ஆன்மா அமைதியடையப் பிரார்த்திக்கும்
கொலையாளிகள்
(முன்குறிப்பு
- அனைத்து விண்ணப்பதாரர்கள் சார்பாகவும்...)
நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் விண்ணப்பத்தைச்
சேர்க்கை செய்யாமல் இவ்வளவு அலைக்கழிக்கிறார்கள்? நான் இதற்காக ஐந்து முறை நீண்ட தூரம்
பயணித்து இருக்கிறேன். அங்கே சென்று விசாரித்திருக்கிறேன், கெஞ்சியிருக்கிறேன். அங்கே
இருந்தவர்கள் என்னை கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் பொறுத்திருக்கிறேன்.
அவர்கள் ஒரு வன்முறையாளராக மாற்ற முனைந்த போதும் மாறாமல் இருந்திருக்கிறேன். அதற்காகவாவது
எனக்கு அவர்கள் சேர்க்கையை அனுமதித்திருக்கக் கூடாதா? என்று நான் கேட்பது கூட மனம்
நொந்துக் கேட்பதுதான்.
அதனால் பல நேரங்களில் இயல்பாக இருக்க முடியாது.
மனஇறுக்கத்தாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வதைத் தவிர்க்க
முடியாது.
கோபம் கோபமாக வரும். கோபத்தை வெளிப்படுத்த
முடியவில்லையே என்ற எரிச்சல் ஏற்படும்.
இயல்பாக இருக்க முடியாத நிலையில் இருப்பது
இது முதல் முறையல்ல என்றாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது எரிச்சலாக இருக்கும்.
எது சங்கடத்தில் ஆழ்த்துகிறதோ அதிலிருந்து
விலகுவது எப்போதும் நல்லது. இதிலிருந்து விலகவும்
முடியாது. எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.
இதை ஒரு விளையாட்டாகச் செய் என்று மனம்
சொல்லும். அப்படிச் சொல்லும் மனமே இதை ஒரு மனஇறுக்கமாகவும் எடுத்துக் கொள்ளும்.
மனதை நம்ப முடியாத சூழ்நிலையில் தவிக்க வேண்டியதாக இருக்கும்.
யாரை நம்புவது? எதுவும் நடந்தால்தான் நம்ப
முடியும். எதுவும் நிகழாத வரை எதையும் நம்ப முடியாது.
ஒரு வகையில் பார்த்தால் இந்தப் பட்டத்தால் துளியும் பயனில்லை என்பதால் இதற்காக இவ்வளவு மனச்
சங்கடங்கள் எல்லாம் பட வேண்டியதில்லை. ஆனால் பட வேண்டியிருக்கிறது.
எதற்காகவும் உற்சாகம் இழப்பதோ, நம்பிக்கை
இழப்பதோ தேவையில்லைதான். ஆனால் அப்படி நிகழ்வதைத்தான் அவர்களைப் போன்றவர்கள் திட்டமிட்டு
நிகழ்த்துகிறார்கள்.
இயன்றதை எப்போதும் செய்து கொண்டுதான்
இருக்கலாம். அது என் குணம் மட்டுமன்று, உயிரின் குணம் மற்றும் உயிரின் இயல்பு. அது
எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் இருக்கும் போதுதான் அவர்கள் எவ்வளவு மோசமாக மன
உளைச்சலலைத் தயார் செய்து பரப்புகிறார்கள் என்பது புரிகிறது.
அவர்கள் நம்மை மன உளைச்சல் செய்யாமல் விட
வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். பணம் வாழ்க்கையில் இதற்குதான் பயன்படுகிறது.
இதற்காக எதையும் மிகையாக செய்ய வேண்டியிருக்கிறது.
வேண்டுமென்றே அசடு வழிய வேண்டியிருக்கிறது. போலியாகப் புகழ வேண்டியிருக்கிறது. பணத்தை
கண் மண் தெரியாமல் வாரி இறைக்க வேண்டியிருக்கிறது.
இவைகளைத் தாண்டி எவ்வளவு இயல்போ அவ்வளவு
செய்தால் போதுமானது, அதற்கு மேல் தேவையில்லை என்றால் நீங்கள் ஆசையில்லாமல் இருப்பதில்
கவனமாக இருக்க வேண்டும், அத்துடன் ஆர்வமில்லாமல் இருப்பதிலும். ஒரு மெய்யான ஆர்வத்தைக்
கொலை செய்து நல்லடக்கம் செய்து அதன் ஆன்மா அமைதியடையப் பிரார்த்திப்பவர்கள் நிறைய
பேர் இருக்கிறார்கள். ஆகவேதான் பிறர் தம் ஆர்வத்தைக் கொலை செய்வதற்கு முன் தாமே தம்
ஆர்வத்தைக் கொலை செய்து விடுபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment