30 Oct 2018

நன்மனிதராக நாளும் வாசிப்போம்!


நன்மனிதராக நாளும் வாசிப்போம்!
            எந்த ஒரு மிகப் பெரிய கட்டிடத்தையும் செங்கற்கள் வடிவமைப்பதைப் போல, யார் ஒருவரின் உயர்ந்த வாழ்வையும் புத்தகங்கள் வடிவமைக்கின்றன. சிறந்த தலைவர்கள், சிறந்த அறிஞர்கள் இதற்கு சான்று பகர்கிறார்கள்.
            இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறைக்கு வெளியே இருந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார். சிறைக்கு உள்ளே இருந்த நாட்களில் புத்தகக் காதலராக இருந்தார். சிறை வாழ்வையும் சிறப்பான வாழ்வாக புத்தகங்கள் மாற்றியது வரலாறு.
            தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர்களில் ஒருவராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாதுரை தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வாசித்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே தனது உயிர்காக்கும் அறுவைச் சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்கச் சொன்னார். அண்ணா அவர்களின் ஈர்ப்பான பேச்சிற்கும் எழுத்திற்கும் அவரது வாசிப்பே வேராகவும், விழுதாகவும் இருந்தது.
            தமிழக முதல்வர்களில் சமூக நீதிக்காகப் பெரிதும் போராடிய கலைஞர் கருணாநிதி அவர்கள் வாசிக்காத நாளோ, எழுதாத நாளோ இல்லாத வண்ணம் ஓய்வின்றி வாசிப்பை ஒரு வேள்வி போல செய்தவர். அவ்வாசிப்பே அரசியலையும், இலக்கியத்தையும் இணைத்து ஒரு புரவலராகவும், புலவராகவும் அவரை விளங்கச் செய்தது.
            உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற வழிகாட்டி கார்ல் மார்க்ஸ் ஜெர்மன் நாட்டுக்காரர். அவர் வாசிப்பதற்காகவே இங்கிலாந்து செல்லவும், இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் குடியேறவும், லண்டன் மாநகரில் நூலகத்திற்கு அருகில் வீடு அமைய வேண்டும் என்றும் விரும்பியவர். அவரது அயராத வாசிப்பின் மூலதனமே அவரது மூலதனம் எனும் ஒப்பற்ற புத்தகம் ஆகும்.
            உலகின் காவியப் பேரரசர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ஜூலியஸ் சீஸர், 'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவர் எவரோ, அவரே என் வழிகாட்டி' என்கிறார். வாசிப்பவர்களையே வழிகாட்டியாகக் கொள்ள அரசர்களும் விரும்புகின்றனர். அறிவுடைய ஒருவரை அரசனும் விரும்பும் எனும் நன்மொழியாகியப் பொன்மொழி இதையே பறைசாற்றுகிறது.
            சூரியன் மறையாத நாடு என்று சிறப்பிக்கப்பட்ட, உலகெங்கும் நாடு பிடிக்கும் ஆசையில் சர்வாதிகாரியாக நடந்து கொண்ட இங்கிலாந்து நாட்டினர் தங்கள் நாட்டை இழக்கவும் சம்மதிப்பதாகவும், ‍ஷேக்ஸ்பியரின் ஒரு இலக்கியத்தையும் சம்மதிக்க மாட்டோம் என்கின்றனர். ஒரு காலத்தில் சர்வாதிகார, ஏகாதிபத்திய நாடாக திகழ்ந்த நாடே எதற்காகவும் வாசிப்பை விட்டு கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது வியப்பைத் தருகிறது அல்லவா!
            இந்தியாவின் பல நகரங்களுக்கு வருகை தந்த யுவான்சுவாங் ஒரு சீனப் பயணியாகத்தான் அறியப்படுகிறார். ஆனால் அவரோ இந்தியாவின் அறிவுக் களஞ்சியங்களை விரும்பி வாசித்தவராக, இந்தியாவின் அறிவுக் களஞ்சியங்களைச் சீனாவிற்குக் கொண்டு சென்றவராக விளங்கியுள்ளார்.
            அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகச் சிறந்தவராகக் கருதப்படும் ஆபிரஹாம் லிங்கன், "நான் தெரிந்து கொள்ளாத பல விசயங்கள் புத்தகங்களில்தான் உள்ளன" என்று குறிப்பிடுவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலான அவரது வாசிப்பு ஆர்வத்தைக் காட்டுவதாக உள்ளது.
            இப்படி உலகின் சிறந்த தலைவர்கள், சிறந்த அறிஞர்கள், சிறந்த வழிகாட்டிகள் அனைவரும் வாசிப்பை சுவாசிப்பாகக் கொண்டவர்களாக விளங்கியிருக்கிறார்கள். அவர்களின் வழியில் நாமும் சிறந்த தலைமைப் பண்பைப் பெற, சிறந்த பேரறிவைப் பெற, சிறந்த வழிகாட்டித் தன்மையை அடைய புத்தங்களைப் புதிதுப் புதிதாக விரும்பி வாசிப்போம்! வாசிப்பை அறிவின் சுவாசிப்பாகக் கருதி நாளும் வாசிப்போம்!
            (25.10.2018 (வியாழன்) மாலை 3.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், திருநாட்டியத்தான்குடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஒன்பதாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா எனும் மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...