31 Oct 2018

புத்தகங்களால் வீட்டை அழகாக்குவோம்!


புத்தகங்களால் வீட்டை அழகாக்குவோம்!
            வாழ்வில் நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?
            வாழ்வில் நல்ல உறவினர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறீர்களா?
            வாழ்வில் நல்ல சுற்றத்தார்கள் இல்லையென்று கவலைபடுகிறீர்களா?
            நல்ல நண்பர்கள், நல்ல உறவினர்கள், நல்ல சுற்றத்தார்கள் இல்லை என்றாலும் ஒரு நல்ல புத்தகம் இருந்தால் போதும்.
            ஒரு நல்ல புத்தகம் மிகச் சிறந்த நண்பர்.
            ஒரு நல்ல புத்தகம் மிகச் சிறந்த உறவினர்.
            ஒரு நல்ல புத்தகம் மிகச் சிறந்த சுற்றம்.
            ஒரு நல்ல நண்பர் கூட ஒரு நாள் நம்மை விட்டுப் பிரியும் நிலை வரலாம்.
            ஒரு நல்ல உறவு கூட நம்மை ஒரு நாள் உதறி விட்டுப் போகும் சூழல் நேரலாம்.
            ஒரு நல்ல சுற்றம் கூட நம்மை ஒரு நாள் விலகிச் செல்லும் நிலை நிகழலாம்.
            ஒரு நல்ல புத்தகம் ஒரு போதும் நம்மை விட்டுப் பிரிவதில்லை.
            ஒரு நல்ல புத்தகம் ஒரு போதும் நம்மை உதறி விட்டுப் போகாது.
            ஒரு நல்ல புத்தகம் ஒரு போதும் நம்மை விட்டு விலகிச் செல்லாது.
            ஒரு நல்ல புத்தகம் நம் கையில் இருப்பது ஒரு நல்ல நண்பர் நம் அருகில் இருப்பதைப் போன்றது. ஒரு நல்ல புத்தகம் நம் வீட்டில் இருப்பது ஒரு நல்ல உறவினர் நம் வீட்டில் நம்மோடு இருப்பதைப் போன்றது. ஒரு நல்ல புத்தகம் நம்மால் வாசிக்கப்படுவது என்பது நல்ல சுற்றத்தினர் நம்மைச் சூழ்ந்திருப்பதைப் போன்றது.
            நல்ல புத்தகங்களை நாட புத்தகக் கண்காட்சி நல்ல வாய்ப்பாகும். புத்தகக் கண்காட்சிகள் ஒவ்வொன்றும் அறிவுலகின் வாயில்கள் ஆகும். புத்தகங்கள் ஒவ்வொன்றும் உலகைப் புரட்டிப் போடும் ஆயுதங்கள் ஆகும்.
            ஒரு புத்தகம் வாங்கிய பின் அதைப் படிக்க முடியாமல் போகிறதே என்று நாம் கவலைபடலாம். தேவையற்ற கவலை அது. எந்த ஒரு நல்ல புத்தகமும் வாசிக்கப்படாமல் போகாது. நாம் வாசிக்காவிட்டாலும் நம் வீட்டில் இருக்கும் நம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அப்பா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி என்று நம் உறவுகளாலோ, நம் நட்புகளாலோ, நம் சுற்றத்தாலோ ஒரு புத்தகம் என்பது நிச்சயம் வாசிக்கப்படும். அல்லது நம் தலைமுறைகளில் எவரோ ஒருவரால் வாசிக்கப்படும். அவ்வகையில் வாங்கியப் புத்தகங்கள் எதுவும் வாசிக்கப்படாமல் போகாது என்பது நிச்சயம்.
            நாம் மருந்து கடையில் ஒரு மருந்தை வாங்கும் போது எதைக் கவனிக்கிறோம்? அதன் காலாவதித் தேதியைக் கவனிக்கிறோம். காலாவதியாகவிட்ட ஒரு மருந்தை வாங்கினால் அதனால் எந்தப் பயனும் இல்லை.
            மளிகைக் கடையில் ஒரு கடைச்சரக்கை வாங்கும் போது அது எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதைக் கவனிக்கிறோம். காலம் கடந்த கடைச்சரக்கை வாங்கினால் அதனால் எந்தப் பயனும் இல்லை.
            வாங்கும் எந்தப் பொருளுக்கும் ஒரு காலாவதி தேதி இருக்கிறது. காலாவதித் தேதி இல்லாத பொருள் இந்த உலகில் இல்லை. ஆனால் உண்மையில் காலாவதி தேதி இல்லாத இந்த உலகின் ஒரே பொருள் புத்தகங்கள்தான்.
            காலம் கடந்தும் வாசிக்கலாம் புத்தகங்களை. எந்தப் புத்தகமும் காலாவதியாகி விடுவதில்லை.
            ஒரு திருக்குறள் நூலை வாங்கும் போது இந்நூல் 2050 இல் காலாவதியாகி விடும் என்று கூற முடியுமா? காலாவதியைக் காலாவதியாக்கும் ஒரு பொருள் புத்தகம். உலகின் காலாவதி தேதியில்லாத ஒரு பொருள் புத்தகம்.
            நம் ஒவ்வொருவர் வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை உள்ளது. அண்மை காலமாக ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை இருப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. கழிவறை இல்லாத வீட்டுக்கு பெண் கொடுக்காதீர்கள் என்ற முழக்கம் கூட வலுபெற்றுகிறது.
            ஒரு வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை போல இருக்க வேண்டிய இன்னொரு முக்கிய அறை வாசிப்பு அறை. வாசிப்பு அறை உள்ள ஒரு வீடே அழகான வீடு ஆகும்.
            வாசிப்பு அறை அமைக்கும் வகையில் வீட்டை அமைக்க முடியாவிட்டாலும் ஒரு சில அலமாரியையாவது நாம் வாசிக்கும் நூல்களுக்கு ஒதுக்கலாம் அல்லவா! அந்த சிறு அலமாரியில் பல நூல்களை வாங்கி வைக்க முடியாவிட்டாலும் அகராதி, திருக்குறள், பாரதியார் கவிதைகள் என ஒரு சில நூல்களையாவது வாங்கி வைக்கலாம் அல்லவா! இது எவராலும் சாத்தியம் ஆக்க முடியாத ஒன்று அல்லவே!
            ஒரு வீட்டில் மனிதர்கள் குடி புகும் போது அல்லாமல் ஒரு புத்தகம் குடி புகும் போதே அவ்வீடு அழகான வீடாக உருபெறுகிறது.
            ஓர் அழகான வீட்டை உருவாக்க அவ்வீட்டில் புத்தகத்தை இடம் பெறச் செய்வோம். வீட்டை அழகாக்கிய அப்புத்தகத்தை அவ்வீட்டிலிருந்து வாசிப்போம். இப்படிச் செய்தால் ஒவ்வொரு வீடும் அழகு பெறும். ஒவ்வொரு வீடும் இப்படி அழகு பெறும் போது ஒவ்வொரு சமூகமும் அழகு பெறும். ஒவ்வொரு சமூகமும் இப்படி அழகு பெறும் போது ஒவ்வொரு நாடும் அழகு பெறும். ஒவ்வொரு நாடும் இப்படி அழகு பெறும் போது இந்த பூவுலகே அழகு பெறும். ஆம்! பூவுலகின் அழகு புத்தகங்களிலும், அப்புத்தகங்களை வாசிக்கும் நம்மிடமும் உள்ளது.
            வாருங்கள் வாசிப்போம்! வாசிப்பால் உலகை அழகாக்குவோம்!
            (26.10.2018 (வெள்ளி) மாலை 3.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், உச்சிவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பத்தாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா எனும் மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

ஜன்னல்களை உடைத்தால் என்ன?


ஜன்னல்களை உடைத்தால் என்ன?
ஜன்னல் கம்பிகளை உடைத்தெறிந்தால்
பிரயோஜனமாய் இருக்கும்
எல்லா பக்கமும் திறந்து வைத்து விட்டால்
எந்தப் பக்கம் ஜன்னல் என்ற கேள்வி இல்லாமல் போகும்
ஜன்னலுக்கான அடிதடி, வசவுகள் நின்று போகும்
ஜன்னல்கள் பிடிக்க வேண்டுமா என்ன
வேண்டுமானால் வெளியே வந்து கொள்
வானம் சின்ன ஜன்னல்
கண்கள் பெரிய ஜன்னல்கள்
*****

30 Oct 2018

நன்மனிதராக நாளும் வாசிப்போம்!


நன்மனிதராக நாளும் வாசிப்போம்!
            எந்த ஒரு மிகப் பெரிய கட்டிடத்தையும் செங்கற்கள் வடிவமைப்பதைப் போல, யார் ஒருவரின் உயர்ந்த வாழ்வையும் புத்தகங்கள் வடிவமைக்கின்றன. சிறந்த தலைவர்கள், சிறந்த அறிஞர்கள் இதற்கு சான்று பகர்கிறார்கள்.
            இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறைக்கு வெளியே இருந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார். சிறைக்கு உள்ளே இருந்த நாட்களில் புத்தகக் காதலராக இருந்தார். சிறை வாழ்வையும் சிறப்பான வாழ்வாக புத்தகங்கள் மாற்றியது வரலாறு.
            தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர்களில் ஒருவராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாதுரை தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வாசித்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே தனது உயிர்காக்கும் அறுவைச் சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்கச் சொன்னார். அண்ணா அவர்களின் ஈர்ப்பான பேச்சிற்கும் எழுத்திற்கும் அவரது வாசிப்பே வேராகவும், விழுதாகவும் இருந்தது.
            தமிழக முதல்வர்களில் சமூக நீதிக்காகப் பெரிதும் போராடிய கலைஞர் கருணாநிதி அவர்கள் வாசிக்காத நாளோ, எழுதாத நாளோ இல்லாத வண்ணம் ஓய்வின்றி வாசிப்பை ஒரு வேள்வி போல செய்தவர். அவ்வாசிப்பே அரசியலையும், இலக்கியத்தையும் இணைத்து ஒரு புரவலராகவும், புலவராகவும் அவரை விளங்கச் செய்தது.
            உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற வழிகாட்டி கார்ல் மார்க்ஸ் ஜெர்மன் நாட்டுக்காரர். அவர் வாசிப்பதற்காகவே இங்கிலாந்து செல்லவும், இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் குடியேறவும், லண்டன் மாநகரில் நூலகத்திற்கு அருகில் வீடு அமைய வேண்டும் என்றும் விரும்பியவர். அவரது அயராத வாசிப்பின் மூலதனமே அவரது மூலதனம் எனும் ஒப்பற்ற புத்தகம் ஆகும்.
            உலகின் காவியப் பேரரசர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ஜூலியஸ் சீஸர், 'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவர் எவரோ, அவரே என் வழிகாட்டி' என்கிறார். வாசிப்பவர்களையே வழிகாட்டியாகக் கொள்ள அரசர்களும் விரும்புகின்றனர். அறிவுடைய ஒருவரை அரசனும் விரும்பும் எனும் நன்மொழியாகியப் பொன்மொழி இதையே பறைசாற்றுகிறது.
            சூரியன் மறையாத நாடு என்று சிறப்பிக்கப்பட்ட, உலகெங்கும் நாடு பிடிக்கும் ஆசையில் சர்வாதிகாரியாக நடந்து கொண்ட இங்கிலாந்து நாட்டினர் தங்கள் நாட்டை இழக்கவும் சம்மதிப்பதாகவும், ‍ஷேக்ஸ்பியரின் ஒரு இலக்கியத்தையும் சம்மதிக்க மாட்டோம் என்கின்றனர். ஒரு காலத்தில் சர்வாதிகார, ஏகாதிபத்திய நாடாக திகழ்ந்த நாடே எதற்காகவும் வாசிப்பை விட்டு கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது வியப்பைத் தருகிறது அல்லவா!
            இந்தியாவின் பல நகரங்களுக்கு வருகை தந்த யுவான்சுவாங் ஒரு சீனப் பயணியாகத்தான் அறியப்படுகிறார். ஆனால் அவரோ இந்தியாவின் அறிவுக் களஞ்சியங்களை விரும்பி வாசித்தவராக, இந்தியாவின் அறிவுக் களஞ்சியங்களைச் சீனாவிற்குக் கொண்டு சென்றவராக விளங்கியுள்ளார்.
            அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகச் சிறந்தவராகக் கருதப்படும் ஆபிரஹாம் லிங்கன், "நான் தெரிந்து கொள்ளாத பல விசயங்கள் புத்தகங்களில்தான் உள்ளன" என்று குறிப்பிடுவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலான அவரது வாசிப்பு ஆர்வத்தைக் காட்டுவதாக உள்ளது.
            இப்படி உலகின் சிறந்த தலைவர்கள், சிறந்த அறிஞர்கள், சிறந்த வழிகாட்டிகள் அனைவரும் வாசிப்பை சுவாசிப்பாகக் கொண்டவர்களாக விளங்கியிருக்கிறார்கள். அவர்களின் வழியில் நாமும் சிறந்த தலைமைப் பண்பைப் பெற, சிறந்த பேரறிவைப் பெற, சிறந்த வழிகாட்டித் தன்மையை அடைய புத்தங்களைப் புதிதுப் புதிதாக விரும்பி வாசிப்போம்! வாசிப்பை அறிவின் சுவாசிப்பாகக் கருதி நாளும் வாசிப்போம்!
            (25.10.2018 (வியாழன்) மாலை 3.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், திருநாட்டியத்தான்குடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஒன்பதாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா எனும் மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

எனக்கான கனவுகள் வருவதில்லை!


எனக்கான கனவுகள் வருவதில்லை!
கனவு பிடிப்பதில்லை
கனவின் காட்சிகள் யாருடையவை?
பாம்பு துரத்துகிறது
ஓட மறுத்து நிலைகுத்தி நிற்கின்றன கால்கள்
கனவின் எண்ணங்கள் யாருடையவை?
எழுத நினைக்கும் விடைகள்
மறந்து போன தேர்வறையில்
வியர்வைச் சொட்ட அமர்ந்திருக்கிறேன்
கனவின் இயக்கம் யாருடையவை?
அவமதிக்கப்பட்டு கூனி குறுகி நிற்க
ஐஸ்கிரீம் தின்று குதித்துக் குதூகலிக்கிறது
எப்போதும் சுறுசுறுப்போடு இயங்கும் சாதுர்யம்
கனவுகள் பிடிப்பதில்லை
எனக்கான கனவுகள் வருவதேயில்லை
இவைகள் யாருக்கோவான கனவுகள்
*****

29 Oct 2018

ஆயிரம் நெத்திச்சூடிகள்


புறணி பேசுபவர்களுக்கு ஏது கற்பனை வறட்சி?
*****
ஆயிரம் நெத்திச்சூடிகள் வாங்கியிருப்பேன். அவ்வளவு ஏன் வாங்கினேன் என்பீர்கள்! ஒவ்வொரு விழாவிலும் ஒரு நெத்திச்சூடியைத் தொலைப்பதே பாப்பாவின் வேலை.
*****
மிகவும் குழப்பமாக இருந்தால் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
*****
து அதற்கென்று ஒரு மனம் வந்து செய்தால் நன்றாகத்தான் இருக்கிறது. அதற்குள் அவசரபடுத்துவதற்கென்றே சுற்றி நான்கு பேர் இருக்கிறார்கள்.
*****
தொழிலதிபர்கள் என்போர்...
            1) இந்தியாவில் படித்து விட்டு வெளிநாட்டில் தொழில் செய்கிறார்கள்.
            2) இந்தியாவில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிறார்கள்.
*****

சாத்தான் உம் காதலர்!


என்பதைச் சொல்!
உன் கோபம் குளிர்விக்கும்
புன்னகை சூடேற்றும்
இப்படி நடக்காதே என்பவர்களுக்கு
கோபம் சூடேற்றி
புன்னகை குளிர்வித்திருந்தால்
நாம் பிரிந்திருப்போம் என்பதைச் சொல்
*****
சாத்தான் உம் காதலர்!
காதல் சொன்னால் மறுப்பதும்
புன்னகை செய்தால் முறைப்பதும்
அருகில் வந்தால் விரட்டுவதும்
எதேச்சையாய் எதிர்படுவதற்கும்
எதிராளி போல் போக்கு காட்டுவதும்
நானறிந்த வகையில்
உம் அணுகுமுறைகளை வைத்து
சாத்தான் உம் காதலர் என்பேன்
உம் காதலர் சாத்தானை ஏவி
எம் காதலை நசுக்கப் பார்க்கிறாய் நீ.
ரயில் நிலையங்களில்
தண்டவாளங்கள் தொலையுமா?
தொலைக்கப் பார்க்கிறாய் நீ.
*****

28 Oct 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10
            செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களை நோக்கிய புத்தகக் கண்காட்சியாகும்.
            புத்தகக் கண்காட்சிக்காக மாணவர்களை அழைத்துச் செல்வதை மாற்றி, மாணவர்களை நோக்கி புத்தகக் கண்காட்சியை அழைத்துச் செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அறிவுத் திருவிழாக்கள் பள்ளிகள் தோறும் நடத்தப்படுகின்றன.
            இதுவரை ஒன்பது அறிவுத் திருவிழாக்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் பத்தாவது அறிவுத் திருவிழா திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், உச்சிவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 26.10.2018 (வெள்ளி) அன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது.
            உச்சிவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெறும் இவ்வறிவுத் திருவிழா அப்பள்ளியில் நடைபெறும் இரண்டாவது முறையாக நடைபெறும் அறிவுத் திருவிழா ஆகும்.
            செங்காந்தளின் இரண்டாவது அறிவுத் திருவிழா நடைபெற்றதும், ஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக அறிவுத் திருவிழா நடைபெறுவதும் உச்சிவாடிப் பள்ளியில்தான் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.
            ஆறு மாதத்திற்கு ஒரு முறை தங்கள் பள்ளியில் அறிவுத் திருவிழா நடத்த வேண்டும் என்ற அப்பள்ளியின் அன்பான ஆணைக்கிணங்க பத்தாவது அறிவுத் திருவிழா உச்சிவாடிப் பள்ளியில் நடைபெற்றது.
            அறிவுத் திருவிழாவின் எண்ணிக்கை பத்து என்ற இரட்டை இலக்க எண்ணிக்கையை தொட்டு நடைபெற்ற இவ்வறிவுத் திருவிழாவில் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று புத்தகங்களை அள்ளிச் சென்றனர்.
            பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வறிவுத் திருவிழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சமாகும்.
            பத்தாவதாக நடைபெற்ற அறிவுத் திருவிழாவின் மூலம் 97 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்த்துள்ளோம்.
            அறிவுத் திருவிழாவின் இலக்கான ஒரு லட்சம் புத்தகங்களை சிறார்களின் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் நாம் இன்னும் அடைய வேண்டிய இலக்கு 97,346 ஆகும்.
            பத்தாவது அறிவுத் திருவிழாவில் நாம் கொண்டு சேர்த்த 97 போக, அதாவது 97,346-97= 97,249 புத்தகங்கள் நாம் இன்னும் கொண்டு சேர்க்க வேண்டிய இலக்காகும். 97,249 புத்தகங்களைக் கொண்டு சேர்க்க அணி சேர்வோம்! நற்பணி செய்வோம்!
*****

குளிர்பானத்தைச் சூடான தேநீராய்க் குடியுங்கள்


குளிர்பானத்தைச் சூடான தேநீராய்க் குடியுங்கள்
வெப்பம் பிடிக்கும்
குளிர் பிடிக்கும் என்றால்
நீங்கள் என் பயணத்தின் காதலர்
வீடு நமக்கு எதிரி
கிளப்புவோம் நம் பயணத்தை
வெப்பத்தில் குளிரட்டும் குருதி
குளிரில் கொதிக்கட்டும் மனம்
வெடித்துக் கக்கும் எரிமலையின் முடிவில்
பனிக்கட்டி வந்து விழலாம்
ஏறும் பனியுச்சி இமயமலையின் முடிவில்
எரிமலை வெடிக்கலாம்
இரண்டும் நன்மைக்கே
நமக்கு வெப்பமும் பிடிக்கும்
குளிரும் பிடிக்கும்
இரண்டும் பிடிப்பதன் நன்மையிது
நண்பரே இந்தக் குளிர்பானத்தை
சூடான தேநீராய்க் கருதி அருந்துங்கள்
*****

27 Oct 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 9


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 9
            செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சி ஆகும். பள்ளி வயதிலேயே மாணவர்களின் மனதில் பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விடுவது அறிவுத் திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாணவர்களை நோக்கிப் புத்தகக் கண்காட்சியைக் கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு அறிவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
            இதுவரை எட்டு அறிவுத் திருவிழாக்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஒன்பதாவது அறிவுத் திருவிழா திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், திருநாட்டியத்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25.10.2018 (வியாழன்) அன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது.
            திருநாட்டியத்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கிராமப்புறப் பள்ளியாகும். அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகக் கண்காட்சியை எதிர்பார்த்து காத்திருந்ததும், ஆவலோடு புத்தகங்களைப் பார்வையிட்டதும் அறிவுத் திருவிழாவின் நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்தது. புத்தகக் கண்காட்சி தொடங்கியதிலிருந்து நிறைவு பெறும் வரை அவர்கள் வெளிப்படுத்திய அமைதியும் ஒழுங்கும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
            ஒரு லட்சம் புத்தகங்களை சிறார்களின் கையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட செங்காந்தள் அறிவுத் திருவிழா எட்டு அறிவுத் திருவிழாக்கள் வரை கொண்டு சேர்த்த புத்தகங்கள் போக இன்னும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகங்கள் 97,481 ஆகும்.
            ஒன்பதாவதாக நடைபெற்ற இவ்வறிவுத் திருவிழாவில் 43 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்த்துள்ளோம். அது போக பள்ளிகளில், பொது இடங்களில் நடைபெற்ற விழாக்களுக்காக புத்தக ஆர்வலர்கள் வாங்கிச் சென்ற புத்தகங்கள் 92 ஆகும். ஆக 43+92=135 புத்தகங்களைக் கொண்டு சேர்த்து உள்ளோம்.
            ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற இலக்கை அடைய நாம் இன்னும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகங்கள் 97,481-135=97,346 ஆகும். 97,376 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்! புத்தகங்களால் ஆன புத்துலகை வார்ப்போம்!
*****

காலக் கட்டுடைப்பு


காலக் கட்டுடைப்பு
காதலைப் படைத்த முதல் நாளில்
கண்ணயர்ந்தேன்
இரண்டாம் நாளில் நாசிகள் செயலிழந்து
மூன்றாம் நாளில் ஊமையானேன்
நான்காம் நாளில்
உன் குரல் தவிர வேறு குரல் கேட்காத
செவிடானேன்
சுடுவதும் குளிர்வதும் புரியாத பித்தாகி
நெருப்புக்குள் கை வைத்தால்
நீ குளிர்கிறாய்
ஐஸ்கிரீம் நெஞ்சுக்குள் இறங்கினால்
சூடாகிக் கொதிக்கிறாய்
பெரும்பாறையை விழுங்கிடுவேன்
எச்சிலை விழுங்குவது சிரமமாய் இருக்கிறது
சிரிப்பில் கண்ணீரும்
கண்ணீரில் புன்னகையும்
உலகம் கேட்டால் சிரிக்கும்
நான் அழுவேன்
காதலில் செத்து உன்னால் உயிர் பெறுவேன்
நொடி யுகமாக இருக்கும் இம்சை கடக்கவேனும்
காதலைச் சொல்லி விடு
வேண்டாம் சொல்லாமலே இருந்து விடு
யுகம் நொடியாகி விடும் என்று அச்சமாக இருக்கிறது
*****

26 Oct 2018

ஆன்மா அமைதியடையப் பிரார்த்திக்கும் கொலையாளிகள்


ஆன்மா அமைதியடையப் பிரார்த்திக்கும் கொலையாளிகள்
(முன்குறிப்பு - அனைத்து விண்ணப்பதாரர்கள் சார்பாகவும்...)
            நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் விண்ணப்பத்தைச் சேர்க்கை செய்யாமல் இவ்வளவு அலைக்கழிக்கிறார்கள்? நான் இதற்காக ஐந்து முறை நீண்ட தூரம் பயணித்து இருக்கிறேன். அங்கே சென்று விசாரித்திருக்கிறேன், கெஞ்சியிருக்கிறேன். அங்கே இருந்தவர்கள் என்னை கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் பொறுத்திருக்கிறேன். அவர்கள் ஒரு வன்முறையாளராக மாற்ற முனைந்த போதும் மாறாமல் இருந்திருக்கிறேன். அதற்காகவாவது எனக்கு அவர்கள் சேர்க்கையை அனுமதித்திருக்கக் கூடாதா? என்று நான் கேட்பது கூட மனம் நொந்துக் கேட்பதுதான்.
            அதனால் பல நேரங்களில் இயல்பாக இருக்க முடியாது. மனஇறுக்கத்தாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது.
            கோபம் கோபமாக வரும். கோபத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற எரிச்சல் ஏற்படும்.
            இயல்பாக இருக்க முடியாத நிலையில் இருப்பது இது முதல் முறையல்ல என்றாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது எரிச்சலாக இருக்கும். எது  சங்கடத்தில் ஆழ்த்துகிறதோ அதிலிருந்து விலகுவது எப்போதும் நல்லது. இதிலிருந்து  விலகவும் முடியாது. எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.
            இதை ஒரு விளையாட்டாகச் செய் என்று மனம் சொல்லும். அப்படிச் சொல்லும் மனமே இதை ஒரு மனஇறுக்கமாகவும் எடுத்துக் கொள்ளும். மனதை நம்ப முடியாத சூழ்நிலையில் தவிக்க வேண்டியதாக இருக்கும்.
            யாரை நம்புவது? எதுவும் நடந்தால்தான் நம்ப முடியும். எதுவும் நிகழாத வரை எதையும் நம்ப முடியாது.
            ஒரு வகையில் பார்த்தால் இந்தப் பட்டத்தால்  துளியும் பயனில்லை என்பதால் இதற்காக இவ்வளவு மனச் சங்கடங்கள் எல்லாம் பட வேண்டியதில்லை. ஆனால் பட வேண்டியிருக்கிறது.
            எதற்காகவும் உற்சாகம் இழப்பதோ, நம்பிக்கை இழப்பதோ தேவையில்லைதான். ஆனால் அப்படி நிகழ்வதைத்தான் அவர்களைப் போன்றவர்கள் திட்டமிட்டு நிகழ்த்துகிறார்கள்.
            இயன்றதை எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கலாம். அது என் குணம் மட்டுமன்று, உயிரின் குணம் மற்றும் உயிரின் இயல்பு. அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் இருக்கும் போதுதான் அவர்கள் எவ்வளவு மோசமாக மன உளைச்சலலைத் தயார் செய்து பரப்புகிறார்கள் என்பது புரிகிறது.
            அவர்கள் நம்மை மன உளைச்சல் செய்யாமல் விட வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். பணம் வாழ்க்கையில் இதற்குதான் பயன்படுகிறது.
            இதற்காக எதையும் மிகையாக செய்ய வேண்டியிருக்கிறது. வேண்டுமென்றே அசடு வழிய வேண்டியிருக்கிறது. போலியாகப் புகழ வேண்டியிருக்கிறது. பணத்தை கண் மண் தெரியாமல் வாரி இறைக்க வேண்டியிருக்கிறது.
            இவைகளைத் தாண்டி எவ்வளவு இயல்போ அவ்வளவு செய்தால் போதுமானது, அதற்கு மேல் தேவையில்லை என்றால் நீங்கள் ஆசையில்லாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும், அத்துடன் ஆர்வமில்லாமல் இருப்பதிலும். ஒரு மெய்யான ஆர்வத்தைக் கொலை செய்து நல்லடக்கம் செய்து அதன் ஆன்மா அமைதியடையப் பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகவேதான் பிறர் தம் ஆர்வத்தைக் கொலை செய்வதற்கு முன் தாமே தம் ஆர்வத்தைக் கொலை செய்து விடுபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
*****

நியாயவாதம்

நியாயவாதம்
உங்கள் கேள்விக்கு
நியாயமான பதில் வேண்டும் என்பீர்
நன்று நல்லது
நியாயவான் நானென்ற முடிவுக்கு
அவசரப்பட்டு வந்திருக்க வேண்டாம்
பின்வாசல் வழி கதவைத் தட்டுபவனிடம்
நிபந்தனை விதிக்காதீர்
மாட்டிக் கொண்டால்
எல்லார்க்கும்தான் அசிங்கம்
நியாயவாதிகள் முன்தான்
நியாயம் தலைகுனிந்து நிற்கிறது
கள்வனின் நியாயம் கள்வனுக்கு
காவலனின் நியாயம் காவலனுக்கு
காவலன் மாட்டிக் கொண்டதற்கு
கள்வனைக் குற்றம் சாட்டாதீர்
*****

25 Oct 2018

கவனிப்பவரின் மனம்


உங்களுக்கு உங்கள் வழியில் நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக மற்றவர்களின் வழியை மோசமாக விமர்ச்சிக்காதீர்கள்.
*****
இழப்பை ஏற்றுக் கொள்ளும் போது வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி உண்டாகத்தான் செய்கிறது. அதற்கு இழப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமே! அதை நினைத்தால் கவலை உண்டாகத்தான் செய்கிறது.
*****
ஒருவர் உங்களோடு ஒன்றைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதற்காக அவர் உங்களின் எதிரி ஆகி விட மாட்டார்.
*****
எல்லாரும் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றால் அதைக் கவனிப்பவரின் மனம் வேகமாகவும் சென்று கொண்டிருக்கலாம்.
*****
வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட்டில் விடுகிறார்கள். இந்திய விமானங்களை பிரான்சில் செய்து வாங்குகிறார்கள்.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...