31 Oct 2018

புத்தகங்களால் வீட்டை அழகாக்குவோம்!


புத்தகங்களால் வீட்டை அழகாக்குவோம்!
            வாழ்வில் நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?
            வாழ்வில் நல்ல உறவினர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறீர்களா?
            வாழ்வில் நல்ல சுற்றத்தார்கள் இல்லையென்று கவலைபடுகிறீர்களா?
            நல்ல நண்பர்கள், நல்ல உறவினர்கள், நல்ல சுற்றத்தார்கள் இல்லை என்றாலும் ஒரு நல்ல புத்தகம் இருந்தால் போதும்.
            ஒரு நல்ல புத்தகம் மிகச் சிறந்த நண்பர்.
            ஒரு நல்ல புத்தகம் மிகச் சிறந்த உறவினர்.
            ஒரு நல்ல புத்தகம் மிகச் சிறந்த சுற்றம்.
            ஒரு நல்ல நண்பர் கூட ஒரு நாள் நம்மை விட்டுப் பிரியும் நிலை வரலாம்.
            ஒரு நல்ல உறவு கூட நம்மை ஒரு நாள் உதறி விட்டுப் போகும் சூழல் நேரலாம்.
            ஒரு நல்ல சுற்றம் கூட நம்மை ஒரு நாள் விலகிச் செல்லும் நிலை நிகழலாம்.
            ஒரு நல்ல புத்தகம் ஒரு போதும் நம்மை விட்டுப் பிரிவதில்லை.
            ஒரு நல்ல புத்தகம் ஒரு போதும் நம்மை உதறி விட்டுப் போகாது.
            ஒரு நல்ல புத்தகம் ஒரு போதும் நம்மை விட்டு விலகிச் செல்லாது.
            ஒரு நல்ல புத்தகம் நம் கையில் இருப்பது ஒரு நல்ல நண்பர் நம் அருகில் இருப்பதைப் போன்றது. ஒரு நல்ல புத்தகம் நம் வீட்டில் இருப்பது ஒரு நல்ல உறவினர் நம் வீட்டில் நம்மோடு இருப்பதைப் போன்றது. ஒரு நல்ல புத்தகம் நம்மால் வாசிக்கப்படுவது என்பது நல்ல சுற்றத்தினர் நம்மைச் சூழ்ந்திருப்பதைப் போன்றது.
            நல்ல புத்தகங்களை நாட புத்தகக் கண்காட்சி நல்ல வாய்ப்பாகும். புத்தகக் கண்காட்சிகள் ஒவ்வொன்றும் அறிவுலகின் வாயில்கள் ஆகும். புத்தகங்கள் ஒவ்வொன்றும் உலகைப் புரட்டிப் போடும் ஆயுதங்கள் ஆகும்.
            ஒரு புத்தகம் வாங்கிய பின் அதைப் படிக்க முடியாமல் போகிறதே என்று நாம் கவலைபடலாம். தேவையற்ற கவலை அது. எந்த ஒரு நல்ல புத்தகமும் வாசிக்கப்படாமல் போகாது. நாம் வாசிக்காவிட்டாலும் நம் வீட்டில் இருக்கும் நம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அப்பா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி என்று நம் உறவுகளாலோ, நம் நட்புகளாலோ, நம் சுற்றத்தாலோ ஒரு புத்தகம் என்பது நிச்சயம் வாசிக்கப்படும். அல்லது நம் தலைமுறைகளில் எவரோ ஒருவரால் வாசிக்கப்படும். அவ்வகையில் வாங்கியப் புத்தகங்கள் எதுவும் வாசிக்கப்படாமல் போகாது என்பது நிச்சயம்.
            நாம் மருந்து கடையில் ஒரு மருந்தை வாங்கும் போது எதைக் கவனிக்கிறோம்? அதன் காலாவதித் தேதியைக் கவனிக்கிறோம். காலாவதியாகவிட்ட ஒரு மருந்தை வாங்கினால் அதனால் எந்தப் பயனும் இல்லை.
            மளிகைக் கடையில் ஒரு கடைச்சரக்கை வாங்கும் போது அது எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதைக் கவனிக்கிறோம். காலம் கடந்த கடைச்சரக்கை வாங்கினால் அதனால் எந்தப் பயனும் இல்லை.
            வாங்கும் எந்தப் பொருளுக்கும் ஒரு காலாவதி தேதி இருக்கிறது. காலாவதித் தேதி இல்லாத பொருள் இந்த உலகில் இல்லை. ஆனால் உண்மையில் காலாவதி தேதி இல்லாத இந்த உலகின் ஒரே பொருள் புத்தகங்கள்தான்.
            காலம் கடந்தும் வாசிக்கலாம் புத்தகங்களை. எந்தப் புத்தகமும் காலாவதியாகி விடுவதில்லை.
            ஒரு திருக்குறள் நூலை வாங்கும் போது இந்நூல் 2050 இல் காலாவதியாகி விடும் என்று கூற முடியுமா? காலாவதியைக் காலாவதியாக்கும் ஒரு பொருள் புத்தகம். உலகின் காலாவதி தேதியில்லாத ஒரு பொருள் புத்தகம்.
            நம் ஒவ்வொருவர் வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை உள்ளது. அண்மை காலமாக ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை இருப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. கழிவறை இல்லாத வீட்டுக்கு பெண் கொடுக்காதீர்கள் என்ற முழக்கம் கூட வலுபெற்றுகிறது.
            ஒரு வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை போல இருக்க வேண்டிய இன்னொரு முக்கிய அறை வாசிப்பு அறை. வாசிப்பு அறை உள்ள ஒரு வீடே அழகான வீடு ஆகும்.
            வாசிப்பு அறை அமைக்கும் வகையில் வீட்டை அமைக்க முடியாவிட்டாலும் ஒரு சில அலமாரியையாவது நாம் வாசிக்கும் நூல்களுக்கு ஒதுக்கலாம் அல்லவா! அந்த சிறு அலமாரியில் பல நூல்களை வாங்கி வைக்க முடியாவிட்டாலும் அகராதி, திருக்குறள், பாரதியார் கவிதைகள் என ஒரு சில நூல்களையாவது வாங்கி வைக்கலாம் அல்லவா! இது எவராலும் சாத்தியம் ஆக்க முடியாத ஒன்று அல்லவே!
            ஒரு வீட்டில் மனிதர்கள் குடி புகும் போது அல்லாமல் ஒரு புத்தகம் குடி புகும் போதே அவ்வீடு அழகான வீடாக உருபெறுகிறது.
            ஓர் அழகான வீட்டை உருவாக்க அவ்வீட்டில் புத்தகத்தை இடம் பெறச் செய்வோம். வீட்டை அழகாக்கிய அப்புத்தகத்தை அவ்வீட்டிலிருந்து வாசிப்போம். இப்படிச் செய்தால் ஒவ்வொரு வீடும் அழகு பெறும். ஒவ்வொரு வீடும் இப்படி அழகு பெறும் போது ஒவ்வொரு சமூகமும் அழகு பெறும். ஒவ்வொரு சமூகமும் இப்படி அழகு பெறும் போது ஒவ்வொரு நாடும் அழகு பெறும். ஒவ்வொரு நாடும் இப்படி அழகு பெறும் போது இந்த பூவுலகே அழகு பெறும். ஆம்! பூவுலகின் அழகு புத்தகங்களிலும், அப்புத்தகங்களை வாசிக்கும் நம்மிடமும் உள்ளது.
            வாருங்கள் வாசிப்போம்! வாசிப்பால் உலகை அழகாக்குவோம்!
            (26.10.2018 (வெள்ளி) மாலை 3.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், உச்சிவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பத்தாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா எனும் மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...