மரணம்
ஒரு கை தட்டினால் சாவேது
இரு கையைச் சேர்த்து தட்ட
சரியாக ஆயுள் ரேகைப் பகுதியில்
அடிபட்டு மண்டை மசிந்து
குடல் பிதுங்கி உடல் நசுங்கிச்
செத்திருக்கும் கொசு
*****
தத்துவத்தின் சாசுவதம்
ஓர் இளநீர்
வாழ்வை மாற்றி விடும்
உச்சந் தலையில் விழும் போது
ஒரு கயிறு
சாவை மாற்றி விடும்
அறுந்து விடும் போது
இப்படித்தான் இது இது மாறும்
என்பதில்லை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
மாதிரி
ஒவ்வொன்றும் மாறும் என்பதால்
எதை வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் பேசலாம்
சொல்வதில் ஏது சாசுவதம்
மாறிக் கொண்டும் மாற்றிக்
கொண்டே இருப்பதே தத்துவம்
*****
உலகைக் காக்க வீட்டில் உண்மின்
உணவகத்தில் தொடர்ந்து உண்டால்
பாரதி போல்
ரௌத்திரம் பழகிடுமோ
ரத்த அழுத்தம் எகிறிடுமோ
தனியொரு மனிதருக்கு
கூடுதல் கட்டணம்
ஜி.எஸ்.டி.
டிப்ஸ் இல்லாத
வீட்டுச் சாப்பாடுதான்
வயிற்றை நிறைக்குமோ
ஜகத்தை அழித்திடும்
கோபத்தைக் குறைக்குமோ
இனியொரு விதி செய்வோம்
வீட்டிலே உணவு செய்து
அதை எந்த நாளும் காப்போம்
என்று ஆடுவோமோ பள்ளு பாடுவோமோ
ஆனந்த சாப்பாட்டை அடைந்து
விட்டோம் என்று
*****
No comments:
Post a Comment