31 Jul 2018

மணிரத்னம் படங்கள்


மணிரத்னம் படங்கள் சில பார்த்தபின் நண்பன் கேட்டான். என்ன சொல்வது? டயலாக் எழுத ரொம்பவே அலுப்புப்படுகிறார்.
*****
ஷங்கர் படம் இனி பார்க்கக் கூடாது. எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது. துஷ்ட பயங்கரங்கள்.
*****
நீங்கள் அருணாச்சலம் படம் பார்க்க வேண்டும். ருத்திராட்சக் கொட்டை உருண்டு செல்வது அருமையாக இருக்கும். அவ்வளவுதான் பார்க்கலாம். இப்படி உருண்டு செல்லும் ஒன்றை வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டும்.
*****
ரெண்டு நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன. 1. காலா படத்தில் ரஜினி நடித்தது, 2. தூத்துகுடிச் சம்பவத்துக்கு ரஜினி கருத்து சொன்னது. ரஞ்சித் எங்கேயோ கோட்டை விட்டிருக்கிறார். ரசிகள் கபுக்கென்று பிடித்துக் கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாதுதான்.
*****
பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அறிக்கையாவது விடுகிறார்கள். சினிமா டிக்கெட் விலையைப் பற்றி கப்சிப். தமிழ் சினிமா ரொம்ப காஸ்ட்லி என்று சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள்?
*****

மண் தின்ன முடியாத தாய்!

மண் தின்ன முடியாத தாய்!
யாம் ஏன்
உன்னில் விதை விதைத்து
பயிர் வளர்த்து அறுவடை செய்து
கலத்தில் இட்டு எரியூட்டி
சமைத்துத் தின்ன வேண்டும் என்று
உன்னையேத் தின்றவள் எம் தாய் அல்லவா
எம் தாய் மண்ணே தலை வணக்கம்!
நீ ஆறு மணலற்றுப் போக
கல்லாகி மண்ணாகும் மலையறுந்துப் போக
கடல் கழிமுக மணலற்றுப் போக
வருங்காலத்தில் எதைத் தின்பாள் எம் தாய்?
கல் தோன்றி மண் தோன்றா காலத்து
முன் தோன்றிய மூத்தக் குடியை
நிரூபிப்பததாய் மண்ணற்ற தேசத்தில்
நின்று கொண்டிருக்கும் எம் தாய்க்கு
எட்டு பில்லியன் செலவில்
வாங்கி வந்திருக்கும்
செவ்வாய் கிரக மண்ணைத்
தின்னக் கொடுங்கள் பசியாறட்டும்!
அதன் பின் மண் வாரித் தூற்றக் கூட
மண்ணில்லாத மண்ணற்ற தேசத்தில்
மண்ணோடு மண்ணாகிப் போக
முடியாத விரக்தியில்
பெருங்குரலெடுத்து அழுவாள்
அவளை விட்டு விடுங்கள்!
*****

30 Jul 2018

ஹீரோயின்கள்


இந்த ஹீரோயின்கள் பாவம் ஹீரோவைத்தான் காதலிக்க வேண்டும்.
*****
அவர் பிள்ளைகளுக்குக் கல்யாணமாகி பேரன் பேத்தியே பிறந்தாயிற்று. ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஆம் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
*****
ஹீரோவுக்கு வயசு கிடையாது என்றால் கோபப்படுவீர்கள்.
*****
வயசு தெரிந்து விடுகிறது என்ற பிரச்சனையால்தான் ஹீரோக்களுக்கு வடநாட்டு ஹீரோயின்களைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.
*****
இராமராஜன் படத்தின் ஹீரோயின்களைப் பார்த்திருக்கிறீர்களா? சிம்பு படத்தின் ஹீரோயின்களைப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் சினிமா பெரிதாக வளர்ந்ததாகத் தெரியவில்லை.
*****

கல்லை வீசி விடாதீர்கள்!


கல்லை வீசி விடாதீர்கள்!
            சொற்களை அதிகார பலத்துடன் சொல்லும் போது அதற்கு உயிர் இருக்கிறது. கெஞ்சினால், காலில் விழுந்து கதறினால், நியாயமாகச் செய்யுங்கள் என்று வேண்டினால் சொற்கள் செத்து விடுகின்றன.
            சான்றுக்கு ஒன்று சொல்கின்றேனே,
            மயக்கம் வரும் நிலையில் மயங்கிக் கிடக்க ஒரு பொது இடத்தில் அனுமதி மறுக்கிறார்கள். இங்கே இப்படியெல்லாம் படுக்கக் கூடாது என்கிறார்கள். சொகுசாகப் படுப்பதற்காக இடம் கேட்கிறோம். மயங்கி எங்கேயாவது விழுந்து கிடக்கலாம். அப்போது யோசிக்கிறார்கள். மயக்கத்தைப் போக்கிக் கொள்ள கொஞ்ச நேரம் இடம்  என்றால் கஷ்டமாகி விடுகிறது.
            கை, கால் வலி என்று அமர்வதிலும் கஷ்டம் இருக்கிறது.
            மண்டையில் அடிபட்டு பெருங்கட்டு கட்டியிருந்த ஒரு நபர்தான் இதற்கு வழிகாட்டினார். அவர் பாட்டுக்கு வலி தாங்க முடியாமல் நொந்துப் போய் படுத்துக் கிடந்தவரை சீருடைப் பணியாளர்கள் எழுப்புகிறார்கள்.
            எழுந்தவர் என்ன என்று கேட்கிறார்.
            இங்கே படுக்கக் கூடாது என்கிறார்கள்.
            அதற்கு என்ன செய்வது என்பது போல பார்க்கிறார் அவர்.
            எழுந்து எங்கேயாவது போ என்று விரட்டுகிறார்கள்.
            முடியாது என்பது போல திரும்பப் படுகிறார்.
            கம்பால் அவரை லேசாகத் தட்டி மிரட்டுகிறார்கள்.
            மண்டை வலி தாங்க முடியாமல் செமையான மண்டைக் கொதிப்பில இருக்கேன். மரியாதையா அந்தாண்டப் போயிடுங்க. இல்லேன்னா பக்கத்துல கிடக்குற கல்லை எடுத்து அடிச்சிப்புடுவேன். அப்புறம் என்னைய மாதிரியே கட்டு கட்டிக் கொண்டு வந்து இங்க படுக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
            சீருடைப் பணியாளர்கள் போன இடம் தெரியவில்லை.
            அவர் நிம்மதியாகப் படுத்து உறங்குகிறார்.
            உங்களுக்கான அமைதியை ஒருவர் பறித்தால், அவர் எங்கே பயப்படுகிறாரோ அங்கே தட்ட வேண்டும் போலிருக்கிறது. உங்களுக்குப் பயமுறுத்தத் தெரியாவிட்டால் நீங்கள் நிம்மதியாகப் படுத்து உறங்குவது கஷ்டம். வேறு வழி இல்லையா என்றால் நீங்கள் பயப்படாமல் இருந்தால் எதையும் எப்படியும் எதிர்கொள்வீர்கள். அதுதான் சுலபமான வழி. ஏனோ அதுதான் கஷ்டமான வழியாகத் தெரிகிறது பலருக்கும். விசித்திரம்தான். நீங்கள் பயப்படாமல் இருந்தால் கல்லை எடுத்து உங்களுக்கு மிரட்டத் தெரியும். பயந்தால் கல்லை எவர் மேலாவது வீசி விடுவீர்கள். ஆகவே பயப்படாதீர்கள். கல்லை எடுத்து வீசுவது போல மிரட்டினாலே போதும். பயந்து ஓடி விடுவார்கள். இந்த உலகமும் விசித்திரம்தான். நீங்கள் மிரட்டினால் உங்களுக்காக எதையும் செய்து தரும். நல்ல உலகம்.
*****

29 Jul 2018

சத் பொத் டெத்.


கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா? ஓடிப் போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா? என்னைக் கேட்டுக் கொண்டா எல்லாம் செய்கிறாய்?
*****
சீயான் விக்ரமின் கந்தசாமி பார்த்தீர்களா? தமிழில் இப்படியெல்லாமா படம் எடுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பத்து எண்ணுறதுக்குள்ள, ஸ்கெட்ச் பார்த்தேன். திகிலாகத்தான் இருக்கிறது.
*****
மியூட் செய்து தமிழ்ப் படம் பார்க்க தனி தைரியம் வேண்டும்.
*****
தமிழ்ப் பட ஹீரோவைச் சாகடிக்க வில்லன் எதற்கு? இசையைப் பிடுங்கி விட்டால்... ஆள் சத் பொத் டெத்.
*****
தமிழ்ப் பட ஹீரோ ஒரே அடியில் எப்படியோ பத்து பேரை பறக்க விடுகிறார். பறக்கும் பத்து பேருக்கும் சிறகுகள் இருக்க வேண்டும். அடுத்த முறை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
*****

கண்ணாமூச்சி விளையாட்டு


கண்ணாமூச்சி விளையாட்டு
            வீடு புகுந்து விசாரணைக்கு என்று அழைக்கிறார்கள். சரி என்று சென்றால் இந்தக் காவல் நிலையம் இல்லை என்று நகரம் ஒன்றிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அழைத்துச் சென்று அமர வைத்து விட்டு கைது செய்து விட்டோம் என்று யார் யாருக்கோ செல்பேசியில் அழைத்துச் சொல்லி மகிழ்கிறார்கள்.
            அப்போதுதான் நிலைமை புரிகிறது. எப்படி வேண்டுமானாலும் ‍பொய் சொல்லி எங்கே வேண்டுமானாலும் அழைத்துச் செல்வார்கள் என்பது. விசாரணை செய்யுங்கள் என்றால் அவரவர்கள் அவரவர் வேலையைப் பார்ப்பது போல கண்டுகொள்ளாமல் மும்முரம் காட்டுகிறார்கள். தாய்குலத்தைச் சார்ந்த ஒருவரை அனுப்பி முகத்திலும், முதுகிலும் போடு போடு என்று போடுகிறார்கள். அதுதான் விசாரணையாம்.
            அடி தாங்க முடியாமல் மயக்கமடித்து விழுந்ததும் பரபரப்பாகிறார்கள். அவரவரும் மும்முரமாக வேலை பார்ப்பது போல நடித்துக் கொண்டிருந்த வேலையைப் போட்டு விட்டு ஓடி வருகிறார்கள்.
            உடனே அப்புறபடுத்து என்று அவசரப்படுத்துகிறார்கள். ஆட்டோ ஒன்றை வரச் செய்து உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிக் கொள் என்கிறார்கள். முடியாது என்றால் இங்கேயே வைத்து கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். வேறுவழி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே.
            ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினால் அட்மிஷன் போடவே மறுக்கிறார்கள். கோபம் வந்து வெறித்தனமாகச் சத்தம் போட்டு பிரச்சனை செய்த பிறகு ஆறு மணிக்கு வந்தவர்களை எட்டே முக்கால் மணிக்கு அட்மிஷன் போடுகிறார்கள். அட்மிஷன் பிரச்சனைகள்!
            ஊடகத்துறை நண்பர்களை அழைத்தால் மரணம் நிகழ்ந்தால்தான் செய்தியாகும் என்கிறார்கள். இதற்காக எல்லாம் மரணிக்க முடியுமா? செத்து செத்து விளையாடத்தான் இயலுமா?
            இவ்வளவும் கூடப் பிறந்த தங்கைக்குத்தான் நடக்கிறது. ரத்தம் கொதிக்க வேண்டுமே. கொதிக்க மாட்டேன்கிறது. என்ன ரத்தமோ?
            எல்லாம் நிகழ்ந்த பிறகு சமாதானம் சொல்ல வேண்டுமே! பொறுமையாக இரு. வேறு என்ன வழி? இல்லாவிட்டால் போட்டுத் தள்ளி விடுவார்கள்.
            நாம் நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் சிந்தனையே இல்லாமல் போகிறது. எவ்வளவு நேரம் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். சிந்தித்து சிந்தித்து களைத்துப் போகிறது. முடிவில் சிந்தனையே இல்லாமல் போகிறது. சூன்ய நிலை. யோசித்துப் பார்த்தால் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் இப்படித்தான் ஞானம் அடைந்தேன்.
            உங்கள் தங்கையை ஒருவர் உங்கள் தங்கையிடமே பாலியல் தேவைக்காக நேரடியாக அழைத்தால், அதுவும் வழக்கு மன்றத்துக்கு முன்பே அழைத்தால், அழைப்பவர் ஒரு வழக்கறிஞர் என்றால் பேசாமல் வந்து விடுவது நல்லது. இல்லையென்றால் இப்படித்தான் அட்டகாசம் பண்ணுகிறார்கள்.
            இந்த நாட்டில் இது ஓர் அற்புதம். உங்கள் தங்கையை விசாரணைக்கு என்று அழைத்து அவளை இழுத்து, அடித்து, பிடித்துத் தள்ளி அவளது சேலையில் மாதவிலக்கு ரத்தத்தைப் பார்க்க அண்ணனாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். திரெளபதை என்று பெண்ணுக்கு அப்படி பொது மன்றத்தில் நடந்ததாக படிப்பதை, நேரில் பார்ப்பது நிஜமான நேரடிக் கற்றல் அனுபவம்தான். அதைப் பெறும் போதுதானே கற்றல் நிறைவு பெறுகிறது.
            இத்தனைக்கும் ஒரு வன்கொடுமை வழக்கைத் தொடுத்து அதை எதிர்கொண்டிருக்கிறாள் அவள். அதன்பிறகுதான் வன்கொடுமைகள் அதிகம்.            வன்கொடுமைகள் ஆதாரத்தோடு நிகழ வேண்டும் என்கிறார்கள். அதை நிகழ்த்துபவர்கள் எங்கே இதையெல்லாம் சொன்னால் கேட்கிறார்கள்? அப்போதுதான் அதை நிரூபிக்க முடியும் என்கிறார்கள். அதை நிரூபிக்கவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விடும் என்கிறார்கள். அதுவே ஒரு வன்கொடுமைதான் என்றாலும் வெளியில் சொல்ல முடியுமா? இதற்குதான் என் தங்கைக்கு வன்கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை பகர்கிறேன். தாங்க முடியாமல் அழுது விடுகிறாள். அடுத்த முறை அழும் போது அவள் வாயில் துணியை வைத்துப் பொத்த வேண்டும்.
            அப்புறம் கோர்டுக்குப் போவதும், கோர்ட்டிலிருந்து கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிப்பதும் எப்படி இருக்கிறது தெரியுமா? எப்படி இருக்கிறது, கண்ணாமூச்சி விளையாடுவதைப் போல இருக்கிறது. அழிந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டான கண்ணாமூச்சி விளையாட்டை இதன் மூலம் காப்பாற்ற முடிகிறது என்ற நல்ல விசயமும் இதில் அடங்கியிருக்கிறது.
            பெண் குழந்தை பிறந்தால் கண்ணாமூச்சி விளையாட்டை உடன் கற்றுக் கொடுத்து விட வேண்டும்.
*****

28 Jul 2018

தமிழ் சங்கடங்கள்


ஐயா என்றால் வயதானவர்களை அழைப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள் ஐயா. தமிழ் சங்கடங்கள்.
*****
ஒரு வார்த்தையை விவரித்துதான் பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கிறார்கள். காசு இருப்பவர்கள் வாங்கி வாங்கிப் படிக்கலாம்.
*****
சுத்தத் தமிழில் பேசுவதாகச் சொல்கிறார்கள். அது தூய தமிழ்.
*****
ஆன பின்தான் ஆகியிருக்க வேண்டாம் என்பது புரியும். எது? அது இது உது.
*****
டப்ஸ்மாஸ் போட வேண்டுமாம். சொந்தக் குரலில் பாடியே டெரர் எபெக்ட் கொடுக்குற ஆளுடா மச்சான் நான்.
*****
கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும். கூரை பிய்ந்துதான் இருக்கிறது. தாராளமாகக் கொடுக்கலாம்.
*****
உங்களுடையதை நிறையப் படித்திருக்கிறேன் என்றார். நானும்தான் என்றேன். தெறித்து ஓடி விட்டார்.
*****

விபரீதத்தின் பின்னணி


விபரீதத்தின் பின்னணி
            பொறுமையாக இருக்க முடியாமை நமக்கானப் பிரச்சனை. பொறுமையாக இருக்க இயலாமை மாபெரும் பிரச்சனை.
            பொறுமையாக இருக்க நினைத்தால் அவ்வாறு இருக்க இயலாமைதான் மனதின் பிரச்சனை. ஆனால் பொறுமையாக இருப்பதன் மூலம் அருமையான பல தீர்வுகளை எட்ட முடியும். அதை ஒருமுறை அனுபவித்துப் பார்த்தால்தான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
            பொறுமையைப் பற்றி பல ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கலாம். எப்படி பொறுமையாக இருப்பது என்பதற்கு ஆயிரம் வழிகள் சொல்லலாம். ஆனால் நீங்கள்தான் பொறுமையாக இருக்க வேண்டும்.
            அனுபவங்களின் முடிவில் நீங்கள் அந்த முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும் என்றாலும் ஆரம்பித்திலே அந்த முடிவைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நிறைய லாபங்கள் உங்களுக்கு இருக்கிறது.
            பொறுமையான மனம் பிணக்குகளை அனுமதிப்பதில்லை.           பொறுமையோடு இருக்கும் போதுதான் நான் எதையுமே செய்ய வேண்டியதில்லை என்பதை உணர முடியும். பொறுமையற்ற மனம்தான் எதையாவது செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்துகிறது.
            பொறுமையோடு காத்திருக்கும் மனம் எந்த விதச் செயல்பாடும் இல்லாமல் விரயமற்ற இருக்கிறது. விரயமாகும் மனம் விபரீதத்தின் குறியீடு.
            உரையாடல்களின் பொறுமை மிகவும் முக்கியம்.
            தொடர்பு கொள்வதில் எப்போதும் ஓர் இடைவெளி ஏற்படுகிறது. அந்த இடைவெளி பல தவறானப் புரிதல்களை உருவாக்கி விடுகிறது. அந்த இடைவெளிகள் நிரம்பும் வரை உரையாடாமல் காத்திருக்க வேண்டும் அல்லது அந்த இடைவெளிகளைப் போதுமானப் புரிதல்களைக் கொண்டு நிரப்பிய பிற்பாடு உரையாட வேண்டும். அதுதான் உரையாடலின் பொறுமை என்பது.
            யார் யார் எப்படியோ அவர்களுக்குத் தகுந்தபடி உரையாடுவது ஒரு கலை. அப்படி உரையாடினால் மட்டுமே புரிதலான ஓர் உரையாடலை நிகழ்த்த முடியும். இல்லையென்றால் நாம் உரையாடியதே சரி என்று நாமும், அவர் உரையாடியதே சரி என்று அவரும் நினைத்துக் கொண்டு, இருவருக்கும் இடையே இடைவெளி இன்னும் பெரிதாவது உறுதி.
            எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே காரியத்தில் இறங்க வேண்டும். இல்லையென்றால் இறங்குவது போன்ற பாவ்லாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இது காரியவாத பொறுமை.
            மனிதர்களைப் பொருத்த வரையில் அவரவர்களுடைய புரிதல் நிலை வேறு. நாம் அவர்களுக்குப் புரிவதாக நினைத்து உரையாடும் நிலை வேறு. இரண்டுமே எந்தப் புள்ளியிலுமே சந்திக்கவில்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. அவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள் என்றே நான் நினைத்துக் கொள்கிறோம். அவர்களால் அவர்களுடைய சுயநலத்தைத் தவிர வேறு எதையும் உணர முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார். அவர்களிடம் போய் பொதுநலமாக இருங்கள், பொதுநலத்துக்காக எதையாவது செய்யுங்கள் என்று சொன்னால் அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நாம் இப்படித்தான் பொறுமையற்ற நிலைமைகளை உருவாக்குகிறோம்.
            வெள்ளம் வந்த பின்தான் அதை உணர்ந்து கொள்ளும் அறிவுடைய ஒருவரிடம் போய் வெள்ளம் வரும் முன்னே அணை போடுங்கள் என்று உரையாடுவது விவேகமற்றச் செயல். அதைத்தான் நாம் இவ்வளவு நாள்களாக செய்து கொண்டு இருக்கிறோம்.
            உறவுகளைப் பொருத்த வரையிலும் இதே பிரச்சனைதான். அவர்களின் புரிதல், அவர்களின் உலகம் என்பது வேறு. அவர்களிடம் போய் நம்முடைய புரிதல், நம்முடைய உலகத்தைத் திணித்துக் கொண்டு இருக்கக் கூடாது.
            ஆகவே இவர்களிடம் எல்லாம் ஒரு செயலைச் செய்கிறோம் என்று முனைப்போடு இறங்கி முட்டாள் பட்டம் கட்டிக் கொள்ளக் கூடாது. அவர்களால் அதைத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு அப்படி நடந்தால்தான் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களாகத்தான் உணர வேண்டும். நாம் உணர வைத்தால் தேவையில்லாத மனவருத்தத்தில் சென்று முடியக் கூடியது அது.
            இதற்கெல்லாம் பொறுமை நல்ல தீர்வு. நீங்கள் பொறுமையாக அதிகமாகப் புரிந்து கொள்ளப்படுவீர்கள். நீங்கள் எதை செயல் மூலம் சாதிக்க நினைத்தீர்களோ, அந்தச் செயலே இல்லாமல் பொறுமையின் மூலம் சாதிப்பீர்கள். இது நம்ப முடியாத விசயம்தான். இந்த விசயத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் பொறுமையாக இருந்து பார்த்தால்தான் முடியும்.
            இந்த பொறுமை அப்படி என்னதான் செய்கிறது?
            கோபத்தைத் தணிக்கிறது. கோபம் தணிந்தால் பல அவசர முடிவுகள் தள்ளிப் போகின்றன. அவசர முடிவுகள் தள்ளிப் போனால் பல விபரீதங்கள் தள்ளிப் போய் விடுகின்றன.
            நிலையான ஒரு முடிவு பொறுமையில்தான் பிறக்கிறது. நிலையற்ற முடிவுகள் பொறுமையின்மையின் குழந்தைகள்.
*****

27 Jul 2018

கண்டோம்னா என்னப்பா?


டம் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தாதீர்கள். தர்ம அடிகள் காத்திருக்கக் கூடும்.
*****
லுப்பாக இருந்தால் ஆபீஸ் கிளம்புவதும், சுறுசுறுப்பாக இருந்தால் லீவ் போட்டு விடுவதும் சகஜம்தான்!
*****
சிக்னலில் காத்திருக்கிறேன் அன்பே வா!
*****
நாய் வளர்த்தால் நாயோடு நடைபயிற்சி சென்றாக வேண்டும். பூனை வளர்ப்பது பரவாயில்லை. தூங்கிக் கொண்டே இருக்கிறது.
*****
கண்டோம்னா என்னப்பா? எட்டு ரூவா பலூன்.
*****

எங்கேயோ ஒளிந்திருக்கும் தவறுகள்


எங்கேயோ ஒளிந்திருக்கும் தவறுகள்
            எஸ்.கே. சரியில்லை என்பது உண்மைதான். அதற்காக அவரைத் திருத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டியதில்லை. ஒருவரைத் திருத்த வேண்டும் என்று நினைக்கும் மனதைத் திருத்திக் கொண்டால் போதும்.
            உலகை மாற்றுவது கடினமாகவும், தம் மனதை மாற்றிக் கொள்வது சுலபமாகவும் இருக்கிறது.
            நாம் பொதுவாக பொதுக்கூட்டத்தில் தலைமையை எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசி விடலாமா என நினைக்கலாம். அது ஒரு வகை முட்டாள்தனமே. அதன் மூலம் நம்மை மதிக்கும், நம் பேச்சைக் கேட்கும் சூழ்நிலை ஏற்படும் என நினைக்கிறோம். அப்படி ஒரு நிலை ஏற்படாது.
            நம்மை யார் மதித்து என்னவாகப் போகிறது? நம் பேச்சை யார் கேட்டு என்னவாகப் போகிறது? நமக்குரிய காரியங்கள் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மரியாதை தானாக வரப் போகிறது. நம் பேச்சைக் கேட்க ஆயிரம் பேர் நிற்கப் போகிறார்கள்.
            நமக்குரிய காரியங்கள் ஆக வேண்டும் என்றால் மெளனமாக இருக்க வேண்டும். அநாவசியமாகப் பேசாமல் இருக்க வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமலே இருந்தாலே நமக்குரிய காரியங்கள் ஆகி விடும்.
            மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு அகந்தை என்ற உணர்வை வளர்க்குமே தவிர, காரியத்தை சமத்தாக ஆற்ற வேண்டும் என்ற உணர்வைப் பின்னுக்குத் தள்ளி விடும்.
            ஆகையால்தான் இவ்வாறு சொல்லப்படுகிறது, காரியங்கள்தான் முக்கியம். காரியங்கள் நிறைய நடைபெறும் போது நம்மைக் குறித்த பிம்பங்கள் பெரிதாகும். வெற்றுப் பேச்சு வெறும் சவடால் என்பது சில நாட்களிலே புரிந்து பட்டு விடும்.
            இந்த விசயத்தில் நாம் மிக எளிமையாக நடந்து கொண்டிருக்க வேண்டும். நாம் அநாவசியமாக எதையும் பெரிதுபடுத்தி விடக் கூடாது. வழக்கமாக நாம் அநாவசியங்களைக் கண்டு கொள்ளக் கூடாது. இன்றைய நிலைமையின் கீழ் நாம் அநாவசியமாக பல விசயங்களைக் கண்டு கொள்கிறோம். அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பது வேறு. தேவையில்லாத மன உளைச்சல்களையும் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம் என்பது மற்றொன்று.
            உலகைப் புரிந்து கொள்வதற்கு நம்மைச் சுற்றியுள்ள எஸ்.கே.க்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எஸ்.கே.க்களைப் புரிந்து கொள்ளலாமே தவிர எஸ்.கே.க்களுக்குப் பிரதிவினை ஆற்றி விடக் கூடாது என்பது இதிலிருந்து அறிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம்.
*****

26 Jul 2018

பத்து பைசா


செத்துப் போனவங்க கனவில் வரக் கூடாதாமே! கனவில் வராம நேர்லயா வருவாங்க?
*****
ஒற்றுமையாக இல்லாத ஓர் இனத்துக்கு ஒரு தலைவர் தேவைப்படுவார். ஒற்றுமையாக உள்ள ஓர் இனத்துக்கு ஒவ்வொருவரும் தலைவரே.
*****
படிச்சு டாக்டராகப் போறேன் அங்கிள்! படிச்சு முடிச்சு வியாதிக்காரங்களையே பார்த்துக் கொண்டு கிட போ!
*****
படிச்சு முடிச்சு என்னவாகப் போறே? படிச்சு முடிக்காமப் போனா என்னவாகப் போறேனோ அதான்!
*****
பத்து பைசா விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன். பையன் பாடிக் கொண்டு இருக்கிறான். அவனுக்குப் பத்து பைசா எங்கிருந்து கிடைத்தது?
*****

அரசியல் வற்றிப் போய் விடக் கூடாது!

அரசியல் வற்றிப் போய் விடக் கூடாது!
பெருங்காட்டில் தன் பாதை வழித்
தேடிச் செல்லும் யானைப் போல்
ஆறும் குளமும் ஏரியும்
தன்னிடம் தேடி ஓடினால்
வெள்ளம் என்று பயந்தோடக் கூடாது
அவசர அவசரமாய் உண்டு
அவசர அவசரமாய் உடுத்தி
அவசர அவசரமாய் வாகனத்தில் விரைந்து
அவசர அவசரமென இருக்கும் நாம்
அவசர அவசரமாய்ப் பெய்து விடும்
மழையை குற்றம் சுமத்தக் கூடாது
சாலைக் குறியீடுகள் மற்றும் சிக்னல் குறித்த
அறிவில்லாமல் சாலைவழி விரைந்தோடும்
மழைநீரைத் தடுத்து நிறுத்தி
போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி
அபராதம் விதித்து விடக் கூடாது
தயவுசெய்து எல்லாம் அபத்தமாக இருக்கிறதென்று
தலையில் அடித்துக் கொள்ளவும் கூடாது
வடிகால்களில் பெருச்சாளிகள் குடியிருக்கின்றன
வடிகால்களின் வழி நெடுகிலும்
பேய்கள் கட்டிடங்களாக கட்டி நிமிர்த்தியுள்ளன
தேங்கும் நீரில் பிணங்கள் மிதப்பதற்காக
நாம் கோபப்பட்டு விடக் கூடாது
நம் கோபத்தில் எவரேனும் ரோஷப்பட்டு
காசு சேர்ப்பதையும், கொள்ளையடிப்பதையும்
நிறுத்தி விட்டால் அரசியல் வற்றிப் போய் விடுமன்றோ!
*****

25 Jul 2018

கத்தி ஏந்தி நிற்கும் மனதாள்பவன்


கத்தி ஏந்தி நிற்கும் மனதாள்பவன்
தன்னைப் புகழ் பாடுவதை
விரும்பும் ஒருவன்
சின்ன ஐயத்தை அயோக்கியத்தனம் என்கிறான்
உன்னைப் போல் நூறு பேரைப் பார்த்திருப்பேன்
என்று வழியும் அவன் வார்த்தையில்
எதிரில் நிற்பவனைக் கொன்று போடும்
வன்மம் நிறைகிறது
சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு
தொடர வாய்ப்பு கொடுப்பதில்லை
மனதைக் கூர் தீட்டி
கத்தியாய் கழுத்தின் முன் நீட்டும் அவன்
இம்முறையும் தோல்வியோடுதான்
திரும்ப நேரிடுகிறது
பொறுமையாக அவனை
எதிர்கொண்ட வெற்றியோடு.
*****
*****
*****
*****
*****

மிடில் ஸ்கூலுக்கும், ஹை ஸ்கூலுக்கும் என்ன வித்தியாசம்? தரையில் உட்கார வைத்தால் மிடில் ஸ்கூல், பெஞ்சில் உட்கார வைத்தால் ஹை ஸ்கூல்.
*****
பதிலைத் தெரிந்து வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள்.
*****
ஒரு கூறைத்தான் பார்க்கிறீர்கள். வேறு கூறும் இருக்கிறது. குந்தாங்கூறு.
*****
உணர்வுக்கா? அறிவுக்கா? எதற்கு முதலிடம் கொடுப்பது என்றான் நண்பன். இரண்டுக்கும் நீட் தேர்வு வை. எது பர்ஸ்ட் ரேங்க் வருகிறது என பார்த்து விடுவோம்.
*****
டிரம்பும், கிம்மும் பேசுகிறார்கள். என்ன செய்வது? பக்கத்துவீட்டுக்காரன் பேச மாட்டேன்கிறான்.
*****
சொன்னதைக் கேட்கலேன்னா அடிச்சே கொன்னுபுடுவேன். பேசிக் கொண்டிருப்பது இரண்டு குழந்தைகள். எல்.கே.ஜி.யோ, யு.கே.ஜி.யோ படிக்கிறார்களாம். அவர்கள் பி.இ., எம்.பி.பி.எஸ். படிக்கும் போது எப்படிப் பேசிக் கொள்வார்களோ?!
*****

24 Jul 2018

அணையை மூடியதற்கும் நன்றி


உங்கள் தன்னம்பிக்கை என்பது எதிர்கேள்விக்கு வாய்ப்பில்லாத பதில்களைச் சொல்லும்.
*****
சிறுமி சிலையாய் மாறுவதற்காகக் காத்திருந்த மக்கள் குறித்த செய்தி படித்தீர்களா? (சிரிக்கிறீர்களா?) சிறுமியையும் கடத்துகிறார்கள், சிலையையும் கடத்துகிறார்கள் மக்களே!
*****
டென்த் பாஸாக வேண்டும் என்றால் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். காப்பி அடிக்கத் தெரிந்தால் பாஸாக முடியாதா?
*****
கர்நாடகம் தண்ணீர் திறப்பதற்காக எதற்கு நன்றி சொல்கிறார்கள்? அணை அவர்களிடம் இருப்பதால் அவர்கள்தானே தண்ணீர் திறக்க வேண்டும். அணையை நம்மிடம் தந்து விட்டால் நாமே தண்ணீர் திறந்து கொள்ள மாட்டோமா?
*****
போகிற போக்கைப் பார்த்தால் கர்நாடகம் அணையை மூடியதற்கும் நன்றி சொல்வார்கள் போலிருக்கிறது!
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...