கண்ணாமூச்சி விளையாட்டு
வீடு புகுந்து விசாரணைக்கு என்று அழைக்கிறார்கள்.
சரி என்று சென்றால் இந்தக் காவல் நிலையம் இல்லை என்று நகரம் ஒன்றிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கே அழைத்துச் சென்று அமர வைத்து விட்டு கைது செய்து விட்டோம் என்று யார் யாருக்கோ
செல்பேசியில் அழைத்துச் சொல்லி மகிழ்கிறார்கள்.
அப்போதுதான் நிலைமை புரிகிறது. எப்படி
வேண்டுமானாலும் பொய் சொல்லி எங்கே வேண்டுமானாலும் அழைத்துச் செல்வார்கள் என்பது.
விசாரணை செய்யுங்கள் என்றால் அவரவர்கள் அவரவர் வேலையைப் பார்ப்பது போல கண்டுகொள்ளாமல்
மும்முரம் காட்டுகிறார்கள். தாய்குலத்தைச் சார்ந்த ஒருவரை அனுப்பி முகத்திலும், முதுகிலும்
போடு போடு என்று போடுகிறார்கள். அதுதான் விசாரணையாம்.
அடி தாங்க முடியாமல் மயக்கமடித்து விழுந்ததும்
பரபரப்பாகிறார்கள். அவரவரும் மும்முரமாக வேலை பார்ப்பது போல நடித்துக் கொண்டிருந்த
வேலையைப் போட்டு விட்டு ஓடி வருகிறார்கள்.
உடனே அப்புறபடுத்து என்று அவசரப்படுத்துகிறார்கள்.
ஆட்டோ ஒன்றை வரச் செய்து உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிக் கொள் என்கிறார்கள்.
முடியாது என்றால் இங்கேயே வைத்து கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். வேறுவழி
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே.
ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினால் அட்மிஷன்
போடவே மறுக்கிறார்கள். கோபம் வந்து வெறித்தனமாகச் சத்தம் போட்டு பிரச்சனை செய்த
பிறகு ஆறு மணிக்கு வந்தவர்களை எட்டே முக்கால் மணிக்கு அட்மிஷன் போடுகிறார்கள். அட்மிஷன்
பிரச்சனைகள்!
ஊடகத்துறை நண்பர்களை அழைத்தால் மரணம் நிகழ்ந்தால்தான்
செய்தியாகும் என்கிறார்கள். இதற்காக எல்லாம் மரணிக்க முடியுமா? செத்து செத்து விளையாடத்தான்
இயலுமா?
இவ்வளவும் கூடப் பிறந்த தங்கைக்குத்தான்
நடக்கிறது. ரத்தம் கொதிக்க வேண்டுமே. கொதிக்க மாட்டேன்கிறது. என்ன ரத்தமோ?
எல்லாம் நிகழ்ந்த பிறகு சமாதானம் சொல்ல
வேண்டுமே! பொறுமையாக இரு. வேறு என்ன வழி? இல்லாவிட்டால் போட்டுத் தள்ளி விடுவார்கள்.
நாம் நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அப்போதுதான் சிந்தனையே இல்லாமல் போகிறது. எவ்வளவு நேரம் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
சிந்தித்து சிந்தித்து களைத்துப் போகிறது. முடிவில் சிந்தனையே இல்லாமல் போகிறது.
சூன்ய நிலை. யோசித்துப் பார்த்தால் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் இப்படித்தான் ஞானம்
அடைந்தேன்.
உங்கள் தங்கையை ஒருவர் உங்கள் தங்கையிடமே
பாலியல் தேவைக்காக நேரடியாக அழைத்தால், அதுவும் வழக்கு மன்றத்துக்கு முன்பே அழைத்தால்,
அழைப்பவர் ஒரு வழக்கறிஞர் என்றால் பேசாமல் வந்து விடுவது நல்லது. இல்லையென்றால் இப்படித்தான்
அட்டகாசம் பண்ணுகிறார்கள்.
இந்த நாட்டில் இது ஓர் அற்புதம். உங்கள்
தங்கையை விசாரணைக்கு என்று அழைத்து அவளை இழுத்து, அடித்து, பிடித்துத் தள்ளி அவளது
சேலையில் மாதவிலக்கு ரத்தத்தைப் பார்க்க அண்ணனாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
திரெளபதை என்று பெண்ணுக்கு அப்படி பொது மன்றத்தில் நடந்ததாக படிப்பதை, நேரில் பார்ப்பது
நிஜமான நேரடிக் கற்றல் அனுபவம்தான். அதைப் பெறும் போதுதானே கற்றல் நிறைவு பெறுகிறது.
இத்தனைக்கும் ஒரு வன்கொடுமை வழக்கைத்
தொடுத்து அதை எதிர்கொண்டிருக்கிறாள் அவள். அதன்பிறகுதான் வன்கொடுமைகள் அதிகம். வன்கொடுமைகள் ஆதாரத்தோடு நிகழ வேண்டும்
என்கிறார்கள். அதை நிகழ்த்துபவர்கள் எங்கே இதையெல்லாம் சொன்னால் கேட்கிறார்கள்? அப்போதுதான்
அதை நிரூபிக்க முடியும் என்கிறார்கள். அதை நிரூபிக்கவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி
விடும் என்கிறார்கள். அதுவே ஒரு வன்கொடுமைதான் என்றாலும் வெளியில் சொல்ல முடியுமா?
இதற்குதான் என் தங்கைக்கு வன்கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை
பகர்கிறேன். தாங்க முடியாமல் அழுது விடுகிறாள். அடுத்த முறை அழும் போது அவள் வாயில்
துணியை வைத்துப் பொத்த வேண்டும்.
அப்புறம் கோர்டுக்குப் போவதும், கோர்ட்டிலிருந்து
கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிப்பதும் எப்படி இருக்கிறது தெரியுமா? எப்படி இருக்கிறது,
கண்ணாமூச்சி விளையாடுவதைப் போல இருக்கிறது. அழிந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டான
கண்ணாமூச்சி விளையாட்டை இதன் மூலம் காப்பாற்ற முடிகிறது என்ற நல்ல விசயமும் இதில் அடங்கியிருக்கிறது.
பெண் குழந்தை பிறந்தால் கண்ணாமூச்சி விளையாட்டை
உடன் கற்றுக் கொடுத்து விட வேண்டும்.
*****
No comments:
Post a Comment