28 Jul 2018

விபரீதத்தின் பின்னணி


விபரீதத்தின் பின்னணி
            பொறுமையாக இருக்க முடியாமை நமக்கானப் பிரச்சனை. பொறுமையாக இருக்க இயலாமை மாபெரும் பிரச்சனை.
            பொறுமையாக இருக்க நினைத்தால் அவ்வாறு இருக்க இயலாமைதான் மனதின் பிரச்சனை. ஆனால் பொறுமையாக இருப்பதன் மூலம் அருமையான பல தீர்வுகளை எட்ட முடியும். அதை ஒருமுறை அனுபவித்துப் பார்த்தால்தான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
            பொறுமையைப் பற்றி பல ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கலாம். எப்படி பொறுமையாக இருப்பது என்பதற்கு ஆயிரம் வழிகள் சொல்லலாம். ஆனால் நீங்கள்தான் பொறுமையாக இருக்க வேண்டும்.
            அனுபவங்களின் முடிவில் நீங்கள் அந்த முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும் என்றாலும் ஆரம்பித்திலே அந்த முடிவைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நிறைய லாபங்கள் உங்களுக்கு இருக்கிறது.
            பொறுமையான மனம் பிணக்குகளை அனுமதிப்பதில்லை.           பொறுமையோடு இருக்கும் போதுதான் நான் எதையுமே செய்ய வேண்டியதில்லை என்பதை உணர முடியும். பொறுமையற்ற மனம்தான் எதையாவது செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்துகிறது.
            பொறுமையோடு காத்திருக்கும் மனம் எந்த விதச் செயல்பாடும் இல்லாமல் விரயமற்ற இருக்கிறது. விரயமாகும் மனம் விபரீதத்தின் குறியீடு.
            உரையாடல்களின் பொறுமை மிகவும் முக்கியம்.
            தொடர்பு கொள்வதில் எப்போதும் ஓர் இடைவெளி ஏற்படுகிறது. அந்த இடைவெளி பல தவறானப் புரிதல்களை உருவாக்கி விடுகிறது. அந்த இடைவெளிகள் நிரம்பும் வரை உரையாடாமல் காத்திருக்க வேண்டும் அல்லது அந்த இடைவெளிகளைப் போதுமானப் புரிதல்களைக் கொண்டு நிரப்பிய பிற்பாடு உரையாட வேண்டும். அதுதான் உரையாடலின் பொறுமை என்பது.
            யார் யார் எப்படியோ அவர்களுக்குத் தகுந்தபடி உரையாடுவது ஒரு கலை. அப்படி உரையாடினால் மட்டுமே புரிதலான ஓர் உரையாடலை நிகழ்த்த முடியும். இல்லையென்றால் நாம் உரையாடியதே சரி என்று நாமும், அவர் உரையாடியதே சரி என்று அவரும் நினைத்துக் கொண்டு, இருவருக்கும் இடையே இடைவெளி இன்னும் பெரிதாவது உறுதி.
            எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே காரியத்தில் இறங்க வேண்டும். இல்லையென்றால் இறங்குவது போன்ற பாவ்லாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இது காரியவாத பொறுமை.
            மனிதர்களைப் பொருத்த வரையில் அவரவர்களுடைய புரிதல் நிலை வேறு. நாம் அவர்களுக்குப் புரிவதாக நினைத்து உரையாடும் நிலை வேறு. இரண்டுமே எந்தப் புள்ளியிலுமே சந்திக்கவில்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. அவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள் என்றே நான் நினைத்துக் கொள்கிறோம். அவர்களால் அவர்களுடைய சுயநலத்தைத் தவிர வேறு எதையும் உணர முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார். அவர்களிடம் போய் பொதுநலமாக இருங்கள், பொதுநலத்துக்காக எதையாவது செய்யுங்கள் என்று சொன்னால் அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நாம் இப்படித்தான் பொறுமையற்ற நிலைமைகளை உருவாக்குகிறோம்.
            வெள்ளம் வந்த பின்தான் அதை உணர்ந்து கொள்ளும் அறிவுடைய ஒருவரிடம் போய் வெள்ளம் வரும் முன்னே அணை போடுங்கள் என்று உரையாடுவது விவேகமற்றச் செயல். அதைத்தான் நாம் இவ்வளவு நாள்களாக செய்து கொண்டு இருக்கிறோம்.
            உறவுகளைப் பொருத்த வரையிலும் இதே பிரச்சனைதான். அவர்களின் புரிதல், அவர்களின் உலகம் என்பது வேறு. அவர்களிடம் போய் நம்முடைய புரிதல், நம்முடைய உலகத்தைத் திணித்துக் கொண்டு இருக்கக் கூடாது.
            ஆகவே இவர்களிடம் எல்லாம் ஒரு செயலைச் செய்கிறோம் என்று முனைப்போடு இறங்கி முட்டாள் பட்டம் கட்டிக் கொள்ளக் கூடாது. அவர்களால் அதைத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு அப்படி நடந்தால்தான் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களாகத்தான் உணர வேண்டும். நாம் உணர வைத்தால் தேவையில்லாத மனவருத்தத்தில் சென்று முடியக் கூடியது அது.
            இதற்கெல்லாம் பொறுமை நல்ல தீர்வு. நீங்கள் பொறுமையாக அதிகமாகப் புரிந்து கொள்ளப்படுவீர்கள். நீங்கள் எதை செயல் மூலம் சாதிக்க நினைத்தீர்களோ, அந்தச் செயலே இல்லாமல் பொறுமையின் மூலம் சாதிப்பீர்கள். இது நம்ப முடியாத விசயம்தான். இந்த விசயத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் பொறுமையாக இருந்து பார்த்தால்தான் முடியும்.
            இந்த பொறுமை அப்படி என்னதான் செய்கிறது?
            கோபத்தைத் தணிக்கிறது. கோபம் தணிந்தால் பல அவசர முடிவுகள் தள்ளிப் போகின்றன. அவசர முடிவுகள் தள்ளிப் போனால் பல விபரீதங்கள் தள்ளிப் போய் விடுகின்றன.
            நிலையான ஒரு முடிவு பொறுமையில்தான் பிறக்கிறது. நிலையற்ற முடிவுகள் பொறுமையின்மையின் குழந்தைகள்.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...